Sunday, 31 May 2026

ஜன்னலில் ஒரு நந்தவனம்!

ஜன்னலில் ஒரு நந்தவனம்!

சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட, எப்போதோ பறிக்கப்பட்ட, எங்கிருந்தோ வந்த காய்கறிகளை வாங்கிச் சாப்பிட்டு சலித்துப்போய்விட்டதா?

எல்லாம் போலி சார், ஒரிஜினல் ருசியே காணோம், என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்?

இதோ உங்களுக்கான தீர்வு. அதாவது, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது ஜன்னல் ஓரத்தில் நீங்களே விளைவித்து, நீங்களே பறித்து, நீங்களே சமைப்பது.

இது வெறும் விவசாயம் மட்டும் அல்ல. இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். இதில் பிளாஸ்டிக் கழிவு கிடையாது, தேவையற்ற டிரான்ஸ்போர்ட் செலவு கிடையாது. எல்லாவற்றையும் விட, நீங்கள் வளர்த்த செடியில் ஒரு தக்காளி சிவந்து தொங்கும்போது கிடைக்கும் அந்த கிக் இருக்கிறதே, அது அலாதி!

இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை. கொஞ்சம் ஆர்வமும், கொஞ்சம் எப்போர்ட்டும் இருந்தால் போதும்.

எல்லா செடியும் எல்லா நேரத்திலும் வளராது. எந்த மாதத்தில் எதை நடலாம் என்று கொஞ்சம் கூகுள் செய்யுங்கள்.

உங்கள் வீட்டு மண் களிமண்ணா? மணற்பாங்கானதா? கீரைகள், தக்காளி, பூசணி, பரங்கி, சுரை போன்றவை களிமண்ணில் நன்றாக வரும். கேரட், முள்ளங்கி என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் மண் தேவை.

காய்கறித் தோல், காபித்தூள் கழிவு, முட்டை ஓடு, காய்ந்த இலைகள் இதையெல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைத்தால், சில நாட்களில் அதுவே சூப்பர் உரம். காசு கொடுத்து ஏன் யூரியா வாங்க வேண்டும்?

எங்கள் வீட்டில் தோட்டம் கிடையாது சார், வெறும் பால்கனி தான் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். உங்கள் ஜன்னல் ஓரம் ஐந்து மணி நேரம் வெயில் பட்டால் போதும், அங்கே ஒரு குட்டி விவசாயப் புரட்சியை நிகழ்த்தலாம்.

15 செ.மீ தொட்டி இருந்தால் மூலிகைச் செடிகள் வளர்க்கலாம். கேரட், பீன்ஸ், வளர்க்க 25 செ.மீ ஆழமுள்ள தொட்டி தேவை.

காலி டப்பாக்கள், பழைய மரப்பெட்டிகள் என எதையும் விடாதீர்கள். அடியில் கொஞ்சம் கற்களைப் போட்டு தண்ணீர் வடிய வழி செய்தால் போதும்.

எடுத்தவுடனேயே பெரிய செடி வேண்டாம். கொத்துமல்லி அல்லது புதினா செடியை வாங்கி வளர்த்துப் பாருங்கள். அப்புறம் விதையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

ஆரம்பத்தில் கை கொடுக்கும் நம்பிக்கை செடிகள் என்றால் அவை கீரைகள், அவரை, கொத்தவரை, வெண்டை, தக்காளி, பீர்க்கன், பரங்கி, சுரை, பூசணிதான்.

ஒரு சின்ன மண்வெட்டி, பூவாளி அல்லது பழைய பக்கெட் கூட போதும். இவ்வளவுதான் உங்களுடைய கிட். அழுக்கானாலும் கவலையில்லை என்கிற ஒரு பழைய டிஷர்ட் போட்டுக் கொண்டு களத்தில் இறங்குங்கள்.

விவசாயம் என்பது பொறுமை சார்ந்தது. ஒரு விதையைப் போட்டுவிட்டு, அடுத்த நிமிடம் ஏன் இன்னும் முளைக்கவில்லை? என்று பார்ப்பது டிஜிட்டல் யுகத்து அவசரம். செடி வளர்வதைப் பார்ப்பது ஒரு தியானம். அது உங்களை நிகழ் கணத்தில் இருப்பது எப்படி என்பதைச் சொல்லித்தரும்.

உங்களுக்கு ஒரு சீக்ரெட் தெரியுமா? செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளருமாம். சயின்ஸா, தத்துவமா என்று தெரியவில்லை, ஆனால் உங்கள் அன்பை அவை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

இன்று மாலை ஒரு சின்ன தொட்டியில் கொஞ்சம் மண்ணை நிரப்பி, நாலு வெந்தயத்தைப் போட்டுப் பாருங்களேன். அடுத்த வாரம் நீங்கள் உங்கள் கைகளால் பறித்த வெந்தயக் கீரை சாம்பார் உங்கள் டைனிங் டேபிளில் இருக்கும். அந்த ருசிக்கு முன்னால் சூப்பர் மார்க்கெட் காய்கறிகள் பிளாஸ்டிக் பொம்மையாகத் தோன்றும்!

அப்புறம் என்ன? லெட்ஸ் ஸ்டார்ட் மியூசிக்!

*****

Saturday, 30 May 2026

பாஸ்ட் லைப்பை ஸ்லோவாக மாற்றித் தக்க வைத்தல்!

பாஸ்ட் லைப்பை ஸ்லோவாக மாற்றித் தக்க வைத்தல்!

காலையில் கண் விழித்ததும் ஒரு கப் பேனிஸ்ட் காபி, பிறகு கொலம்பியாவிலிருந்து வந்த வாழைப்பழம், டிசம்பர் மாத குளிரில் ஜொலிக்கும் ஸ்ட்ராபெர்ரி. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

நவீன விவசாயமும், லாஜிஸ்டிக்ஸ் துறையும் உலகத்தையே ஒரு சின்ன சூப்பர் மார்க்கெட் குடைக்குள் கொண்டு வந்துவிட்டன. ஆனால், இதற்காக நாம் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? வெறும் ரூபாய் நோட்டுகள் மட்டுமல்ல, நம் ஆரோக்கியம் மற்றும் இந்த பூமியின் ஆயுளும்தான்!

எல்லாம் கிடைக்கிறது சார், அப்புறம் என்ன? என்று கேட்கும் டெக் தலைமுறைக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் இதோ.

முன்பெல்லாம் மாம்பழம் என்றால் கோடை காலம், நெல்லிக்காய் என்றால் குளிர் காலம் என்று ஒரு கணக்கு இருந்தது.

இன்று?

ஜூன் மாதத்தில் ஆப்பிள் கிடைக்கிறது, ஜனவரியில் மாம்பழம் கிடைக்கிறது. இயற்கையின் ரிதத்தை நாம் உடைத்து எறிந்துவிட்டோம். ஆனால், இது சரியல்ல. சீசன் பார்த்துச் சாப்பிடுவதே நல்லது.

நிச்சயமாக இந்த நிலையை மாற்றுவதுதான் புத்திசாலித்தனம். ஏன் மாற்ற வேண்டும் என்றால்,

குளிர் காலத்தில் உள்ளூர் காய்கறிகளை விட்டுவிட்டு, எங்கோ ஒரு கிரீன் ஹவுஸில் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட தக்காளியை வாங்கினால் விலை இரட்டிப்பாகத்தான் இருக்கும். சீசன் காலத்தில் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும்போது விலை குறையும். இது சிம்பிள் டிமாண்ட் சப்ளை லாஜிக்.

ஒரு சர்வேயில் வெளியான அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், 25 சதவீத லண்டன் குழந்தைகளுக்கு கேரட் பூமிக்கு அடியில் வளரும் என்றே தெரியவில்லையாம்! லண்டனுக்கே இந்த நிலைமை என்றால், நம் நாட்டிலும்தான் அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது என்று கேள்வி கேட்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். நாம் உணவிலிருந்து எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டோம் என்பதற்கு இதுவே சாட்சி.

