Friday, 29 May 2026

நிதானமே பிரதானம் – ஆட்டோ பைலட் வாழ்க்கைக்கு ஒரு பிரேக்!

நிதானமே பிரதானம் – ஆட்டோ பைலட் வாழ்க்கைக்கு ஒரு பிரேக்!

நம் வாழ்க்கை இப்போது ஓர் ஆட்டோ பைலட் மோடுக்கு மாறிவிட்டது. காலையில் அலாரம் அடித்ததுமே எந்திர கதியில் ஓட்டம்.

ஜாம் பேக்டு ஷெட்யூல், முடியாத வொர்க் லிஸ்ட்கள், மண்டைக்கு மேல் கத்தி போலத் தொங்கும் டெட்லைன்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், நான் ரொம்ப பிஸி என்று சொல்லிக்கொள்வதைப் பலரும் ஒரு கௌரவப் பதக்கமாக நினைத்துத் திரிகிறார்கள்.

ஆனால், இந்த அதிவேகப் பந்தயத்திற்கு நடுவே ஒரு மாற்று இயக்கம் தேவைப்படுகிறது. அதுதான் ஸ்லோ லிவ்விங். இன்றைய ஹைஸ்ட்ரெஸ் நவீன சமூகத்திற்கு இதுவே ஓர் அருமையான ஆன்டிடோட் ஆக  உள்ளது.

விஷயம் தெரியாதவர்கள் ஸ்லோ லிவிங் என்றால் சோம்பேறித்தனம் அல்லது நேரத்தை வீணடிப்பது என்று நினைக்கலாம். அது தவறு. இங்கே காரின் வேகத்தைக் குறைப்பது எதற்காகத் தெரியுமா? வண்டியைத் தறிகெட்டு ஓட்டாமல், சரியான பாதையில் ஸ்டியரிங் செய்வதற்காக!

அவசியமில்லாத குப்பைகளை வாழ்க்கையிலிருந்து நீக்கிவிட்டு, எதற்கு முக்கியத்துவம் தர வேண்டுமோ அதற்கு நேரம் ஒதுக்குவதுதான் இந்த ஸ்லோ லிவ்விங்கிற்கான மைண்ட்செட்.

அதாவது, குவான்டிட்டியை விட குவாலிட்டி முக்கியம் என்கிற லாஜிக்.

ஓடும் நீருக்கு இடையூறாக இருக்கும் அடைப்புகளை எடுத்து விட்டு விட்டால், தண்ணீர் சீராகவும், விரைவாகவும் பாயும் அல்லவா! அந்த அடைப்புகள்தான் அவசரம், பதற்றம், பரபரப்பு.

எப்போது பார்த்தாலும் ஒரு அர்ஜென்சி உணர்வோடு இருப்பதைத் தள்ளி வையுங்கள். இங்கே அவசர உணர்வு என்பது உருவாவதில்லை, உருவாக்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அது உங்கள் வாழ்க்கையைப் பொறுமையாக உற்றுப் பார்த்தால்தான் உங்களுக்கே புரியும்.

ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதை விட, அந்தச் செயலைச் செய்யும்போது அதன் ஒவ்வொரு நொடியையும் ரசிப்பதுதான் முக்கியம். இதைத்தான் மைண்ட்புல்னஸ் என்கிறார்கள்.

எதற்காக வேலை செய்கிறோம் என்பது புரியாமல் வேலை செய்வதைத்தான் நவீன வாழ்க்கை வழக்கப்படுத்தியுள்ளது. இந்த வழக்கம் மாற்றப்படாவிட்டால் அதற்கு மன உளைச்சலும் விரக்தியும் பரிசாகக் கிடைப்பது நிச்சயம். நோக்கம் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து செயல்படுங்கள். வேலையில் ஆர்வமும் உற்சாகமும் ஊற்றெடுக்கும்.

அப்புறம் பழக்கமும் பொழுதுபோக்கும். பழக்கத்தைப் பொருத்த வரையில், சும்மா மேலோட்டமாகப் பழகாமல், ஆழமான உறவுகளை உருவாக்குவது. அது குடும்பமாக இருக்கலாம், ஒரு பிடித்தமான ஹாபியாக இருக்கலாம், அல்லது மொட்டை மாடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பதாகக்கூட இருக்கலாம்.

ஒன்றிப் போதல் என்பது உங்கள் எனர்ஜிக்கான ரகசியம். எதில் ஒன்றிப் போக உங்களால் முடியவில்லையோ, அதை ஸ்கிப் செய்து விடுங்கள். மல்லுகட்டுவது மனதுக்கு எப்போதும் நல்லதில்லை. உங்களுக்குப் பிடித்தமானதில் உங்களைக் கரைத்துக் கொள்ளுங்கள்.

வேகமான வாழ்க்கையானது திணித்தலைச் செய்து கொண்டிருக்கிறது. எவ்வளவு திணிக்க முடியுமோ அவ்வளவு அது திணித்துக் கொண்டிருக்கிறது. அது உங்களை இறுக்கிக் கொண்டிருக்கிறது. அது உங்களை ஓவர் லோடிற்குத் தயார் செய்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு எலக்ட்ரானிக் சர்க்யூட் போல. ஓவர் லோடு கொடுத்தால் பியூஸ் போய்விடும். அதனால்தான் அவ்வப்போது வோல்டேஜைக் குறைத்து, சிஸ்டத்தை ரீ பூட் செய்ய வேண்டியிருக்கிறது. வேகமாக ஓடி எங்கே போகப்போகிறோம்? அந்த இடமும் இதே பூமியில்தான் இருக்கிறது. அதனால் கொஞ்சம் மெதுவாகவே போவோமே!

இன்று மாலை உங்கள் ஸ்மார்ட்போனை ஆப் செய்துவிட்டு, ஜன்னல் ஓரம் அமர்ந்து ஒரு புத்தகத்தின் பத்து பக்கத்தைப் படியுங்களேன். உங்கள் ஸ்லோ லிவ்விங் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!

இறுக்கம் ஆபத்தானது. இணக்கம் அவசியமானது. இணக்கமான வாழ்க்கைக்கு உங்களுக்கு ஸ்லோ லிவ்விங் உதவும். கொஞ்சம் மெதுவாகத்தான் வாழ்ந்து பாருங்களேன்!

*****

No comments:

Post a Comment