Showing posts with label personality development. Show all posts
Showing posts with label personality development. Show all posts

Friday, 20 December 2024

எப்படியெல்லாம் உங்களைக் குழப்புவார்கள் தெரியுமா?

எப்படியெல்லாம் உங்களைக் குழப்புவார்கள் தெரியுமா?

ஒருவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அவர் எப்படிக் கேட்டாலும் அவர் கேட்பதற்கு ஒப்புக் கொள்ளாதீர்கள். ஆனால் உங்கள் ஒப்புதலைப் பெற அவர் எப்படியெல்லாம் பேசுவார் தெரியுமா? உங்களை எப்படியெல்லாம் குழப்பி உங்கள் சம்மதத்தைப் பெற நினைப்பார் தெரியுமா? வார்த்தைகளை அவர் எப்படியெல்லாம் ஆயுதமாகப் பயன்படுத்தி உங்களை வீழ்த்த நினைப்பார் தெரியுமா?

1. கேட்டுப் பார்த்தல் :

உங்களை ஒப்புக் கொள்ள வைக்க பயன்படுத்தப்படும் முதல் ஆயுதம் இதுதான். அதாவது கேட்டுப் பார்த்தல். ஏன் இதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என்று கேட்பார். எதற்காக என்றால் உங்களை ஒப்புக் கொள்ள வைக்கத்தான். இதுதான் கேட்டுப் பார்த்தல்.

2. கெஞ்சுதல் :

கெஞ்சுதல் என்பது கேட்டுப் பார்த்துக் காரியம் ஆகாத போது உங்களை ஒப்புக் கொள்ள வைக்க கையாளப்படும் இரண்டாவது ஆயுதம். என் நிலையைப் பாருங்கள், எனக்காக நீங்கள் இதை ஒப்புக் கொள்ளக் கூடாதா? நீங்கள் ஒப்புக் கொண்டால்தான் எனக்கு வாழ்க்கையே என்று இந்த இரண்டாவது அஸ்திரம் ஏவப்படும். ஏன் இந்த ஆயுதம் ஏவப்படுகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா? உங்களை ஒப்புக் கொள்ள வைக்கத்தான்.

3. ஒப்பீடு செய்தல் :

உங்களை ஒப்புக் கொள்ள வைக்க கையாளப்படும் மூன்றாவது ஆயுதம்தான் ஒப்பீடு செய்தல். ஏன் இதை நீங்கள் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள்? அல்லது ஏன் இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? இதையே உங்கள் அண்ணனோ அல்லது அக்காவோ கேட்டிருந்தால் இப்படி மறுத்திருப்பீர்களா? நான் யாரோ ஒருவர் என்றுதானே மறுக்கிறீர்கள் என்று இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படும். இந்த ஒப்பீடு உங்களை நிலைகுழையச் செய்து, நீங்கள் ஒப்புக் கொள்ள நேரிடலாம். ஆகவே இந்த ஆயுதத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த ஆயுதத்தால் நீங்கள் உங்களை அறியாமலே வீழ்த்தப்பட்டிருப்பீர்கள்.

4. லஞ்சம் தருதல் :

மேற்படி நாம் பார்த்த மூன்று ஆயுதங்களும் வேலைக்காகாத போது இந்த நான்காவது ஆயுதம் பிரயோகிக்கப்படும். நீங்கள் மட்டும் இதற்கு ஒத்துக்  கொண்டால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பத்தாயிரம் பணத்தை பரிமாற்றம் செய்கிறோம் என்பதாகவோ, உங்களுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி அல்லது அலைபேசி உங்கள் வீடு தேடி வரும் என்றோ இந்த ஆயுதமானது கையாளப்படும். எதற்காக என்றால் உங்களது ஒப்புதல் அல்லது சம்மதத்துக்காகத்தான் அல்லது நீங்கள் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான்.

5. பேசி மயக்குதல் :

உங்களை ஒப்புக் கொள்ள வைக்க கையாளப்படும் நைச்சியமான ஆயுதம் இதுவாகும். உங்களைப் பார்த்தால் என் அண்ணனைப் போல இருக்கிறது. நீங்கள் மிகவும் நல்லவர். உங்களது திறமைக்கு நீங்கள் இங்கு இருக்க வேண்டிய ஆளே இல்லை. இப்படியெல்லாம் பேசி மயக்கும் போது, நீங்கள் அப்படிப் பேசுபவருக்குக் கேட்டதைச் செய்ய வேண்டும், கேட்கும்படி ஒப்புதலை அளிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விடுவீர்கள். நுட்பமாக நோக்கினால்தான் பேசி மயக்கும் இந்த ஆயுதத்துக்கு நீங்கள் பலியாகியிருப்பது உங்களுக்கே புரியும். ஆகவே இந்த ஆயுதத்திடமும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

6. நட்பாகப் பேசுதல் :

இதுவும் ஒரு வகை நைச்சியமான ஆயுதமே. உங்கள் சம்மதம் அல்லது ஒப்புதலைப் பெற இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது என்பது புரியாமலே நீங்கள் பலியாகுவீர்கள். அதாவது நீங்கள் ஒப்புக் கொண்டதை நாங்கள் யாருக்கும் சொல்ல மாட்டோம். நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம். உங்கள் சம்மதம் நாங்கள் மட்டும் அறிந்த ரகசியமாக இருக்கும். இது சத்தியம். நாங்கள் எப்போதும் உங்கள் நண்பர்களாக, உங்களுக்கு விசுவாசமானவர்களாக இருப்போம். இப்படியாக இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது.

7. மிரட்டல் :

உங்களை ஒப்புக் கொள்ள வைக்க நைச்சியமான, சாமர்த்தியமான ஆயுதங்கள் பயனளிக்காத போது இந்த முரட்டுத்தனமான ஆயுதமானது பயன்படுத்தப்படுகிறது. அதாவது நீங்கள் மட்டும் ஒப்புக் கொள்ளாவிட்டால் நடப்பதே வேறு. உங்களது சம்மதம் வரா விட்டால் என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது. மரியாதையாக எங்கள் பக்கம் சேர்ந்து விடுங்கள், இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதமில்லை. ஒழுங்கு மரியாதையாக ஒப்புக் கொண்டு சம்மதித்து விடுங்கள் என்றவாறு இந்த ஆயுதமானது பிரயோகிக்கப்படுகிறது.

8. குழப்புதல் :

இது ஒரு வகையான நைச்சியமும் மிரட்டலும் கலந்த ஆயுதம் எனலாம். உங்களைச் சம்மதிக்க வைக்கவோ, ஒப்புக் கொள்ள வைக்கவோ இப்படிப்பட்ட ஆயுதமும் கையாளப்படும். அதாவது, இதற்கு ஒப்புக் கொண்டு விட்டால் நீங்கள் உங்கள் வழியில் போகலாம், நான் என் வழியில் போகலாம். உங்களுக்கும் பிரச்சனையில்லை, எனக்கும் பிரச்சனையில்லை. யாராலும் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது பாருங்கள், என்றவாறு இந்த ஆயுதமானது பிரயோகம் செய்யப்படுகிறது.

9. பழி வாங்குதல் :

இது அதிரடியான மிரட்டல் கலந்த ஆயுதமாகும். உங்களைச் சம்மதிக்க வைக்கவோ, ஒப்புக் கொள்ள வைக்கவோ இந்த ஆயுதம் பிரயோகம் செய்யப்படும் விதம் அதிர்ச்சியைத் தூண்டும் விதமாக இருக்கும். அதாவது, இவ்வளவு சொல்லியும் நீங்கள்  கேட்கவில்லை என்றால் எங்கள் கூட்டத்தைக் கூட்டி வந்து உங்களை ஒன்றுமில்லாமல் செய்வோம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சும்மா விட மாட்டோம், நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள் இதன் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்பது இவ்வகை ஆயுதப் பிரயோகத்திற்கு உதாரணமாகும்.

10. பரிதாபத்தைத் தூண்டுதல் :

சகலவிதமான மேற்படி ஆயுதங்களும் பலனளிக்காத போது கடைசி ஆயுதமாக இது பிரயோகிக்கப்படுகிறது. அதாவது, நீங்கள் மட்டும் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் குடும்பத்தோடு இறந்து போவதை விட வேறு வழியில்லை, நீங்கள் இதற்கு சம்மத்திக்கவில்லை என்றால் அதன் பிறகு எங்களுக்கு வாழ்க்கையே இல்லை. எங்களைப் பார்த்தால் உங்களுக்குப் பாவமாகத் தெரியவில்லையா? எங்களிடம் இரக்கம் காட்ட மனமில்லையா? என்பது போல இந்த பரிதாபத்தைத் தூண்டும் ஆயுதமானது பிரயோகம் செய்யப்படுகிறது.

முடிவாக,

இப்படி பத்து வகை வார்த்தை ஆயுதங்களைப் பயன்படுத்தி உங்களைக் குழப்பி, மருளச் செய்து உங்கள் சம்மதத்தையோ, ஒப்புதலையோ பெற ஒருவர் முயற்சிக்கலாம். நீங்கள்தான் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் சம்மதம் தரக் கூடாததற்குச் சம்மதம் தராமலும், ஒப்புதல் தரக் கூடாததற்கு ஒப்புதல் தராமலும் இருக்க வேண்டும். இந்த ஆயுதங்களுக்குப் பலியாகி ஒப்புதலோ, சம்மதமோ தந்தீர்கள் என்றால் அதன் பின் விளைவுகளை நீங்கள்தான் எதிர்கொள்ள நேரிடும் என்பதுதான் அதைத் தொடர்ந்து வரும் எதார்த்தம்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

Saturday, 28 September 2024

கெட்டப் பழக்கங்களை நல்லப் பழக்கங்களாக மாற்றுவது எப்படி?

கெட்டப் பழக்கங்களை நல்லப் பழக்கங்களாக மாற்றுவது எப்படி?

மனிதர்கள் எப்படி கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்? ஏன் அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள்.

மன இறுக்கம்,

மன உளைச்சல்,

சலிப்படைதல்,

களைப்படைதல் காரணமாக கெட்டப் பழக்கங்களுக்கு அடிமையாகுபவர்கள் உண்டு.

சில நிமிட மனக்கிளர்ச்சிக்காகவும் கெட்டப் பழக்கங்களை விடாமல் பிடித்துக் கொள்பவர்களும் உண்டு.

நகம் கடித்தல் தொடங்கி, கடைகளில் பொருட்களை வாங்கிக் குவித்தல், வார இறுதியில் மது அருந்ததுதல், அடிக்கடி புகைப் பிடித்தல், அடிக்கடி அலைபேசி பார்த்தல், தொடர்ச்சியாகப் பல மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்த்தல் வரை இதில் பல்வேறு ரகங்கள் உண்டு.

இது போன்ற பழக்கங்களை மாற்றிக் கொள்ள முடியாதா?

ஏன் முடியாது?

முதலில் சின்ன சின்ன மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மனம் எப்போதும் சுகமானதையும் சௌகரியமானதையும் விரும்பும். அதனால் மாற்றங்களைச் சிறியதாகத்தான் தொடங்க வேண்டும். சிறியதாகத் தொடங்கும் மாற்றம் பெரியதாக மாறும்.

இப்போது நீங்கள் கெட்டப் பழக்கங்களை விடுவதில் இருக்கும் ஒரு முக்கியமான அம்சத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டப் பழக்கத்தை விட்டு விடுவது அவ்வளவு சுலபமானதன்று. ஆனால் கெட்டப் பழக்கத்தின் இடத்தில் ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு வருவதன் மூலமாக அதை மாற்றலாம், கெட்டப் பழக்கத்தை இல்லாமல் செய்யலாம். ஆக கெட்டப் பழக்கத்தை ஒழிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கத்திற்குப் பதிலாக ஒரு நல்ல பழக்கத்தைக் கொண்டு வருவதே ஆகும்.

உதாரணமாகப் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள நபர் அதற்குப் பதிலாக அந்த நேரத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடும் பழக்கத்தை மாற்றாக உருவாக்கிக் கொள்ளலாம்.

மது அருந்தும் பழக்கம் உள்ளவர் அந்த நேரத்தில் அதற்குப் பதிலாகப் பழச்சாறு அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் அலைபேசியைப் பயன்படுத்தும் ஒருவர் அந்த நேரத்தில் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அதிகம் தொலைக்காட்சிப் பார்க்கும் பழக்கம் உள்ள ஒருவர் அந்த நேரத்தில் நண்பர்களைச் சந்தித்து அளவளாவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதில் இருக்கும் இன்னொரு பிரச்சனைக்கு வருவோம்.

நல்லப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் போது அது அவ்வளவு சுலபமாக நடந்து விடாது. ஏன் அப்படி?

ஏனென்றால் ஆசையின் காரணமாக நாம் எல்லாவற்றையும் பெரிது பெரிதாகச் செய்ய நினைக்கிறோம். ஆகவே அதை மாற்றி சிறியதிலிருந்து துவங்க வேண்டும்.

அது எப்படி என்கிறீர்களா?

உதாரணமாகத் தினந்தோறும் ஒரு மணி நேரம் நடைபயிற்சி செய்ய நினைக்கும் ஒருவர் அந்தப் பழக்கத்தை முதலில் ஐந்து நிமிட நடைபயிற்சி என்ற அளவில் தொடங்க வேண்டும்.

சிறிய அளவில் தொடங்கும் போது அதை சுலபமாகச் செய்ய முடியும். அதில் கிடைக்கும் வெற்றி தொடர்ந்து நடைபயிற்சிக்கான நேரத்தை அதிகரிக்கத் தூண்டும். படிப்படியாக நேரத்தை அதிகரித்து ஒரு மணி நேர நடைபயிற்சி என்ற இலக்கை நீங்கள் வெற்றிகரமாக அடையலாம்.

இதே முறைதான் எல்லாவற்றிற்கும்.

உணவுப் பழக்கத்தை மாற்ற விரும்பும் போதும் இதே போன்ற சிறிய அளவில் துவங்க வேண்டும். ஒட்டுமொத்த உணவை மாற்றுவதற்குப் பதிலாக ஒரே ஒரு உணவை மட்டும் துவக்கத்தில் மாற்றி அதில் வெற்றி கண்டு விட்டால் ஒவ்வொரு உணவாக மாற்றும் ஆர்வம் உங்களை அறியாமல் உங்களுக்கே வந்து விடும்.

இதற்குக் காரணம் சிறிய இலக்குகள் மலைப்பை உண்டாக்காது. செய்ய முடியுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாது. சுலபமாகச் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையும் ஆர்வத்தையும் உண்டாக்குவதால் சிறிய சிறிய இலக்குகளிலிருந்தே இலக்குகளைப் பெரிதாக்க வேண்டும்.

ஆகவே சிறியதே அழகு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இதில் இன்னொரு முக்கிய விசயத்தையும் கவனிக்க வேண்டும்.

சிறிய காரியங்களைச் சிறிய காரியங்கள்தானே, இதைப் பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விடக் கூடாது. அப்படி தள்ளி வைத்தால் சிறிய காரியமானாலும் அதைச் செய்வது பெரிய காரியமாகி விடும். அதே நேரத்தில் சிறியதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அந்த இலக்கை, அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்யவும் வேண்டும். அதில் சுணக்கமோ, சோம்பேறித்தனமாக காட்டி விடக் கூடாது. காரியங்களைச் செய்யத் துவங்கும் போதுதான் சுணக்கமும் சோம்பேறித்தனமும் உண்டாகும். செய்ய ஆரம்பித்து விட்டால் அது விலகி விடும்.

இப்படியாக நீங்கள் கெட்டப் பழக்கத்தை மாற்றி அமைக்கலாம். நல்லப் பழக்கத்தை வலுபடுத்தலாம்.