உள்ளூர் சந்தையில் விவசாயியிடம் பேசி வாங்குவதில் ஒரு பர்சனல் டச் இருக்கிறது. அங்கேயே ஒரு ரெசிபி டிப்ஸ் கிடைக்கும். அந்தத் தக்காளிக்கு ஒரு மணம் இருக்கும். சூப்பர் மார்க்கெட்டில் மெழுகி வைக்கப்பட்ட ஆப்பிளுக்கு அந்த மணம் இருக்குமா? சந்தேகம்தான்!

உணவு போலவே உடையும் இன்று பாஸ்ட் ஆகிவிட்டது. வாராவாரம் ஒரு புது கலெக்சன்.

ஓர் ஆடையின் ஆயுளை ஒரு வருஷத்திலிருந்து இரண்டு வருஷமாக நீட்டித்தால், உலக அளவில் மாசு வெளியேற்றம் 24 சதவீதம் குறையும் என்கிறது ஒரு கணக்கு. கிழிந்து விட்டது என ஓர் ஆடையை மாற்றாமல் ஓர் ஊசி, ஒரு நூல் இரண்டையும் கையில் எடுததால், இதுதான் இப்போது புரட்சிக்கான ஆயுதம்!

நீங்கள் சுற்றுச்சூழல் போராளியாகித் தீவிரமாக இயங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. பேஷன் பழையதாகி விட்டது என்று ஓர் ஆடையைத் தூக்கிப் போடாமல் அதன் ஆயுளை நீட்டித்தால், நீங்கள் பூமியின் ஆயுளையும் நீட்டிக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்களும் தீவிரமான சுற்றுச்சூழல் போராளியாகி விட்டீர்கள் என்பதன் தொடக்கம் அது.

உணவாக இருந்தாலும் சரி, உடையாக இருந்தாலும் சரி குறைவாக வாங்குங்கள், தரமானதாக வாங்குங்கள். தரமான ஒரு பொருள் பத்து மலிவான பொருட்களுக்குச் சமம்.

அடுத்த முறை சூப்பர் மார்க்கெட் போனால், சீசன் இல்லாத பழங்களை ஆசையோடு பார்க்காதீர்கள். அந்தப் பக்கத்துத் தெரு விவசாயி வைத்திருக்கும் வளைந்த கத்தரிக்காயைப் பாருங்கள். அதில் ஒரு நேர்மையும், ருசியும் ஒளிந்திருக்கும்.

துணிக்கடைக்குப் போனால் அவசர அவசரமாகப் புது பேஷன் என்று துணிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு வராதீர்கள். வீட்டில் வாங்கி வைத்திருக்கும் துணிகளை நினைத்துப் பாருங்கள். பர்சேஸ்க்கு ஒரு கடிவாளம் போடுங்கள்.

மெல்ல மெல்ல மாறுவோம். ஏனென்றால், உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் மெதுவாகப் போய்தான் அதைக் காப்பாற்ற வேண்டும்!

*****

Friday, 29 May 2026

நிதானமே பிரதானம் – ஆட்டோ பைலட் வாழ்க்கைக்கு ஒரு பிரேக்!

நிதானமே பிரதானம் – ஆட்டோ பைலட் வாழ்க்கைக்கு ஒரு பிரேக்!

நம் வாழ்க்கை இப்போது ஓர் ஆட்டோ பைலட் மோடுக்கு மாறிவிட்டது. காலையில் அலாரம் அடித்ததுமே எந்திர கதியில் ஓட்டம்.

ஜாம் பேக்டு ஷெட்யூல், முடியாத வொர்க் லிஸ்ட்கள், மண்டைக்கு மேல் கத்தி போலத் தொங்கும் டெட்லைன்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நான் ரொம்ப பிஸி என்று சொல்லிக்கொள்வதைப் பலரும் ஒரு கௌரவப் பதக்கமாக நினைத்துத் திரிகிறார்கள்.

ஆனால், இந்த அதிவேகப் பந்தயத்திற்கு நடுவே ஒரு மாற்று இயக்கம் தேவைப்படுகிறது. அதுதான் ஸ்லோ லிவ்விங். இன்றைய ஹைஸ்ட்ரெஸ் நவீன சமூகத்திற்கு இதுவே ஓர் அருமையான ஆன்டிடோட் ஆக  உள்ளது.

விஷயம் தெரியாதவர்கள் ஸ்லோ லிவிங் என்றால் சோம்பேறித்தனம் அல்லது நேரத்தை வீணடிப்பது என்று நினைக்கலாம். அது தவறு. இங்கே காரின் வேகத்தைக் குறைப்பது எதற்காகத் தெரியுமா? வண்டியைத் தறிகெட்டு ஓட்டாமல், சரியான பாதையில் ஸ்டியரிங் செய்வதற்காக!

அவசியமில்லாத குப்பைகளை வாழ்க்கையிலிருந்து நீக்கிவிட்டு, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அதற்கு நேரம் ஒதுக்குவதுதான் இந்த ஸ்லோ லிவ்விங்கிற்கான மைண்ட்செட்.

அதாவது, குவான்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம் என்கிற லாஜிக்.

ஓடும் நீருக்கு இடையூறாக இருக்கும் அடைப்புகளை எடுத்து விட்டு விட்டால், தண்ணீர் சீராகவும், விரைவாகவும் பாயும் அல்லவா! அந்த அடைப்புகள்தான் அவசரம், பதற்றம், பரபரப்பு.

எப்போது பார்த்தாலும் ஒரு அர்ஜென்சி உணர்வோடு இருப்பதைத் தள்ளி வையுங்கள். இங்கே அவசர உணர்வு என்பது உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அது உங்கள் வாழ்க்கையைப் பொறுமையாக உற்றுப் பார்த்தால்தான் உங்களுக்கே புரியும்.

ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதை விட, அந்தச் செயலைச் செய்யும்போது அதன் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதுதான் முக்கியம். இதைத்தான் மைண்ட்புல்னஸ் என்கிறார்கள்.

எதற்காக வேலை செய்கிறோம் என்பது புரியாமல் வேலை செய்வதைத்தான் நவீன வாழ்க்கை வழக்கப்படுத்தியுள்ளது. இந்த வழக்கம் மாற்றப்படாவிட்டால் அதற்கு மன உளைச்சலும் விரக்தியும் பரிசாகக் கிடைப்பது நிச்சயம். நோக்கம் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து செயல்படுங்கள். வேலையில் ஆர்வமும் உற்சாகமும் ஊற்றெடுக்கும்.

அப்புறம் பழக்கமும் பொழுதுபோக்கும். பழக்கத்தைப் பொருத்த வரையில், சும்மா மேலோட்டமாகப் பழகாமல், ஆழமான உறவுகளை உருவாக்குவது. அது குடும்பமாக இருக்கலாம், ஒரு பிடித்தமான ஹாபியாக இருக்கலாம், அல்லது மொட்டை மாடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதாகக்கூட இருக்கலாம்.

ஒன்றிப் போதல் என்பது உங்கள் எனர்ஜிக்கான ரகசியம். எதில் ஒன்றிப் போக உங்களால் முடியவில்லையோ, அதை ஸ்கிப் செய்து விடுங்கள். மல்லுகட்டுவது மனதுக்கு எப்போதும் நல்லதில்லை. உங்களுக்குப் பிடித்தமானதில் உங்களைக் கரைத்துக் கொள்ளுங்கள்.

வேகமான வாழ்க்கையானது திணித்தலைச் செய்து கொண்டிருக்கிறது. எவ்வளவு திணிக்க முடியுமோ அவ்வளவு அது திணித்துக் கொண்டிருக்கிறது. அது உங்களை இறுக்கிக் கொண்டிருக்கிறது. அது உங்களை ஓவர் லோடிற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட் போல. ஓவர் லோடு கொடுத்தால் பியூஸ் போய்விடும். அதனால்தான் அவ்வப்போது வோல்டேஜைக் குறைத்து, சிஸ்டத்தை ரீ பூட் செய்ய வேண்டியிருக்கிறது. வேகமாக ஓடி எங்கே போகப்போகிறோம்? அந்த இடமும் இதே பூமியில்தான் இருக்கிறது. அதனால் கொஞ்சம் மெதுவாகவே போவோமே!

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து ஒரு புத்தகத்தின் பத்து பக்கத்தைப் படியுங்களேன். உங்கள் ஸ்லோ லிவ்விங் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

இறுக்கம் ஆபத்தானது. இணக்கம் அவசியமானது. இணக்கமான வாழ்க்கைக்கு உங்களுக்கு ஸ்லோ லிவ்விங் உதவும். கொஞ்சம் மெதுவாகத்தான் வாழ்ந்து பாருங்களேன்!

*****

Thursday, 28 May 2026

தட்டைப் பாருங்கள்! அப்புறம் சாப்பிடுங்கள்!

தட்டைப் பாருங்கள்! அப்புறம் சாப்பிடுங்கள்!

சோபாவில் அமர்ந்து டிவியில் சீரியலோ அல்லது கிரிக்கெட்டோ பார்த்துக்கொண்டே, பக்கத்தில் இருக்கும் ஜம்போ சைஸ் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் கையை விட்டு மெக்கானிக்கலாக வாயில் போட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

அல்லது,

மதியம் 12 மணிக்கு அவசர அவசரமாக எதையோ கபகபவென விழுங்கிவிட்டு ஓடுகிறீர்களா?

அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.

உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுகிறாராம். 2030 இல் இது இன்னும் அதிகரிக்குமாம். இதற்கெல்லாம் காரணம் நம்முடைய நெகட்டிவ் ஈட்டிங் ஹாபிட்ஸ். இதற்கு ஒரு ஸ்மார்ட் தீர்வு இருக்கிறது. அதன் பெயர் மைண்ட்புல் ஈட்டிங்.

மைண்ட்புல் ஈட்டிங் என்றால் ஒரு திராட்சைப் பழத்தை ஒரு மணி நேரம் உற்றுப் பார்த்து, அதை முகர்ந்து பார்த்துச் சாப்பிடுவது என்று நினைக்காதீர்கள். இது ஒரு தியானம் மட்டுமல்ல, ஒரு மைண்ட் செட்.

நம்மில் பலர் ஓர் ஊசல் போல ஆடிக்கொண்டிருக்கிறோம். ஒரு வாரம் பயங்கரமான டயட் இருப்போம் வெரி குட் பாய் போல. அடுத்த வாரம் டயட்டை உடைத்துவிட்டு ராட்சதன் போலச் சாப்பிடுவோம். மைண்ட்புல் ஈட்டிங் இந்த இரண்டுக்கும் நடுவே இருக்கும் ஒரு சமநிலை.

பசியைப் பொருத்த வரையில் நமக்கு இரண்டு விதமான சிக்னல்கள் வருகின்றன.

ஒன்று, வயிற்றில் ஏற்படும் பசி உணர்வு. மற்றொன்று, வயிறு நிறைந்துவிட்டது என்கிற மூளையின் கட்டளை. இவைதான் உள்ளார்ந்த தூண்டல்கள்.

மணி 1 ஆகிவிட்டது, பக்கத்து சீட்டுக்காரர் சிப்ஸ் சாப்பிடுகிறார், அல்லது ஹோட்டல் வாசலில் வரும் பிரியாணி வாசனை போன்றவை உங்களைச் சாப்பிடத் தூண்டும் வெளிப்புறத் தூண்டல்கள்.

நீங்கள் சாப்பிட்டு முடித்த 20 நிமிடம் கழித்துத்தான் உங்கள் மூளைக்கு வயிறு நிறைந்துவிட்டது என்கிற சிக்னலே போய்ச் சேரும். அதற்குள் நீங்கள் இரண்டாவது ரவுண்டு பிரியாணி ஆர்டர் செய்திருந்தால், அப்புறம் வருத்தப்பட்டுப் பயனே இல்லை!

சாப்பிடும்போது ஒரு சின்ன இடைவெளி விடுங்கள். இப்போது உண்மையிலேயே எனக்குப் பசிக்கிறதா? என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுப்பது போலச் சாப்பிடுவதற்குச் சில விலையில்லா டிப்ஸ்கள் இருக்கின்றன. அவையாவன,

சின்ன தட்டில் சாப்பிடுங்கள். சிறுவயதில் அம்மா சொன்ன தட்டில் எதையும் மிஞ்ச வைக்காதே, என்கிற கட்டளையை இப்போது கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். மூன்று உருளைக்கிழங்கு வைப்பதற்கு பதில் ஒன்றை மட்டும் வையுங்கள்.

உணவை நல்லது அல்லது கெட்டது என்று பிரிக்காதீர்கள். அதற்குப் பதில் உதவியானது அல்லது உதவாதது என்று பெயரிடுங்கள். இது உங்கள் குற்ற உணர்ச்சியைக் குறைக்கும்.

நம்மில் பலர் பசிக்காகச் சாப்பிடுவதில்லை, போர் அடிக்கிறது, தனிமையாக இருக்கிறது, அல்லது ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது என்பதற்காகச் சாப்பிடுகிறோம். இதை எமோஷனல் ஈட்டிங் என்பார்கள். இதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பீட்சா சாப்பிடும்போது அதன் ஓரங்களை விட்டுவிடுங்கள். லார்ஜ் காபிக்கு பதில் மீடியம் காபி ஆர்டர் செய்யுங்கள். இது தெரியாமலேயே உங்கள் கலோரியைக் குறைக்கும் வித்தை. முடிந்தால் அந்த இரண்டையுமே விட்டு விடுங்கள். அது உடல்நலத்தை முழுமையாகக் காக்கும் வித்தை.

உணவு என்பது வெறும் எரிபொருள் மட்டுமல்ல, அது ஓர் இன்பம். அதை ரசித்து, ருசித்து, கவனத்துடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் தானாகவே தேடி வரும். அவசரம் அவசரமாக விழுங்குவது லாரியில் பெட்ரோல் அடிப்பது போல, அதில் ரசனை இருக்காது!

இன்று மதியம் சாப்பிடும்போது டிவியையும் போனையும் ஆப் செய்துவிடுங்கள். உங்கள் தட்டில் என்ன இருக்கிறது என்று பாருங்கள். முதல் கவளத்தைச் சாப்பிடும்போது அதன் வாசனையையும் சுவையையும் மட்டும் கவனிங்கள். உங்கள் ஸ்லோ ஈட்டிங் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Wednesday, 27 May 2026

அழகு ஆரோக்கியம் அப்புறம் கொஞ்சம் நிதானம்!

அழகு ஆரோக்கியம் அப்புறம் கொஞ்சம் நிதானம்!

ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இந்த இரண்டு ஏரியாவிலும் இப்போது ஸ்லோ லிவிங் தத்துவம் ஒரு முக்கியமான அப்டேட் ஆகி வருகிறது.

கண்ட கண்ட கெமிக்கல்களை முகத்தில் பூசிக்கொள்வதையும், உடலை வருத்திக்கொண்டு ஜிம்மில் எகிறிக் குதிப்பதையும் நிறுத்திவிட்டு, கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால், நம் உடலுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பது புரியும். குறைவே நிறைவு என்பதுதான் இதற்கான தாரக மந்திரம்.

இந்த மந்திரங்களைச் சூத்திரங்களாக்கினால், அவை இவை.

சருமம் என்பது உங்கள் உடலின் மிகப்பெரிய உறுப்பு. அதற்குப் போய் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்கிற பட்ஜெட் பொருட்களைப் பூசலாமா? ஆக, குவாலிட்டிதான் முக்கியம், குவான்டிட்டி இல்லை என்பது இதன் பின்னுள்ள சூத்திரம்.

பத்து மலிவான கிரீம்களை வாங்குவதை விட, ஒரு தரமான, நீண்ட நாள் உழைக்கக்கூடிய தயாரிப்பில் முதலீடு செய்யுங்கள். விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல், நிஜமான பயனர் விமர்சனங்களைப் படியுங்கள். பாட்டில் என்ன சொல்கிறது என்பதை விட, அந்த வாசனை உங்களுக்குப் பிடிக்கிறதா என்று பாருங்கள். எல்லாவற்றையும் விட இயற்கையிலேயே அற்புதமான மேக்கப் ஐட்டங்கள் இருக்கின்றன. அவற்றை முயற்சியுங்கள், எந்தப் பிரச்சனையும் இல்லை.

அழகு என்பது உங்கள் சருமத்தோடு முடிந்துவிடுவதில்லை. நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் இந்த பூமியை எப்படிப் பாதிக்கிறது என்பதும் முக்கியம். ரீபில்  செய்யக்கூடிய பாட்டில்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய காட்டன் பேடுகள்  போன்றவை வெறும் பேஷன் அல்ல, நம் கடமை. லாபத்தை விட பூமியை நேசிக்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள். பூமியின் பசுமையைக் காப்பதுதான் இதன் பின்னுள்ள சூத்திரம்.

ஸ்கின்னிமலிசம் என்பது ஒரு புதிய சயின்ஸ். மினிமலிசம் கேள்விப்பட்டிருப்பீர்கள், இது சருமத்திற்கான மினிமலிசம். அடுக்கு அடுக்காகப் பத்து பொருட்களைப் பூசுவதற்குப் பதில், மிகக் குறைவான மூலப்பொருட்கள் கொண்ட தரமான ஒரு பொருளைப் பயன்படுத்துவதுதான் இது. இதில் கெமிக்கல்கள் குறைவு, சத்துக்கள் அதிகம். இது உங்கள் சருமத்தை ஓவர்லோடு செய்யாமல் பாதுகாக்கும். இது ஓர் அற்புத சூத்திரம்.

தினமும் முகம் கழுவுவதை ஒரு சடங்காக மாற்றுங்கள். காலையில் அமைதியாக மூச்சை இழுத்துவிட்டு முகம் கழுவுங்கள். தோள்களைக் காது வரை உயர்த்தி, சில நொடிகள் கழித்து டிராப் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, அன்றைய டென்ஷனை டிஸ்சார்ஜ் செய்யும். இது உங்களது தினப்படி சூத்திரங்களில் ஒன்றாகட்டும்.

ஸ்லோ மெடிசன் என்பது மேற்கத்திய மருத்துவ முறைக்கு இது ஒரு மாற்றுப் பார்வை. உங்களை வெறும் ஒரு நோயாளியாகப் பார்க்காமல், மனம், உடல், ஆத்மா கலந்த ஒரு முழு மனிதனாகப் பார்ப்பதுதான் இது. அக்குபஞ்சர், தியானம், அரோமாதெரபி போன்ற ஹோலிஸ்டிக் முறைகளை மருத்துவரோடு கலந்துஆலோசியுங்கள். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு டாக்டரைத் தேடிப் பிடியுங்கள். உடல் நலமும் மன நலமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்! இன்றைய நிலையில் ஸ்லோ மெடிசன் என்பதும் ஆரோக்கியத்திற்கான ஒரு சூத்திரம்தான்.

ஜிம்மில் போய் உயிரைப் போக்கிக்கொள்ளும் ஹைஇன்டென்சிட்டி வொர்க்அவுட்கள் இப்போது அவுட்டேட்டட். யோகா, தாய்சி, பைலேட்ஸ் போன்றவை உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையையும் வலிமையையும் கூட்டும். அல்லது ஓர் அமைதியான நடைப்பயிற்சி, மெதுவான நீச்சல் இது கூட போதும். ஒர்க்அவுட்டைப் பொருத்த வரையில் இதுதான் தற்போதைய பின்பற்ற வேண்டிய சூத்திரம். வியர்த்து விறுவிறுத்து ரிசல்ட் தேடுவதை விட, உங்கள் உடலோடு நீங்கள் ஓர் ஆழமான கனெக்சனை உருவாக்குவதுதான் முக்கியம்.

அழகு என்பது வெளியில் பூசிக்கொள்வது மட்டுமல்ல, உள்ளே நீங்கள் உணர்வது. அவசரம் அவசரமாகச் செய்யும் எந்தக் காரியமும் நிலைக்காது. அது மேக்கப்பாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருந்தாலும் சரி!

இன்று இரவு தூங்குவதற்கு முன்னால், அந்தப் பத்து அடுக்கு கிரீம்களைத் தவிர்த்துவிட்டு, வெறும் முகத்தைக் கழுவிவிட்டு ஒரு நிமிடம் கண்ணாடியில் உங்கள் முகத்தை உற்றுப் பாருங்களேன். உங்கள் நிஜமான அழகு அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Tuesday, 26 May 2026

ஆடைகளில் ஒளிந்திருக்கும் சுற்றுச்சூழல் மேம்பாடு!

ஆடைகளில் ஒளிந்திருக்கும் சுற்றுச்சூழல் மேம்பாடு!

ஆடை என்பது வெறும் மானம் காக்க மட்டுமல்ல, அது ஒரு கிரியேட்டிவ் எக்ஸ்பிரஷன். ஆனால், சமீபகாலமாக நாம் துணி வாங்கும் விதம் கவலைக்கிடமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் வருஷத்துக்கு ரெண்டு சீசன்தான். அது சம்மர், விண்டர். இப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் புது சீசன், புது கலெக்சன். உண்மை என்னவென்றால், நம்மிடம் இருக்கும் துணிகளில் 40 சதவீதத்தை நாம் தொடுவதே இல்லை!

உலகளாவிய ஜவுளி உற்பத்தியானது 1.2 பில்லியன் டன் கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியேற்றுகிறது. இது விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து வெளியிடும் புகையை விட அதிகம்.

முதலில் உங்கள் பீரோவைத் திறந்து எல்லாவற்றையும் வெளியே கொட்டுங்கள். ஒரு டீ அல்லது காபி சாப்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பியுங்கள். துணிகளை நாலு வகையாகப் பிரியுங்கள்.

முதல் வகை என்பது, உங்களுக்குப் பிடித்தது, பொருத்தமானது.

இரண்டாவது வகை, சின்ன ஓட்டை, பட்டன் போனது. இதைத் தைக்கலாம்.

மூன்றாவது வகை, உங்களுக்கு வேண்டாம், ஆனால், வேறொருவருக்கு உதவும்.

நான்காவது வகை, உபயோகப்படுத்தவே முடியாதவை.

உங்களுக்குப் பிடிக்காத துணியைப் போட்டுக்கொண்டு அட்ஜஸ்ட் செய்யாதீர்கள். உடையும் மனசும் சிங்க் ஆக வேண்டும்.

ஒரு சின்ன ஓட்டை விழுந்துவிட்டால் உடனே குப்பையில் எறியாதீர்கள். ஊசி, நூல் இருந்தால் போதும். அது ஒரு நிமிட வேலை. துணியில் வரும் அந்தச் சின்னச் சின்ன நூலிழைகளை ஒரு சீப்பால் நீக்கினால் புதுசு போலாகிவிடும்.

ஒரு துணியின் ஆயுளை ஒரு வருஷத்திலிருந்து இரண்டு வருஷமாக உயர்த்தினால், சுற்றுச்சூழல் மாசு 24 சதவீதம் குறையும் என்கிறது ஒரு கணக்கு.

இப்போது டிரெண்ட் ஆகி வரும் பாஸ்ட் பேஷன் இலவசம் அல்ல. யாரோ எங்கோ அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறைந்த விலையில் துணி கிடைக்கிறது என்றால், அதைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்குச் சரியான கூலி வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

அடுத்த முறை ஆடை வாங்கும் முன் கொஞ்சம் ரிசர்ச் செய்யுங்கள். வெறுமனே பருத்தி ஆடை வாங்குவதை விட ஆர்கானிக் காட்டன் சிறந்தது.

இப்போது மூங்கில், சணல், ஏன் வாழைநார், அன்னாசி இலைகளிலிருந்து கூட துணிகள் தயாரிக்கிறார்கள். கேக்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

எப்போதுமே வாங்குவதைக் குறைத்து, தரமானதை வாங்குங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் கைத்தறி மற்றும் இயற்கை சாயமிடும் சிறு குறு தொழிலாளர்களைக் கண்டுபிடிக்கலாம்.

உங்களுக்குத் தையல் தெரியுமா? நீங்களே தைத்துப் போடுவது ஒருதனி சுகம். என்ன மெட்டீரியல் என்று உங்களுக்குத் தெரியும், அது ஒரு நல்ல மைண்ட்புல் பொழுதுபோக்கு.

