Sunday, 16 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 17.08.2026

1) கர்நாடகத்தில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதற்குத் தமிழகத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2) ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 11000 ஏரிகள் மற்றும் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் இன்று முதல் தொடங்குகின்றன.

3) எல்பிஜி உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உற்பத்தியை முடுக்கி விட உத்தரவிட்டுள்ளது.

4) ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 9000 கன அடியாக அதிகரித்துள்ளது.

5) இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.


Education & GK News

1) Tamil Nadu leaders have strongly condemned the shooting deaths of three Tamils ​​in Karnataka.

2) Work to desilt 11,000 lakes and canals in Tamil Nadu under the rural employment scheme begins today.

3) The Central Government has set production targets for Indian LPG manufacturers and ordered them to ramp up output.

4) Water inflow into Hogenakkal has increased to 9,000 cubic feet per second.

5) The death toll from the earthquake in Indonesia has risen to 51.

பரியங்க யோகமும் குரோலியின் மேஜிக்கும்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 54

பரியங்க யோகமும் குரோலியின் மேஜிக்கும்!

இரவு பதினொரு மணி. பிரதாமராமபுரம் பிரதான சாலையில் மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்தது.

பிரசாந்த் தனக்கு எதிரே அமர்ந்திருந்த ராகவனைப் பார்த்தான். ராகவன் கைபேசியில் ஏதோ ஒரு பழைய பிடிஎப் புத்தகத்தைத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தான்.

"என்ன ராகவன், ரொம்ப சீரியஸா இருக்கே?"

ராகவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. "பிரசாந்த், நீ அலெஸ்டர் குரோலியைப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?"

"அந்தப் பாலியல் தந்திரன்தானே? 1900ல லண்டனை அலறவிட்டவன். இப்போ எதுக்கு அவனைப் பத்தி கேக்குற?"

"அவன் சொன்னது சும்மா கதை இல்லை பிரசாந்த். மனிதனோட ஆல்பா மூளை அலைகளும், உடலோட உச்சக்கட்ட எனர்ஜியும் ஒரே புள்ளியில சேரும்போது பிரபஞ்சத்தோட பிரீக்வென்ஸியை நாம டியூன் பண்ண முடியும். அதைத்தான் குரோலி 'தெலெமா' அப்படின்னு சொன்னான். அதை ஏன் நம்ம தமிழ்நாட்டுச் சூழலுக்கு ஏத்த மாதிரி மாத்திப் பார்க்கக் கூடாது?"

பிரசாந்த் சிரித்தான். "ராகவன், நீ பி.டெக் முடிச்சவன். குரோலி செஞ்சது அறிவியல் கலந்து போர்த்தப்பட்ட ஒரு மாயை. அதையும் நம்ம ஊரு தந்திர சாஸ்திரத்தையும் போட்டு குழப்பிக்காத."

ராகவன் அவசர அவசரமாகத் தன் லேப்டாப்பைத் திறந்தான். "இல்லை பிரசாந்த்! நான் ஒரு மேத் மாடல் ரெடி பண்ணியிருக்கேன். குரோலி சொன்ன 'கார்டினல் எனர்ஜி', நம்ம ஊரு திருமந்திரத்துல வர்ற 'பரியங்க யோகம்' இரண்டையும் கம்பைன் பண்ணி, மனசோட இன்டென்சிட்டியை நூறு சதவீதம் ஒரு புள்ளி மேல குவிக்கும்போது, குவாண்டம் அளவில் ஒரு மாற்றம் நடக்கும். நாளைக்கு பௌர்ணமி. நான் ஓர் எக்ஸ்பெரிமெண்ட் பண்ணப்போறேன்."

"என்னது எக்ஸ்பெரிமெண்ட்டா? எங்கே?"

"வேளாங்கண்ணி கடற்கரையோரம் ஒரு பண்ணை வீடு. என் பிரெண்ட் சுசித்ராவும் வர்றா."

பிரசாந்துக்கு லேசாகப் பொறி தட்டியது. "ராகவன், பாலியல் ஆற்றலை அமானுஷ்ய சக்தியா மாத்துறேன்னு சொல்லி நூறு வருஷத்துக்கு முன்னாடி லண்டன்ல ஆரம்பிச்ச விளையாட்டு இது. அன்னைக்கு அதுக்கு பேரு 'பாலியல் ஜாலம்'. இன்னைக்கு நாம அதை ஹார்மோன்களின் ஜாலம்ன்னு வேணா சொல்லலாம். ஆனா ஆபத்து ஒன்னுதான். மனசு தட்டுத்தடுமாறினா, அமானுஷ்ய சக்தி வரலைனாலும், மனித மூளை பைத்தியமாயிடும்!"

ராகவன் அதைக்கேட்கும் நிலையில் இல்லை. "நாளைக்கு நைட் 12 மணிக்கு வா பிரசாந்த். நீயே கண்ணால பாரு."

அடுத்த நாள் இரவு 11:45.

வேளாங்கண்ணி கடற்கரை காற்றில் உப்பின் வாசனை பலமாக இருந்தது.

பண்ணை வீட்டின் நடுவே ராகவனும் சுசித்ராவும் அமர்ந்திருந்தனர்.

அறையைச் சுற்றி விசித்திரமான குறியீடுகள், தாமிரத் தகடுகள், மற்றும் லேப்டாப்பில் ஓடிக் கொண்டிருந்த பிரிக்வென்சி அலைவரிசை ஒலிகள்.

பிரசாந்த் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்தான்.

ராகவனின் கண்கள் தியானத்தின் உச்ச நிலையில் இருந்தன. அவன் சுசித்ராவின் கைகளைப் பிடித்து, மனதின் மொத்த ஆற்றலையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்கத் தொடங்கினான். குரோலியின் கோட்பாடுப்படி, உடலின் உச்சகட்ட உணர்ச்சியின் போது எழும் ஆற்றலைத் தூய்மையான மன உருவகமாக மாற்றும் முயற்சி அது.

திடீரென அறையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

லேப்டாப்பில் இருந்த அலைவரிசை மீட்டர் எகிறியது. அறையின் வெப்ப நிலை சடாரெனக் குறைந்தது. காற்றில் கடல் அலைகளின் சத்தம் நின்றுபோய், ஏதோ ஒரு விசித்திரமான அதிர்வு அறைக்குள் பரவியது.

சுசித்ரா திடீரென மிக அமைதியானாள். அவளது கண்கள் முற்றிலுமாகக் கருப்பாக மாறி, விழித்திரையே தெரியாமல் போயின.

ராகவன் மூச்சுத் திணறித் தரையில் விழுந்தான்.

பிரசாந்த் பதறியடித்துக்கொண்டு ஓடிச்சென்று மெயின் சுவிட்சைப் போட்டான். விளக்குகள் எரியவில்லை. மாறாக, அறையின் மூலையில் இருந்த மெழுகுவர்த்தி தீப்பிழம்பு மட்டும் இரத்தச் சிவப்பாக மாறியது.

அங்கே, தாமிரத் தகட்டில் ராகவன் மனதால் நினைத்த அந்த விசித்திரக் குறியீடு, தீயினால் சுடப்பட்டது போல் அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், திகில் அதுவல்ல.

சுசித்ரா மெதுவாக நிமிர்ந்து பிரசாந்தைப் பார்த்தாள். அவள் வாயிலிருந்து வெளிவந்த குரல் அவளுடையது அல்ல. அது 1900களின் தடிமனான ஆங்கில உச்சரிப்புடன் கூடிய அமானுஷ்யமான ஓர் ஆண் குரலாக ஒலித்தது.

அதே வினாடி, தரையில் விழுந்து கிடந்த ராகவனின் உடல் அதிவேகமாக வலிப்பு வந்தது போல் துடித்தது. அவன் தன் நகங்களால் தன் தொண்டையைக் கீறிக்கொண்டே, அதே ஆங்கிலக் குரலில் சிரிக்கத் தொடங்கினான்.

பிரசாந்த் பயத்தில் உறைந்துபோய் பின்வாங்கிச் சுவரில் சாய்ந்தான். கதவு தானாகப் படீரென மூடிக்கொண்டது.

சுசித்ரா சட்டென்று பிரசாந்தை நோக்கி மெதுவாக நடந்து வந்தாள். அவள் கண்கள் இமைக்கவே இல்லை. வாய் அசைந்தது.

"குரோலி செஞ்சது வெறும் மேஜிக் இல்லை பிரசாந்த். அது ஒரு கதவு. அதைத் திறக்கத்தான் இந்த ராகவன் எங்களுக்குத் தேவைப்பட்டான்!"

வெளியே கடல் அலைகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பிரம்மாண்டமாக அவ்வளவு வேகமாக முன்னோக்கிப் பாய்ந்து கர்ஜித்து பண்ணை வீட்டின் சுவர்களில் மோதின. அறையின் இருளுக்குள்ளிருந்து பல்லாயிரக்கணக்கான குரல்கள் ஒரே நேரத்தில் முணுமுணுக்கத் தொடங்கின.

பிரசாந்துக்கு அப்போதுதான் புரிந்தது, அவர்கள் பிரபஞ்ச ஆற்றலைத் தூண்டவில்லை. நூறு வருடங்களாகக் கதவுக்கு வெளியே காத்திருந்த ஏதோ ஒரு பயங்கரமான அமானுஷ்யத்தை உள்ளே அழைத்துவிட்டார்கள்!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Saturday, 15 August 2026

கோல்டன் டானின் அட்டகாசங்கள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 53

கோல்டன் டானின் அட்டகாசங்கள்!

1900களின் விடியல்.

ஒரு பக்கம் தொழிற்புரட்சி, நீராவி எஞ்சின்கள், மின்சார விளக்குகள் என்று அறிவியல் உலகம் க்ளிக் அடித்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் மனிதனின் தொன்மையான பயங்களும், இருட்டு அறைகளின் மர்மங்களும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சத்தமில்லாமல் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன.

விஞ்ஞானம் எல்லாவற்றிற்கும் விடை சொல்லிவிடும் என்று மனிதன் நினைத்தபோதே, ஆன்மா எங்கே போகிறது? பிரபஞ்சத்தின் ரகசிய சாவி யாரிடம் இருக்கிறது? என்பன போன்ற கேள்விகள் மனித மூளையின் ஏதோ ஒரு மூலையில் அரிப்பு எடுக்க வைத்தன. அந்த அரிப்பின் விளைவுதான் ஹெர்மெடிக் ஆர்டர் ஆப் தி கோல்டன் டான்.

சுருக்கமாகச் சொன்னால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டனில் இயங்கிய ஹை டெக் மாந்திரீகக் கிளப் மற்றும் லண்டனின் அமானுஷ்யக் கூடம்.

லண்டன் வீதிகளில் பனிப்புகை மண்டிக் கிடக்கும் மாலை நேரங்களில், கருப்பு அங்கி அணிந்த சிலர் ஒரு ரகசிய அறையில் கூடுவார்கள். அங்கே, மேஜை மீது தாரோ கார்டுகள், எகிப்திய குறியீடுகள், யூதர்களின் கபாலா வரைபடங்கள் இருக்கும்.

அங்கே என்ன நடந்தது தெரியுமா?

சாமானிய மக்களுக்கு இது வெறும் பில்லி சூனியம் அல்லது மாந்திரீகம். ஆனால், அவர்களுக்கு அது ஓர் அறிவியல். பிரபஞ்ச ஆற்றலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி. எகிப்தியக் கடவுள்களை அழைப்பது, மனதைக் கொண்டு தூரத்திலிருக்கும் பொருள்களை அசைப்பது, எதிர்காலத்தைக் கணிப்பது எனத் தங்களின் ஆராய்ச்சிகளை அங்கே நடத்தினார்கள்.

இந்தக் கிளப்பின் விஐபி உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

இந்த அமைப்பின் சுவாரசியமே அதில் அங்கத்தினராக இருந்த நபர்கள்தான். ஏதோ வேலைவெட்டி இல்லாதவர்கள் கூடிய இடமல்ல இது. அக்காலகட்டத்தின் ஆகச்சிறந்த அறிவுஜீவிகளும் எழுத்தாளர்களும் இதில் மூழ்கியிருந்தார்கள்.

நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் யேட்ஸ். இவர் வெறும் பார்வையாளர் இல்லை; இந்த அமைப்பின் உயர்நிலைப் பயிற்சியாளர்! இவரது கவிதைகளில் வரும் பல குறியீடுகள் இந்த ரகசிய கூட்டங்களில் கற்றுக் கொண்டவைதான்.

டிராகுலா நாவலை எழுதி உலகை மிரட்டியவர் ப்ராம் ஸ்டோக்கர். கோல்டன் டான் அமைப்பின் இருண்ட அறைகளில் அவர் கண்ட காட்சிகளும், கேட்ட மாந்திரீகக் கதைகளும்தான் இவரது டிராகுலா உருவாக முக்கியக் காரணியாக இருந்தன.

"உலகின் மிக மோசமான மனிதர்" என்று பத்திரிகைகளால் வர்ணிக்கப்பட்டவர் ஆலிஸ்டர் க்ரௌலி. பின்னாளில் இந்த அமைப்பை உடைத்து, தன் சொந்த மாந்திரீகப் பிரிவைத் தொடங்கிய கலகக்காரர். இவரும் இந்த அமைப்பின் ஓர் உறுப்பினர்.

ஏன் இப்படி என்கிறீர்களா?

அறிவியல் வளர வளர மனிதனுக்கு மர்மங்களின் மீதான மோகம் குறைய வேண்டும், இல்லையா? ஆனால் நடந்தது தலைகீழ். அறிவியல் தரும் தெளிவை விட, அமானுஷ்யம் தரும் அந்த சஸ்பென்ஸ் மனித மூளைக்குப் பிடித்திருந்தது.

அப்புறம் அந்த

அமானுஷ்ய பாடத்திட்டம்

அதைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

கோல்டன் டான் சும்மா மந்திரம் மட்டும் ஓதவில்லை. அவர்களுக்கு என்று ஒரு தெளிவான பாடத்திட்டம் இருந்தது!

அப்பாடத்திட்டம் என்னவென்றால்,

தாரோ கார்டுகள் எனும் 78 கார்டுகளில் இருக்கும் குறியீடுகளை வைத்து மனித மனத்தின் ஆழத்தையும், பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் பகுப்பாய்வு செய்வது.

கபாலா என்பது யூதர்களின் பண்டைய ஆன்மீகக் குறியீட்டு முறை. ஜீவ விருட்சம் என்ற வரைபடம் மூலம் கடவுளையும் மனிதனையும் இணைக்கும் பாதையைத் தேடுவது.

ஆஸ்ட்ரல் டிராவல் எனப்படும் உடலை விட்டு உயிரை வெளியேற்றி, வேறு உலகங்களுக்குப் பயணம் செய்யும் பயிற்சிகள்.

அடுத்து,

முடிவும் ரகசியங்களின் அழிவும்

அதாவது இந்த அமைப்பின் என்ட் கார்டு.

எந்த ஒரு ரகசிய அமைப்பிலும் ஈகோ நுழைந்தால் என்ன ஆகுமோ, அதுதான் கோல்டன் டானுக்கும் நடந்தது. உறுப்பினர்களுக்குள் யார் பெரிய ஆள் என்ற மோதல், ஆலிஸ்டர் க்ரௌலியின் அத்துமீறல்கள், அமைப்பின் ரகசிய ஏடுகள் வீதிக்கு வந்தது என 1900களின் தொடக்கத்திலேயே அமைப்பு சிதறத் தொடங்கியது.

ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற தடம் இன்னமும் அழியவில்லை. இன்றைக்கு நாம் ஹாலிவுட் படங்களில் பார்க்கும் சூனியக்காரர்கள், ரகசியச் சின்னங்கள், தாரோ கார்ட் ஜோசியம் என எல்லாவற்றிற்கும் வித்திட்டது இந்த கோல்டன் டான்தான்.

இப்போது மட்டும் என்ன மாறிவிட்டது?

தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்திலும்கூட, கூகுளில் ஹௌ டூ ஜாய்ன் கோல்டன் டான்? என்று தேடும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆக மொத்தத்தில் மனித மனம் எப்போதும் ஒரு ரகசியத்தைத் தேடிக்கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Friday, 14 August 2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 15.08.2026

1) இன்று 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

2) சென்னை, கோட்டைக் கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார் தமிழக முதல்வர் ச. ஜேசப் விஜய்.

3) பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத்தடுக்க மத்திய  அரசு விரிவான சீர்திருத்தம் கொண்டு வரப் போவதாகக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

4) குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நாளை தமிழகம் வருகிறார்.

5) ஜப்பானில் பெய்து வரும் வரலாறு கன மழைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Education & GK News

1) Prime Minister Narendra Modi is hoisting the tricolour flag at the Red Fort today to mark the 80th Independence Day.

2) Tamil Nadu Chief Minister C. Joseph Vijay is hoisting the tricolour flag at the ramparts of Fort St. George in Chennai.

3) The President has announced that the Central Government intends to introduce comprehensive reforms to curb malpractices in public examinations.

4) Vice President C.P. Radhakrishnan is visiting Tamil Nadu tomorrow for a two-day official tour.

5) Eight people have lost their lives due to historic heavy rains in Japan.

19 ஹெர்ட்ஸ் பயங்கரம்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 52

19 ஹெர்ட்ஸ் பயங்கரம்

அந்தப் பழைய காலனித்துவ வீட்டின் வாசலில் தமிழரசனும் கணேஷூம் வந்து நின்றனர்.

"என்ன கணேஷ், இந்த நேரத்துல குடவாசலுக்குக் கூட்டிட்டு வந்திருக்கே? எங்கேயாவது பேய் பிடிச்சிருக்குன்னு விஜயராமன் மெசேஜ் அனுப்பினா அங்கே உடனே நாம கிளம்பி வரணுமா? அவனுக்கு வேற இல்லையா? எப்ப பார்த்தாலும் அமானுஷ்யம், ரங்கபாஷ்யம்ன்னு போட்டுப் படுத்துறான். அவன் ப்ளாக்ஸ்பாட்டுல எழுதுறதுக்கு நம்மள போட்டு இப்படி அலைய விடுறான்."

"விஷயம் பேய் மட்டும் இல்லை தமிழரசா. காணாமல் போனது ரெண்டு ஐடி பசங்க. அப்புறம் லேப்டாப்ல இருந்து தன்னிச்சையா வெளிய வந்த சில பைனரி கோடுகள்," என்றான் கணேஷ், மாடிப் படிகளில் ஏறத் தொடங்கியபடி.

முதல் மாடி அறையின் வாசலை நெருங்கியதும், "டேய், ரூம் உள்ள போகவே பயமா இருக்குடா. உள்ள ஒரே குளிரா இருக்குடா அப்புறம் அந்த மேஜை மேல இருக்குற லேப்டாப் இன்னமும் ஏதோ டைப் பண்ணிட்டே இருக்குடா." அலறினான் தமிழரசன்.

கணேஷ் உள்ளே நுழைந்தான். அறைக்குள் ஒரு விசித்திரமான மந்தமான வாசம். சாம்பிராணியும், ஓசோன் வாயுவும் கலந்தது போல. மேஜை மேல் ஸ்ரீராமின் லேப்டாப் நீல நிறத்தில் மின்னுவது தெரிந்தது.

தமிழரசன் மேஜை மேலிருந்த தாரோ கார்டை எட்டிப்பார்த்தான். தி ஹேங் மேன். "டேய் கணேஷ்! பசங்க எங்கப்பா? கார்டுல தலைகீழா தொங்குறாங்களா?"

"விளையாடாதே தமிழரசா!" கணேஷ் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய டிஜிட்டல் ப்ரிக்வென்சி மீட்டரை எடுத்து இயக்கினான். மீட்டரின் முள் 19 ஹெர்ட்ஸ் என்ற புள்ளியில் நிலைத்து நின்று அதிரத் தொடங்கியது.

"பிடிச்சிட்டேன்டா!" கணேஷின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.

"என்ன கணேஷ். கண்டுபிடிச்சிட்டியாடா?"

"இங்க பாரு தமிழரசா! இந்த அறையில பேயும் இல்லை, பிசாசும் இல்லை. வெறும் இன்ஃப்ராசவுண்ட் அதாவது மனிதக் காதுகளால் கேட்க முடியாத 19 ஹெர்ட்ஸ் அதிர்வெண் ஒலி அலைகள்!"

தமிழரசன் குழப்பத்துடன் பார்த்தான். "அதுக்கும் இந்தப் பசங்க காணாமல் போனதுக்கும் என்னடா சம்பந்தம்?"

கணேஷ் விளக்கத் தொடங்கினான். "இன்ஃப்ராசவுண்ட் அலைகள் மனித மூளையின் ஆக்ஸிபிட்டல் லோபைத் தாக்கும்போது, தீவிரமான பயம், உடல் நடுக்கம், அப்புறம் பயங்கரமான காட்சிப் பிழைகள் உருவாகும். இங்க இருந்த பாஸ்கருக்குத் தன் கழுத்து 180 டிகிரி திரும்புற மாதிரி தெரிஞ்சதும், ஸ்ரீராமுக்குத் தன் கை சுருங்குற மாதிரி தெரிஞ்சதும் இந்த ஒலி அலைகள் ஏற்படுத்திய கெட்ட கனவுதான்!"

"சரி, அப்ப அந்த கடுமையான குளிர்? லேப்டாப் தானா டைப் ஆனது?"

"அது எண்டோதெர்மிக் கெமிக்கல் ரியாக்சன்டா! அந்த கோல்டன் டான் அமைப்பினர் மாந்திரீகம்னு நினைச்சு ஏதோ ஒரு நைட்ரஜன் கலவையை இந்த நிலவறையில பயன்படுத்தியிருக்காங்க. அது சுவர்கள்ல படர்ந்து வெப்பத்தை உறிஞ்சத் தொடங்குது. அதனால்தான் டெம்பரேச்சர் டிராப் ஆகுது."

கணேஷ் லேப்டாப்பை நெருங்கி, அதன் சோர்ஸ் கோடை ஆராய்ந்தான்.

"இதை யாரோ ஹேக் பண்ணி வெளியிலேர்ந்து ஆபரேட் பண்ணுறாங்கடா!"

"அப்போ பசங்க உயிரோட இருக்காங்களாடா கணேஷ்?" தமிழரசன் பதற்றமாகக் கேட்டான்.

"இருக்காங்க. ஆனா இல்ல!" என்றான் கணேஷ்.

"இப்ப நீதான்டா காமெடி பண்றே." என்றான் தமிழரசன்.

கணேஷ் சுவரோரம் இருந்த பழைய புத்தக அலமாரியைத் தள்ளினான். அதற்குப் பின்னால் ஒரு ரகசிய நிலவறைப் பாதை இருந்தது. சட்டென்று தமிழரசன் தன் செல்போன் டார்ச் லைட்டை அடித்தான்.

அங்கே, ஸ்ரீராமும் பாஸ்கரும் சுயநினைவின்றி விழுந்து கிடந்தார்கள். இருவரின் உடலிலும் லேசான நடுக்கம் மட்டுமே இருந்தது.

"இவனுங்கள உடனடியாக ஹாஸ்பிடல்ல சேர்த்து ஹைப்பர் பேரிக் ஆக்சிஜன் கொடுத்தா பொழைச்சுப்பாங்க!" என்றான் கணேஷ்.

தமிழரசன் பெருமூச்சு விட்டான். "அப்பாடா! அப்போ எல்லாமே சயின்ஸ்தானா? எந்த அமானுஷ்யமும் இல்லையா?"

"எல்லா அமானுஷ்யத்துக்கும் பின்னாடி இன்னமும் மனிதனால் கண்டுபிடிக்கப்படாத ஒரு அறிவியல் ஒளிஞ்சிட்டுதான் இருக்கு தமிழரசா!" என்றான் கணேஷ்.

"இதுக்கு மேல விஜயராமன் ஸ்ட்ராபெர்ரி, ஹிஸ்டரின்னு லெக்சர் அடிப்பானேடா." என்றான் தமிழரசன்.

"அதான்டா நெக்ஸ்ட் சாப்டர்" என்றான் கணேஷ்.

-           அட்ரஸைத்தேடுவோம்!

*****

Thursday, 13 August 2026

வகுப்பறை சியர்ஸ்!

வகுப்பறை சியர்ஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி. சாதாரண பள்ளிக்கூடம் அல்ல; நீட், கியூட், ஜே.இ.இ போன்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும் பெரிய போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும் அறிவு ஆலயம்!

அங்கே வழக்கம் போல சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மாணவர்கள் அனைவரும் மூளையைக் கசக்கிப் படித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுள்ளனர்.

ஆனால், ஒரு சில மாணவிகளுக்கு மட்டும், "படிப்பை முடித்தவுடன் உடனே வீட்டிற்குச் சென்றால் என்ன சுவாரசியம்?" என்று தோன்றியிருக்கிறது போல!

வகுப்பறை காலியானதும், "சரி, வாருங்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்" என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

வெளியிலிருந்து சூடான அசைவ உணவுப் பார்சல்.

கூடவே, டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு நண்பர் அன்பாக வாங்கிவந்து கொடுத்த சிறப்பு பானம்!

வகுப்பறையே உணவகமாகவும், மேஜைகளே பார் ஆகவும் மாறியுள்ளன.

"நாம் செய்வதை யார் பார்க்கப்போகிறார்கள்?" என்று நினைக்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது.

அங்கு இருந்த ஒரு சக மாணவி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைத் தனது கைபேசியில் காணொளி எடுத்துவிட்டார்.

அந்தக் காணொளியில்,

மது பாட்டில்களை நண்பர் டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கித் தந்தது பற்றிய சுவாரசிய உரையாடல்கள்,

உணவைச் சுவைத்துக்கொண்டே கெத்தாகப் பருகும் காட்சிகள்

அவ்வளவுதான்!

அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, காட்டுத்தீயை விட வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

ஊர் மக்கள் அனைவரும், "அடடா, போட்டித் தேர்வுக்குப் படிக்கும் வயதில் என்ன மாதிரியான பயிற்சி நடக்கிறது பாருங்கள்!" என்று கொதிப்படைந்துவிட்டனர்.

காட்டுத்தீ அத்தோடு நிற்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் வரை போய் விட்டது.

விசாரணை தீவிரமடைந்தது. 

அடுத்த கணமே, பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியருக்குத் தண்டனை! பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்குக் கவலை! ஆனால், எல்லாவற்றிற்கும் நடுவில், டாஸ்மாக் பணப்பெட்டி மட்டும் எப்போதும் போல கலகலவென்றுதான் இருக்கிறது!

வாழ்க்கையில் எந்தக் கதவை நோக்கி ஓட வேண்டும் என்று பயிற்சி கொடுக்கும் இடத்தில், டாஸ்மாக் கதவை நோக்கி ஓடும் புத்தி வந்தது உண்மையிலேயே வேதனைக்குரியதுதான்.

ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற பிசிக்ஸில் திரவ இயக்கவியல், கெமிஸ்ட்ரியில் கரைசல்கள் பற்றிப் படிக்க வேண்டும் என்பார்கள்.

அந்த மாணவிகள் அதைத் தியரியாகப் படிக்காமல், ப்ராக்டிகலாக செய்து பார்த்திருக்கிறார்கள். பாவம் தலைமையாசிரியர் அதனால் காரண காரியத் தொடர்பு  தெரியாமல் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார்.

மாணவிகளுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம்: நுழைவுத் தேர்வில் பாஸ் செய்வதை விட, வாழ்க்கை எனும் தேர்வில் லிவர் கெடாமல் பாஸ் செய்வது முக்கியம்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள், வாழ்க்கைப் போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் ஒரே ஆதங்கம்!

*****

ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!

ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!

பதினாறு வயது மாணவன் ரிதன்.

கிருஷ்ணகிரி பக்கம் ஒரு கிராமம்.

கோயில் திருவிழாவுக்குப் போன இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் பண்ணியிருக்கிறான்.

எப்படித் தெரியுமா?

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது போல வேகமாக வந்து, கடைசி விநாடியில் பிரேக் அடிப்பது!

சினிமா ஸ்டண்ட்.

சுவாரசியமான கான்செப்ட்.

இன்ஸ்டாகிராமில் குறைந்தது ஒரு லட்சம் லைக்குகள் தேறும்.

கடைசி விநாடியில் ரிதன் பைக்கிலிருந்து எகிறிக் குதிக்கிறான்.

துரதிர்ஷ்டவசமாக, அதே மில்லி செகண்டில் எதிரே ஒரு அரசுப் பேருந்து வந்துவிட்டது.

ரீடேக் இல்லாத நிஜ வாழ்க்கை அது.

அப்புறம் நடந்து எல்லாம் விபரீதம்.

பஸ் சக்கரம்.

ரத்தம்.

ஸ்பாட் அவுட்.

எனக்குத் தெரிந்து மனித குல வரலாற்றிலேயே, மற்றவன் நம்மைக் கைதட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கும் ஒரே ஜீவன் மனிதன் மட்டும்தான்.

ஒரு நாயோ, பூனையோ அப்படிச் செய்வதில்லை.

ஒரு தெரு நாய் இன்னொரு நாயைப் பார்த்து, "மச்சான், நான் இந்த ஓடும் லாரிக்கு அடியில பூந்து வாரேன், நீ வீடியோ எடு, டிக்டாக்ல போடலாம்" என்று சொல்வதில்லை. அதற்கு மூளை குறைவு; ஆனால் பிழைத்துக் கொள்ளும் அறிவு அதிகம்.

மனிதனுக்குதான் மூளை அதிகம்; இதுபோன்ற விசயங்களைக் கேள்விபடுகையில் அறிவு கம்மிதான் என்று தோன்றுகிறது.

இன்றைய பதின்ம வயதுச் சிறுவர்களின் உலகம் ரொம்பவே விசித்திரமானது. அவர்களுக்கு பேஸ்புக் என்பது பாட்டி காலத்து மேட்டர். இன்ஸ்டாகிராமும், டிக்டாக்கும்தான் வாழ்க்கை. அதில் வரும் 15 செகண்ட் வீடியோவில் கிடைக்கிற அந்த டிஜிட்டல் கைதட்டல் இருக்கிறதே, அது ஒருவிதமான போதை.

வியூஸ் கவுண்ட் ஏறும். அந்த எண்கள் தரும் கிளர்ச்சிக்கு முன்னால், மரணம் கூட ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

டெக்னாலஜி வளர்கிறது. 5G வந்துவிட்டது. ஆனால், அதைப் பயன்படுத்தும் மனிதனின் பக்குவம் 1G அளவிலேயே நிற்கிறது. கேமரா கைக்கு வந்துவிட்டதால் எல்லோரும் ஸ்பீல்பெர்க் ஆகிவிட முடியாது என்பதுதான் ஏற்றுக்கொள்ள இயலாத கசப்பான எதார்த்தம்.

பாவம், அந்தப் பஸ் டிரைவர். ஏதோ வேலையை முடித்துவிட்டு மனைவியைப் பார்க்க, பிள்ளைகளைப் பார்க்க வீட்டுக்குக் கிளம்பியிருப்பார். வழியில் யாரோ ஒரு சிறுவன் லைக்குகளுக்காகத் தன் பஸ் சக்கரத்தின் கீழ் வந்து விழுவான் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இப்போது அவர் போலீஸ் கேஸ், கோர்ட், கேஸ் என்று அவர் அலைந்து கொண்டிருப்பார்.

விசயம் அத்தோடு முடியவில்லை. ரிதனின் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? ஐந்து நொடிக் கைதட்டலுக்காகத் தன் பதினாறு வருட உழைப்பையும், கனவையும் ரோட்டில் வீசிவிட்டுப் போய்விட்டான் மகன். லைக்குகளின் விலை 16 வருடங்கள்தான் போலும்.

ஸ்மார்ட்போன் கையிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒன்று புரிய வேண்டும்:

திரையில் தெரியும் லைக்குகள் எல்லாமே வெறும் பிக்சல்கள். ஆனால், ரோட்டில் வருவது உண்மை பஸ்!

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 14.08.2026

1) 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

2) சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3) நாடாளுமன்றத்தில் நேற்று முதன் முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

4) நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.

5) நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Education & GK News

1) President Droupadi Murmu will address the nation tonight at 7 PM ahead of the 80th Independence Day.

2) More than one lakh police personnel have been deployed for security duties across Tamil Nadu in connection with Independence Day.

3) The 'Vande Mataram' song was played in Parliament for the first time yesterday.

4) The Monsoon Session of Parliament concluded yesterday.

5) The Meteorological Department has announced the likelihood of heavy rain in the Nilgiris and Theni districts.

தலைகீழாகத் தொங்கும் மனிதன்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் - 51

தலைகீழாகத் தொங்கும் மனிதன்!

குடவாசல், கோணேஸ்வரர் கோயில் தெரு, அந்தப் பழைய காலனித்துவ பாணி வீட்டின் முதல் மாடி.

ஸ்ரீராம் தன் மடிக்கணினியில் புளூடூத் எலக்ட்ரோமேக்னடிக் சென்சார் கருவியை இணைத்துக்கொண்டிருந்தான்.

"பாஸ்கர், இது எல்லாமே முட்டாள்தனம். பிரிட்டிஷ்காரன் விட்டுட்டுப் போன விக்டோரியன் காலத்து மூடநம்பிக்கை. இதிலென்ன கபாலா, மாந்திரீகம்?" என்றான் ஸ்ரீராம், தன் வழக்கமான கேலிப் புன்னகையுடன்.

பாஸ்கர் மேஜை மீது இருந்த அந்தப் பழைய புத்தகங்களைத் தடவிக் கொடுத்தான். "சும்மா இல்ல ஸ்ரீராம். லண்டன் கோல்டன் டான் அமைப்போட குடவாசல் கிளை இது. அப்போதைய வைஸ்ராய் காலத்துல இங்க ரகசியமா ஏதோ ஒரு டைம் ஷிப்ட் பரிசோதனை நடந்திருக்குனு லாக் புக்ல இருக்கு."

மேஜை மேல் 1904 இல் பயன்படுத்தப்பட்ட அதே தாரோ கார்டுகள் பரப்பப்பட்டிருந்தன. பக்கத்தில் ஒரு பழைய கிராமபோன்.

ஸ்ரீராம் தன் லேப்டாப்பில் ஒரு கோடைத் தட்டினான். "சரி, ஓர் அல்காரிதம் எழுதிப் பார்ப்போம். இந்த ஹீப்ரு எழுத்துக்களை பைனரி கோடா மாத்துனா என்ன வருதுன்னு பாக்கலாம். சைன்ஸ்ல எல்லாமே ப்ரீக்வென்சிதான்."

அவன் என்டர் தட்டிய விநாடி, அறையில் இருந்த இன்வெர்ட்டர் பிளாஸ்ட் ஆகி, விளக்குகள் அணைந்தன.

லேப்டாப் ஸ்கிரீன் மட்டும் ஒருவித ரத்தச் சிவப்பு நிறத்தில் மினுமினுத்தது.

அறையின் வெப்பநிலை திடீரென ப் பனிப்பிரதேசம் போலக் குறைந்தது. மூச்சுக்காற்று ஆவியாக வெளிவரும் அளவுக்குக் உறைபனி நிலவியது.

"ஸ்ரீராம்! ஏசி ஆப்ல இருக்கு. அப்புறம் எப்படி இந்த டெம்ப்ரேச்சர் குறையுது?" என்றான் பாஸ்கர்.

ஸ்ரீராம் பதில் சொல்லவில்லை. அவன் லேப்டாப் ஸ்கிரீனைப் பார்த்தான். அவன் எழுதிய கோடுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், ஸ்கிரீனில் தமிழ் எழுத்துக்கள் தாமாகவே டைப் ஆகின,

"உடல்கள் மட்டுமே மாறுகின்றன. ஆவாஹனம் நிறைவடைந்தது."

திடீரென அறையின் நாலாபுறமும் இருந்து மாமிசம் கிழியும் சத்தமும், எலும்புகள் நொறுங்கும் அதிர்வும் கேட்டது.

ஸ்ரீராம் பயத்துடன் தன் கைகளைப் பார்த்தான். அவனது கைகளில் தோல்கள் மெல்ல சுருங்கி, கைவிரல் நகங்கள் கருகி, 120 வருடத்துப் பிணத்தின் கைகளைப் போல மாறத் தொடங்கின!

"பாஸ்கர்! என் உடம்புக்கு என்ன ஆகுது?!" ஸ்ரீராம் அலறினான்.

ஆனால் பாஸ்கரனால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. பாஸ்கரின் கண்களின் கருவிழிகள் மேல்நோக்கிச் செருகி, வெறும் வெள்ளை விழி மட்டுமே தெரிய, அவன் கழுத்து 180 டிகிரி தலைகீழாகத் திரும்பியது!

அவனது வாய் மனுஷக் குரலில் இல்லாமல், பல நூறு பிரேதாத்மாக்கள் ஒன்றுசேர்ந்து கத்துவது போன்ற பயங்கரமான கரகரப்புடன் பேசியது.

"1904 இல் கோல்டன் டான் அமைப்பினர் உடலை இழந்து இந்த நிலவறையின் அலைவரிசையில் காத்திருந்தார்கள். 120 வருடம் கழித்து உங்கள் உடல்களை எங்களுக்குத் தந்ததற்கு நன்றி!"

ஸ்ரீராம் தப்பி ஓட கதவை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் கதவுக்குப் பதில் அங்கே வெறும் செங்கல் சுவர் மட்டுமே இருந்தது.

எதிரில் இருந்த பெரிய சுவர்க் கண்ணாடியில் ஸ்ரீராமின் உருவம் தெரியவில்லை. மாறாக, 1904 இல் இறந்த ஒரு பிரிட்டிஷ் மாந்திரீகனின் முகம். அந்த மாந்திரீகன் ஸ்ரீராமின் உடலுக்குள்ளிருந்து வெளியே வரத் துடிப்பது போலத் தெரிந்தது!

ஸ்ரீராமின் தொண்டையிலிருந்து வந்த கடைசி அலறல் சத்தம், அந்த அறையின் சுவர்களுக்குள் அடங்கியது.

மேஜை மேல் இருந்த தி ஹேங் மேன் தாரோ கார்டில், இப்போது தலைகீழாகத் தொங்கும் மனிதனாக ஸ்ரீராமின் முகம் தத்ரூபமாக அச்சடிக்கப்பட்டிருந்தது.

வெளியே கோணேஸ்வரர் கோயில் தெரு அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அறையின் கதவு இனி என்றென்றும் திறக்கப்படாது.

இனி,

பாஸ்கர்?!

ஸ்ரீராம்?!

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****

Wednesday, 12 August 2026

டாஸ்மாக் கொடுத்த தைரியமும், ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!

டாஸ்மாக் கொடுத்த தைரியமும், 

ரேஷன் கார்டு கொடுத்த பயமும்!

திண்டுக்கல் அருகே நடந்த சம்பவம், நம் சமூகத்தின் மகத்தான அறிவுச் செறிவை மீண்டும் ஒருமுறை உரக்கப் பிரகடனப்படுத்தியிருக்கிறது.

பாவம் அந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலரான ஆசிரியை!

அரசு சொன்ன பணியைச் செய்யப் அலைபேசியும் அடையாள அட்டையுமாகத் தெருவில் இறங்கியிருக்கிறார்.

"வீட்டில் எத்தனை பேர்? சொந்த வீடா?" என்று கேட்டதற்கு, எதிரே நின்ற ஒரு போதை ஞானிக்கு வந்த கோபத்தைப் பார்க்கையில், ஏதோ நாட்டின் உளவுத்துறை ரகசியத்தைத் திருட வந்த சர்வதேச உளவு அமைப்பைப் போல் அந்த ஆசிரியையைப் பார்த்திருக்கிறார்.

"நான் இந்தக் கட்சிக்காரன், என்னிடமே கேட்கிறாயா?" என்று பொங்கியவர், பிறகு காவல்துறையிடம் கைதாகும்போது "நான் அந்தக் கட்சிக்காரன், என்னையே கைது செய்கிறீர்களா?" என்று எகிறியிருக்கிறார்.

அந்தக் குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் வழக்கம் போல் "அவர் எங்கள் ஆளே இல்லை" என்று கையை விரித்துவிட்டார்கள். கடைசியில், அவர் எந்தக் கட்சிப் பிரமுகரோ இல்லையோ, டாஸ்மாக்கின் அதிதீவிரக் கடமை தவறாத தொண்டர் என்பது மட்டும் மிகத் தெளிவாகிறது.

இங்கே பிரச்சனை வெறும் கணக்கெடுப்பு அல்ல; மக்களின் ஆழ்மனப் பயம்.

"சொந்த வீடு இருக்கிறது என்று சொன்னால், ரேஷன் அரிசியை நிறுத்தி விடுவார்களோ? ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை இல்லாமல் செய்து விடுவார்களோ?" என்ற பயம்தான், ஓர் அரசாங்க ஊழியரின் முகத்தில் ஓங்கி அறையும் அளவுக்கு வீரத்தை வளர்க்கிறது.

அறிவையும் தெளிவையும் வளர்க்கத் தவறிய சமூகம், சந்தேகத்தையும் பயத்தையும் மட்டும் மிக நேர்த்தியாகப் பராமரித்து வருகிறது.

அரசாங்கம் இனி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன், "ஐயா சாமி! இந்த கேள்விக்கும் உங்கள் ரேஷன் கார்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று ஊர் ஊராகத் தண்டோரா போட வேண்டும் போலிருக்கிறது.

அல்லது, ஆசிரியர்களுக்குக் கணக்கெடுப்புக் கருவிகளோடு சேர்த்து, தற்காப்புக் கலைச் சான்றிதழையும், தலையில் போடுவதற்கு ஒரு ஹெல்மெட்டையும் வழங்க வேண்டும் போலிருக்கிறது.

அரசியல் அடையாளம், மதுபோதை, ரேஷன் கார்டு பயம் என இந்த மூன்றும் சேரும்போது பிறக்கும் அறியாமை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. இந்தச் சமூகத்திற்கு இப்போது தேவை கணக்கெடுப்பு மட்டுமல்ல, கொஞ்சம் அடிப்படை நாகரிகமும், தெளிவும்தான்.

*****

மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!

மூவாயிரம் வீடுகளும் ஒரு லட்சம் கேள்விகளும்!

கூகுள் மேப் என்பதே ஒரு சுவாரஸ்யமான கலைப்படைப்புதான்.

அந்த மேப்பைக் கையில் வைத்துக்கொண்டு "இன்னும் 50 மீட்டரில் வலது பக்கம் திரும்பவும்" என்று அந்தச் செயலி வழிகாட்டும்போது, நாம் ஒரு சாக்கடை அடைப்புக்குள் இறங்க வேண்டியிருக்கும்.

ஆனால், அந்த நவீனத் தொழில்நுட்பத்தை அப்படியே தூக்கிக் கொண்டுவந்து மக்கள்தொகை கணக்கெடுப்பில் சொருகினால் என்னவாகும் என்பதற்குத் தற்போதைய களநிலவரமே சாட்சி.

அப்படித்தான் தாம்பரம் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பாளர் கையில் மொபைலோடு தவித்து நின்று கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3,000 வீடுகள்!

சாதாரணமாக ஒரு கணக்கெடுப்பாளருக்கு 200 முதல் 300 வீடுகள் ஒதுக்குவதுதான் உலக வழக்கு.

ஆனால், கூகுள் மேப் தனது பரந்த வான்வழிப் பார்வையால் மேலே இருந்து பார்த்திருக்கிறது. செயற்கைக்கோளுக்கு மேலிருந்து பார்க்கும்போது அடுக்குமாடி குடியிருப்பு என்பது வெறும் ஒரு சதுரப் பெட்டிதானே?

அட, ஒரே ஒரு கட்டிடம்தானே என்று அதை ஓர் அலுவலருக்கு ஒதுக்கி விட்டார்கள். ஆனால் அந்த ஒற்றைப் பெட்டிக்குள் 25 பிளாக்குகள், ஆயிரக்கணக்கான மனிதர்கள், லட்சக் கணக்கான கேள்விகள் ஒளிந்திருப்பது கூகுள் மேப்பிற்கு எப்படித் தெரியும்?

ஒரு வீட்டிற்கு 33 கேள்விகள் கேட்க வேண்டும். வீட்டின் கூரை என்ன பொருள்? சுவர் என்ன பொருள்? கழிப்பறை இருக்கிறதா? டிவி, இணையதளம், வண்டி இருக்கிறதா? என்று அதன் பட்டியல் பெரிது. அத்துடன் 34 ஆவது கேள்வியாக அலைபேசி எண்ணைப் பெற வேண்டும். ஆக மொத்தம் 34 கேள்விகள்.

மூவாயிரம் வீடுகளுக்கு இந்தக் கேள்விகளைப் பெருக்கிப் பார்த்தால், மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம் பதில்களைச் சேகரிக்க வேண்டும்.

இதை மனதிற்குள் கணக்குப் போட்டுப் பார்ப்பதற்கே தலைச்சுற்றல் வந்துவிடும்.

தொழில்நுட்பம் மனிதர்களின் வேலையை எளிதாக்க வேண்டும் என்பார்கள். ஆனால், நமது ஊரில் தொழில்நுட்பம் என்பது இப்படித்தான் ஒற்றை அலுவலருக்கு 3000 வீடுகளை ஒதுக்குகின்றன.

*****

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.08.2026

கல்வி & பொது அறிவுச் செய்திகள் – 13.08.2026

1) அரசுப் பள்ளிகளில் தினமும் இருமுறை தூய்மைப் பணி மேற்கொள்ளுவதற்கு 86.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2) இன்று முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

3) மக்களவை தொகுதி மறுவரையறைக்கு எதிரான மசோதா தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

4) டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அதன் தலைவர் என். சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

5) நாட்டின் சில்லரைப் பணவீக்கம் சூலை மாதத்தில் 4.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Education & GK News

1) Funds amounting to Rs. 86.84 crore have been allocated for carrying out cleaning operations twice daily in government schools.

2) Counseling for MBBS and BDS courses begins today.

3) A resolution opposing the delimitation of Lok Sabha constituencies was unanimously passed in the Tamil Nadu Legislative Assembly.

4) Tata Sons Chairman N. Chandrasekaran has announced that he will step down from his position.

5) The country's retail inflation rose to 4.45 percent in July.