குழந்தை மையக் கற்றல்
குழந்தை மையக் கற்றல் என்பது குழந்தைகள்
விரும்பும் செயல்பாடுகளை வடிவமைப்பது என்பது மட்டுமல்லாது, குழந்தைகளுக்குப் புரிந்த,
அவர்கள் அறிந்த சொற்களோடு பாடக்கருத்துகளை கலந்துக் கற்பிப்பதும் ஆகும்.
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளமங்கலத்தில்
வாழ்ந்து ஆசிரியராகப் பணியாற்றிய துரை அவர்கள் இம்முறையில் கைதேர்ந்தவர்.
அப்போது மூன்றாம் வகுப்பில் சேர வந்த
மாணவர் ஒருவனை அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் நாலிரண்டு எத்தனைக் கேட்க அந்த மாணவன் தடுமாறியிருக்கிறான்.
தலைமையாசிரியராக இருந்த துரை குறுக்கிட்டு
ஓர் ஏர்க் கலப்பைக்கு ரெண்டு மாடுகள் வீதம், நான்கு ஏர்க் கலப்பைக்கு எத்தனை மாடுகள்?
என்று கேட்க, அம்மாணவன் எட்டு மாடுகள் என்று சரியாக விடை சொல்லியதாக அவரைப் பற்றிய
செய்தி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள்.
விவசாயப் பின்னணியிலிருந்து வரும் மாணவனுக்கு
அவன் அறிந்த வேளாண் அனுபவத்தோடு இணைத்துக் கற்பித்தால், கசப்பான கணக்கும் கற்கண்டாகும்
என்பதை அவர் அன்றே அறிந்திருந்த பாங்கு, இன்று எண்ணிப் பார்க்கையில் வியப்பைத் தருகிறது.
மாணவர்கள் அறியாத செய்தி என்று எதுவுமில்லை.
அவர்களுக்குப் புரியாத செய்தி என்ற ஒன்று இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அதையும் அவர்கள் அறிந்த மொழிநடையில், அவர்களுடைய அனுபவத்தின் மூலம் இணைத்துக் கற்பித்தால்,
செயல்பாடுகளே கூட தேவையில்லாமல் மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்பதற்கு இந்நிகழ்வு
ஒரு நல்ல சான்று அல்லவா!
*****
Arumaiyana karuthu. Nadaimuraiyil ithanai seiya vendum.
ReplyDelete