Showing posts with label Positive Virus. Show all posts
Showing posts with label Positive Virus. Show all posts

Friday, 3 April 2026

போராட்ட உணர்வு – ஒரு பாசிட்டிவ் வைரஸ்

போராட்ட உணர்வு – ஒரு பாசிட்டிவ் வைரஸ்

சிஸ்டத்தோடு சண்டை போடுவது ஆபத்தானது. பெரும்பாலானவர்கள் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய்விடுவார்கள். ஆனால், ஒரு சிலருக்கு மட்டும் முதுகுத்தண்டு நேராகவே இருக்கும். வளைக்க முடியாது. அவர்கள் வரலாற்றையே மாற்றியிருக்கிறார்கள், மிகப்பெரிய நீதியைச் சமூகத்திற்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிக் கொஞ்சம் காண்போமே.

ரோசா பார்க்ஸ் ஓர் அமெரிக்கக் கறுப்பினப் பெண்மணி.

டிசம்பர் 1, 1955 இல் அலபாமா மாநிலத்தில், மாண்ட்கோமரி நகரத்தில், பஸ்ஸில் பயணித்தக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு வெள்ளையினப் பயணியின் கட்டளைக்கு இணங்க தனது இடத்தை விட்டுக்கொடுக்க மறுத்ததற்காக, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான மாண்ட்கோமெரி பேருந்து புறக்கணிப்பு போராட்டத்தைத் தூண்டியது.

அடுத்த நாளே 40,000 பேர் பஸ்ஸைப் புறக்கணித்தார்கள். ஒரு தனி மனிதனின் நோ, ஒரு தேசத்தின் சட்டத்தையே மாற்றியது.

இது அந்நாட்டின் குடிமை உரிமைகள் இயக்கத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.

இவரை அமெரிக்க நாடாளுமன்றம் நவீன கால குடிமை உரிமைகள் இயக்கத்தின் தாய் என்று போற்றுகிறது.

அந்த கறுப்பினப் பெண் சீட்டை விட்டு எழ மறுத்தபோது, அது வெறும் ஒரு பயணச் சீட்டு விவகாரமல்ல. டிரைவர் சீட்டை விட்டு எழுமாறு கத்தியபோது, "ஒரு குளிர்காலப் போர்வை என்னைப் போர்த்தியது போல ஒரு உறுதி உடல் முழுக்கப் பரவியது" என்றார் ரோசா.

ரோசா பார்க்ஸின் போராட்டம் திரைப்படமாகவும் வெளிவந்து பல விருதுகளைப் பெற்றது.

அவரது உறுதிக்கும் போராட்ட உணர்வுக்கும் கிடைத்த வெற்றிதான் கறுப்பினத்தவரும் சமமாகப் பேருந்தில் பயணிப்பதற்கான சட்டமாக உருவெடுத்தது.

*

பிராங்க் செர்பிகோ அமெரிக்காவின் நியூயார்க் நகர காவலர்.

நியூயார்க் போலீஸ் டிபார்ட்மென்டில் அப்போது லஞ்சம் என்பது அங்கே காபி குடிப்பது போலச் சகஜம்.

பிராங்க் செர்பிகோ அதைத் தட்டிக்கேட்டார்.

தனது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், 1970 இல் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்குத் தகவல்களை அளித்தார். இது அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, அப்போதைய மேயர் ஜான் வி. லிண்ட்சே, காவல்துறை ஊழலை விசாரிக்க நாப் கமிஷன் என்ற விசாரணைக் குழுவை அமைத்தார்.

விளைவு?

ஒரு ரெய்டு நடக்கும்போது சக போலீஸ்காரர்களே இவரைத் தனியே விட்டுவிட்டு ஓட, முகம் சிதைக்கப்படும் அளவுக்குச் சுடப்பட்டார்.

ஆனால், அவர் மடியவில்லை.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, 1972 இல் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குத் தைரியத்திற்கான மிக உயரிய விருதான மெடல் ஆப் ஹானர் வழங்கப்பட்டது.

பிராங் செர்பிகோவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாகவும், பின்னர் 1973 இல் செர்பிகோ என்ற பெயரில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் புகழ்பெற்ற நடிகர் அல் பசினோ செர்பிகோவாக நடித்திருந்தார்.

"நேர்மையின் விலை அதிகம் தான், ஆனால் சுயமரியாதையை விட அது பெரியதல்ல" - இது செர்பிகோ சொன்னது.

உண்மைதான். அவர் காட்டிய நேர்மைதான், அந்த நேர்மைக்காக அவர் முன்னெடுத்த போராட்ட உணர்வுதான் காவல்துறையையே சுத்தம் செய்தது.

*

லில்லி லெட்பெட்டர் ஓர் அமெரிக்க பெண்மணி.

குட் இயர் டயர் கம்பெனியில் 19 வருடம் வேலை பார்த்தார்.

1998 இல் அவர் ஓய்வுபெற்ற போது, யாரோ கொடுத்த அனானிமஸ் லெட்டரில் தெரிந்த விஷயம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. விசயம் இதுதான். அவரை விட ஆண்களுக்குச் சம்பளம் அதிகம்.

லில்லி விடவில்லை. கேஸ் போட்டார். சுப்ரீம் கோர்ட் வரை போனார்.

ஊதியப் பாகுபாடு தொடங்கிய 180 நாட்களுக்குள் புகார் அளித்திருக்க வேண்டும் என்பதால், காலம் கடந்துவிட்டது என்று கேஸ் தள்ளுபடி ஆனது.

ஆனால் லில்லி விடவில்லை. சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பளித்த பின்னரும், அதற்கு எதிராகப் போராடினார்.

இதன் விளைவாக, அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது.

சட்டத்தின் பெயர், லில்லி லெட்பெட்டர் நியாயமான ஊதியச் சட்டம். அவர் பெயரிலேயே சட்டம்.  

2009 இல் பராக் ஒபாமா அதிபராகி கையெழுத்திட்ட முதல் சட்டமே இதுதான்.

இச்சட்டத்தின் மூலம் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டவர் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் எனச் சட்டமே திருத்தப்பட்டது.

தொடர்ச்சியான போராட்டத்தால் சட்டத்தையே மாற்றியமைக்க முடியும் என்பதை நிரூபித்தார் லில்லி. அவர் பெயரில் அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

அந்தப் போராட்ட உண்ரவு மட்டும் லில்லிக்கு இல்லாமல் போயிருந்தால் ஊதிய முரண்பாடு என்பது வரலாற்றில் மாற்ற முடியாத நிலைப்பாடாகவே ஆகியிருக்கும்.

*

எரின் ப்ரோகோவிச் என்ற அமெரிக்கப் பெண்மணி ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர்.

இவருக்குப் பின்னால் பெரிய வக்கீல் பட்டமெல்லாம் கிடையாது. ஒரு சாதாரண கிளர்க்.

கலிபோர்னியாவில் பிஜி அன்ட் ஈ நிறுவனம் குடிநீரில் ஹெக்ஸாவலன்ட் குரோமியம் என்கிற புற்றுநோய் காரணியைக் கலந்துவிட்டுப் பொய் சொல்வதைக் கண்டுபிடித்தார்.

கெமிக்கல் எக்ஸ்போஷரால் இவரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் விடவில்லை. வீடு வீடாகச் சென்று பிஜி அன்ட் ஈ நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஆதாரங்களைத் திரட்டினார்.

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில், பிஜி அன்ட் ஈ நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 333 மில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

333 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு என்பது அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு தனிப்பட்ட வழக்கிற்குக் கிடைத்த மிகப்பெரிய இழப்பீடு ஆகும்.

இவரது போராட்டத்தை விளக்கும் வகையில் 2000 ஆம் ஆண்டு அவரது பெயரிலேயே திரைப்படம் வெளியானது. இதில் எரின் கதாபாத்திரத்தில் நடித்த ஜூலியா ராபர்ட்ஸ் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

ஒரு சாமானியர் நினைத்தால் பெரிய நிறுவனத்தையும் ஆட்டிப் படைக்க முடியும் என்பதற்கு எரின் ஓர் உதாரணம். அவரது போராட்ட உணர்வுதான் இன்று உலகெங்கும் இருக்கும் பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆக்ஸிஜனாக இருக்கிறது.

பல நேரங்களில் நீதி என்பது தானாகக் கிடைப்பதில்லை. அதை இப்படிச் சில போராட்டக்காரர்கள் தான் இழுத்துக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். உங்களுக்குத் தேவைப்படுவது பெரிய தகுதிகள் அல்ல, உண்மையை விடாமல் பிடித்துக்கொள்ளும் அந்தப் போராடும் உணர்வுதான். அந்தப் போராட்ட உணர்வுதான் வரலாற்றை மாற்றியமைக்கும் பாசிட்டிவ் வைரஸ்.

*****