ஒரு டிஷர்ட் தயாரிக்க 2,720 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது இது ஒரு மனிதன் மூன்று வருடம் குடிக்கும் தண்ணீர்! யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, அடுத்த முறை கடைக்குப் போகும்போது ஒரு நிமிடம் நில்லுங்கள். இது எனக்கு உண்மையிலேயே தேவையா? இதை நான் 30 தடவையாவது போடுவேனா? என்று கேளுங்கள். பதில், இல்லை என்றால், அந்தத் துணியை அங்கேயே வைத்துவிட்டு அமைதியாக வீடு திரும்புங்கள். பூமி உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லும்!

*****

Monday, 25 May 2026

மூளைக்கு ஒரு முட்டுச்சந்து – உங்கள் மைண்ட்புல் மறைவிடம்!

மூளைக்கு ஒரு முட்டுச்சந்து – உங்கள் மைண்ட்புல் மறைவிடம்!

நம் வீட்டில் சமைக்க கிச்சன் இருக்கிறது, தூங்க பெட்ரூம் இருக்கிறது. ஆனால், நமக்கு நாமே இருக்க ஓர் இடம் இருக்கிறதா? பொதுவாகக் கிடையாது. போன் அடிக்காத, வாட்ஸ்அப் எட்டிப்பார்க்காத, துணி துவைக்கச் சொல்லாத ஒரு சின்ன ஐலண்ட் உங்களுக்குத் தேவை. அதைத்தான் மைண்ட்புல்னஸ் ஹைட்அவுட் என்கிறார்கள்.

அந்த இடத்தை எங்கே பிடிப்பது என்கிறீர்களா?

வீட்டில் ஒரு மூலையில் உபயோகமில்லாமல் ஓர் இடம் இருக்குமே டெட் ஸ்பேஸ். அதைத் தேர்ந்தெடுங்கள். ஆனால், அதைத் ஒளித்து வைக்காதீர்கள். அது உங்கள் கண்ணில் படும்படியே இருக்கட்டும். ஏய், இங்கே வந்து கொஞ்சம் உட்கார்ந்து உன்னை கவனி, என்று அந்த இடம் உங்களை அழைக்க வேண்டும்.

முக்கியமான விஷயம், அங்கே கரண்ட் பில் கட்ட வேண்டிய பேப்பர்களையோ, துவைக்க வேண்டிய துணிகளையோ குவித்து வைக்காதீர்கள். அது ஒரு புனிதமான சர்க்யூட்.

ஏன் இந்த ரகசியத் தளம் என்கிறீர்களா?

இந்த இடத்திற்கு நீங்கள் போய் உட்கார்ந்தாலே, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு ஒரு சிக்னல், அதாவது, இப்போது இவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

அந்த இடத்திற்குள் நுழையும்போது போனைச் சைலண்டில் போட்டு தூர எறியுங்கள்.

உங்கள் உடலும் மனமும் அந்த இடத்தோடு ஒரு சிங்க் ஆகிவிடும். அங்கே உட்கார்ந்தாலே மூளை தானாகவே ரிலாக்ஸ் மோடுக்குத் தாவி விடும்.

அங்கே என்ன செய்ய வேண்டும்? எதாவது டாஸ்க். அவசியமில்லை. உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள்.

அந்த இடம் கண்ணை உறுத்தாத மென்மையான நிறங்கள் கொண்டதாக இருக்கட்டும்.

ஒரு வேளை அந்த இடம் திறந்த வெளியாக இருந்தால், அங்கே கொஞ்சம் பச்சை பசேல் எனச் செடிகளை வையுங்கள். அவை காற்றைச் சுத்திகரிப்பதோடு, அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவதே ஒரு மைண்ட்புல் வேலைதான்.

அது ஓர் அறையாக இருந்தால், ஜன்னலைத் திறந்து வையுங்கள். சூரிய வெளிச்சமும், தென்றலும் உங்கள் சருமத்தில் படுவது ஒரு தனி உணர்வு.

அங்கே டிசைன் அவார்டு வாங்குவது நம் நோக்கமல்ல. நமக்குத் தேவை சௌகரியம்.

அந்த இடத்தின் தரை கடினமாக இருந்தால் கவனம் சிதறும். ஒரு நல்ல யோகா மேட் அல்லது குஷன் போடுங்கள். திறந்தவெளி புல்வெளி என்றால் எதுவும் தேவையில்லை.

உங்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தால், அங்கே ஒரு பேனாவையும் நோட்டையும் வையுங்கள். பாதியில் மை தீர்ந்து போகாத நல்ல பேனாவாக இருக்கட்டும்!

உங்களுக்கு இசைப்பது பிடிக்கும் என்றால், அங்கே உங்களுக்குப் பிடித்தமான இசைக்கருவிகளை வையுங்கள். எடுத்து வாசியுங்கள்.

உங்களுக்கு வாசிப்பது பிடிக்கும் என்றால் அங்கே புத்தகங்கள் இருக்கட்டும்.

உங்களுக்கு அலங்காரம் செய்வது பிடிக்கும் என்றால் அதற்கான பொருட்கள் அங்கே இருக்கட்டும்.

உங்களுக்கு ஓவியம் தீட்டுவது பிடிக்கும் என்றால் உங்கள் ஓவிய அறை அதுதான்.

உங்களுக்குப் பிரார்த்திப்பது பிடிக்கும் என்றால் உங்கள் பிரார்த்தனை அறையாகக் கூட அது இருக்கலாம்.

வெறுமனே வானத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பது உங்களுக்குப் பிடிக்கும் என்றால், உங்கள் தோட்டத்தின் ஓரிடத்தில் அமைக்கப்பட்ட ஓர் இருக்கையாகக் கூட அது இருக்கலாம்.

இப்படித்தான் உங்களுக்கான ஸ்பேஸை உங்கள் வீட்டில் நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தை அமைப்பது மட்டும் போதாது. அதை அடிக்கடி விசிட் செய்ய வேண்டும். அங்கே போகப் போக உங்களை அறியாமலேயே, உங்கள் மூளைக்கு, இதோ ரிலாக்ஸ் ஆகப்போகிறோம் என்கிற கட்டளையை உங்கள் உணர்வுகள் அனுப்பும்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லூப்.அதிலிருந்து தப்பிக்க ஒரு சின்ன எக்ஸிட் கேட் தேவை. உங்கள் வீட்டு மூலையில் அந்த கேட்டை இன்றே உருவாக்குங்கள்!

*****

Sunday, 24 May 2026

மெல்ல மெல்ல ஒரு மெகா ரீபூட்!

மெல்ல மெல்ல ஒரு மெகா ரீபூட்!

உங்கள் காலை எப்படி ஆரம்பிக்கிறது?

அலாரத்தை ஸ்னூஸ் பண்ணிவிட்டு, கடைசி நிமிடம் வரை தூங்கி, அப்புறம் பதறி அடித்து எழுந்து, அவசர அவசரமாக உடுத்திய கோலத்துடனும், கையில் ஒரு பேப்பர் கப் காபியுடனும் ஓடுகிறீர்களா?

ஆபீஸில் ஒரு முடிவே இல்லாத ஒர்க் லிஸ்ட்டைப் பார்த்து ரத்த அழுத்தத்தை ஏற்றி, வீட்டுக்கு வந்ததும் டிவி முன்னால் அல்லது போனில் ஸ்க்ரோல் செய்துவிட்டு, அரைகுறைத் தூக்கத்தில் விழுகிறீர்களா?

அப்படி இருந்தால், கொஞ்சம் ப்ரேக் போடுங்கள்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் ரசிக்க ஆரம்பிக்க வேண்டிய நேரம் இது.

நாம் முன்பே சொன்னபடி, வாழ்க்கை என்பது ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல, அது ஓர் அழகான நடைப்பயிற்சி.

இந்த ஸ்லோ லிவ்விங் தத்துவம் உங்களுக்குச் சொல்லித்தருவது ஒன்றே ஒன்றுதான். அது ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தத்தைத் தேடுங்கள் என்பதுதான்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை விட, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்திற்கு ரிட்டர்ன்ஸ் அதிகம். அவர்களுடன் உரையாடுங்கள், அவர்களுக்கு நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் உங்கள் மனதைத் திறந்து காட்டுங்கள். உங்கள் மனம் லேசாக ஆவதுடன், வாழ்க்கையும் லேசாகி ஆகாயத்தில் இறக்கைக் கட்டிப் பறக்கும்.

உங்கள் வீட்டை ஒரு குப்பைத் தொட்டியாக மாற்றாமல், ஓர் அமைதியான மண்டலமாக மாற்றுங்கள். வேலைக்கும் ஓர் எல்லையை வகுத்துக் கொள்ளுங்கள். எபபோது பார்த்தாலும் வேலை வேலை என்று ஓடுவதை நிறுத்துங்கள். அந்த வேலைக்கு இடையே ஒரு பத்து நிமிடம் எதையும் செய்யாமல் நடந்ததையெல்லாம் ஒரு படம் போல மனதில் ஓட்டிப் பாருங்கள்.

நாம் சாப்பிடும்போது சாப்பாட்டின் ருசியை அறிவதில்லை, டிவியைப் பார்க்கிறோம். தூங்கும்போது நாளை என்ன நடக்கும் என்று கவலைப்படுகிறோம்.

கஷ்டப்பட்டு உழைப்பது எதற்காக? வயிறார சாப்பிடவும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்ளவும்தானே. சந்தோசமாகச் சாப்பிடுங்கள். சந்தோசமாக இருப்பதற்கு ஓர் அரை மணி நேரம் ஒதுக்கிக் கொள்வதில் தப்பே இல்லை.

உங்கள் உணவை மெதுவாக மென்று, அதன் ஒவ்வொரு சுவையையும் ரசிப்பது ஒரு தியானம். அப்போது டிவியோ, மொபைலோ பக்கத்தில் வேண்டவே வேண்டாம்.

ஒரு மரத்தைப் பார்ப்பதோ, பறவைகளின் சத்தத்தைக் கேட்பதோ உங்கள் மூளையின் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களைக் குறைக்கும் என்று உளவியல் சொல்கிறது. இப்படி உங்கள் மனதுக்குச் சந்தோசம் தரும் ஒன்றுக்காக நீங்கள் தினம் அரை மணி நேரம் தாராளமாகச் செலவு செய்யலாம்.

வாழ்க்கையின் பெரிய வெற்றிகளை விட, அந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களில்தான்  நிம்மதி ஒளிந்திருக்கிறது. ஒரு நல்ல புத்தகம், ஒரு சூடான குளியல், அல்லது யாரிடமாவது மனவிட்டுப் பேசுவது இவைதான் உங்களை ஒரு ஹாப்பியர் யூ ஆக மாற்றப்போகின்றன.

அதனால், சின்ன சின்ன வெற்றிகள்தானே, சின்ன சின்ன சந்தோஷங்கள்தானே என்று அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அவைதான் உங்களின் எனர்ஜி பூஸ்டர்கள்.

வாழ்க்கையில் எல்லாம் நிதானமாகத்தான் ஆரம்பிக்கின்றன. நிதானமே பிரதானம். இதைப் புரிந்து கொண்டு நீங்களும் உங்களை ஒர் அழுத்தமில்லாத, மகிழ்ச்சியான மனிதராக மாற்றிக் கொள்ளுங்கள், மெல்ல மெல்ல. ஆனால் உறுதியாக!

இன்று இரவு தூங்குவதற்கு முன்னால், உங்கள் போனை இன்னொரு அறையில் வைத்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த ஒரு பழைய பாட்டை முழு கவனத்துடன் பாடிப் பாருங்களேன். அல்லது, உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைச் சில பக்கங்கள் படியுங்களேன். உங்கள் ஸ்லோ லிவிங் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

Saturday, 23 May 2026

வாழ்வதற்கு ஒரு வழி – ஸ்லோமோஷன் ரகசியம்!

வாழ்வதற்கு ஒரு வழி – ஸ்லோமோஷன் ரகசியம்!

நம்மிடம் எல்லாமே இருக்கிறது. அதிவேக இன்டர்நெட், 5ஜி போன், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்.

ஆனால் நிம்மதி?

அது மட்டும் அவுட் ஆப் ஸ்டாக்.

ஏன்?

நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எங்கே?

யாருக்கும் தெரியாது.

இதற்கு ஒரு மருந்துதான். அதுதான் ஸ்லோ லிவிங். இதைப் பற்றி நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் பார்ப்போம்.

உறவுகள் என்றால் ஏதோ வாட்ஸ்அப் குரூப் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எந்த மனிதர்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறார்கள், யாருடன் பேசினால் உங்கள் பேட்டரி ஏறுகிறது என்று ஒரு லிஸ்ட் போடுங்கள். அவர்களுடன் அட்டாச் ஆகுங்கள்.

உங்களைச் சக்கையாய் உறிஞ்சும் மனிதர்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள்.

போனைத் தூர எறிந்துவிட்டு, நேரில் அமர்ந்து பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்தது என்ன என்று அக்கறையாகக் கேளுங்கள். இதுதான் சந்தோஷத்திற்கான பேசிக் அல்காரிதம்.

இன்றைய டூர் என்பது ஏ பாயிண்டிலிருந்து பி பாயிண்டிற்குப் பறந்து, நாலு செல்பி எடுத்து, விசிட்டட் என்று டிக் போடுவதுதான். இது டூர் அல்ல, ஒரு விதமான மாஸ் ஹிஸ்டீரியா.

இதற்குப் பதில் ஸ்லோ டிராவல் செய்யுங்கள்.

விமானத்தைத் தவிர்த்துவிட்டு ரயிலிலோ, பேருந்திலோ போங்கள். சைக்கிள் கூட பெஸ்ட்தான். நடந்து கூட போகலாம்.

அந்த ஊர் காரர்களுடன் டீ குடியுங்கள். அவர்களின் கதைகளைக் கேளுங்கள்.

இதற்காக நீங்கள் சுவிட்சர்லாந்து போக வேண்டாம். உங்கள் பக்கத்துத் தெருவில் இதுவரை நீங்கள் பார்க்காத ஒரு சந்து இருக்கும். அங்கே ஒரு நடை போடுங்கள். அது கூட ஒரு ஸ்லோ டிராவல்தான்!

வாழ்க்கையை ஒரு சமநிலைக்குக் கொண்டு வருவது உங்கள் மனநலத்திற்கு ஒரு பூஸ்ட் கொடுக்கும்.

ஒரு பேப்பர் எடுத்து, ஒரு நாளில் நீங்கள் எதற்கெல்லாம் நேரம் செலவழிக்கிறீர்கள் என்று எழுதுங்கள். அப்போது உங்களுக்கே தெரியும் உங்கள் நேரம் எப்படி பேஸ்புக்கிலும், வாட்ஸ்ஆப்பிலும், இன்ஸ்டாவிலும் வேகமாகக் கரைந்து கொண்டிருக்கிறது என்பது.

தூங்குவதற்கு முன்னால் போனில் கண்டதையும் படித்துக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதற்குப் பதில் ஒரு சுடுதண்ணீர் குளியல் அல்லது ஒரு நல்ல புத்தகம். உங்கள் மூளை உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லும்.

பாஸ்ட் பேஷன் என்பது ஒரு பெரிய மாயவலை. வாராவாரம் புது டிரெண்ட் என்று துணிகளைக் குவிப்பது சுற்றுச்சூழலுக்கும் கேடு, அதைத் தைக்கும் தொழிலாளர்களுக்கும் சாபம்.

எங்கே தயாரானது? எப்படித் தயாரானது? என்று கொஞ்சம் ரிசர்ச் செய்யுங்கள்.

உங்கள் கப்போர்டில் ஏற்கனவே இருக்கும் துணிகள்தான் உலகிலேயே மிகச்சிறந்த சஸ்டைனபிள் உடைகள். அதைத் தாண்டி வேண்டுமென்றால் எளிமையான கடைகளைத் தேடுங்கள். எளிமை எப்போதும் தங்கம்!

வாழ்க்கை என்பது ஓடி முடிப்பதற்கான ஒரு பந்தயமல்ல, அது ரசித்து நகர்வதற்கான ஓர் அழகான ஊர்வலம்.

யாரைச் சந்தித்தால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது?அந்த ஒரு மனிதருக்கு இன்று போன் செய்யாமல், நேரில் போய் ஒரு காபி வாங்கிக் கொடுத்துப் பேசுங்களேன். உங்கள் ஸ்லோ லிவிங் அங்கிருந்து ஆரம்பிக்கட்டும்!

கேட்ஜெட்டுகளுக்கு ஒரு குட்பை சொல்லி விட்டு, கெஸ்ட்டுகளுடன் பிரண்ட்ஸ்களுடன் அலவளாவுங்கள். விசயம் அவ்வளவுதான்.

*****

Friday, 22 May 2026

வீடும் விழுதுகளும் – ஒரு ஸ்லோமோஷன் பார்வை!

வீடும் விழுதுகளும் – ஒரு ஸ்லோமோஷன் பார்வை!

ஸ்லோ லிவ்விங் என்பது மெதுவாக நடப்பது, மெதுவாக வேலை செய்வது என்று நீங்கள் நினைப்பது போல ஸ்லோ சமாச்சாரம் அல்ல. அதன் பெயரில் ஸ்லோ என்ற சொல் இருந்தாலும், அது நிதானமான விவேகமான இயங்கியலைக் குறிப்பது.

இந்த அவசர யுகத்தில், பாஸ்புட் கலாச்சாரத்தில் இருக்கும் அந்த வேகம் இருக்கிறதே, அந்த வேகத்திற்கு குட்பை சொல்வதைத்தான் ஸ்லோ என்ற வார்த்தையால் இங்கே குறிப்பிடுகிறோம்.

இதை வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் கொண்டு வர வேண்டும்.

இப்போது வீட்டை எடுத்துக் கொள்வோம்.

வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்ட் கலவையல்ல. அது உங்கள் மனநிலையின் பிரதிபலிப்பு. உங்கள் லிவிங் ரூம் எதற்காக? டிவி பார்ப்பதற்கா அல்லது குடும்பத்துடன் பேசுவதற்கா? இதைக் கொஞ்சம் யோசித்து டிசைன் செய்யுங்கள் என்கிறது ஸ்லோ இன்டீரியர்ஸ்.

வீடு உங்களை அரவணைக்க வேண்டும். கண்ணைக் குத்தும் நிறங்களைத் தவிர்த்து, அமைதியான மியூட்டட் வண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள். தேவையற்ற பொருட்களைத் துடைத்து எறியுங்கள். அமைதியான ஓர் மூலை, மென்மையான சோபா  இதுதான் லேட்டஸ்ட் லக்சரி.

எதை வாங்கினாலும் ஆராய்ச்சி செய்யுங்கள். குறைவாக, ஆனால், நிறைவாக வாங்குங்கள். முடிந்தவரை செகண்ட்ஹேண்ட் பொருட்கள் அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட பிராண்டுகளைத் தேடுங்கள். இருப்பதைப் பேணிக்காப்பதே ஒரு கலைதான்!

ஸ்லோ லிவிங் என்பது இப்போது அந்த வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது அல்ல. அது ஒரு நோக்கத்துடன் நேரத்தைச் செலவிடுவது. இந்த இடத்தில்தான் ஸ்லோ ஹாபி வருகிறது.

அதென்ன ஸ்லோ ஹாபி என்கிறீர்களா?

தோட்டம் அமைக்கலாம், பறவைகளை வேடிக்கை பார்க்கலாம். அல்லது ஓவியம், பின்னல் வேலை, தையல் என எதாவது ஒன்றில் மூழ்கலாம். யோகா, மெடிடேஷன், டைரி எழுதுவது என இந்த ஸ்லோ லிவ்விங்கிற்கான ஹாபி பட்டியல் நீளம்.

உதாரணத்துக்கு ஓவியம் தீட்டும் போது நீங்கள் வரையும் படம் மோனாலிசா ரேஞ்சுக்கு வர வேண்டும் என்பது அவசியமில்லை. அதை வரையும்போது உங்கள் மனது எந்த நிலையில் இருக்கிறது என்பதுதான் மேட்டர். முடிவுக்காக ஓடாமல், செய்கின்ற செயலை ரசித்தால் அதுவே ஸ்லோ ஹாபி.

எதையும் மெதுவாகக் கொண்டு செல்லுங்கள். அவசரம் காட்டாதீர்கள். இது காதலுக்கு மட்டுமல்ல, நண்பர்கள், குடும்பம், சக ஊழியர்கள் என எல்லா கனெக்சன்களுக்கும் பொருந்தும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஆதரவையும் தரும் உறவுகளுக்கு மட்டும் ரெட் கார்ப்பெட் விரித்து முன்னுரிமை கொடுங்கள். மற்ற நச்சு உறவுகளுக்கு ஒரு மென்மையான டாட்டா சொல்லிவிடுங்கள்.

வாழ்க்கை என்பது ஓர் எலக்ட்ரானிக் சர்க்யூட் போல. தேவையற்ற ரெசிஸ்டன்ஸ் இருந்தால் வேகம் குறையும், சூடாகும். நிதானமாக இருந்தால் சர்க்யூட் ஸ்மூத் ஆக இருக்கும்.

இதைப் பின்பற்றும் போது உங்கள் மனதில் மற்றும் வாழ்வில் நிகழும் மாற்றங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன். அது மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

*****

Thursday, 21 May 2026

நிதானமாக ஒரு ரீ பூட்!

நிதானமாக ஒரு ரீ பூட்!

இந்தக் கட்டுரையைப் படிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கும் அந்த அவசரக் கோல வாழ்க்கை சலித்துப் போய்விட்டது என்று அர்த்தம். ஆனால், எடுத்தவுடனேயே எல்லாவற்றையும் மாற்றிவிட முடியாது. இது ஒரு மைண்ட் செட். உங்கள் கம்ப்யூட்டரை எப்படி ஷட்டவுன் செய்து நிதானமாகத் திறக்கிறீர்களோ, அதுபோலத்தான் இதுவும்.

உங்களுக்கு எது முக்கியம்? குடும்பமா? நிம்மதியா? அல்லது இந்த பூமியைக் காப்பாற்றுவதா? இவற்றில் எதை உங்கள் உள்மனசு பலமாகச் சொல்கிறதோ, அங்கிருந்து என்ட்ரி கொடுங்கள். எல்லா ஜன்னல்களையும் ஒரே நேரத்தில் திறக்காதீர்கள், ஹேங் ஆகிவிடுவீர்கள்!

இந்த ஸ்லோ லிவ்விங் எனும் ஸ்லோ புரட்சி எங்கே ஆரம்பித்தது தெரியுமா?

1989 இல் இத்தாலியில் ஒரு மெக்டொனால்ட்ஸ் கடை திறந்தபோது, அதற்குப் போட்டியாக ஸ்லோ புட் இயக்கம் உருவானது.

இந்த இயக்கம் சொல்வது இதுதான்,

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு ஒரு பெரிய நோ சொல்லுங்கள். ஏனென்றால் அவசர உணவு வேண்டாம்.

உள்ளூரில் விளையும் காய்கறிகள், அந்தந்த சீசனுக்குக் கிடைக்கும் பழங்கள் ஆகியவற்றை வாங்கி நீங்களே சமையுங்கள். அதில் மண்ணின் மணம் இருக்கும். மற்றவற்றில் ரசாயனத்தின் குணம்தான் இருக்கும்.

சாப்பிடும்போது போனைத் தொடக்கூடாது என்கிற ரூல் போடுங்கள். குடும்பத்தோடு அமர்ந்து, ரசித்துச் சாப்பிடுவது ஒரு காஸ்ட்ரிக் பிளஷர். உணவு தயாரிக்கும் போது மிஞ்சும் கழிவுகளை உரமாக மாற்றிவிடுங்கள். இது பூமிக்கு ஒரு தேங்க்ஸ்!

வீட்டை அலங்கரிப்பது என்றால் உடனே லேட்டஸ்ட் டிரெண்ட் என்ன என்று தேடாதீர்கள். அது ஒரு மாயை.

இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் குறைவாக வாங்குங்கள், நிறைவாக உணருங்கள். இதுதான் இந்த ஸ்லோ லிவ்விங்கின் தாரக மந்திரம்.

முடிந்தவரை செகண்ட் ஹேண்ட் பொருட்களைத் தேடுங்கள். அவை சூழலுக்கு நல்லது, உங்கள் பர்ஸுக்கும் நல்லது.

மற்றவர்கள் வீட்டைப் பார்த்து காப்பி அடிக்காமல், உங்கள் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்ப வீட்டை வடிவமைப்பதே ஸ்லோ லிவ்விங்கின் அடிப்படை. அதுவே ஸ்லோ இன்டீரியர்.

வாழ்க்கை என்பது ஒரு சாப்ட்வேர் அப்டேட் போன்றது. எல்லா வசதிகளையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்ய முயன்றால் சிஸ்டம் கிராஷ் ஆகிவிடும். ஒரு நேரத்தில் ஒரு மாற்றம். அப்படித்தான் நீங்கள் இந்த ஸ்லோ லிவ்விங்கிற்கு மாற வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் ஸ்லோ லிவ்விங்கிற்கு மாற்றி விட முடியாது. ஆனால் ஒவ்வொன்றாக மாற்ற முடியும். அதுதான் புத்திசாலித்தனம்.

பாஸ்ட்புட் கடைகளின் வேகத்தை விட, உங்கள் வீட்டுப் பாட்டியின் கைமணத்தில் இருக்கும் அந்த நிதானம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? அப்படியானால் நீங்கள் ஸ்லோ மூவ்மென்ட்டுக்குத் தயார்! லெட்ஸ் ஸ்டார்ட் இட்!

வேறு ஏதேனும் டவுட் என்றால், கமென்ட் பாக்ஸில் ஒரு கேள்வியைக் கொத்திப் போடுங்கள். அதற்கான பதிலை விரைவாக எதிர்பார்க்காதீர்கள். ஸ்லோவாகத்தான் வரும். ஏனென்றால், நாம் பேசிக் கொண்டிருப்பது ஸ்லோ லிவ்விங்கைப் பற்றி. அவசரத்தை ஒழித்துக் கட்டுவதுதான் நம் முதல் வேலை.

*****

Wednesday, 20 May 2026

10th Result – 2026 ஒரு புள்ளி விவரப் பகுப்பாய்வு

10th Result – 2026 ஒரு புள்ளி விவரப் பகுப்பாய்வு

2026 ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த புள்ளி விவர பகுப்பாய்வுகளைக் கீழே காண்க.




*****

இந்த நூற்றாண்டுக்குத் தேவையான பார்முலாக்கள்!

நிதானமே பிரதானம் – உங்களுக்கான பார்முலாக்கள்!

நம் வாழ்க்கை ஒரு ராகுல் டிராவிட் இன்னிங்ஸாக இருக்க வேண்டியது போய், இப்போது டி20 மேட்ச் போல ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் வேகம். இந்த அவசரக் கோலத்தை மாற்ற சில பார்முலாக்கள் உள்ளன. இவற்றைக் கொஞ்சம் மனதில் நோட் பண்ணிக்கொள்ளுங்கள்!

காலையில் அலாரம் அடித்து பதறி அடித்து எழுவதை நிறுத்துங்கள். ஒரு பத்து நிமிடம் முன்னதாக எழுந்து, அந்த டீ அல்லது காபியை மெதுவாக ரசித்து குடியுங்கள். கடைசி நிமிடம் என்கிற அந்தப் படபடப்பு உங்கள் ரத்த அழுத்தத்தை ஏற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எதற்கும் பத்து நிமிடத்திற்கு முன்பு என்பது ஓர் அற்புதமான பார்முலா.

கணினிக்கு எப்படி ஒரு புரோகிராம் எழுதுகிறோமோ, அதுபோல உங்கள் நாளுக்கு ஒரு சின்ன இலக்கை நிர்ணயம் செய்யுங்கள். இன்று இதைச் செய்வேன், இதில் என் சக்தியைச் செலவிடுவேன், என்கிற தெளிவு இருந்தால், வீண் அலைச்சல் குறையும். ஆக, சிறு இலக்கு அதில் தெளிவு என்பது சூப்பரான பார்முலா.

ஒரே நேரத்தில் நாலு வேலையைச் செய்வது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறோம். அது தவறு. மூளை ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்யும்போதுதான் துல்லியமாக  இருக்கும். ஒரு வேலையை முடியுங்கள், அப்புறம் அடுத்த விண்டோ திறங்கள். ஒன்றே செய், நன்றே செய், அதையும் இன்றே செய் என்று நம் முன்னோர்கள் எப்போதோ வாழ்க்கைக்கு ஒரு பார்முலா வகுத்து விட்டார்கள். பாலோ பண்ண வேண்டியதுதான் நம் கடமை.

லஞ்ச் பிரேக் என்பது அவசரமாகச் சோற்றை விழுங்குவதற்கல்ல. அந்த முழு ஒரு மணி நேரத்தையும் அனுபவியுங்கள். அது உங்கள் மூட் மற்றும் வேலையின் வேகத்தை  எப்படி மாற்றுகிறது என்று பாருங்கள். சாப்பிடும் போது எப்போதும் ஸ்லோ என்பது லைப் லாங்காக இருப்பதற்கு ஒரு சைலண்ட் பார்முலா.

போன், லேப்டாப், டேப்லெட் என்பன போன்ற இந்த எலக்ட்ரானிக் சிலந்திகளிடமிருந்து கொஞ்சம் தள்ளியிருங்கள். ஸ்கிரீனைப் பார்ப்பதை நிறுத்தினால், நிஜ மனிதர்களைப் பார்க்கவும், ஒரு புதிய ஹாபி வளர்த்துக்கொள்ளவும் நேரம் கிடைக்கும். டிஜிட்டல் டீடாக்ஸ் இந்தக் காலத்திற்குத் தேவையான அவசியமான பார்முலா.

அறைக்குள்ளேயே அடைந்து கிடக்காதீர்கள். பக்கத்தில் இருக்கும் ஒரு பூங்கா அல்லது மரம் செடி இருக்கும் இடத்திற்குப் போய் வாருங்கள். இயற்கைக்கு உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை உறிஞ்சும் சக்தி உண்டு. அவ்வபோது அவுட்டிங்கில் உலவுவது எனர்ஜிக்கான ரகசிய பார்முலா.

வாரம் முழுவதற்கும் என்ன சாப்பிடப்போகிறோம் என்று பிளான் பண்ணுங்கள். அப்போதுதான் ஜங்க் புட் ஆர்டர் செய்யும் எண்ணம் வராது. நிதானமாகச் சமைப்பது ஒரு தியானம் போன்றது. எதையும் வடிவேலு பாணியில் பிளான் பண்ணி பண்ணணும் என்பது இன்றைய வாழ்வியலுக்கான எஸென்ஸியல் பார்முலா.

புத்தகம் படிப்பது, ஒரு குளியல், அல்லது ஓர் ஐந்து நிமிடம் மூச்சுப் பயிற்சி என இது போன்ற வகையறாக்களில் ஏதோ ஒன்றை உங்கள் டெய்லி ரொட்டின் ஆக்குங்கள். இது உங்கள் நரம்பு மண்டலத்தை டவுன் ஷிப்ட் செய்ய உதவும். சின்ன ரிலாக்ஸ், பெரிய பவர் என்பது இதன் பின்னணியில் உள்ள பார்முலா.

எல்லாவற்றுக்கும் சரி சொல்லும் ஆசாமிக்கு நிம்மதி இருக்காது. உங்கள் நேரத்தை மற்றவர்கள் திருட அனுமதிக்காதீர்கள். தைரியமாக இல்லை என்று சொல்லப் பழகுங்கள். இது ஒரு தற்காப்புக் கலை! அநாவசிய பிரச்சனைகளிடமிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள இது ஒரு பென்டாஸ்டிக்கான செல்ப் டிபென்ஸ் பார்முலா.

வாழ்க்கை என்பது ஒரு ரேஸ் அல்ல. மெதுவாகப் போனாலும் இலக்கை அடையலாம். இந்த பார்முலாக்கள் அதற்கு உங்களுக்குக் கியாரண்டி. இந்த பார்முலாக்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இப்போதே சொல்ல வேண்டும் என்றில்லை, ஸ்லோவாக உங்களுக்குத் தோன்றும் போது கூட சொல்லலாம்.

*****