Showing posts with label ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!. Show all posts
Showing posts with label ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!. Show all posts

Thursday, 13 August 2026

ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!

ரீல்ஸ் பூதம் குடித்த மாணவ ரத்தம்!

பதினாறு வயது மாணவன் ரிதன்.

கிருஷ்ணகிரி பக்கம் ஒரு கிராமம்.

கோயில் திருவிழாவுக்குப் போன இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் பண்ணியிருக்கிறான்.

எப்படித் தெரியுமா?

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வது போல வேகமாக வந்து, கடைசி விநாடியில் பிரேக் அடிப்பது!

சினிமா ஸ்டண்ட்.

சுவாரசியமான கான்செப்ட்.

இன்ஸ்டாகிராமில் குறைந்தது ஒரு லட்சம் லைக்குகள் தேறும்.

கடைசி விநாடியில் ரிதன் பைக்கிலிருந்து எகிறிக் குதிக்கிறான்.

துரதிர்ஷ்டவசமாக, அதே மில்லி செகண்டில் எதிரே ஒரு அரசுப் பேருந்து வந்துவிட்டது.

ரீடேக் இல்லாத நிஜ வாழ்க்கை அது.

அப்புறம் நடந்து எல்லாம் விபரீதம்.

பஸ் சக்கரம்.

ரத்தம்.

ஸ்பாட் அவுட்.

எனக்குத் தெரிந்து மனித குல வரலாற்றிலேயே, மற்றவன் நம்மைக் கைதட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத் தன் உயிரைப் பணயம் வைக்கும் ஒரே ஜீவன் மனிதன் மட்டும்தான்.

ஒரு நாயோ, பூனையோ அப்படிச் செய்வதில்லை.

ஒரு தெரு நாய் இன்னொரு நாயைப் பார்த்து, "மச்சான், நான் இந்த ஓடும் லாரிக்கு அடியில பூந்து வாரேன், நீ வீடியோ எடு, டிக்டாக்ல போடலாம்" என்று சொல்வதில்லை. அதற்கு மூளை குறைவு; ஆனால் பிழைத்துக் கொள்ளும் அறிவு அதிகம்.

மனிதனுக்குதான் மூளை அதிகம்; இதுபோன்ற விசயங்களைக் கேள்விபடுகையில் அறிவு கம்மிதான் என்று தோன்றுகிறது.

இன்றைய பதின்ம வயதுச் சிறுவர்களின் உலகம் ரொம்பவே விசித்திரமானது. அவர்களுக்கு பேஸ்புக் என்பது பாட்டி காலத்து மேட்டர். இன்ஸ்டாகிராமும், டிக்டாக்கும்தான் வாழ்க்கை. அதில் வரும் 15 செகண்ட் வீடியோவில் கிடைக்கிற அந்த டிஜிட்டல் கைதட்டல் இருக்கிறதே, அது ஒருவிதமான போதை.

வியூஸ் கவுண்ட் ஏறும். அந்த எண்கள் தரும் கிளர்ச்சிக்கு முன்னால், மரணம் கூட ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

டெக்னாலஜி வளர்கிறது. 5G வந்துவிட்டது. ஆனால், அதைப் பயன்படுத்தும் மனிதனின் பக்குவம் 1G அளவிலேயே நிற்கிறது. கேமரா கைக்கு வந்துவிட்டதால் எல்லோரும் ஸ்பீல்பெர்க் ஆகிவிட முடியாது என்பதுதான் ஏற்றுக்கொள்ள இயலாத கசப்பான எதார்த்தம்.

பாவம், அந்தப் பஸ் டிரைவர். ஏதோ வேலையை முடித்துவிட்டு மனைவியைப் பார்க்க, பிள்ளைகளைப் பார்க்க வீட்டுக்குக் கிளம்பியிருப்பார். வழியில் யாரோ ஒரு சிறுவன் லைக்குகளுக்காகத் தன் பஸ் சக்கரத்தின் கீழ் வந்து விழுவான் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இப்போது அவர் போலீஸ் கேஸ், கோர்ட், கேஸ் என்று அவர் அலைந்து கொண்டிருப்பார்.

விசயம் அத்தோடு முடியவில்லை. ரிதனின் பெற்றோருக்கு யார் பதில் சொல்வது? ஐந்து நொடிக் கைதட்டலுக்காகத் தன் பதினாறு வருட உழைப்பையும், கனவையும் ரோட்டில் வீசிவிட்டுப் போய்விட்டான் மகன். லைக்குகளின் விலை 16 வருடங்கள்தான் போலும்.

ஸ்மார்ட்போன் கையிலிருக்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் ஒன்று புரிய வேண்டும்:

திரையில் தெரியும் லைக்குகள் எல்லாமே வெறும் பிக்சல்கள். ஆனால், ரோட்டில் வருவது உண்மை பஸ்!

*****