Friday, 17 July 2026

எலிசபெத் ராணியின் டெக்னோ மந்திரவாதிகள்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 24

எலிசபெத் ராணியின் டெக்னோ மந்திரவாதிகள்!

விஞ்ஞானத்துக்கும் அஞ்ஞானத்துக்கும் நடுவே எப்போதும் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. சில சமயம் அந்த கோடு மொத்தமாக அழிந்துபோய்விடுகிறது. பதினாறாம் நூற்றாண்டு லண்டனில் அப்படித்தான் நடந்தது.

அங்கே இரண்டு பேர் இருந்தார்கள்.

ஒருவர் ஜான் டீ .

இன்னொருவர் எட்வர்ட் கெல்லி.

இதில் ஜான் டீ சாதாரண ஆள் இல்லை. எலிசபெத் மகாராணியின் ஆஸ்தான ஜோதிடர், கணிதவியலாளர், வானியலாளர்.

இன்னும் சொல்லப்போனால், ராணிக்கு ரகசியத் தகவல்களை அனுப்பும்போது தன் பெயருக்குப் பதில் '007' என்று கையெழுத்திட்ட நிஜமான ஜேம்ஸ் பாண்ட் இவர்தான்!

ஆனால், இவர்களுக்குள் இருந்த சயின்டிஸ்ட் திடீரென ரூட் மாறி, டெக்னோ மந்திரவாதிகளாக அவதாரம் எடுத்த கதைதான் சுவாரசியமானது.

ஜான் டீக்கு ஒரு விசித்திரமான ஆசை இருந்தது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை தேவதைகளிடமும், இறந்தவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதற்குத்தான் நெக்ரோமன்சி எனப்படும் ஆவி வித்தைக்குள் இறங்கினார்.

ஆனால், அவருக்கு ஆவிகளுடன் நேரடியாகப் பேசும் ஆண்டெனா கிடைக்கவில்லை. அதற்குத்தான் எட்வர்ட் கெல்லி என்பவரைத் தன் மீடியம் ஆகத் துணைக்குச் சேர்த்துக்கொண்டார்.

கெல்லியிடம் ஒரு விசேஷமான நிலக்கரி போன்ற கிரிஸ்டல் கல் இருந்தது.

இந்தக் கிரிஸ்டல் கண்ணாடியை உற்றுப் பார்த்து, இறந்தவர்களின் ஆவிகளையும் தேவதைகளையும் கெல்லி ஆன்லைனுக்கு தட் மீன்ஸ் பேசுவதற்குக் கொண்டு வருவார்.

ஆவிகள் பேசிய விசித்திரமான மொழியை கெல்லி மொழிபெயர்க்க, ஜான் டீ அதை நோட்டுப் புத்தகத்தில் பரபரப்பாக எழுதிக் கொள்வார். இது ஏதோ இன்று நாம் பயன்படுத்தும் ஜூம் கால் போலத்தான்!

இவர்களின் ஆராய்ச்சி இத்துடன் நிற்கவில்லை. பழைய கிரேக்கம் மற்றும் ரோம் நாகரிகங்களின் ரகசிய மந்திரப் புத்தகங்களைத் தூசு தட்டினார்கள்.

அறிவியல் என்பது நாம் தேடும் உண்மை. மந்திரம் என்பது நாம் நம்ப விரும்பும் உண்மை.

பேய்களை நேரில் வரவழைக்க முடியும் என்று நம்பிய இவர்கள், கணிதக் குறியீடுகளையும், வேதியியல் சமன்பாடுகளையும் பயன்படுத்திப் பேய்களை வரவழைக்க அல்காரிதம் எழுதும் அளவுக்குப போய் விட்டார்கள். இப்படி அறிவியல் அறிவையும், மாந்திரீகத்தையும் மிக்ஸ் செய்ததால்தான் இவர்களை நாம் டெக்னோ மந்திரவாதிகள் என்கிறோம்.

அவர்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை என்று நீங்கள் கேட்கலாம். இன்றைக்கு நமக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் கூகுள் செய்கிறோம். அன்று ஜான் டீக்கும் கெல்லிக்கும் பிரபஞ்சத்தின் ரகசியங்களை உடனடியாகத் தெரிந்துகொள்ள ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் தேவைப்பட்டது. அவர்கள் தேர்ந்தெடுத்த சர்வர்தான் அந்த ஆவிகள்!

விளைவு?

காலப்போக்கில் கெல்லியின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலமாகின. ஜான் டீயின் புகழும் மங்கியது.

இன்று நாம் கையில் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் திரையும் அன்று கெல்லி கையில் வைத்திருந்த கிரிஸ்டல் கல்லும் பார்க்க ஒன்றுபோலவே இருக்கின்றன. இரண்டுமே உலகத்தின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகின்றன. வித்தியாசம் என்னவென்றால், கெல்லி பார்த்தது ஆவிகளை, நாம் பார்ப்பதோ ரீல்ஸை!

-          அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment