Saturday, 4 April 2026

அதிர்ஷ்டவசமான விபத்துகள்!

அதிர்ஷ்டவசமான விபத்துகள்!

விபத்தகளால்தான் இந்த உலகம் நவீனமாகிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் ஒரு காபி கோப்பையைக் கீழே கொட்டினால் அது கறை.

ஆனால், ஒரு சயின்டிஸ்ட் எதையாவது கீழே கொட்டினால், அது சில நேரங்களில் ஒரு மல்டி மில்லியன் டாலர் கண்டுபிடிப்பாகி விடுகிறது.

திட்டமிட்டு நடப்பதை விட, தற்செயலாக நடப்பவைதாம் வரலாற்றின் திசையை மாற்றியிருக்கின்றன.

எப்படி என்கிறீர்களா?

ஒவ்வொன்றாகப் பார்த்து விடுவோமா?

அலெக்சாண்டர் பிளமிங் ஒரு இரண்டு வார லீவுக்குப் பிறகு தன் லேப்புக்குத் திரும்பி வருகிறார். அங்கே அவர் கழுவாமல் விட்டுச் சென்ற ஒரு பெட்ரி டிஷ் இருந்தது. அதில் பூஞ்சை படர்ந்திருந்தது. பொதுவாக ஒரு பாக்டீரியாலஜிஸ்ட் அதைத் தூக்கிப் போட்டிருப்பார். ஆனால் பிளெமிங் கவனித்தார். அந்தப் பூஞ்சையைச் சுற்றி பாக்டீரியாக்கள் செத்துக்கிடந்தன. நான் பென்சிலினை கண்டுபிடிக்கவில்லை, இயற்கை கண்டுபிடித்தது, நான் அதைத் தற்செயலாகப் பார்த்தேன், என்றார் அவர். இன்று கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் பென்சிலின் எனும் ஆன்டி பயாடிக் பிறந்தது இப்படித்தான்.

சார்லஸ் குட்இயர் பாவம், பல வருஷங்களாக ரப்பரை வைத்து மல்யுத்தம் செய்து கொண்டிருந்தார். வெயிலில் உருகாத, குளிரில் உடையாத ரப்பர் அவருக்குத் தேவைப்பட்டது. ஒருநாள், ரப்பரும் சல்பரும் கலந்த கலவை தற்செயலாக ஒரு சூடான அடுப்பில் விழுந்தது. அது பிசுபிசுப்பாக மாறாமல், வைரம் போல உறுதியானது. இதுதான் வல்கனைசேஷன். இன்று உங்கள் கார் ஓடும் டயர்கள் எல்லாம் அந்த ஒரு அடுப்பு விபத்தின் மிச்சங்கள்தான்.

பிராங்க் எப்பர்சன் என்ற 11 வயது சிறுவன் தன் வீட்டின் முன் சோடா தண்ணீரைக் குச்சியால் கலக்கிக் கொண்டிருந்தான். அப்படியே மறந்துவிட்டுப் போய்விட்டான். அன்றிரவு சான்பிரான்சிஸ்கோவில் செம குளிர். மறுநாள் காலை பார்த்தால், குச்சியோடு அந்தச் சோடா உறைந்து நின்றது. சிறுவன் அதைச் சுவைத்துப் பார்த்தான். எப்சிக்கிள் என்று பெயர் வைத்தான். பிற்காலத்தில் அவன் குழந்தைகள்தான் அதை பாப்சிக்கிள் என்று மாற்றினார்கள். இப்படித்தான் குச்சி ஐஸ் இந்த உலகுக்குக் கிடைத்தது. எதையும் அப்படியே விட்டுவிட்டுப் போகாதீர்கள், அது ஒரு பிசினஸ் வாய்ப்பாகக் கூட இருக்கலாம்!

ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் ஒருமுறை தன் நாயுடன் நடைப்பயிற்சி சென்றார். திரும்பி வந்தபோது அவர் உடையிலும் நாயின் முடியிலும் பர்டாக் என்ற செடியின் விதைகள் ஒட்டிக்கொண்டிருந்தன. எரிச்சலடையாமல் மைக்ரோஸ்கோப்பில் பார்த்தார். அதில் சிறிய கொக்கிகள் இருந்தன. அதுதான் வெல்க்ரோ. இன்று விண்வெளி உடைகள் முதல் உங்கள் செருப்பு வரை இதுதான் ராஜா. நம் ஊர்களில் அது வெல்க்ரோ வேட்டிகள்.

கான்ஸ்டான்டின் பால்பெர்க் நிலக்கரி தார் வைத்து ஏதோ ஆராய்ச்சி செய்துவிட்டு, கை கழுவாமல் சாப்பிட உட்கார்ந்தார். ரொட்டி செம இனிப்பு. கையைப் பார்த்தால் அதில் ஏதோ ஒரு கெமிக்கல். அதுதான் சாக்கரின். சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் ஒரு சுகாதாரமற்ற பழக்கத்திலிருந்து பிறந்தது ஆச்சரியம்தான்.

சில மருந்துகள் ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டு, அப்புறம் சைடு எஃபெக்ட் மூலம் புகழ்பெற்றவை. அவையும் தற்செயல் விபத்து வகையறாக்கள்தான். அவை என்ன என்கிறீர்களா?

மினாக்சிடில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உருவாக்கப்பட்டது. ஆனால் சாப்பிட்டவர்களுக்கு முடி கருகருவென வளரத் தொடங்கியது. இப்போது இதுதான் வழுக்கைத் தலைக்கான உலகளாவிய மருந்து.

வயாக்ரா இதய நோய்க்காக சோதிக்கப்பட்டது. ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சொன்ன சைடு எஃபெக்ட் வேறாக இருந்தது. இன்று அது பல பில்லியன் டாலர் மார்க்கெட்!

எனவே, தவறுகள் நேரும்போது வருத்தப்படாதீர்கள். அந்தத் தவறுக்குள் ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒளிந்திருக்கலாம்.

உலகம் உருண்டை என்பதும் ஒரு தற்செயலான கண்டுபிடிப்புதான்.

கொலம்பஸ் இந்தியாவுக்குப் போகப் போய் மேற்கிந்திய தீவுகளைக் கண்டுபிடித்தாரே!

உங்கள் லேப்பில் எதையாவது கொட்டி வைத்தால் உடனே துடைக்காதீர்கள். ஒருவேளை அது அடுத்த நோபல் பரிசாக இருக்கலாம்!

*****

No comments:

Post a Comment