Friday, 16 May 2025

தங்க நகைகளுக்குப் பதில் காகிதத் தங்கத்தில் முதலீடு செய்யலாம்!

தங்க நகைகளுக்குப் பதில் காகிதத் தங்கத்தில் முதலீடு செய்யலாம்!

தங்கம் நல்லதொரு முதலீட்டு சாதனம். தங்கத்தில் முதலீடு செய்வது புத்திசாலிதனம்.

தங்கத்திற்குப் பல சிறப்புகள் உள்ளன. தங்கமானது உடனடியாகப் பணமாக்கும் வசதி கொண்டது. தங்கத்தை வைத்து உத்திரவாதமின்றி கடன் பெறுவது எளிது. தங்கம் நடமாடும் சொத்து. கௌரவம் மற்றும் அந்தஸ்தின் அடையாளம்.

பெண் குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்கள் அவர்களின் திருமணத்திற்காகத் தங்க நகைகளை வாங்கிச் சேர்க்க ஆரம்பித்து விடுவது நம் நாட்டின் வழக்கம்.

இதனால், அந்த நகைகள் கல்யாணத்தின் போது பழைய நகைகளாக ஆகி விடும். அப்போது பழைய நகைகளை விற்று புதிய நகைகளை வாங்க நினைத்தால் செய்கூலி, சேதாரம், வரி போன்றவற்றால் 30 சதவீதத்துக்கும் மேல் இழப்பு ஏற்படும்.

கஷ்டப்பட்டு பணம் சேர்த்து, தங்கம் வாங்கி பிறகு அதை விற்று வாங்கினால் இப்படி ஒரு நிலைதான் ஏற்படும். இதை எப்படி தவிர்க்கலாம் என்கிறீர்களா?

தங்க நகைகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாகக் காகிதத் தங்கம் எனப்படும் கோல்ட் இ.டி.எப்பில் முதலீடு செய்யலாம். இப்படி செய்வதால் திருமணத்தின் போது காகிதத் தங்கத்தை விற்று பணமாக்கி, அதைக் கொண்டு விருப்பமான புதிய நகைகளை வாங்கிக் கொள்ளலாம்.

காகிதத் தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்க நகைகள் திருடு போகும் அபாயம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. தீ விபத்துகள் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களிடமிருந்து காக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அது எண்ம வடிவில் அதாவது டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக இருக்கும்.

தங்கத்தின் விலை ஏறுவதற்கு ஏற்ப காகிதத் தங்கத்தின் விலையும் ஏறிக் கொண்டு இருக்கும் என்பதால் இது மிகச் சிறந்த முதலீட்டு முடிவாகும்.

இனி நீங்கள் தங்கம் வாங்க நினைத்தால், காகிகத் தங்கமாக வாங்குங்கள். அப்படி வாங்கினால் செய்கூலி, சேதாரம் எதுவும் இல்லை. நீங்கள் தங்க நகை வாங்க விரும்பும் போது, காகிதத் தங்கத்தை விற்று பணமாக்கிக் கொண்டு, நீங்கள் விரும்பிய நகையை அப்போதைய நவீன வடிவமைப்பில் புதுமை குறையாமல் வாங்கிக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment