Sunday, 17 May 2026

ஹேப்பினஸ் மெனு – மகிழ்ச்சிக்கு ஒரு கையேடு!

ஹேப்பினஸ் மெனு – மகிழ்ச்சிக்கு ஒரு கையேடு!

சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

சிலருக்கு ஒரு மசாலா தோசை, ஒரு காபி சாப்பிட்டுவிட்டு, நிம்மதியாகத் தூங்கினால் போதும்!

ஆனால், அது தற்காலிகம். நிரந்தரமாக மகிழ்ச்சியாக இருக்க மூளைக்குச் சில பயிற்சிகள் தேவை. அந்த ஒர்க் அவுட் குறித்த சின்ன லிஸ்ட் இதோ.

எப்போதெல்லாம் உங்கள் மனம் மகிழ்ச்சியற்று இருக்கிறதோ, அப்போதெல்லாம், இன்று எதை நீ இழக்கவில்லை? என்று மனதிடமே கேட்டுப் பாருங்கள். மகிழ்ச்சியை இழக்காவிட்டால் நீங்கள் எதையும் இழக்கவில்லை என்பது இதன் லாஜிக்.

அப்படியே மனம் இதை இழந்து விட்டேனே என்று ஒப்பாரி வைத்தால், போனால் போகட்டும் போடா என்ற பாடலைப் பாடிக் கொண்டு போய்க் கொண்டே இருங்கள். அந்தத் துக்கம் அனுஷ்டிக்கும் மனதைக் கண்டு கொள்ளவோ கொள்ளாதீர்கள்.

நிறையப் பணம், பெரிய வேலை கிடைத்தால் சந்தோஷம் வரும் என்பது மாயைதான். அளவான பணம், தமக்கேற்ற வேலையே மகிழ்ச்சிக்குப் போதும். இதை மனம் புரிந்து கொண்டிருக்கிறதா என்பதைச் செக் செய்யுங்கள்.

விளையாடினால் மகிழ்ச்சி வரும் என்பது உண்மைதான். ஆனால், மகிழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு அல்ல, அது ஓர் அறிவியல். அதை அமைதியான மனம், அன்பான உறவுகள், இனிமையான பேச்சு, இயல்பான செயல், எதார்த்தமான சிந்தனை ஆகியவற்றால் அடைய இயலும்.

ஒரு மரம் வளர்த்தோ அல்லது பூச்செடி வளர்த்தோ அல்லது நாயோ, பூனையோ வளர்த்து அதனிடம் பேசிக் கொண்டிருங்கள். அவை எதையோ எதிர்பேச்சாகப் பேசி உங்களை டென்ஷன் செய்து விடாது.

கொஞ்சம் காலார காற்றோட்டமுள்ள இடத்தில் நடைபயிற்சி செய்யுங்கள். பறவைகள், பூச்சிகளைப் பார்த்தால் ஒரு ஹாய் சொல்லுங்கள். வாய் விட்டு வெளியே சொன்னால் ஒரு மாதிரியாக நினைத்து விடுவார்கள் என்று நினைத்தால் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள்.

இருபது நிமிடம் யோகாவோ, உடற்பயிற்சியோ பெஸ்ட். முடியாவிட்டாலும் ஒரு பத்து நிமிடம் மூச்சுப் பயிற்சியையாவது செய்யுங்கள்.

ஐந்து பக்கமோ, பத்து பக்கமோ அல்லது அதற்கு மேலோ அது உங்கள் விருப்பம், கட்டாயம் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைத் தினமும் படியுங்கள். புத்தகம் இல்லையென்றால் இந்த வலைப்பூவையாவது படியுங்கள். படிப்பதில் இருக்கும் மகிழ்ச்சிக்கான கெமிக்கல் ரியாக்சனைப் புரிந்து கொண்டால், அது ஒன்றே போதும் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள.

அப்புறம் சின்ன சின்ன உதவிகள். நிச்சயம் பெரிய உதவிகள் வேண்டவே வேண்டாம். ஏனென்றால் இவ்வளவு பெரிய உதவி செய்தேனே, எனக்கு என்ன கிடைத்தது என்று அதனாலேயே மன உளைச்சல் அடைவீர்கள். சாலையின் நடுவில் கிடக்கும் முள்ளைத் தூக்கி ஓரமாய்ப் போடுவது, ஒரு குழந்தைக்கு ஒரு பென்சில் கொடுப்பது, யாசகம் கேட்பவருக்கு ஒரு இரண்டு ரூபாய் கொடுப்பது இவை போன்றவையே போதும்.

அதே நேரத்தில் ஒரு சின்ன உதவியை நீங்கள் பெற்றாலும் அதற்குப் பெரிதாகவே நன்றி சொல்லுங்கள். ஒரு சிறிய தவறு என்றாலும் ஈகோவைத் தூக்கித் தூர எறிந்து விட்டு முதல் வேலையாய் சாரி கேளுங்கள்.

பேசும் போது நகைச்சுவைக்காகக் கூட ஒரு சின்ன நெகடிவ் வார்த்தை கூட வேண்டாம். எல்லாரையும் உற்சாகமாகப் பாராட்டுங்கள், அவர்கள் அந்தப் பாராட்டிற்குத் தகுதியானவர்களாக இல்லாவிட்டாலும் கூட. ஊக்கப்படுத்துங்கள், உங்கள் ஊக்கங்களால் அவர் ஊக்கமடையாவிட்டாலும் கூட, ஊக்கப்படுத்துவதை நிறுத்தாதீர்கள்.

மகிழ்ச்சிக்காகத் தற்போது பல்கலைக்கழகங்களே கோர்ஸ் நடத்துகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

யேல் பல்கலைக்கழகத்தின் கோர்ஸை 40 லட்சம் பேர் இதைப் படித்துவிட்டார்கள். அங்கே, மகிழ்ச்சி பற்றி வெறும் தியரி பேசாமல், ஹோம் வொர்க் கொடுத்துப் பிராக்டிஸ் செய்ய வைக்கிறார்கள்.

பெர்க்லியின் சயின்ஸ் ஆப் ஹேப்பினஸில் பிறருக்குச் செய்யும் உதவியும், சமூகத் தொடர்புகளும் எப்படி நம் மகிழ்ச்சியை நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கிறது என்று இங்கே சொல்லிக் கொடுக்கிறார்கள்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலேயே மிகவும் பாப்புலரான கிளாஸ் ஹார்வர்டின் பாசிட்டிவ் சைக்காலஜி கிளாஸ்தான். அந்த அளவுக்கு மக்கள் மகிழ்ச்சிக்காக ஏங்குகிறார்கள். அதற்காகக் கோர்ஸ் படித்துக் கற்றுக் கொள்கிறார்கள்.

நீங்கள் யூடியூப்பில் எதையெதையோ பார்க்கும் நேரத்தில் மகிழ்ச்சிக்கான சில வீடியோக்களையும் பார்க்கலாம்.

2011 இல் எடுக்கப்பட்ட ஹேப்பி என்ற டாக்குமென்ட்ரி படம் முக்கியமானது. கொல்கத்தா சேரி முதல் பிரேசில் கடற்கரை வரை 14 நாடுகளில் எடுத்த படம். பணம் இல்லாமலும் மனிதன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நெட்பிளிக்ஸில் ஒரு படம் கிடைக்கிறது. தி மைண்ட் எக்ஸ்பிளைன்ட் – ஹேப்பினஸ் என்பது அந்தப் படத்தின் பெயர். மூளைக்குள் நடக்கும் அந்தச் சிக்கலான கெமிக்கல் மாற்றங்களை அனிமேஷன் மூலம் விளக்குகிறார்கள். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

வாழ்க்கையில் ஏன் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? அது தரும் மகிழ்ச்சிக்காகத்தானே. ஜெயித்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் என்பதை விட, மகிழ்ச்சியாக இருந்து கொண்டே ஜெயிப்பதுதான் சரியானது.

தோல்வியிலும் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமானால், நீங்கள் அடைந்ததே தோல்வியே அல்ல. அதுதான் மாபெரும் வெற்றி. ஆம், நீங்கள் ஜெயித்து வீட்டீர்கள்.

நீங்கள் ஜெயிப்பதற்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம், தியாகம் செய்யலாம். ஆனால், மகிழ்ச்சியை மட்டும் விட்டுக் கொடுக்கவோ, தியாகம் செய்து விடுவதையோ செய்து விடாதீர்கள்.

மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்கள் தோற்பதே இல்லை. அவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள்.

மகிழ்ச்சி என்பது தேடிப் போக வேண்டிய ஒன்றல்ல. அது நமக்குள் இருக்கும் ஒன்றுதான். அதைச் சரியான தகவல்கள் மூலம் அவ்வப்போது ஒர்க் அவுட் செய்தால் போதும்!

மற்றபடி இந்த ஒர்க் அவுட் செய்வதோ அல்லது ஒரு மசாலா தோசை, காபியோடு நிறுத்திக் கொள்வதோ அவரவர்களின் மகிழ்ச்சிக்கான ரகசியங்கள்.

*****

No comments:

Post a Comment