அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 74
கேஸ் ட்ரபுள்
"தமிழ்!
டேய் தமிழ்! கண்ணைத் திற தமிழ்!"
யாரோ
அவனது கன்னத்தில் தட்டுவது உணர்ந்து தமிழரசன் மெதுவாகக் கண் விழித்தான்.
மருதவனப்
பங்களாவின் கதவுகள் அகலத் திறக்கப்பட்டிருந்தன. உள்ளே வெளிச்சமும் புத்தம் புதிய காற்றும்
வீசின. அவனருகே கோவிந்தும், திருவாரூர் மாவட்டத்தின் டெக்னிக்கல் ஜாம்பவான் ஆசிரியர்
கணேசும் நின்று கொண்டிருந்தார்கள்.
"கோவிந்த்!
நான் நான் உயிரோட இருக்கேனா?" தமிழரசன் தன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். ஆப்பிள்
வாட்ச் இயல்பாக இதயத் துடிப்பின் அளவை 82 என்று காட்டியது.
"நீ
உயிரோடதான் இருக்கே தமிழ்! நான் காரை ஸ்டார்ட் பண்ணிட்டு போகும்போதுதான் கவனிச்சேன்.
இந்த பங்களாவோட காற்றோட்ட அமைப்பைப் பத்தி யோசிச்சப்போ எனக்கு பொறி தட்டிச்சு. உடனே
விஜயராமனுக்குப் போன் பண்ணி, விஜயராமன் மூலமா கணேஷைக் கான்டாக்ட் பண்ணிக் கூட்டிட்டுத்
திரும்ப வந்தேன். நல்லவேளை, நீ மயக்கத்துலதான் இருந்தே!" என்றான் கோவிந்த்.
கணேஷ்
தன் கையில் இருந்த கேஸ் டிடெக்டர் கருவிக் காட்டிய அளவீடுகளைத் தமிழரசனிடம் காண்பித்தான்.
"தமிழ்,
நீ பயந்தது பேயைப் பார்த்து இல்லை. கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசிச்சதால!
மருதவனத்தில் நேற்று பெய்த மழையால், இந்த 80 வருட பழைய பங்களாவின் அடியில் மக்கிக்கொண்டிருந்த
மரக் கழிவுகளில் இருந்து நச்சு வாயு வெளியாகியிருக்கு. ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால்
அறை முழுவதும் கார்பன் மோனாக்சைடு நிரம்பியிருக்கிறது. இந்த வாயுவை சுவாசித்தால் மூளைக்குச்
செல்லும் ஆக்ஸிஜன் குறையும். அதனால் கடுமையான மனப்பிராந்தி, பிரமை, நெஞ்சு அடைப்பு
மற்றும் சுயநினைவிழப்பு ஏற்படும். இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சதுதான். இருந்தாலும் இதெல்லாம்
உனக்கே நடக்கும் போது கொஞ்சம் தடுமாறிப் போயிட்டே. மொபைல் திரையில் எழுத்துக்கள் தெரிந்தது
எல்லாமே உன் மூளை உருவாக்கிய பிரமை!"
"அந்தக்
கடிகாரம் அடித்ததற்கும், பித்தளைத் தட்டு விழுந்ததற்கும் காரணம் புரியலையே!" என்றான்
தமிழரசன்.
"நேற்று
வீசிய காற்றால் உருவான காற்றழுத்த மாறுபாடு, நிலத்தடிப் பாறைகளில் ஏற்பட்ட சிறிய பைசோ
எலெக்ட்ரிக் அதிர்வுகள்தான் அதுக்குக் காரணம். கடிகாரத்தின் பெண்டுலத்தை அந்த அதிர்வுதான்
ஆட வைத்திருக்கிறது."
தமிழரசன்
மெதுவாக எழுந்து உட்கார்ந்தான். காபி ப்ளாஸ்க்கைத் திறந்து கோவிந்த் அவனுக்குச் சூடான
காபியைக் கொடுத்தான்.
"அப்போ
பயமும், கார்பன் மோனாக்சைடும் சேர்ந்து என் மூளையை வச்சு ஒரு த்ரில்லர் படமே ஓட்டியிருக்கு!"
தமிழரசன் சிரித்தான்.
"எக்ஸாக்ட்லி!"
என்றான் கோவிந்த்.
"மனித
மூளைங்கிறது உலகத்திலேயே மிகச் சிறந்த கற்பனை மெஷின். அதுக்குக் கொஞ்சம் பயத்தையும்,
கொஞ்சம் ஆக்ஸிஜன் குறைபாட்டையும் கொடுத்தா போதும். இல்லாத பேயைக் கூடக் கண்ணு முன்னாடி
கொண்டு வந்து நிறுத்திடும்!" என்று சிரித்தான் கணேஷ்.
"அது
சரி! இந்தப் பங்களாவை ஏன் விக்கணும்? பேய் பங்களான்னு போர்டு மாட்டி பார்க்க வர்றவங்ககிட்டெ
பைசா வசூலிச்சா பிசினஸ் பிய்ச்சுக்கிட்டுப் போகாதா?" என்று கோவிந்த் தனது பிசினஸ்
மூளையைக் காட்டினான்.
"பேய்
இல்லை, பிசாசு இல்லை, பூதம் இல்லைன்னு சொல்ற நாமளே இப்படி ஒரு பிசினஸ் பண்ணா நல்லவா
இருக்கும்?" என்றான் தமிழரசன்.
"அதுக்கில்லப்பா!
நம்மோட ரியல் எஸ்டெட் பிசினஸ் இப்போ கொஞ்சம் டல்லா இருக்கு. அதான் இப்படி மாறிடலாம்ன்னு
ஒரு ரூட் போட்டேன்." என்று கோவிந்த் சொல்ல, "இந்த ரூட்டையெல்லாம் பாரின்ல
எப்பவோ போட்டுட்டானுங்க. அதோட அடுத்த சாப்டரில் அதைப் பத்திதான் விஜயராமன் எழுதப் போறான்.
படிச்சுப் பார்த்துத் தெரிஞ்சுக்கோ கோவிந்த்!" என்றான் கணேஷ்.
"பாரின்ல
எல்லாம் பண்ண முடியுது. இங்கத்தான் பண்ண முடியல. அதுக்குக் காரணமே நீங்கதான். நீங்க
கொடுக்குற அவர்னெஸ்ல இனிமே ஒருத்தனுக்கும் பேய், பிசாசு பயமே இருக்காது போல இருக்கு!"
என்று கோவிந்த சொல்ல, இப்போது மூவரும் சிரித்தபடியே மருதவனத்துப் பங்களாவை விட்டு வெளியேறினார்கள்.
காலை வெயில் அவர்கள் மேல் கதகதப்பாக விழுந்தது.
-
அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment