பல கோடி நியூரான்களும் ஒரு கப் தியானமும்!
தியானம் – ஒரு மென்டல் ஓவர்ஹால்!
தியானம்
என்றவுடன் ஏதோ இமயமலைக்குச் சென்று தாடி வளர்த்துக்கொண்டு அமர்வது என்று நினைக்க வேண்டாம்
என்பதை நாம் முன்பே சொல்லி விட்டோம். தியானம் என்பது ஒரு ஸ்பிரிச்சுவல் தெரபி. இன்னும்
புரியும்படிச் சொன்னால், உங்கள் மூளை என்கிற சூப்பர் கம்ப்யூட்டருக்குத் தரும் ஒரு
குயிக் ரீபூட்.
தியானத்தை
விளக்குவது கஷ்டம், ஆனால் அனுபவிப்பது சுலபம். ஒரே நேரத்தில் ஆழமான அமைதியையும், கூர்மையான
விழிப்புணர்வையும் அடைவதுதான் இதன் சோர்ஸ் கோட்.
தியானம்
செய்யச் சரியான வழி, தவறான வழி என்று எதுவுமே கிடையாது. உங்களுக்குப் பிடித்த ஒரு பிம்பம்,
ஒரு சத்தம் அல்லது உங்கள் மூச்சு என இதில் எதாவது ஒன்றில் கவனத்தைக் குவியுங்கள்.
இடையில்
உங்கள் கவனம் சிதறி வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருக்குமோ? என்று மூளை தாவினால், பரவாயில்லை.
மெல்ல அதைக் காதைப் பிடித்து மீண்டும் நீங்கள் செலுத்தும் கவனத்தின் மீது உட்கார வையுங்கள்.
அவ்வளவுதான் விசயம்!
தியானம்
செய்தால் ஞானம் கிடைக்கும், மன அமைதி வரும் என்று நினைத்து உட்காராதீர்கள். அப்படி
நினைத்தால், அமைதி வந்து விட்டதா? இன்னும் வரவில்லையா? ஞானம் கிடைத்து விட்டதா? எப்போது
கிடைக்கும்? என்று மனம் ஓடிக் கொண்டிருக்கும். தியானம் பண்ணும்போது நீங்கள் உலகத்துக்கே
உருப்படாத ஓர் ஆளாக, சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள் என்ற உண்மையை அப்படியே ஏற்றுக்
கொள்ளுங்கள்.
மூச்சைக்
கவனிக்கும் போது, அடடா நான் மூச்சு விடுகிற லட்சணமே சரியில்லையோ, இடது மூக்கில் காற்று
கம்மியாக வருகிறதோ, வலது மூக்கில் எல்லாம் அவுட்டோ என்று பிஹெச்டி அளவுக்குப் போய்
விடக் கூடாது. உடல் எதையும் ஒழுங்காகத்தான் செய்யும் என்று நம்பிக்கை வையுங்கள். நீங்கள்
வெறுமனே மூச்சைக் கவனியுங்கள். அது அப்படி இப்படி என எப்படி இருந்தாலும் நோ ப்ராப்ளம்.
தியானத்தில்
உட்கார்ந்த உடனே, நாளைக்கு காலையில் என்ன குழம்பு வைக்கலாம்? அவன் அன்றைக்கு ஏன் அப்படி
சொன்னான்? என்பன போன்ற உலகமகா சிந்தனைகள் எல்லாம் வரும். எண்ணங்களை அடக்க நினைப்பது
ஓடுகின்ற ரயிலை கையை நீட்டி நிறுத்துவது போன்றது.
வருகின்ற
எண்ணங்களை அப்படியே வேடிக்கை பாருங்கள். ஓஹோ. இப்போது நமக்கு இந்த மொக்கையான எண்ணம்
வருகிறதா? என்று மனதை ஒரு மூன்றாவது மனிதர் போல வேடிக்கை பாருங்கள். அதை அப்படியே விட்டு
விடுங்கள்.
நாம்
ஏற்கனவே சொன்னபடி தியானம் செய்வதற்கு இமயமலைக்கு போக வேண்டாம், அமேசானில் ஸ்பெஷலாகப்
பாயும் வாங்க வேண்டாம். உங்கள் வீட்டு சோபா, இல்லையென்றால் கட்டில் ஏன், கம்ப்யூட்டர்
சேர் கூட அல்லது தரை கூட ஓகேதான். ஆனால், உட்கார்ந்த ஐந்தாவது நிமிடத்தில் தூங்கி விழுந்து,
அப்புறம் அது நித்ரா தியானம் ஆகி விடாமல் மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தியானம்
செய்ய உட்காரும் போது மொபைலைச் சைலண்ட்டில் போடுவது போதாது. அதை அடுத்த அறையில் வைத்து
விடுவது நலம். இல்லையென்றால், எந்தக் குரூப்பில் யார் மெசேஜ் போட்டிருப்பார்கள் என்பதற்கான
இதயத் துடிப்பு உங்கள் ஆன்மாவை விட வேகமாகத் துடிக்கும்.
சுருக்கமாகச்
சொல்ல வேண்டும் என்றால், தியானம் என்பது மூளையை ஆப் செய்வது இல்லை. மூளை பண்ணுகின்றற
அலப்பறைகளை எல்லாம் பார்த்தபடி நீ நடத்து ராஜா என்று சும்மா உட்கார்ந்து பார்க்கிறதுதான்.
தினமும் ஒரு 10 நிமிஷம் இப்படி சும்மா இருக்கப் பழகுங்கள். அதுவே பெரிய தியானம்தான்!
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத லூப் கிடையாது என்பதை நாம் எத்தனையோ முறை சொல்லி விட்டோம்.
மூளை என்பது ஒரு ஸ்டோரேஜ் டிவைஸ் மட்டுமல்ல, அது ஒரு பிராசஸர். அதற்குத் தேவைப்படும்
போதெல்லாம் இப்படி ஒரு ரீபூட் கொடுப்பது ஆரோக்கியம். அதை தியானம் அழகாகச் செய்து கொடுக்கும்.
எனக்குத்
தியானம் வராது சார், என்று சொல்லாதீர்கள். உங்கள் மூச்சை நீங்கள் கவனிக்க ஆரம்பிக்கும்
அந்த நொடியே நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
இன்று
இரவு படுக்கும்போது, ஓர் ஐந்து நிமிடம் எதையும் யோசிக்காமல் உங்கள் மூச்சை மட்டும்
கவனித்துப் பாருங்களேன். அந்த ஓர் அமைதி வரும் பாருங்கள். அதுதான் நீங்கள் தேடும் நிம்மதி
அல்லது அமைதி. அப்புறம், நாளை காலை நீங்கள் ஒரு புது மனிதராக எழுவீர்கள். ஆல் தி பெஸ்ட்!
*****

No comments:
Post a Comment