Showing posts with label குழந்தைப் பாடல். Show all posts
Showing posts with label குழந்தைப் பாடல். Show all posts

Tuesday, 2 May 2023

பனை மரமே! பனை மரமே! – உயிர் நேயத்தின் உன்னதப் பாடல்!

பனை மரமே! பனை மரமே! – உயிர் நேயத்தின் உன்னதப் பாடல்!

“பனை மரமே! பனை மரமே! சிறிய பறவை நான்!” எனத் தொடங்கும் இப்பாடல் குழந்தைகளிடம் எழுப்பும் உணர்வுகள்தான் எத்தனை!

அன்பு, பரிவு, உதவும் மனப்பான்மை, உயிர் நேயம் என்று இப்பாடல் எழுப்பும் உணர்வுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு சிறகொடிந்த சிறிய பறவை மழைக்காலத்தில் தங்குவதற்காகப் பனை மரத்திடம் அடைக்கலம் கேட்கிறது. பனை மரம் அடைக்கலம் தர மறுக்கிறது. இதைப் பாடல் வரிகளாகப் பாடும் போது பனை மரத்திடம் குழந்தைகளுக்கு உண்டாகும் கோபம் இருக்கிறதே! கோபத்தைக் குழந்தைகளிடம்தான் ரசித்து ரசித்துப் பார்க்கலாம். அப்படிக் குழந்தைகள் கோபப்படுவார்கள் பனைமரத்திடம்.

அந்தச் சிறகொடித்த பறவை தன்னுடைய முயற்சியைத் தளர விடாமல் அடுத்ததாகத் தென்னை மரத்திடம் அடைக்கலம் கேட்கிறது. தென்னை மரமும் அடைக்கலம் தர மறுக்கிறது. இப்போது தென்னை மரத்திடம் குழந்தைகளுக்கு வரும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே!

மனம் தளராத பறவை இப்போது ஆலமரத்திடம் போய் அடைக்கலம் என்று நிற்கிறது. பனை மரம் போலவோ, தென்னை மரமோ போலவே நடந்து கொள்ளாமல் ஆல மரம் அடைக்கலம் தருகிறது. ஆலமரம் அடைக்கலம் தந்த உடன்  குழந்தைகளிடம் ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே. அப்படியே துள்ளிக் குதிப்பார்கள். ‘ஓ’ என்று சத்தமிடுவார்கள். ஆலமரத்தை அவ்வளவு வாழ்த்துவார்கள்.

அடுத்ததாகப் பாடலில்,

மழைக்காலம் வருகிறது.

புயல் காற்று அடிக்கிறது.

சிறகொடிந்த பறவைக்கு உதவாத பனை மரமும் தென்னை மரமும் பெரும் காற்றில் வீழ்கின்றன. உதவிய ஆலமரம் நிலைத்து நிற்கிறது. மென்மேலும் தழைக்கிறது. இப்போது குழந்தைகள் ஆலமரத்திற்காக ஆர்பரிக்கத் தொடங்கி விடுவார்கள்.

இப்படிக் கதையுடன் கூடிய ஒரு பாடலாக அமைந்தது இப்பாடல். நாடகமாக நடித்தும் பாடக் கூடிய தன்மையைக் கொண்டது. இப்பாடல் குழந்தைகள் இயல்பாகப் பாடுவதற்கு உரிய வார்த்தைகளாலும் ஆனது. பாடும் போது வாக்கிய வாசிப்பைப் போன்று எந்த இடத்திலும் துருத்திக் கொண்டு இருக்காது. எப்படிப் பாடினாலும் ஏதோ ஒரு மெட்டுக்குள் வந்து பாடலாகி விடும்.

இந்த ஒரு பாடல் அன்பைக் குறித்த ஆயிரம் கதைகளுக்குச் சமம் என்று சொல்லலாம். உயிர்நேயம் குறித்த குழந்தைகளுக்கான உன்னத கவிதை என்றும் சொல்லலாம்.

சிறு குழந்தைகளுக்கான வகுப்பறைகளில் கட்டாயம் பாட வேண்டிய பாடல் வரிசையில் இந்தப் பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். இனி அந்தப் பாடல்…

பனை மரமே! பனை மரமே!

பனை மரமே! பனை மரமே! சிறிய பறவை நான்!

மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா?

சிறகொடிந்த பறவைக்கு நான் இடம் தர மாட்டேன்!

சீக்கிரமாய்ப் பறந்து சென்று மறைந்திடுவாயே!

 

தென்னை மரமே! தென்னை மரமே! சிறிய பறவை நான்!

மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா?

சிறகொடிந்த பறவைக்கு நான் இடம் தர மாட்டேன்!

சீக்கிரமாய் ஓடிச் சென்று மறைந்திடுவாயே!

 

ஆல மரமே! ஆல மரமே! சிறிய பறவை நான்!

மழைக்காலத்தில் தங்குவதற்கு இடம் தருவாயா?

சிறகொடிந்த பறவைக்கு நான் இடம் தருவேனே!

சீக்கிரமாய்ப் பறந்து வந்து அமர்ந்து கொள்வாயே!

 

அன்றொரு நாள்

மேகம் கருத்தது

மின்னல் மின்னியது

இடி இடித்தது

பலத்த காற்று வீசியது

பலத்த மழை பெய்தது

 

சிறகொடிந்த பறவைக்கு இடம் தராத

பனைமரமோ வேரோடு சாய்ந்ததாம்

தென்னை மரமோ அடியோடு வீழ்ந்ததாம்

இடம் தந்த ஆலமரமோ நிலைத்து நின்றதாம்

செழித்து வளர்ந்ததாம்

பறவைகளெல்லாம் வந்து வாழ்த்தியதாம்

வாழ்வாங்கு வாழ்ந்ததாம்

*****

Monday, 1 May 2023

அந்தோணிசாமி பண்ணையிலே… - குழந்தைகள் விரும்பும் குத்துப்பாடல்

அந்தோணிசாமி பண்ணையிலே…

குழந்தைகளுக்கான குத்துப்பாடல் வரிசையில் இந்தப் பாடலைத் தாரளமாகச் சேர்க்கலாம். சில நேரங்களில் வகுப்பறை மந்தமாகும் போது இந்தப் பாடலைப் பாடினால் குழந்தைகளிடம் பீறிட்டு அடிக்கும் உற்சாகத்துக்கு அளவில்லை.

சிறு குழந்தைகளிடம் இந்தப் பாடலைப் பாடும் போது அவர்கள் அடையும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் வர்ணித்து விட இயலாது. சில பிள்ளைகள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு குட்டிக்கரணம் போடுவார்கள். வேறு சில பிள்ளைகள் தாளம் போடுவார்கள். ஒரு சில பிள்ளைகள் அவ்வளவு அழகாக நடனம் ஆடுவார்கள். மற்றும் சில பிள்ளைகள் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு சந்தோஷம் அடைவார்கள். பாடலில் வரும் உயிர்களைப் போல சேஷ்டை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். மறுநாளிலிருந்து வகுப்பறையைத் தொடங்கும் பொதெல்லாம் அந்தப் பாடலுடன்தான் துவங்க வேண்டும் என்று அடம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.

ஏன் இந்தப் பாடல் குழந்தைகளை இவ்வளவு ஆரவாரப்படுத்துகிறது, அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்கிறது? என்று யோசித்திருக்கிறேன். இந்தப் பாடலில் இடம் பெறும் “உய்யா… உய்யா… உய்” என்ற வரி ஒரு காரணமாக இருக்கலாம். பாடலில் இடம் பெறும் பூனை, நாய், மாடு, ஆடு, கோழி, காகம் போன்றவையும் அவை எழுப்பும் ஒலிகளும் காரணமாக இருக்கலாம். மேற்கண்ட உயிரினங்களோடு முடித்துவிடாமல் இன்னும் குழந்தைகள் விரும்பும் அத்தனை உயிரினங்களையும் சேர்த்துக் கொள்ள இடமளிப்பதும் இப்பாடல் குழந்தைகளின் பிரயத்திற்கு உரிய பாடலாக இருப்பதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

குழந்தைகளுக்கான முதல் இடத்தில் இருக்கும் குத்துப்பாடல் என்று இந்தப் பாடலைத்தான் சொல்வேன். இந்தப் பாடலைப் பாடும் போது குழந்தைகள் அப்படி ஒரு குத்தாட்டம் போட்டு விடுகிறார்கள். உற்சாகத்தின் உச்சியில் ஏறிக் கொண்டு விடுகிறார்கள்.

ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் அறிந்த பாடல்தான் என்றாலும், இனி அந்தப் பாடலைப் பார்ப்போம்.

அந்தோணிசாமி பண்ணையிலே…

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில பூனைகள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு மியாவ் இங்கு மியாவ்

அங்கும் இங்கும் மியாவ் மியாவ் மியாவ்

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில நாய்கள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு லொள் இங்கு லொள்

அங்கும் இங்கும் லொள் லொள் லொள்

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில மாடுகள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு ம்மா இங்கு ம்மா

அங்கும் இங்கும் ம்மா ம்மா ம்மா

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில ஆடுகள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு மே இங்கு மே

அங்கும் இங்கும் மே மே மே

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில கோழிகள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு கொக் இங்கு கொக்

அங்கும் இங்கும் கொக் கொக் கொக்

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில காகங்கள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு கா இங்கு கா

அங்கும் இங்கும் கா கா காக

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில குயில்கள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு கூ இங்கு கூ

அங்கும் இங்கும் கூ கூ கூ

 

அந்தோணிசாமி பண்ணையிலே

உய்யா… உய்யா… உய்…

அந்தப் பண்ணையில் சில குழந்தைகள்

உய்யா… உய்யா… உய்…

அங்கு ஹஹ்ஹா இங்கு ஹஹ்ஹா

அங்கும் இங்கும் ஹஹ்ஹா ஹஹ்ஹா ஹஹ்ஹா

*****

Saturday, 5 February 2022

எங்கள் தேசம் இந்திய தேசம் - பாடல்

எங்கள் தேசம் இந்திய தேசம்! – பாடல்

            (வகுப்பறையில் இப்பாடலைப் பாடும் ஒவ்வொரு முறையும் ஒற்றுமையுணர்வையும் ஒருமைப்பாட்டு உணர்வையும் உருவாக்கத் தவறியதில்லை. ஒவ்வொரு வகுப்பறையிலும் பாடப்பட வேண்டிய இப்பாடல் உங்கள் வகுப்பறையிலும் ஒலிக்கட்டும்.)

