Tuesday, 26 May 2026

ஆடைகளில் ஒளிந்திருக்கும் சுற்றுச்சூழல் மேம்பாடு!

ஆடைகளில் ஒளிந்திருக்கும் சுற்றுச்சூழல் மேம்பாடு!

ஆடை என்பது வெறும் மானம் காக்க மட்டுமல்ல, அது ஒரு கிரியேட்டிவ் எக்ஸ்பிரஷன். ஆனால், சமீபகாலமாக நாம் துணி வாங்கும் விதம் கவலைக்கிடமாக இருக்கிறது.

ஒரு காலத்தில் வருஷத்துக்கு ரெண்டு சீசன்தான். அது சம்மர், விண்டர். இப்போதெல்லாம் ஒவ்வொரு வாரமும் புது சீசன், புது கலெக்சன். உண்மை என்னவென்றால், நம்மிடம் இருக்கும் துணிகளில் 40 சதவீதத்தை நாம் தொடுவதே இல்லை!

உலகளாவிய ஜவுளி உற்பத்தியானது 1.2 பில்லியன் டன் கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியேற்றுகிறது. இது விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து வெளியிடும் புகையை விட அதிகம்.

முதலில் உங்கள் பீரோவைத் திறந்து எல்லாவற்றையும் வெளியே கொட்டுங்கள். ஒரு டீ அல்லது காபி சாப்பிட்டுவிட்டு வேலையை ஆரம்பியுங்கள். துணிகளை நாலு வகையாகப் பிரியுங்கள்.

முதல் வகை என்பது, உங்களுக்குப் பிடித்தது, பொருத்தமானது.

இரண்டாவது வகை, சின்ன ஓட்டை, பட்டன் போனது. இதைத் தைக்கலாம்.

மூன்றாவது வகை, உங்களுக்கு வேண்டாம், ஆனால், வேறொருவருக்கு உதவும்.

நான்காவது வகை, உபயோகப்படுத்தவே முடியாதவை.

உங்களுக்குப் பிடிக்காத துணியைப் போட்டுக்கொண்டு அட்ஜஸ்ட் செய்யாதீர்கள். உடையும் மனசும் சிங்க் ஆக வேண்டும்.

ஒரு சின்ன ஓட்டை விழுந்துவிட்டால் உடனே குப்பையில் எறியாதீர்கள். ஊசி, நூல் இருந்தால் போதும். அது ஒரு நிமிட வேலை. துணியில் வரும் அந்தச் சின்னச் சின்ன நூலிழைகளை ஒரு சீப்பால் நீக்கினால் புதுசு போலாகிவிடும்.

ஒரு துணியின் ஆயுளை ஒரு வருஷத்திலிருந்து இரண்டு வருஷமாக உயர்த்தினால், சுற்றுச்சூழல் மாசு 24 சதவீதம் குறையும் என்கிறது ஒரு கணக்கு.

இப்போது டிரெண்ட் ஆகி வரும் பாஸ்ட் பேஷன் இலவசம் அல்ல. யாரோ எங்கோ அதற்கான விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறைந்த விலையில் துணி கிடைக்கிறது என்றால், அதைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்குச் சரியான கூலி வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.

அடுத்த முறை ஆடை வாங்கும் முன் கொஞ்சம் ரிசர்ச் செய்யுங்கள். வெறுமனே பருத்தி ஆடை வாங்குவதை விட ஆர்கானிக் காட்டன் சிறந்தது.

இப்போது மூங்கில், சணல், ஏன் வாழைநார், அன்னாசி இலைகளிலிருந்து கூட துணிகள் தயாரிக்கிறார்கள். கேக்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

எப்போதுமே வாங்குவதைக் குறைத்து, தரமானதை வாங்குங்கள். கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடினால் கைத்தறி மற்றும் இயற்கை சாயமிடும் சிறு குறு தொழிலாளர்களைக் கண்டுபிடிக்கலாம்.

உங்களுக்குத் தையல் தெரியுமா? நீங்களே தைத்துப் போடுவது ஒருதனி சுகம். என்ன மெட்டீரியல் என்று உங்களுக்குத் தெரியும், அது ஒரு நல்ல மைண்ட்புல் பொழுதுபோக்கு.

ஒரு டிஷர்ட் தயாரிக்க 2,720 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது இது ஒரு மனிதன் மூன்று வருடம் குடிக்கும் தண்ணீர்! யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, அடுத்த முறை கடைக்குப் போகும்போது ஒரு நிமிடம் நில்லுங்கள். இது எனக்கு உண்மையிலேயே தேவையா? இதை நான் 30 தடவையாவது போடுவேனா? என்று கேளுங்கள். பதில், இல்லை என்றால், அந்தத் துணியை அங்கேயே வைத்துவிட்டு அமைதியாக வீடு திரும்புங்கள். பூமி உங்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லும்!

*****

No comments:

Post a Comment