Showing posts with label Confidence Corner. Show all posts
Showing posts with label Confidence Corner. Show all posts

Thursday, 2 April 2026

மேடம் சி.ஜே. வாக்கர் – ஒரு பியூட்டி எம்பயர்!

மேடம் சி.ஜே. வாக்கர் – ஒரு பியூட்டி எம்பயர்!

இன்று நேற்றல்ல, 1890களிலேயே இது ஒரு பெரிய டென்ஷன். சாரா ப்ரீட்லவ்  என்கிற அந்தப் பெண்ணுக்குத் தலைமுடி கொட்டத் தொடங்கியபோது, அவர் விதி என்று விட்டுவிடவில்லை. முன்னாள் அடிமைகளின் மகளாகப் பிறந்த ஒரு சலவைத் தொழிலாளி அமெரிக்காவின் முதல் செல்ப் மேட் பெண் மில்லியனராக மாறியது ஒரு பக்கா ஆக்சன் த்ரில்லர்.

1906 இல் அவர் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். அதுதான் Madam Walker's Wonderful Hair Grower. இதில் அப்படி என்ன இருந்தது?

அதில் சல்பர் இருந்தது. இது எதற்கு என்றால் தலையில் ஏற்படும் பூஞ்சை காளான் மற்றும் பொடுகை ஒழிக்க.

அடுத்து, தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் இருந்தது. இவை எதற்கு  என்றால் ஈரப்பதத்திற்கு.

அத்துடன் வைலட் எக்ஸ்ட்ராக்ட் இருந்தது. இது எதற்கு என்றால் சல்பரின் அந்த ஒருவிதமான நெடியை மறைக்க ஒரு சின்ன டச்.

இதை வெறும் எண்ணெயாக மட்டும் அவர் விற்கவில்லை. வாக்கர் சிஸ்டம் என்றே ஒரு முறையை உருவாக்கினார். சூடாக்கப்பட்ட சீப்புகள், ஸ்கால்ப் மசாஜ் என அது ஒரு முழுமையான தெரபி.

சாரா வெறும் வியாபாரி அல்ல, ஒரு செம ஸ்ட்ரேட்டஜிஸ்ட். வீடு வீடாகப் போய் விற்பனை செய்யத் தொடங்கி, பிறகு ஆயிரக்கணக்கான பெண்களுக்குப் பயிற்சி அளித்தார். அவர்களுக்கு வாக்கர் ஏஜென்ட்ஸ் என்று பெயர். கறுப்பினப் பெண்களுக்கு அந்தக்காலத்தில் கிடைத்த கூலியை விட, இதில் பல மடங்கு வருமானம் கிடைத்தது.

1910 இல் இந்தியானாபோலிஸில் ஒரு பிரம்மாண்ட தொழிற்சாலையை நிறுவினார். அட்வர்டைசிங் பவரை அப்போதே உணர்ந்து கறுப்பினத்தவர் நடத்தும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். ஒரு சலவைத் தொழிலாளி, அமெரிக்க வரலாற்றின் தவிர்க்க முடியாத பிசினஸ் மேக்னட் ஆனார்.

இன்று பிசினஸ் ஸ்கூல்களில் பிராண்ட் பில்டிங் பற்றிப் பாடம் எடுக்கிறார்கள். ஆனால், 1910களிலேயே இதை அவர் மிகச்சரியாகச் செய்திருக்கிறார். சாராவுக்குத் தெரிந்திருந்தது, வெறும் பொருளை விற்பதை விட, ஒரு நம்பிக்கையை விற்பது லாபகரமானது.

அவர் கையாண்ட முறைகள் அக்மார்க் பிராண்ட் பில்டிங். அவையாவன,

சர்ச்சுகளிலும் சமூகக் கூடங்களிலும் நேரடி டெமோ கொடுத்தார். கூச்சமில்லாமல் தன் கதையைச் சொன்னார்.

தனது டார்கெட் ஆடியன்ஸ் யார் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது.

வாக்கர் ஏஜென்ட்ஸ் வெறும் விற்பனையாளர்கள் அல்ல, அவர்கள் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் என்பதை அவர் பிராண்ட் பில்டிங் செய்தார்.

இதைச் சாதாரண சாதனை என்று கடந்துவிட முடியாது. இதற்கான கான்டெக்ஸ்ட் மிக முக்கியம். அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்து, அடிமைத்தளை நீங்கிய சில ஆண்டுகளிலேயே சாரா பிறந்தார். கறுப்பின மக்களுக்கு எதிரான கடும் பாரபட்சம் நிலவிய ஜிம் க்ரோ சட்டங்கள் அமலில் இருந்த காலம் அது.

இந்தச் சூழலில் ஒரு பெண் மில்லியனராவது என்பது இப்போதைய கணக்குப்படி ஒரு ராக்கெட்டைத் தனியாகச் செய்து நிலவுக்கு அனுப்புவதற்குச் சமம்.

சாராவின் ஏஜென்ட்கள் வெறும் லாபத்திற்காக உழைக்கவில்லை. அவர்கள் சமூக அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள். தர்ம காரியங்கள் செய்தார்கள். லிஞ்சிங் எனப்படும் அராஜகக் கொலைகளுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

1917 இல் நடந்த ஒரு மாநாட்டில் அவர் சொன்னது இதுதான். உங்கள் முதல் கடமை மனிதநேயம்தான். வியாபாரத்தில் ஜெயிப்பது மட்டும் போதாது, நம் மக்களின் முன்னேற்றத்திலும் நீங்கள் முன்னணியில் இருக்க வேண்டும்.

1919 இல் அவர் மறைந்தபோது, அவர் விட்டுச் சென்றது வெறும் பணத்தை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான கறுப்பினப் பெண்களுக்கான வேலைவாய்ப்பையும், கல்விக்கான நிதியுதவியையும்தான்.

முடி கொட்டுதல் என்ற பிரச்சினையைத் தீர்வாக மாற்றியவர் சாரா. விடாமுயற்சியும் கொஞ்சம் சல்பரும் சேர்ந்தால் ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவிடலாம் என்பதற்கு மேடம் சி.ஜே. வாக்கர் ஒரு சிறந்த உதாரணம்.

ஒரு திறமையான பிசினஸ்மேன் என்பவர் லாபத்தைப் பார்ப்பவர். ஆனால் ஒரு லெஜண்ட் என்பவர் அந்த லாபத்தை வைத்து ஒரு சமூகத்தையே மேலே தூக்குபவர். மேடம் சி.ஜே. வாக்கர் ஒரு லெஜண்ட்.

மேடம் வாக்கர் உருவாக்கிய இந்த ஏஜென்ட் மாடல்தான் பிற்காலத்தில் ஏவோன் போன்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக இருந்தது. ஒருவர் சாதிக்க வேண்டும் நினைத்து விட்டால், அதற்கு எதுவும் ஒரு தடையாக முன்னே நிற்க முடியாது என்பதை மேடம் வாக்கர் நிரூபித்துச் சென்றிருக்கிறார்.

*****