எங்கள் தேசம் இந்திய தேசம்

வாழ்க வாழ்கவே!

இந்து முஸ்லீம் கிறித்தவர்கள்

எங்களின் சகோதரர்கள்!

 

வேறு வேறு வண்ணப் பூக்கள்

ஒன்று சேர்ந்த மாலை நாங்கள்!

வண்ணம் வேறு வேறு என்றாலும்

வாசம் என்றும் ஒன்றுதான்!

(எங்கள் தேசம்)

சிந்து கங்கை பிரமபுத்திரா

கிருஷ்ணா காவேரி

சென்று சேரும் கடலில் என்றும்

நீரின் தன்மை ஒன்றுதான்!

(எங்கள் தேசம்)

பேசும் மொழியும் வாழும் இடமும்

வேறு வேறு ஆனால் என்ன?

பாச உணர்வும் பண்பும் அன்பும்

தேசம் முழுதும் ஒன்றுதான்!

(எங்கள் தேசம்)

Sunday, 15 August 2021

சூரியன் வருவது யாராலே? - குழந்தைப் பாடல்

சூரியன் வருவது யாராலே?

            நாங்கள் சிறு வயதில் முதல் வகுப்பு படித்த போது படித்த பாடல் ‘சூரியன் வருவது யாராலே?’ எனத் துவங்கும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் எழுதிய பாடல். அந்த வயதில் மிகவும் தத்துவப் பொதிவு மிக்க பாடலாக இதைத் தேர்வு செய்து முதல் வகுப்பில் வைத்து விட்டதாக ஒரு கருத்து நிலவியதுண்டு. எனினும் எளிய வார்த்தைகளில் வலிமையான கருத்துகளை வைத்து கவிதையாடுவதில் நாமக்கல் கவிஞரும், கவிமணியும் வல்லவர்கள். அப்போதெல்லாம் பாடல்களைப் பாடிய பின்புதாம் வகுப்புத் துவங்கும். அப்படி இந்தப் பாடலை முதல் வகுப்பு முழுவதும் பாடிப் பாடி மனதில் பதிந்தது இப்பாடல். இப்பாடலின் சில வரிகள் அப்போது முதல் வகுப்பில் இருந்தன. இப்போது அண்மையில் முழுமையான பாடலை வாசிக்க நேர்ந்தது. சிறு வயது ஞாபகங்கள் மனதில் வந்து புகுந்து விட்டன. இது போல் தொண்ணூறுகளில் பால்ய வயதில் இருந்தவர்களுக்கும் நேரிடலாம் என்பதால் முழுப் பாடலையும் கீழே அனைவரின் அனுபவத்துக்காகவும்… அனைவரும் இந்தப் பாடலை ஒரு முறை படித்தோ பாடியோ பார்க்கலாம். நாமக்கல் கவிஞரின் சொல் நயம் புலப்படும் பாடல்.

சூரியன் வருவது யாராலே?

சூரியன் வருவது யாராலே?

சந்திரன் திரிவதும் எவராலே?

காரிருள் வானில் மின்மினிபோல்

கண்ணிற் படுவன அவைஎன்ன?

 

பேரிடி மின்னல் எதனாலே?

பெருமழை பெய்வதும் எவராலே?

யாரிதற் கெல்லாம் அதிகாரி?

அதைநாம் எண்ணிட வேண்டாவோ?           

 

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல் ஏது?

மண்ணில் போட்டது விதையொன்று

மரஞ்செடி யாவது யாராலே?

 

கண்ணில்தெரியாச் சிசுவை எல்லாம்

கருவில் வள்ர்பதுயார் வேலை?

எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்

ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?

 

எத்தனை மிருகம்! எத்தனை மீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார்!

எத்தனை பூச்சிகள் புழுவகைகள்!

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!

 

எத்தனை நிறங்கள் உருவங்கள்!

எல்லா வற்றையும் எண்ணுங்கால்

அத்தனை யும்தர ஒருகர்த்தன்

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

 

அல்லா வென்பார் சிலபேர்கள்;

அரன் அரியென்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தையென்பார்கள்;

 

சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’

என்றும் சிலபேர் சொல்வாகள்;

எல்லா மிப்படிப் பலபேசும்

ஏதொ ஒருபொருள் இருக்கிறதே!


அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்,

எந்தப் படியாய் எவர் அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

 

நிந்தை பிறரைப் பேசாமல்

நினைவிலும் கெடுதல் செய்யாமல்

வந்திப்போம் அதை வணங்கிடுவோம்;

வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

-          நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்