இச்செய்தி உங்கள் வாழ்க்கையை மாற்றி உங்களைப் பயனுள்ளவராக மாற்றினால் அந்த அனுபவத்தைப் பதிவிடுங்களேன். அது மேலும் பலருக்கு உதவும், உத்வேகம் தரும்.

Friday, 30 August 2024

பணக்கார சூட்சமங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒருவர் பணக்காரராகச் சம்பாத்தியம் மட்டும் முக்கியமில்லை. அவர் சம்பாத்தியத்தில் எவ்வளவு சேமிக்கிறார் என்பதும் முக்கியம். இதுவே பணக்காரர் ஆவதில் உள்ள முக்கிய சூட்சமம்.

பணக்காரராகச் சேமிக்க வேண்டும். சேமித்ததை லாபகரமாக முதலீடு செய்ய வேண்டும்.

அத்துடன் பணக்காரர்களின் மேலும் சில சூட்சமங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் முதலீட்டில் துணிந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதிக வருமானத்திற்கு முதலீட்டில் கணிப்பின் அடிப்படையில் துணிகர முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

பணக்காரர்களின் குணாதிசயம் என்று ஒன்று இருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்போது ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறதோ அப்போது அந்தப் பொருளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிப் போட்டு விட்டு, சரியான விலை கிடைக்கும் வரை நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பங்குச்சந்தையைப் பொருத்த வரையில் நேரம் பார்த்து முதலீடு செய்வதை விட, முதலீடு செய்து விட்டு நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்.

பணக்காரர்களின் மேலும் சில குணாதிசயங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இலக்குகளை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். மனதில் நினைப்பதை விட எழுதி வைத்துக் கொண்டு, திரும்ப திரும்ப பார்க்கும் போது அவர்களுடைய இலக்கும் பயணமும் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

பணக்காரர்களின் செயல் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றுள் முக்கியமான ஒன்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் வழக்கறிஞர், தணிக்கையாளர், நிதி ஆலோசகர் ஆகிய மூவரைத் தங்களுடைய நண்பர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொத்து எதையாவது வாங்க வேண்டும் என்றால் இந்த மூவரிடம் ஆலோசனை கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். ஆலோசனைகள் பெற்று, சொத்து வாங்குவதால் பல தலைமுறைகளுக்குச் சிக்கல் இல்லாத சொத்துகளை அவர்கள் உருவாக்குவார்கள்.

இந்த விசயம் உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் பணக்காரர்கள் இந்தச் சின்னஞ்சிறு விசயத்திலும் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள். அது என்னவென்று கேட்கிறீர்களா?

பணக்காரர்கள் வெளியில் அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது, பணச் சேமிப்பும் கிடைக்கிறது.

அப்படியானால் பணக்காரர்களும் ஏழைகளும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்கிறீர்களா? சந்தேகமே இல்லாமல் நாம் முதலில் பார்த்த அதே இடம்தான். அதாவது சேமிப்புதான்.

பணக்காரர்கள் மிச்சமாகும் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஏழைகள் சம்பாதிக்கும் காலத்தில் தேவையில்லாத செலவுகளைச் செய்துவிட்டு பணி ஓய்வுக்குப் பின் கஷ்டப்படுகிறார்கள். பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆகவே நீங்கள் நினைத்தால் பணக்காரர் ஆகலாம். நீங்கள் நினைத்தால் பணக்கார நிலையிலிருந்து ஏழையாகவும் ஆகலாம். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒருவர் தன் வருமானத்தில் பத்து சதவீத தொகையைச் சேமித்தாலே ராஜா போல வாழலாம். பிறகென்ன சேமிக்கத் தொடங்குங்கள். சேமித்த தொகையை லாபகரமாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். பணக்காரர் ஆகுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

Saturday, 24 August 2024

பணியில் வெற்றி பெறுவதற்கான ஜப்பானியர்களின் 5 முறைகள்!

ஜப்பானியர்கள் நேர்த்தியானவர்கள். ஜப்பானியப் பொருட்கள் தரமானவை. சுறுசுறுப்புக்கும் செய்நேர்த்திக்கும் ஜப்பான் எப்போதும் உதாரணம். இது எப்படி நிகழ்ந்தது? எப்படி சாத்தியமானது?

இதற்குக் காரணம் ஜப்பானியர்கள் பணியின் போது பின்பற்றும் 5 முறைகள்தான். அந்த முறைகளைத் தெரிந்து கொண்டால் நாமும் அப்படி பணியில் முன்னேறலாம், வெற்றி பெறலாம்தானே.

அவர்கள் பின்பற்றும் அந்த ஐந்து முறைகளைத் தற்போது காண்போமா?

1. நாம் பணிபுரியும் இடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குவது.

2. தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்திப் பயன்படுத்துவதற்கு எளிமையான முறையில் வைத்துக் கொள்ளுதல்.

3. பணி புரியும் இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்.

4. நமது தேவைகள் மற்றும் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல்.

5. நமது திட்டங்கள் மற்றும் செயல்முறைகளைப் பழக்க வழக்கமாக்கிக் கொள்ளுதல்.

இந்த ஐந்து முறைகளில் முதல் மூன்றைப் பாருங்களேன். பணியிடத்தை வைத்துக் கொள்வது தொடர்பாக உள்ளது அல்லவா!

நாம் பணிபுரியும் இடத்தை எப்படி வைத்துக் கொள்கிறோமோ, அப்படித்தான் பணியில் நம்முடைய வெற்றியும் அடங்கி இருக்கிறது.

எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமல், அந்தப் பொருளைத் தேடுவதில் நாள் முழுவதும் செலவழித்தால் என்னவாகும் சொல்லுங்கள்? நம் நாள் முழுவதும் அதிலேயே கழிந்து போகும் அல்லவா! ஆகவேதான் பணியிட ஒழுங்கை முதன்மையாகக் கருதுகிறார்கள் ஜப்பானியர்கள்.

அடுத்த இரண்டும் ஒழுங்கு மற்றும் பழக்க வழக்கம் சார்ந்தது. பணியில் ஒழுங்கையும், செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்வதைப் பழக்கமாகவும் ஆக்கிக் கொண்டால், பணியாற்றுவதில் சுலபமும் வேகமும் அத்துடன் மனதுள் உத்வேகமும் உண்டாகி விடும். பிறகென்ன?  ஜப்பானியர்களைப் போலே நாமும் பணியில் வெற்றி பெற முடியும்தானே?

Friday, 23 August 2024

சாதனை ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!

சாதிப்பதற்கு எது அவசியம் தெரியுமா?

சாதிக்கும் வரை பொறுமையும் அதுவரை காத்திருக்கும் மனப்பான்மையும்தான் அவசியமானது மற்றும் முக்கியமானது.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைவதற்கு எது மிக மிக தேவை என்றால் பொறுமையாகக் காத்திருக்கும் மனப்பான்மைதான்.

இதை ஓர் உளவியல் ஆய்வு கூட நிரூபிக்கிறது.

ஸ்டான்போர்ட்டு யூனிவர்சிட்டி உளவியல் பேராசிரியர் வால்டர் மிஷல் இது குறித்து செய்த ஆய்வு முக்கியமானது.

1960 இல் இந்த ஆய்வைச் செய்தார் வால்டர் மிஷல்.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஐந்து வயதுக்குட்பட்ட நூறு குழந்தைகளுக்கு மார்ஷ்மெல்லோ சாக்லேட் வழங்கப்பட்டது. அதனால் இந்த ஆய்வுக்கு மார்ஷ்மெல்லோ ஆய்வு என்ற பெயரும் உண்டு.

குழந்தைகள் அந்த சாக்லேட்டை 15 நிமிடம் சாப்பிடாமல் இருந்தால் இன்னும் ஒரு சாக்லேட் வழங்கப்படும் என்பதுதான் அவர்கள் செய்த ஆய்வின் சாராம்சம்.

என்ன நடந்தது தெரியுமா?

பல குழந்தைகள் பதினைந்து நிமிடம் காத்திருக்க முடியாமல் ஆசையால் மார்ஷ்மெல்லோ சாக்லேட்டைச் சாப்பிட்டு விட்டனர்.

சில குழந்தைகள்தான் 15 நிமிடம் வரை காத்திருந்து மற்றொரு சாக்லேட்டைப் பெற்றனர்.

விசயம் அத்தோடு முடிந்துவிடவில்லை என்பதுதான் இந்த ஆய்வின் மற்றொரு சுவாரசியம்.

அந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளை 40 வருடங்கள் வரை பின்தொடர்ந்து ஆய்ந்தனர் உளவியல் அறிஞர்கள்.

அவர்களுள் காத்திருந்து மற்றொரு சாக்லேட்டை வாங்கிய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக இருந்தனர்.

சாதனை என்பது சட்டென நிகழ்ந்து விடுவதில்லை.

சில பல சோதனைகளுக்குப் பிறகே நிகழ்கிறது.

சோதனைகளைப் பொறுமையாக எதிர்கொண்டு சாதிக்கும் வரை அதை விடாது, அதை அடையும் மனப்பான்மையோடு காத்திருக்கும் தன்மை தேவையாக இருக்கிறது. அப்படி ஒன்றை அடைவதற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்பவர்களே சாதிக்கிறார்கள்.

இதுவே சாதிக்க நினைப்பவர்களுக்கு மார்ஷ்மெல்லோ ஆய்வு சொல்லும் சூட்சமம்.

நீங்களும் சாதிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் உங்களுக்கான சாதனை ரகசியம் இப்போது கிடைத்திருக்குமே.

Saturday, 17 August 2024

நிம்மதியான ஓய்வு காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பணி ஓய்வுக்குப் பின் வருமானம் இல்லாத வாழ்வை எதிர்கொள்ள நேரிடலாம். வருமானமின்மையால் நிம்மதியான வாழ்க்கை அமையாமலும் போகலாம். இதை எப்படி எதிர்கொள்வது?

நிம்மதியான ஓய்வு காலத்திற்கு என்ன செய்வது?

பணியில் இருக்கும் காலத்தில் உங்கள் சம்பாத்தியத்தில் பத்து சதவீத தொகையைச் சேமிக்கப் பழகுங்கள். அந்தச் சேமிப்பைக் கலவையாக நிலம், தங்கம், பங்குகள் என்று கலவையாக முதலீடு செய்யுங்கள்.

இதைத்தான் ‘பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன்’ என்ற நூலில் ஜார்ஜ் கிளாட்சன் கூறுகிறார். அதாவது, ஒருவர் வருமானத்தில் பத்து சதவீதத் தொகையைத் தனக்காகச் சேமிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அப்படி வேலையில் சேரும் ஒருவர் ரூ. 20,000/- மாதச் சம்பளம் பெறுவதாக வைத்துக் கொண்டால், அவர் மாதந்தோறும் சேமிக்க வேண்டிய தொகை ரூ. 2,000/- ஆகும். இப்படி ஒருவர் தன் வேலைக்காலம் முழுவதும் சேமித்து, அத்தொகையை நிலம், தங்கம், பங்குகள் என முதலீடு செய்திருந்தால் ஓய்வு பெறும் நாளில் அவரது சேமிப்பின் முதலீட்டுத் தொகையானது நிச்சயம் ஒரு கோடியை எட்டியிருக்கும். அத்தொகையைக் கொண்டு அவர் நிம்மதியாகத் தனது ஓய்வுக் காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். இதுவே நிம்மதியான ஓய்வு காலத்திற்கு ஒருவர் செய்ய வேண்டியதாகும். 

Friday, 16 August 2024

வேலையில் வெற்றி காண்பதற்கான வெற்றிகரமான சூத்திரங்கள்!

வேலையில் வெற்றி காண வெற்றிகரமான பல சூத்திரங்கள் உள்ளன.

வேலையில் வெற்றி காண நீங்கள் எப்போதும் வேலை செய்பவராக மட்டும் இருக்கக் கூடாது. உங்கள் வேலை சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டும், உங்களைப் போன்ற வேலை செய்யும் வல்லுநர்களைச் சந்திக்க அவர்களுடன் உரையாட வேண்டும்.

வேலையில் வெற்றி பெற்ற பலரும் நிறைய நேரத்தைப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் புதிதாக எதையாவது உருவாக்குவதற்கும் உபயோகிக்கின்றனர். இதன் மூலம் அவர்களது சிந்தனையும் செயலும் சீராக இருக்கிறது.

எந்நேரமும் பரபரப்பாக வேலை செய்வதால் மட்டும் வேலையில் வெற்றி காண முடியாது. ஏனென்றால், மேம்பாடு என்பது தொலைநோக்குப் பார்வை, செயலாக்கம் ஆகிய இரண்டையும் கொண்டது. எந்நேரமும் பரபரப்பாக இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஒரு வேலை என்றால் அதில் பிரச்சனைகளும் வரும். அப்படிப் பிரச்சனைகள் வரும் போது அதைத் தீர்க்கும் முறை முக்கியமானது. ஒரு பிரச்சனை குறித்து சரியாகச் சிந்திப்பதே அந்தப் பிரச்சனையைத் தீர்க்க பெரிய உதவியாக இருக்கும். இதற்குத் திறன் மேம்பாடு உங்களுக்குப் பெரிதும் உதவும்.

உங்கள் திறன் மேம்பாடு என்பது மூன்று விசயங்களைச் சார்ந்திருக்கிறது.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக முடிவு செய்து கொள்வது.

2. அதைச் செய்வதற்கான சரியான நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து கொள்வது.

3. குறிப்பிட்ட கால கட்டத்தில் அதை செவ்வனே செய்து முடிப்பது.

வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது. அது என்னவென்றால், எண்ணமும் செயலும் ஒன்றாக இருக்கும் போது மட்டுமே ஒரு வேலையைச் செய்வதற்கான சக்தி கிடைக்கும். எண்ணமும் செயலும் வேறு வேறாக இருப்பதே ஒரு வேலையைச் செய்ய முடியாமைக்குக் காரணம்.

ஒரு வேலையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் பின்வரும் ஐந்து வினாக்களுக்கு விடை காண வேண்டும்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

2. எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

3. எங்கே செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

4. எப்படி செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது.

5. செய்ய வேண்டிய விசயங்களை செய்யும் போது எப்படி மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் செய்வது என்பதைத் திட்டமிடுவது.

வேலை குறித்த மற்றொரு முக்கியமான சூத்திரத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், வேலைகளை எந்த அளவுக்கு எளிமையாக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு வெற்றி கிடைக்கிறது. ஒரு வேலையைக் கடினமாக்கித் தோற்பதை விட, எந்த ஒரு கடினமான வேலையையும் எளிதாக்கி வெற்றி காண்பதே புத்திசாலித்தனம்.

அத்துடன் வேலை குறித்த இந்தச் சூத்திரம் முக்கியமானது. அது என்னவென்றால், ஒரு வேலையில் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தால்தான் நீங்கள் அந்த வேலையைக் கற்றுக் கொள்ள முடியும். இது வேலை குறித்த கடினமான சூத்திரமாகத் தோன்றினாலும் இந்தச் சூத்திரத்தில் தேறியவர்கள்தான் வேலையில் கில்லாடிகளாக ஆகிறார்கள்.  

Saturday, 10 August 2024

புத்திசாலித்தனத்தையும் தாண்டித் தேவையானது எது தெரியுமா?

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மட்டும் போதுமா?

“புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை!

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

புத்திசாலி இல்லை!”

என்று கண்ணதாசன் எழுதிய பாடலைச் சந்திரபாபு பாடுவார். அதற்கு அவரே ஓர் உதாரணமாகவும் ஆகி விட்டார்.

என்ன காரணம்?

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மட்டும் போதாதா?

ஆம் போதாதுதான். புத்திசாலித்தனத்தை IQ என்கிறார்கள். அதாவது நுண்ணறிவு ஈவு என்கிறார்கள். இந்த IQவை விட இன்னொரு முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் EQ. அதாவது உணர்வுச் சமநிலைத் திறனுக்கான ஈவு.

இதைப் பற்றி முதலில் சொல்லி இதற்கென ஒரு புத்தகத்தைப் போட்டவர் டேனியல் கோல்மென்.

அவர் EQவுக்குத் தேவையான ஐந்து முக்கிய கூறுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அவையாவன,

1. தன்னை அறிதல்.

2. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல்.

3. ஊக்கத்துடன் இருத்தல்.

4. பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.

5. சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்.

ஒருவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை உணர்வு சமநிலையை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இல்லையென்றால் என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும் உலக வாழ்வில் வெற்றி பெறுவது என்பது இயலாமல் போய் விடும். சந்திரபாபு போலவே பாடித் திரிய வேண்டியதாகியும் விடும்.

Friday, 9 August 2024

வெற்றியின் வாயில்கள் எவை தெரியுமா?

வெற்றிக்கு ஏதும் வாயில்கள் இருக்கிறதா?

இருக்கிறது. வாய்ப்புகள்தான் அதன் வாயில்கள்.

நீங்கள் பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் உங்களுக்கான வாய்ப்புகள் இந்த உலகில் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது தங்கப் பொக்கிசத்தைக் கண்டறிவதைப் போன்றது. அதே நேரத்தில் வாய்ப்புகள் போன்று தோற்றம் தரும் வாய்ப்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம். ஏனென்றால் இவை உங்களுடைய சக்தி, நேரம், பணம் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விடும்.

வாய்ப்புகளைச் சரியாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டவர்கள் பெரிய நிறுவனங்களை, புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். மைக்ரோசாப்ட்டை உருவாக்கிய பில்கேட்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.

கிடைத்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே போவதும் முக்கியம். இல்லையென்றால் பெற்ற உயரத்தைத் தக்க வைப்பது கடினம்.

ஒரு கணக்கெடுப்பின் படி வாய்ப்புகளைச் சரியாகத் தொடர்ந்து பயன்படுத்தியபடி 1.7 சதவீதத்துக்குக் குறைவான நிறுவனங்களே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிற்கின்றன. ஆரம்பத்தில் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினாலும் காலப்போக்கில் வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதில் பின்தங்கி வீழ்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன. போலராய்டு, கோடாக், பிளாக்பெர்ரி, நோக்கிய போன்ற நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே வீழ்ந்த நிறுவனங்கள்.

தொடர்ந்து இந்த உலகில் உண்டாகும் வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக நீங்களும் இந்த உலகில் வெற்றியாளராக உங்கள் முத்திரையைப் பதிக்கலாம்.

Saturday, 3 August 2024

உடல்தகுதியற்ற இந்தியர்கள் ஐம்பது சதவீதமா?

இந்தியர்களில் பாதி பேர் உடல் தகுதி இல்லாமல் இருப்பதாகச் சொல்கிறது லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழ்.

அது இருக்கட்டும்.

நீங்கள் தினந்தோறும் நடைபயிற்சி செய்கிறீர்களா?

அல்லது,

காலையில் யோகா செய்கிறீர்களா?

அல்லது

ஏதேனும் ஒரு விளையாட்டை த் தினந்தோறும் வியர்க்க விறுவிறுக்க அரை மணி நேரம் விளையாடுகிறீர்களா?

அல்லது

மிதிவண்டியில் செல்கிறீர்களா?

இவற்றில் ஒன்றைக் கூட நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்களும் உடல்தகுதி இல்லாத இந்தியர்களில் ஒருவராக விரைவில் மாறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஆம்! இந்திய ஆண்களில் 42 சதவீதம் பேரும், பெண்களில் 57 சதவீதம் பேரும் உடல் அளவில் செயலற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம்?

போதிய உடல் உழைப்போ, உடல் செயல்பாடுகளோ இல்லாமல் போனதுதான் காரணம்.

உடல் தகுதி இல்லாமல் இருந்தால் என்ன?

சர்க்கரை நோய், உடல் பருமன், பக்கவாதம், ரத்த அழுத்த நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்பட உடல்தகுதி இல்லாமல் போவது காரணமாகின்றன.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே உடல் செயல்திறன் எவ்வளவு முக்கியம் என்று.

இப்போது என்ன செய்யலாம் என்கிறீர்களா?

நடந்து செல்ல வாய்ப்புள்ள இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

இரு சக்கர வாகனத்திற்கு அவ்வபோது ஓய்வு கொடுத்து விட்டு மிதிவண்டியில் செல்லுங்கள்.

காலையோ அல்லது மாலையோ அரை மணி நேரம் நடைபயிற்சி செய்வதற்கோ அல்லது விளையாடுவதற்கோ நேரம் ஒதுக்குங்கள்.

மின்தூக்கியைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு மாடி படியேறி மேலே செல்லுங்கள்.

அமர்ந்தே பார்க்கும் வேலைகளுக்கு அரை மணி நேரம் விடை கொடுத்து விட்டு தோட்ட வேலைகளில் ஈடுபடுங்கள்.

இப்படி சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் உடல் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உடல்தகுதி மிகுந்த இந்தியர்களாக மாறுங்கள். அதனால் தொற்றா நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.  

Friday, 2 August 2024

ஏன் நாம் அன்பாக இருக்க பயப்படுகிறோம்?

அவசரம், திகில், போட்டிகள் நிறைந்த பரபரப்பான நிலை போன்ற சூழல்களில் வாழ்கிறோம். அமைதியாகவும் அன்பாகவும் நாம் மாறி விட்டால் நம்மால் நம்முடைய இலக்குகளை அடைய முடியாது என்ற தவறான எண்ணத்தில் நாம் சின்ன சின்ன பிரச்சனைகளைப் பெரிதாகக் கருதுகிறோம்.

ஒரு பிரச்சனையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தே அந்தப் பிரச்சனையை விரைவாகவும் சுலபமாகவும் தீர்க்க இயலும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட மனநிலையைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்?

சின்ன சின்ன பிரச்சனைகளைச் சின்ன சின்ன பிரச்சனைகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் பெரிய பிரச்சனைகளாகப் பார்க்கக் கூடாது.

உங்களை வாகனத்தில் முந்திக் கொண்டு செல்லும் நபர் ஏதோ அவசரத்தில் இருக்கலாம். அல்லது வேகமாகச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கலாம். அவர் உங்களை முந்திச் சென்று உங்களைக் கடந்து சென்று அங்குச் சந்தோசமாக இருப்பார். ஆனால் நீங்களோ உங்களை முந்திச் சென்று விட்டாரே என்ற நினைப்பில் இருந்தால் கவலையில் இருப்பீர்கள். இது ஒருவருடைய மனநிலையின் பிரச்சனையே. அன்பை விடுத்து வெறுப்பைத் தேர்ந்து கொள்ளும் மனநிலை இது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் மனதளவில் அனைவரும் மகிழ்வாக இருக்கலாம்.

வாழ்க்கையில் நாமும் நூறு சதவீதம் சரியானவர்கள் இல்லை. மற்றவர்களும் நூறு சதவீதம் சரியானவர்கள் இல்லை. நிலைமை இப்படி இருக்க யாரும் சரியாக இல்லை என்பதற்காக நரம்புகள் புடைக்க கோபப்படுவது எத்தகைய நகைமுரண்? வாழ்க்கையில் எல்லாரும் கொஞ்சம் முன்னே பின்னேதான் இருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொண்டால் யார் மீதும் நமக்கு வெறுப்பு வராது. எல்லார் மீதும் ஒரு நேசம் உண்டாகி விடும்.

ஆகவே, உள்ளதைக் கொண்டு நல்லதாக்குவோம் என்ற மனநிலைதான் நல்லது. எதிலும் குறை காணும் மனநிலை ஆபத்தானது. உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு, இந்த உலகை நாம் சரிசெய்ய வரவில்லை என்பதைப் புரிந்து கொண்டால் நிஜமாகவே வாழ்க்கை நூறு சதவீதம் மட்டுமல்ல, இருநூறு சதவீதம் சரியாகி விடும். எல்லாரிடமும் அவர்களுடைய குறைகளை மறந்து அன்பு செலுத்தவும் ஆரம்பித்து விடுவோம்.

இந்த உண்மை புரிந்து விட்டால் அன்பாக இருப்பதற்குப் பயப்பட மாட்டோம். அன்பாக இருந்தால் பறிகொடுத்து விடுவோமோ என்று சந்தேகப்பட மாட்டோம். அன்பாக இருப்பதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்வை அன்பு மயமாக ஆக்கி விடுவோம்.

Saturday, 27 July 2024

ஏன் நீங்கள் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறீர்கள்?

சிறந்த வேலை நாள் என்பது அதிகமாக வேலைபார்ப்பது இல்லை. சரியான அளவில் வேலை பார்ப்பதே.

ஏன் நாம் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறோம்?

இயல்பாகவே மனிதர்களுக்கு அதிக வேலை பார்ப்பதில் ஈடுபாடு இருக்கும். நிறுவனங்களுக்கோ அதிக வேலை வாங்குவதில் ஈடுபாடு இருக்கும்.

எந்த அளவுக்கு அதிக வேலை பார்க்கிறோமோ அந்த அளவுக்குப் பின்னாட்களில் கொந்தளிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன.

அதிகமாக வேலை பார்ப்பதால் நம்மை அறியாமல் பரபரப்பு, பதற்றம் போன்வற்றிற்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஏன்? இது எப்படி நிகழ்கிறது?

பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனர் என்பது தெரியாமலேயே இருக்கின்றனர். இதனால் அவர்கள் காரணமின்றிப் பரபரப்பாக இருக்கின்றனர்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். அப்படித் தெளிவாக இருக்கும் போது, எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்குத் தேவையான விசயம் உங்கள் கண்களுக்குத் தெளிவாகத் தென்படும். அப்படித் தென்படும் போது அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்திச் சரியாகச் செயல்படுவீர்கள்.

தெளிவாக இருக்கும் போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அதிக தெளிவும், அன்றாட பகட்டுகள் மற்றும் பரபரப்புகளுக்கு முன்னுரிமை தராமல் இருப்பதற்கும் பழகிக் கொள்வீர்கள்.

இதனால் எதில் கவனம் செலுத்தி எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புலப்படும். நீங்கள் சரியான அளவில் வேலை செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலையும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.