Sunday, 31 May 2026

ஜன்னலில் ஒரு நந்தவனம்!

ஜன்னலில் ஒரு நந்தவனம்!

சூப்பர் மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட, எப்போதோ பறிக்கப்பட்ட, எங்கிருந்தோ வந்த காய்கறிகளை வாங்கிச் சாப்பிட்டு சலித்துப்போய்விட்டதா?

எல்லாம் போலி சார், ஒரிஜினல் ருசியே காணோம், என்று அங்கலாய்ப்பவரா நீங்கள்?

இதோ உங்களுக்கான தீர்வு. அதாவது, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் அல்லது ஜன்னல் ஓரத்தில் நீங்களே விளைவித்து, நீங்களே பறித்து, நீங்களே சமைப்பது.

இது வெறும் விவசாயம் மட்டும் அல்ல. இது ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். இதில் பிளாஸ்டிக் கழிவு கிடையாது, தேவையற்ற டிரான்ஸ்போர்ட் செலவு கிடையாது. எல்லாவற்றையும் விட, நீங்கள் வளர்த்த செடியில் ஒரு தக்காளி சிவந்து தொங்கும்போது கிடைக்கும் அந்த கிக் இருக்கிறதே, அது அலாதி!

இப்போதெல்லாம் விவசாயம் செய்ய ஏக்கர் கணக்கில் நிலம் தேவையில்லை. கொஞ்சம் ஆர்வமும், கொஞ்சம் எப்போர்ட்டும் இருந்தால் போதும்.

எல்லா செடியும் எல்லா நேரத்திலும் வளராது. எந்த மாதத்தில் எதை நடலாம் என்று கொஞ்சம் கூகுள் செய்யுங்கள்.

உங்கள் வீட்டு மண் களிமண்ணா? மணற்பாங்கானதா? கீரைகள், தக்காளி, பூசணி, பரங்கி, சுரை போன்றவை களிமண்ணில் நன்றாக வரும். கேரட், முள்ளங்கி என்றால் கொஞ்சம் ஸ்பெஷல் மண் தேவை.

காய்கறித் தோல், காபித்தூள் கழிவு, முட்டை ஓடு, காய்ந்த இலைகள் இதையெல்லாம் ஒரு பக்கெட்டில் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து வைத்தால், சில நாட்களில் அதுவே சூப்பர் உரம். காசு கொடுத்து ஏன் யூரியா வாங்க வேண்டும்?

எங்கள் வீட்டில் தோட்டம் கிடையாது சார், வெறும் பால்கனி தான் என்கிறீர்களா? கவலையை விடுங்கள். உங்கள் ஜன்னல் ஓரம் ஐந்து மணி நேரம் வெயில் பட்டால் போதும், அங்கே ஒரு குட்டி விவசாயப் புரட்சியை நிகழ்த்தலாம்.

15 செ.மீ தொட்டி இருந்தால் மூலிகைச் செடிகள் வளர்க்கலாம். கேரட், பீன்ஸ், வளர்க்க 25 செ.மீ ஆழமுள்ள தொட்டி தேவை.

காலி டப்பாக்கள், பழைய மரப்பெட்டிகள் என எதையும் விடாதீர்கள். அடியில் கொஞ்சம் கற்களைப் போட்டு தண்ணீர் வடிய வழி செய்தால் போதும்.

எடுத்தவுடனேயே பெரிய செடி வேண்டாம். கொத்துமல்லி அல்லது புதினா செடியை வாங்கி வளர்த்துப் பாருங்கள். அப்புறம் விதையிலிருந்து ஆரம்பிக்கலாம்.

ஆரம்பத்தில் கை கொடுக்கும் நம்பிக்கை செடிகள் என்றால் அவை கீரைகள், அவரை, கொத்தவரை, வெண்டை, தக்காளி, பீர்க்கன், பரங்கி, சுரை, பூசணிதான்.

ஒரு சின்ன மண்வெட்டி, பூவாளி அல்லது பழைய பக்கெட் கூட போதும். இவ்வளவுதான் உங்களுடைய கிட். அழுக்கானாலும் கவலையில்லை என்கிற ஒரு பழைய டிஷர்ட் போட்டுக் கொண்டு களத்தில் இறங்குங்கள்.

விவசாயம் என்பது பொறுமை சார்ந்தது. ஒரு விதையைப் போட்டுவிட்டு, அடுத்த நிமிடம் ஏன் இன்னும் முளைக்கவில்லை? என்று பார்ப்பது டிஜிட்டல் யுகத்து அவசரம். செடி வளர்வதைப் பார்ப்பது ஒரு தியானம். அது உங்களை நிகழ் கணத்தில் இருப்பது எப்படி என்பதைச் சொல்லித்தரும்.

உங்களுக்கு ஒரு சீக்ரெட் தெரியுமா? செடிகளிடம் பேசினால் அவை நன்றாக வளருமாம். சயின்ஸா, தத்துவமா என்று தெரியவில்லை, ஆனால் உங்கள் அன்பை அவை உணரும் என்பது மட்டும் நிச்சயம்.

இன்று மாலை ஒரு சின்ன தொட்டியில் கொஞ்சம் மண்ணை நிரப்பி, நாலு வெந்தயத்தைப் போட்டுப் பாருங்களேன். அடுத்த வாரம் நீங்கள் உங்கள் கைகளால் பறித்த வெந்தயக் கீரை சாம்பார் உங்கள் டைனிங் டேபிளில் இருக்கும். அந்த ருசிக்கு முன்னால் சூப்பர் மார்க்கெட் காய்கறிகள் பிளாஸ்டிக் பொம்மையாகத் தோன்றும்!

அப்புறம் என்ன? லெட்ஸ் ஸ்டார்ட் மியூசிக்!

*****

No comments:

Post a Comment