Showing posts with label mathematicla events. Show all posts
Showing posts with label mathematicla events. Show all posts

Wednesday, 13 March 2024

சர்வதேச ‘பை’ (π) தினம்

சர்வதேச ‘பை’ (π) தினம்

சர்வதேச ‘பை’ (π) தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

π இன் தோராய மதிப்பான 3.14 இல் 3 என்பது மூன்றாவது மாதமான மார்ச்சையும் 14 என்பது 14 வது நாளையும் குறிப்பதாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச ‘பை’ தினம் மார்ச் மாதம் 14 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் π இன் மதிப்பானது பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அதற்கான வடிவத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் வில்லியம் ஜோன்ஸ் ஆவார். இவர் அறிவியல் அறிஞரான நியூட்டனின் நண்பர் ஆவார். இவர் π இன் இந்த வடிவத்தை 1706 இல் அறிமுகப்படுத்தினார். கணித அறிஞர் ஆய்லர் இந்த வடிவத்தைப் பிரபலப்படுத்தியவர் ஆவார்.

சர்வதேச ‘பை’ (π) தினத்தை அமெரிக்கா இயற்பியலரான லாரி ஷா என்பவர் சான் பிரான்சிஸ்கோவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இதனால் இவர் ‘பிரின்ஸ் ஆப் பை’ எனவும் அழைக்கப்படுகிறார்.

‘பை’ (π) ஒரு விகிதமுறா எண் என்பதை நாம் அறிவோம். இதன் தோராய மதிப்பு பல தசம இலக்கங்களுக்கு நீளக் கூடியது. பொதுவாகக் கணக்குகளில் இதன் மதிப்பை 22/7 எனவோ அல்லது 3.14 எனவோ எடுத்துக் கொண்டு செய்கிறோம்.

‘பை’ (π) இன் தோராய மதிப்பை  3.141592653589793238462643383279502884197… என எழுதிக் கொண்டே போகலாம். இப்படியாக 22 டிரில்லியன் இலக்கங்கள் வரை கண்டறிந்துள்ளார்கள் என்பது ஆச்சரியமான விசயம் இல்லையா!

‘பை’ (π) இன் தோராய மதிப்பை  நாம் 22/7 குறிப்பிடுவதைப் பாபிலோனியர்கள் 31/8 என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பது மற்றோர் ஆச்சரியமான விசயம்.

இன்னும் ஓர் ஆச்சரியமான விசயம் என்னவென்றால் ‘பை’ (π) தினம்தான் ஐன்ஸ்டீனின் பிறந்த தினமும். ஆம் ஐன்ஸ்டீன் பிறந்தது 14.03.1879 ஆகும்.

‘பை’ (π) தினத்தைப் பற்றி அறிய வந்து எவ்வளவு கணித விவரங்களைத் தெரிந்து கொண்டோம் பார்த்தீர்களா? இந்தத் தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****

Thursday, 21 December 2023

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம்

தேசிய கணித தினம் எப்போது கொண்டாடப்படுகிறது தெரியுமா?

டிசம்பர் 22 அன்று தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது இன்றுதான்.

ஏன் அந்தத் தினத்தில் தேசிய கணித தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

அன்றுதான் கணித மேதையான சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள். இவர் தமிழகத்தைச் சார்ந்த கணித மேதை என்பது நமக்கெல்லாம் பெருமை தருவதாகும். இவர் கும்பகோணம் கல்லூரியில் கல்வி பயின்றவர் என்பது தஞ்சைவாசிகளுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். அவரது மனைவியின் பெயர் ஜானகியம்மாள்.

சீனிவாச ராமானுஜம் பிறந்தது 22.12.1887 இல். இறந்தது 26.04.1920 இல். அவர் வாழ்ந்தது 33 ஆண்டுகள். அதற்குள் அவர் கணித உலகில் நிகழ்த்திய சாதனைகள் அளவிடற்கரியன.

அவரது 125வது பிறந்த தினம் 26.12.2011 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.

அந்த விழாவுக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையேற்றார்.

இந்த விழாவில்தான் கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடுவது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 2012 முதல் ஒவ்வொராண்டும் டிசம்பர் 22 வது நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தத் தகவல் கணித ஆர்வமுள்ள உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

வணக்கம்!

*****