Tuesday, 9 June 2026

குட்டிப் பிசாசுகளும் கொஞ்சம் சைக்காலஜியும்!

குட்டிப் பிசாசுகளும் கொஞ்சம் சைக்காலஜியும்!

ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது ஏதோ ஸ்கூல் பீஸ் கட்டுவதோ, லஞ்ச் பாக்ஸ் பேக் செய்வதோ அல்ல. அது ஒரு சக மனிதரின் சுயமரியாதை எனும் மென்பொருளை உருவாக்குவதற்குச் சமம்.

சைக்காலஜிஸ்ட்டுகள் என்ன சொல்கிறார்கள் என்றால், நீங்கள் குழந்தையிடம் சரியாக கம்யூனிகேட் செய்யாவிட்டால், அவர்கள் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவார்கள் என்கிறார்கள். அதாவது, அவர்களுக்குள் ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு, உங்களை உள்ளே விடமாட்டார்கள். அப்புறம் அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது.

அந்தச் சின்னஞ்சிறு மூளைகளுடன் எப்படி ஒரு ஹெல்தி ரிலேஷன்ஷிப் வைத்துக்கொள்வது?

உங்கள் நெருங்கிய நண்பர் ஒரு கதை சொல்லும்போது பாதியிலேயே தடுத்துவிட்டு, இரு, வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்கு என்று போனைப் பார்ப்பீர்களா? மாட்டீர்கள்தானே. அதே மரியாதையை உங்கள் குழந்தைக்குக் கொடுங்கள். நீங்கள் அடிக்கடி குறுக்கிட்டால், நான் சொல்வது அப்பாவிற்கு முக்கியமில்லை, என்கிற மெசேஜ் அவர்கள் அடிமனதில் பதிவாகிவிடும். அவர்களுக்குச் செவி கொடுப்பதுதான் ஹெல்தி ரிலேஷன்ஷிப்பிற்கான முதல் படி.

முக்கியமான விஷயங்களை நாலு பேருக்கு முன்னால் வைத்துப் பேசாதீர்கள். மற்றவர்கள் முன்னால் அவர்களைச் சங்கடப்படுத்துவது, எதிர்காலத்தில் உங்கள் மேல் ஒரு தீராத பகையையும், வெறுப்பையும்  உண்டாக்கும். எதற்கும் ஒரு தனிமை தேவை. அவர்களின் உணர்வுகளை மதிப்பது இரண்டாவது படி.

சின்னக் குழந்தைகளிடம் பேசும்போது, கோபுரம் போல உயர்ந்து நின்று பேசாதீர்கள். அவர்களின் உயரத்திற்கு இறங்கி வந்து, கண்கள் நேருக்கு நேர் சந்திக்கும்படி  வைத்துப் பேசுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைக்கும். இந்தப் பாதுகாப்பு உணர்வைத் தருவதுதான் மூன்றாவது படி.

குழந்தைகள் எதையாவது சொல்லும்போது, ம்... அப்புறம்?, இது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே, இன்னும் கொஞ்சம் சொல்லேன் போன்ற டோர் ஓப்பனர் வாசகங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் தொனி உண்மையாக இருக்க வேண்டும். ஓப்பனா பேசு என்று சொல்லிவிட்டு, அவர்கள் பேசும்போது டிவியைப் பார்த்தால் இது ஒர்க்அவுட் ஆகாது! அவர்களைச் சுவாரசியப்படுத்துவது நான்காவது படி.

பயங்கரக் கோபமாக இருக்கும்போது எமர்ஜென்சி இல்லை என்றால், உடனே ரியாக்ட் செய்யாதீர்கள். கொஞ்சம் நிதானமாக, ஆப்ஜெக்டிவ் ஆகப் பேசுங்கள். மிக முக்கியமாக, குழந்தைகளை லேபிள் செய்யாதீர்கள். அதாவது, தவறு, நீ ஒரு முட்டாள் குழந்தை என்பதெல்லாம் வேண்டவே வேண்டாம். கோபம் உண்டாகும் சூழலிலும் அவர்களை மதித்து எதிர்மறையாக ரியாக்ட் செய்யாமல் இருப்பது ஐந்தாவது படி.

குழந்தைகள் செய்த செயல் வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் அந்த குழந்தைகள் தவறானவர்கள் அல்ல. அவர்கள் எப்போதுமே உங்களால் அங்கீகரிக்கப்படுகிறோம் என்கிற நம்பிக்கையில் இருக்க வேண்டும். அதுதான் அவர்களுடனான ஹெல்தி ரிலேஷன்ஷிப்பின் ரகசியம். அதற்கு மேற்படி ஐந்து படிகளும் உங்களுக்கு உதவும்.

பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு லேபரட்டரி சோதனை போன்றது. அங்கே அன்பும், புரிதலும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். நான் உன் அப்பா, நான் சொல்றதக் கேளு, என்கிற பழைய காலத்து அல்காரிதம் இப்போது எடுபடாது.

நவீன யுகத்தில் குழந்தைகளுக்குத் தேவைப்படுவது ஒரு அத்தாரிட்டி அல்ல; ஒரு மெண்டார். அவர்களை ஒரு தனி மனிதனாக மதிக்கக் கற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் அவர்கள் ஒரு அற்புதமான மனிதராக மலர்வார்கள்.

இன்று மாலை உங்கள் குழந்தை பள்ளி முடிந்து வரும்போது, செல்போனைத் தள்ளி வைத்துவிட்டு, அவர்கள் உயரத்திற்கு இறங்கி உட்கார்ந்து, இன்னைக்கு ஸ்கூல்ல என்ன ஸ்பெஷல்? என்று கேட்டுப் பாருங்களேன். அந்த ஒரு நொடியிலேயே உங்கள் இருவருக்கும் இடையிலான பெரிய சுவரைத் தகர்த்தெறியலாம்.

*****

No comments:

Post a Comment