ஜஸ்ட் லைக் தட் – ஒரு சந்திப்பு ஒரு சரித்திரம்!
வாழ்க்கை என்பது ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாதிரி.
அங்கே நீங்கள் யாரை சந்திக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கிறது.
தற்செயல் என்று நாம் சாதாரணமாகச் சொல்லும் ஒரு ஹலோ, பின்னாளில் ஒரு ட்ரில்லியன் டாலர்
கம்பெனியாகவோ அல்லது ஒரு உலகப் புகழ்பெற்ற நாவலாகவோ மாறக்கூடும்.
வரலாற்றின் சுவாரஸ்யமான சில கோயின்சிடன்ஸ்
கதைகளைப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.
அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?
அது ஜெனிவா ஏரிக்கரை. மேரி ஷெல்லி என்பவர்
அங்கே சுற்றுலா சென்றிருந்தார். அங்கே தற்செயலாக லார்ட் பைரன் அறிமுகமானார். ஒரு மழை
பெய்த அந்த போரடிக்கும் இரவில், யார் நல்ல பேய் கதை எழுதுகிறார்கள் என்று பார்ப்போம்,
என ஒரு போட்டி நடத்தினார்கள்.
ரிசல்ட் என்ன தெரியுமா?
மேரி ஷெல்லி எழுதியதுதான் உலகப்புகழ் பெற்ற
பிராங்கென்ஸ்டைன்.
அதே இரவில் பைரனின் டாக்டர் ஜான் பொலிடோரி
எழுதியதுதான் முதல் நவீன வாம்பயர் கதை. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலாவுக்கெல்லாம்
80 வருடம் சீனியர் இது!
லண்டன் டார்ட்போர்ட் ரயில் நிலையம். பதினெட்டு
வயது மிக் ஜாக்கர் ரயிலுக்காகக் காத்திருந்தார்.
அங்கே பழைய பள்ளி நண்பன் கீத் ரிச்சர்ட்ஸை எதேச்சையாகச் சந்தித்தார். இருவருக்கும்
மியூசிக் என்றால் உயிர். அந்த ரயில் பிளாட்பார்ம் உரையாடல்தான் பின்னாளில் உலகையே அதிர
வைத்த தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழு பிறக்கக் காரணம்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சீனியர்
மாணவர், புதுசாக வந்த ஒரு பையனுக்கு கேம்பஸைச் சுற்றிக் காட்டிக்கொண்டிருந்தார். சீனியர்
பெயர் செர்ஜி பிரின். ஜூனியர் பெயர் லாரி பேஜ்.
ஆச்சரியம் என்னவென்றால், அந்த டூரில் அவர்கள்
இருவரும் எதற்கு எடுத்தாலும் விவாதம் செய்தார்கள், சண்டை போட்டார்கள். அந்த மோதல்தான்
ஒரு பார்ட்னர்ஷிப்பாக மாறியது. ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்த அந்தச் சந்திப்பு இன்று
கூகுள் எனும் ட்ரில்லியன் டாலர் சாம்ராஜ்யம்!
ஹென்றி போர்டு ஒரு சாதாரண இன்ஜினியராகத் தாமஸ்
ஆல்வா எடிசனை ஒரு மீட்டிங்கில் சந்தித்தார். பெட்ரோலில் ஓடும் கார் பற்றிய போர்டின்
ஐடியாவைக் கேட்டு எடிசன் உற்சாகமாக மேஜையைத் தட்டிப் பாராட்டினார். உங்க ஐடியா சூப்பர்,
பண்ணுங்க! என்றார் எடிசன். அந்த ஒரு ஊக்கம் தான் போர்டு மோட்டார் கம்பெனி உருவாகவும்,
உலகமே கார்களில் பறக்கவும் அச்சாரம் போட்டது.
அடுத்த முறை நீங்கள் ஒரு பேருந்துக்காகவோ அல்லது
ரயிலுக்காகவோ காத்திருக்கும்போது, பக்கத்தில் இருப்பவரிடம் ஒரு ஹலோ சொல்லுங்கள். யார்
கண்டது? நீங்கள் ஒரு புதிய உலகத்தையே உருவாக்கப் போகும் ஒருவரைச் சந்திக்கக்கூடும்!
இது போன்ற கதைகள் ஏராளம். காத்திருங்கள்.
*****

No comments:
Post a Comment