Showing posts with label சர்க்குலர் வாக் பினாமினன். Show all posts
Showing posts with label சர்க்குலர் வாக் பினாமினன். Show all posts

Thursday, 17 September 2026

சர்க்குலர் வாக் பினாமினன்

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 87

சர்க்குலர் வாக் பினாமினன்

அநாதையாகக் கிடந்த கேமராவை ஜெயந்தி கண்டெடுக்க, அது இப்போது மன்னார்குடி தமிழரசன் வீட்டு மேஜையில் இருந்தது. அருகில் சௌமியா லேப்டாப்பில் அந்த வீடியோவை மெல்ல ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.

"இதுக்கும் அந்தப் பங்களா பழங்கதைக்கும் சம்பந்தமில்லை. மூணு பேருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல. காட்டை விட்டு வெளியே வர வழியைக் கண்டுபிடிக்க முடியாம சுத்திட்டிருக்காங்க. சயின்டிபிக்கா பார்த்தா இது சிம்பிள் சர்க்குலர் வாக் பினாமினன்" என்றாள் சௌமியா. இருவருக்கும் தங்கள் கணவர்களை இரண்டு நாட்களாகக் காணாமல் பரிதவிப்பு இருந்தாலும் அறிவியல் பூர்வமாக ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜெயந்தி புரியாமல் பார்த்தாள். "என்னப்பா சௌமி! நீ சொல்ல வர்ற?"

"மனித உடற்கூறு படி, நம்மோட ரெண்டு கால்களும் ஒரே நீளத்துல இருக்காது. ஒரு கால் இன்னொரு காலைவிட மிகச் சிறிய அளவு பலம் குறைவாவோ அல்லது நீளம் மாறியோ இருக்கும். காடோ, இருட்டோ இருக்கும்போது கண்களுக்குக் காட்சியின் ஆழம் தெரியாது. திசைக் காட்டி இல்லாம நாம நடக்க ஆரம்பிச்சா, நேரா போறதா நினைச்சுக்கிட்டு ஒரு பெரிய வட்டமடிச்சு, கடைசியில ஆரம்பிச்ச இடத்துக்கே வந்து சேருவோம். இதுக்கு சயின்ஸ்ல பேன்தோம் பாத்ன்னு பேரு. நாம் ஒரு நாள் அல்லது ரெண்டு நாள் வெயிட் பண்ணா போதும். அவங்களாவே வந்துடுவாங்க. இல்ல அவங்கள தேடிப் போயிருக்கிற நம்ம ஆளுங்க அவங்கள கண்டுபிடிச்சிடுவாங்க."

மூன்று நாட்களுக்குப் பிறகு அபிவிருத்தீஸ்வர மலையின் அடிவாரத்தில் உள்ள கருப்பசாமி காட்டில் தமிழரசனும் கணேசும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். ஆனால், கோவிந்த் மட்டும் கிடைக்கவில்லை.

மருத்துவமனையில் கண் விழித்த தமிழரசன் நடந்ததை விவரித்தான்.

"நாங்க எந்தப் பேயையும் பார்க்கலை. எல்லாமே எங்க பிரைன் பண்ண ட்ரிக்தான். கோவிந்த் அந்தப் பங்களாவுக்குப் போனப்பவே அவனுக்கு அந்த இடத்தோட வளிமண்டல அழுத்தம் காரணமா ஒரு மைல்ட் ஹாலுசினேஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சு. அந்தப் பழமையான கான்கிரீட் பங்களாவுக்குள்ள இருக்கிற காந்தப்புல மாற்றம்  மூளையோட டெம்போரல் லோப்பைத் தாக்கியிருக்கு."

கணேஷ் தொடர்ந்தான், "ஆமாம். சயின்டிஸ்ட் மைக்கேல் பெர்சிங்கர் கண்டுபிடிச்ச காட் ஹெல்மெட் எபெக்ட் மாதிரி அது. காந்த அலைகள் மாறும்போது மூளைக்குள் இருக்கிற நியூரான்கள் தப்பாகச் செயல்பட்டு, பக்கத்துல யாரோ நிக்கிற மாதிரி, யாரோ கூப்பிடுற மாதிரி ஒரு பிரம்மையை உருவாக்கும். நாங்க கேமராவில் லைவ் பண்றோம்னு நினைச்சுக்கிட்டு, லேப்டாப் பேட்டரி தீர்ந்ததும் ஒட்டுமொத்தமா பேனிக் ஆயிட்டோம்."

"அப்போ கோவிந்த் எங்க?" ஜெயந்தியும் சௌமியாவும் சந்தேகமாகக் கேட்டனர்.

தமிழரசன் பெருமூச்சு விட்டான். "அவன் பேய்க்குப் பயந்து ஓடும்போது, அந்த அபிவிருத்தீஸ்வர மலையோட மலைக்கிராமத்துல எங்கேயாவது போயிருக்கணும்."

*

அபிவிருத்தீஸ்வர மலையின் காற்று வழக்கம்போல மெல்ல வீசியது. கோவிந்தின் உடல் புதுத்தெம்போடு இன்னும் நான்கு மலை ஏறும் அளவுக்கு தயாராக இருந்தது. அதற்குக் காரணம் மலைவாழ் மக்கள் மாப்பிள்ளை சம்பாவில் செய்து தந்த அவல் பாயாசமும், கருப்புக்கவுணியில் செய்து தந்த சர்க்கரைப் பொங்கலும், சிறுதானியங்களில் செய்து தந்த விதவிதமான தின்பண்டங்களும்தான். அவற்றின் சுவையை மறக்க முடியாமல் அங்கேயே தங்கி விட நினைத்த கோவிந்தை, அடுத்த இரண்டு நாட்களில் ஜீப்பில் கிளம்பிப் போய் தமிழரசனும் கணேசும் பிடித்துக் கொண்டு வந்தனர்.

"அடப் பாவி! இப்படியா நாக்கு ருசிக்கு மயங்கி அங்கேயே இருப்பே. நீ மட்டும் வந்து மூஞ்சியைக் காட்டலன்னா அமானுஷ்யம் உண்மையாகிடாதா?" தமிழரசன் செல்லமாகக் கண்டித்தான்.

"நம்ம மனுஷங்களோட வாழ்றதுக்கு, அந்த மலைவாழ் மக்களோட வாழலாம் தெரியுமா? கொஞ்சம் கூட கள்ளம் கபடம் இல்ல. அப்புறம் சாயுங்காலம் ஆனா போதும் விதவிதமான தின்பண்டங்கள், ஆட்டம், பாட்டம். அதெ என்னால விட முடியாது. நீங்க அனுமானுஷ்யம் இல்லன்னு நிரூபிங்க, இல்ல நிரூபிக்காம போங்க. ஆளை விடுங்கடா சாமி." என்றபடி எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்று கொண்டிருந்த ஜீப்பிலிருந்து குதித்து, பத்து பதினைந்து டைவ் அடித்து, பேய் பிடித்தவன் போல மலைக்கிராமத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான் கோவிந்த்.

-           அட்ரஸைத் தேடுவோம்!

*****