Showing posts with label Change Your Habits. Show all posts
Showing posts with label Change Your Habits. Show all posts

Saturday, 28 September 2024

கெட்டப் பழக்கங்களை நல்லப் பழக்கங்களாக மாற்றுவது எப்படி?

கெட்டப் பழக்கங்களை நல்லப் பழக்கங்களாக மாற்றுவது எப்படி?

மனிதர்கள் எப்படி கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்? ஏன் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள்.

மன இறுக்கம்,

மன உளைச்சல்,

சலிப்படைதல்,

களைப்படைதல் காரணமாக கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகுபவர்கள் உண்டு.

சில நிமிட மனக்கிளர்ச்சிக்காகவும் கெட்டப் பழக்கங்களை விடாமல் பிடித்துக் கொள்பவர்களும் உண்டு.

நகம் கடித்தல் தொடங்கி, கடைகளில் பொருட்களை வாங்கிக் குவித்தல், வார இறுதியில் மது அருந்ததுதல், அடிக்கடி புகைப் பிடித்தல், அடிக்கடி அலைபேசி பார்த்தல், தொடர்ச்சியாகப் பல மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்த்தல் வரை இதில் பல்வேறு ரகங்கள் உண்டு.

இது போன்ற பழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாதா?

ஏன் முடியாது?

முதலில் சின்ன சின்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மனம் எப்போதும் சுகமானதையும் சௌகரியமானதையும் விரும்பும். அதனால் மாற்றங்களைச் சிறியதாகத்தான் தொடங்க வேண்டும். சிறியதாகத் தொடங்கும் மாற்றம் பெரியதாக மாறும்.

இப்போது நீங்கள் கெட்டப் பழக்கங்களை விடுவதில் இருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டப் பழக்கத்தை விட்டு விடுவது அவ்வளவு சுலபமானதன்று. ஆனால் கெட்டப் பழக்கத்தின் இடத்தில் ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலமாக அதை மாற்றலாம், கெட்டப் பழக்கத்தை இல்லாமல் செய்யலாம். ஆக கெட்டப் பழக்கத்தை ஒழிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கத்திற்குப் பதிலாக ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு வருவதே ஆகும்.

உதாரணமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர் அதற்குப் பதிலாக அந்த நேரத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடும் பழக்கத்தை மாற்றாக உருவாக்கிக் கொள்ளலாம்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர் அந்த நேரத்தில் அதற்குப் பதிலாகப் பழச்சாறு அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் அலைபேசியைப் பயன்படுத்தும் ஒருவர் அந்த நேரத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் தொலைக்காட்சிப் பார்க்கும் பழக்கம் உள்ள ஒருவர் அந்த நேரத்தில் நண்பர்களைச் சந்தித்து அளவளாவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதில் இருக்கும் இன்னொரு பிரச்சனைக்கு வருவோம்.

நல்லப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் போது அது அவ்வளவு சுலபமாக நடந்து விடாது. ஏன் அப்படி?

ஏனென்றால் ஆசையின் காரணமாக நாம் எல்லாவற்றையும் பெரிது பெரிதாகச் செய்ய நினைக்கிறோம். ஆகவே அதை மாற்றி சிறியதிலிருந்து துவங்க வேண்டும்.

அது எப்படி என்கிறீர்களா?

உதாரணமாகத் தினந்தோறும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்ய நினைக்கும் ஒருவர் அந்தப் பழக்கத்தை முதலில் ஐந்து நிமிட நடைபயிற்சி என்ற அளவில் தொடங்க வேண்டும்.

சிறிய அளவில் தொடங்கும் போது அதை சுலபமாகச் செய்ய முடியும். அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து நடைபயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்கத் தூண்டும். படிப்படியாக நேரத்தை அதிகரித்து ஒரு மணி நேர நடைபயிற்சி என்ற இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடையலாம்.

இதே முறைதான் எல்லாவற்றிற்கும்.

உணவுப் பழக்கத்தை மாற்ற விரும்பும் போதும் இதே போன்ற சிறிய அளவில் துவங்க வேண்டும். ஒட்டுமொத்த உணவை மாற்றுவதற்குப் பதிலாக ஒரே ஒரு உணவை மட்டும் துவக்கத்தில் மாற்றி அதில் வெற்றி கண்டு விட்டால் ஒவ்வொரு உணவாக மாற்றும் ஆர்வம் உங்களை அறியாமல் உங்களுக்கே வந்து விடும்.

இதற்குக் காரணம் சிறிய இலக்குகள் மலைப்பை உண்டாக்காது. செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாது. சுலபமாகச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையும் ஆர்வத்தையும் உண்டாக்குவதால் சிறிய சிறிய இலக்குகளிலிருந்தே இலக்குகளைப் பெரிதாக்க வேண்டும்.

ஆகவே சிறியதே அழகு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதில் இன்னொரு முக்கிய விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

சிறிய காரியங்களைச் சிறிய காரியங்கள்தானே, இதைப் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விடக் கூடாது. அப்படி தள்ளி வைத்தால் சிறிய காரியமானாலும் அதைச் செய்வது பெரிய காரியமாகி விடும். அதே நேரத்தில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த இலக்கை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்யவும் வேண்டும். அதில் சுணக்கமோ, சோம்பேறித்தனமாக காட்டி விடக் கூடாது. காரியங்களைச் செய்யத் துவங்கும் போதுதான் சுணக்கமும் சோம்பேறித்தனமும் உண்டாகும். செய்ய ஆரம்பித்து விட்டால் அது விலகி விடும்.

இப்படியாக நீங்கள் கெட்டப் பழக்கத்தை மாற்றி அமைக்கலாம். நல்லப் பழக்கத்தை வலுபடுத்தலாம்.

இச்செய்தி உங்கள் வாழ்க்கையை மாற்றி உங்களைப் பயனுள்ளவராக மாற்றினால் அந்த அனுபவத்தைப் பதிவிடுங்களேன். அது மேலும் பலருக்கு உதவும், உத்வேகம் தரும்.