Thursday, 28 May 2026

தட்டைப் பாருங்கள்! அப்புறம் சாப்பிடுங்கள்!

தட்டைப் பாருங்கள்! அப்புறம் சாப்பிடுங்கள்!

சோபாவில் அமர்ந்து டிவியில் சீரியலோ அல்லது கிரிக்கெட்டோ பார்த்துக்கொண்டே, பக்கத்தில் இருக்கும் ஜம்போ சைஸ் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் கையை விட்டு மெக்கானிக்கலாக வாயில் போட்டுக்கொண்டிருக்கிறீர்களா?

அல்லது,

மதியம் 12 மணிக்கு அவசர அவசரமாக எதையோ கபகபவென விழுங்கிவிட்டு ஓடுகிறீர்களா?

அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.

உலகம் முழுவதும் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் அவதிப்படுகிறாராம். 2030 இல் இது இன்னும் அதிகரிக்குமாம். இதற்கெல்லாம் காரணம் நம்முடைய நெகட்டிவ் ஈட்டிங் ஹாபிட்ஸ். இதற்கு ஒரு ஸ்மார்ட் தீர்வு இருக்கிறது. அதன் பெயர் மைண்ட்புல் ஈட்டிங்.

மைண்ட்புல் ஈட்டிங் என்றால் ஒரு திராட்சைப் பழத்தை ஒரு மணி நேரம் உற்றுப் பார்த்து, அதை முகர்ந்து பார்த்துச் சாப்பிடுவது என்று நினைக்காதீர்கள். இது ஒரு தியானம் மட்டுமல்ல, ஒரு மைண்ட் செட்.

நம்மில் பலர் ஓர் ஊசல் போல ஆடிக்கொண்டிருக்கிறோம். ஒரு வாரம் பயங்கரமான டயட் இருப்போம் வெரி குட் பாய் போல. அடுத்த வாரம் டயட்டை உடைத்துவிட்டு ராட்சதன் போலச் சாப்பிடுவோம். மைண்ட்புல் ஈட்டிங் இந்த இரண்டுக்கும் நடுவே இருக்கும் ஒரு சமநிலை.

பசியைப் பொருத்த வரையில் நமக்கு இரண்டு விதமான சிக்னல்கள் வருகின்றன.

ஒன்று, வயிற்றில் ஏற்படும் பசி உணர்வு. மற்றொன்று, வயிறு நிறைந்துவிட்டது என்கிற மூளையின் கட்டளை. இவைதான் உள்ளார்ந்த தூண்டல்கள்.

மணி 1 ஆகிவிட்டது, பக்கத்து சீட்டுக்காரர் சிப்ஸ் சாப்பிடுகிறார், அல்லது ஹோட்டல் வாசலில் வரும் பிரியாணி வாசனை போன்றவை உங்களைச் சாப்பிடத் தூண்டும் வெளிப்புறத் தூண்டல்கள்.

நீங்கள் சாப்பிட்டு முடித்த 20 நிமிடம் கழித்துத்தான் உங்கள் மூளைக்கு வயிறு நிறைந்துவிட்டது என்கிற சிக்னலே போய்ச் சேரும். அதற்குள் நீங்கள் இரண்டாவது ரவுண்டு பிரியாணி ஆர்டர் செய்திருந்தால், அப்புறம் வருத்தப்பட்டுப் பயனே இல்லை!

சாப்பிடும்போது ஒரு சின்ன இடைவெளி விடுங்கள். இப்போது உண்மையிலேயே எனக்குப் பசிக்கிறதா? என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுப்பது போலச் சாப்பிடுவதற்குச் சில விலையில்லா டிப்ஸ்கள் இருக்கின்றன. அவையாவன,

சின்ன தட்டில் சாப்பிடுங்கள். சிறுவயதில் அம்மா சொன்ன தட்டில் எதையும் மிஞ்ச வைக்காதே, என்கிற கட்டளையை இப்போது கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். மூன்று உருளைக்கிழங்கு வைப்பதற்கு பதில் ஒன்றை மட்டும் வையுங்கள்.

உணவை நல்லது அல்லது கெட்டது என்று பிரிக்காதீர்கள். அதற்குப் பதில் உதவியானது அல்லது உதவாதது என்று பெயரிடுங்கள். இது உங்கள் குற்ற உணர்ச்சியைக் குறைக்கும்.

நம்மில் பலர் பசிக்காகச் சாப்பிடுவதில்லை, போர் அடிக்கிறது, தனிமையாக இருக்கிறது, அல்லது ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கிறது என்பதற்காகச் சாப்பிடுகிறோம். இதை எமோஷனல் ஈட்டிங் என்பார்கள். இதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

பீட்சா சாப்பிடும்போது அதன் ஓரங்களை விட்டுவிடுங்கள். லார்ஜ் காபிக்கு பதில் மீடியம் காபி ஆர்டர் செய்யுங்கள். இது தெரியாமலேயே உங்கள் கலோரியைக் குறைக்கும் வித்தை. முடிந்தால் அந்த இரண்டையுமே விட்டு விடுங்கள். அது உடல்நலத்தை முழுமையாகக் காக்கும் வித்தை.

உணவு என்பது வெறும் எரிபொருள் மட்டுமல்ல, அது ஓர் இன்பம். அதை ரசித்து, ருசித்து, கவனத்துடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் தானாகவே தேடி வரும். அவசரம் அவசரமாக விழுங்குவது லாரியில் பெட்ரோல் அடிப்பது போல, அதில் ரசனை இருக்காது!

இன்று மதியம் சாப்பிடும்போது டிவியையும் போனையும் ஆப் செய்துவிடுங்கள். உங்கள் தட்டில் என்ன இருக்கிறது என்று பாருங்கள். முதல் கவளத்தைச் சாப்பிடும்போது அதன் வாசனையையும் சுவையையும் மட்டும் கவனிங்கள். உங்கள் ஸ்லோ ஈட்டிங் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

No comments:

Post a Comment