Showing posts with label land measurements. Show all posts
Showing posts with label land measurements. Show all posts

Sunday, 23 April 2023

சர்வேயில் பயன்படும் செயின் பற்றி அறிவோமா?

சர்வேயில் பயன்படும் செயின் பற்றி அறிவோமா?

சர்வேயர்கள் நிலங்களை அளக்க செயினைப் பயன்படுத்துகிறார்கள். இந்தச் செயினில் 100 வளைய இணைப்புக் கம்பிகள் இருக்கும். இந்த இணைப்பை லிங்க் என்பார்கள். 100 லிங்க் இணைந்து ஒரு செயினை உருவாக்கும்.

இந்தச் செயினின் நீளம் 20 மீட்டர் ஆகும். அடி கணக்கில் பார்த்தால் 66 அடி ஆகும்.

இந்த செயினைக் கொண்டு ஒரு சதுரத்தை அமைத்தால் அதன் பரப்பு 400 சதுர மீட்டர். சதுர அடியில் பார்த்தால் 4356 சதுர அடி ஆகும். இப்பரப்பு 10 சென்ட் அளவைக் குறிக்கும். இதிலிருந்து ஒரு சென்ட் பரப்பைப் பத்தால் வகுத்துப் பெற்றால் 435.6 சதுர அடி ஆகும். 10 சென்ட் அளவுக்கான 4356 சதுர அடியை 10 ஆல் பெருக்கினால் 43560 சதுர அடி கிடைக்கும். இப்பரப்பே ஒரு ஏக்கர் என்பதாகும்.

இந்தச் செயினைச் சங்கிலி என்றும் குறிப்பிடுவர். அதாவது ஒரு செயின் அல்லது சங்கிலி என்றால் 20 மீட்டர் அல்லது 66 அடியைக் குறிக்கும்.

ஒரு செயினைப் பத்தால் பெருக்கினால் 200 மீட்டர் அல்லது 660 அடி கிடைக்கும். இதுவே ஒரு பர்லாங் என்று புழக்கத்தில் உள்ள அளவாகும்.

*****

Monday, 3 April 2023

கிழமேல், தென்வடல் என்றால் என்னவென்று தெரியுமா?

கிழமேல், தென்வடல் என்றால் என்னவென்று தெரியுமா?

பத்திரங்களில் கிழமேல், தென்வடல், வடபுரம், தென்புரம், மேல்புரம் என்பன போன்ற சொற்களை நீங்கள் பார்த்திருக்கலாம். இவற்றின் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? அவற்றின் பொருளைப் பற்றி இப்பத்தியில் காண்போம்.

கிழமேல் என்றால் கிழக்கிலிருந்து மேற்காக என்று பொருள். தென்வடல் என்றால் தெற்கிலிருந்து வடக்காக என்று பொருள். வடபுரம் என்றால் வடக்குப் பக்கம் என்று பொருள். தென்புரம் என்றால் தெற்குப் பக்கம் என்று பொருள். மேல்புரம் என்றால் மேற்குப் பக்கம் என்று பொருள்.

பத்திரங்களில் கிழமேல் ஜாதியடி 30 என்று எழுதப்பட்டு இருந்தால் கிழக்கு மேற்காக 30 அடி என்று அதற்குப் பொருள்.

தென்வடல் ஜாதியடி 60 என்று எழுதப்பட்டு இருந்தால் தெற்கு வடக்காக 60 அடி என்று பொருள்.

கிழமேல் ஜாதியடி 30, தென்வடல் ஜாதியடி 60 ஆக 1800 சதுர அடி என எழுதப்பட்டு இருந்தால் கிழக்கு மேற்காக 30 அடியும் தெற்கு வடக்காக 60 அடியும் ஆக மனையின் பரப்பு 30 மற்றும் 60 ஐப் பெருக்கி வரும் 1800 சதுர அடி என்பது அதன் பொருளாகும்.

கிழமேல் ஜாதியடி வடபுரம் 20, தென்புரம் 40, தென்வடல் ஜாதியடிமேல்புரம் 30, கீழ்புரம் 50 ஆக 1200 சதுர அடி என்றால் வடக்குப் பக்கம் மற்றும் தெற்குப் பக்க அளவுகளான 20 மற்றும் 40 இன் சராசரியைக் கண்டு 30 என அறிந்து மேற்குப் பக்கம் கிழக்குப் பக்க அளவுகளான 30 மற்றும் 50 இன் சராசரியைக் கண்டு 40 என அறிந்து இவ்விரு 30 மற்றும் 50 ஐப் பெருக்கி வரும் 1500 சதுர அடி என அறிந்து கொள்ள வேண்டும்.

இனி உங்களுக்குப் பத்திரங்களில் காணப்படும் ஜாதியடி அளவுகள் குறித்து எந்தக் குழப்பமும் இருக்காதுதானே.

*****

Thursday, 30 March 2023

கெஜம், பர்லாங் அளவுகள் பற்றி அறிந்து கொள்வோமா?

கெஜம், பர்லாங் அளவுகள் பற்றி அறிந்து கொள்வோமா?

கெஜம், பர்லாங் போன்ற அளவுகள் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்தவை. தற்காலத்தில் வயதான ஒரு சிலரால் இவ்வளவுகள் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு. அந்த அளவுகளைப் பற்றி அறிந்து கொள்வோமா? அத்துடன் சாண், முழம் போன்ற அளவுகளுக்குச் சரியான அளவாக எதை எடுத்துக் கொள்வது என்பதற்குக் கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு வழிகாட்டும். மேலும் பல பேச்சுப் புழக்கத்தில் உள்ள அளவுகளுக்கும் கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு வழிகாட்டும்.

1 சாண்

0.75 அடி

1 காலடி

0.75 அடி

1 காலடி

9 அங்குலம் (இஞ்ச்)

1 முழம்

1.375 அடி

1 முழம்

16.5 அங்குலம் (இஞ்ச்)

1 முழம்

41.91 சென்டி மீட்டர்

1 தச்சு முழம்

2.75 அடி

1 தப்படி

3 அடி

1 கெஜம்

2.18 முழம்

1 கெஜம்

3 அடி

1  கெஜம்

4 காலடி

1 கெஜம்

1 தப்படி

1 பர்லாங்

480 முழம்

1 பர்லாங்

660 அடி

1 பர்லாங்

880 காலடி

1 பர்லாங்

220 தப்படி

1 கிலோ மீட்டர்

4375 காலடி

1 கிலோ மீட்டர்

1093 தப்படி

1 மைல்

7041 காலடி

1 மைல்

1760 தப்படி

*****

Wednesday, 29 March 2023

நில அளவைக் கணக்குகள்

நில அளவைக் கணக்குகள்

நாம் வழக்கில் பயன்படுத்தும் நில அளவைக் கணக்கீடுகளும் அரசாங்க ஆவணங்களில் பயன்படுத்தும் கணக்கீடுகளும் வேறு வேறு சொற்களால் அமைந்தவை.

புழக்கத்தில் நில அளவைகளைக் குழிக் கணக்கில் சொல்வது பெருவாரியாகப் பயன்பாட்டில் உள்ளது. அரசாங்கக் கணக்குகளில் ஏர்ஸ், ஹெக்டேர் என்ற சொற்களே வழக்கத்தில் உள்ளன. இவ்விரு சொல் வழக்குகளுக்கும் இடையே உள்ள கணக்கீட்டுத் தொடர்பை அறிந்து வைத்துக் கொள்வது எப்போதும் பயன்தரும். அதற்கு கீழே உள்ள அட்டவணை பெரிதும் பயன்படும்.

1 குழி

144 சதுர அடி

1 மா

100 குழி

1 காணி

4 மா

1 சென்ட்

3 குழி (தோராயமாக)

1 கிரவுண்ட்

16.6 குழி (தோராயமாக)

1 ஏக்கர்

3 மா

1 வேலி

20 மா

1 ஏர்

7½ குழி

1 ஹேக்டேர்

7½ மா (தோராயமாக)

1 செய்

6 மா

1 குருக்கம்

1.7 மா (தோராயமாக)

குழி கணக்கு பகுதிக்குப் பகுதி வேறுபடுவதாகும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள 1 குழி = 144 சதுர அடி தஞ்சாவூர் பகுதி வழக்காகும். மதுரைப் பகுதிகளில் 1 குழி என்பது 300 சதுர அடியாகவும், பாண்டிச்சேரி பகுதிகளில் 576 சதுர அடியாகவும் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*****