Tuesday, 19 May 2026

நீங்களும் ஒரு காந்தி!

நீங்களும் ஒரு காந்தி!

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில், எக்ஸில் ஸ்லோ லிவ்விங்தான் இப்போதைய ஹாட் டாபிக். ஒரு பக்கம் சாட் ஜிபிடி போன்ற ஏ.ஐ. தளங்கள் சிந்தெடிக் உள்ளடக்கங்களை வாந்தி எடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நிதானத்தை நோக்கி ஒரு பெரும் கூட்டம் நகரத் தொடங்கியிருக்கிறது.

செய்திகளைத் தரமில்லாமல் கடையும் வேகத்திலிருந்து தப்பிக்க பேஸ்புக், ஆப்பிள் போன்ற திமிங்கிலங்களே இப்போது ஸ்கிரீன் டைம் லிமிட் போன்ற கருவிகளைக் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

ஸ்லோ லிவ்விங் எனும் நிதான வாழ்க்கை என்பது வெறும் சோம்பேறித்தனம் அல்ல, அது ஒரு சுற்றுச்சூழல் போர்.

உதாரணமாக இவ்வித வாழ்வியல் முறையில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் கப்புகளுக்குப் பதில், நிரந்தரமான கப்புகளைப் பயன்படுத்துவது, பாக்கெட்டில் வரும் ரெடி டூ ஈட் உணவுகளைத் தவிர்த்து, நிதானமாகச் சமைப்பது என்று இதன் அம்சங்கள் சுற்றுச்சூழலோடு இசைந்தது. மேலும் இது பிளாஸ்டிக் கழிவைக் குறைப்பதோடு, உங்கள் வயிற்றுக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்ல வைக்கும்.

இப்போது பாஸ்ட் பேஷன் ஒரு சாபக்கேடு. ஒருமுறை போட்டுவிட்டுத் தூக்கியெறியும் ஆடைகள்  காடுகள் அழிவதற்கும், நச்சு வேதிப்பொருட்கள் ஆற்றில் கலப்பதற்கும் முக்கியக் காரணம். இதற்குப் பதில் ஸ்லோ பேஷன் அதாவது குறைவாக வாங்குவது, முடிந்தவரை பழைய ஆடைகளை மறுசுழற்சி செய்வது என்பது எவ்வளவு அருமையான ஒன்று. இது உங்கள் பர்ஸுக்கும் நல்லது, பூமிக்கும் நல்லது.

விமானத்தில் பறந்து, இறங்கிய வேகத்தில் செல்பி எடுத்துவிட்டுத் திரும்புவது பயணமல்ல. கார்களுக்கும், விமானங்களுக்கும் மாற்றாக ஸ்லோ டிராவல் இப்போது பிரபலம். ஓர் ஊரின் கலாச்சாரத்தை, அந்த மண்ணின் மனிதர்களைப் பொறுமையாகப் புரிந்து கொள்வதுதான் உண்மையான சுற்றுலா.

எல்லாம் சரி. இதையெல்லாம் எப்படி ஆரம்பிப்பது? என்று கேட்கிறீர்களா?

ஒரே நாளில் யாரும் ஞானியாக முடியாது.

உங்களுக்குச் சமைக்கப் பிடிக்குமா? கிச்சனில் ஆரம்பியுங்கள்.

குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டுமா? போனைத் தள்ளி வைத்துவிட்டு குடும்பத்தில் இருப்போரோடு பேச ஆரம்பியுங்கள்.

டிராவல் செய்ய பிடிக்குமா? டூ வீலர்களைத் தூக்கி வைத்து விட்டு, சைக்கிளில் ஆரம்பியுங்கள்.

படிக்கப் பிடிக்குமா? பிடிஎப், கிண்டில்களைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டுப் புத்தகத்திலிருந்து துவங்குங்கள்.

பூக்கள், பழங்கள், காய்கறிகள் மேல் நேசமா? அதை எப்போதும் கடைகளிலேயே வாங்காமல், வீட்டுத் தோட்டம் போடுங்கள்.

பிறந்த நாள், திருமண நாள் என்று கிப்ட் கொடுக்க வேண்டுமா? அதற்கும் ஷாப்பிங், பர்சேஸ் என்று ஓடாமல், நீங்களே ஒன்றைத் தயார் செய்து கொடுங்கள்.

டிவி, சீரியல், இண்டர்நெட் என்று இருக்கிறீர்களா? அதற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு உங்கள் ஊரில் நீங்கள் பார்க்காத சந்து பொந்துகள் நிறைய இருக்கின்றன. அவற்றிற்கு ஒரு விசிட் அடியுங்கள்.

இப்படி நிறைய இருக்கிறது. யோசிக்கும் போது உங்களுக்கே உங்கள் வாழ்க்கையை எப்படி ஸ்லோ லிவ்விங்கை நோக்கி நகர்த்த வேண்டும் என்பது புரியும். அப்படி நகர்த்துங்கள்.

கடைசியாக, உங்களுக்கு டக்கென்று கோபம் வருகிறதா? ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டு மூன்றரை வரை எண்ணுங்கள். அதையும் ஒன்று, இரண்டு,... என எண்ணாமல், கொஞ்சம் வித்தியாசமாகக் கால், அரை, முக்கால், ஒன்று, ஒன்றே கால்,... என்பது போல எண்ணுங்கள்.

ஆக விசயம் இதுதான். வாழ்க்கை என்பது 100 மீட்டர் ஓட்டப்பந்தயமல்ல. அது ஒரு நிதானமான நடைப்பயிற்சி. நிதானமாக நடப்பவர்களுக்கே புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி கண்ணில் படும்!

சுருக்கமாகச் சொன்னால் இது காந்திய வாழ்க்கை முறையைப் போல இருக்கும். இதைப் பழக ஆரம்பித்து விட்டால் ஒரு நாளில் நீங்களும் காந்தியாகி விடுவீர்கள். இப்போதிருக்கும் நிலையில் இந்த நாட்டிற்கு நிறைய காந்திகள் தேவைதானே!

*****

No comments:

Post a Comment