அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 71
பேட்டரி கழன்ற பிசாசு
மொபைல் போனின் திரையிலும், தலை திருப்பிய பொம்மையின் பிளாஸ்டிக்
கண்களிலும் பிரதிபலித்த அந்த நொடிக் கண பயம், தமிழரசனின் மூளையில் இருந்த அமிக்டாலா
பகுதியைச் சுண்டி இழுத்தது.
ஆனால் அடுத்த ஐந்தாவது விநாடி, தமிழரசன் தன் மூச்சைச் சீராக்கிக்
கொண்டான். சிந்திக்கும் பகுதி விழித்துக் கொண்டது.
தமிழரசன் தரையில் கிடந்த எமர்ஜென்ஸி லைட்டை எடுத்து, அதன் உடைந்த
பாகங்களைப் பொருத்தி மீண்டும் பொம்மையின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சினான்.
"தமிழரசன்! வேணாம்டா! ஓடிடலாம்!" கோவிந்த் கதவின்
பிடிமானத்தை இறுக்கமாகப் பிடித்தபடி கத்தினான்.
"நில்லு கோவிந்த்! அறிவியல் ஒருபோதும் தோற்காது. நாம தோற்கிற
மாதிரி தோன்றும் போது, அங்கே ஏதோ ஒரு விஷயம் விடுபட்டுருக்குன்னு அர்த்தம்."
தமிழரசன் மெதுவாக முன்னேறி, நாற்காலியின் கீழே கிடந்த அந்தப்
பொம்மையைச் சட்டெனக் கையில் எடுத்தான். பொம்மையின் பிளாஸ்டிக் கழுத்துப் பகுதியில்
ஒரு மெல்லிய பிளவு இருந்தது.
"கோவிந்த், லைட்டை போடு. பவர் வந்துடுச்சுல்ல?"
கோவிந்த் நடுங்கும் விரல்களால் சுவிட்சைப் போட்டான். ஹால் வெளிச்சத்தில்
மின்னியது.
தமிழரசன் தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிறிய காந்தப் பேனாவை
எடுத்து, பொம்மையின் நெஞ்சில் வைத்தான். அது டக் என்ற சத்தத்துடன் ஒட்டிக்கொண்டது.
"பாத்தியா கோவிந்த்?" தமிழரசன் புன்னகைத்தான்.
"என்ன தமிழரசன்?"
"தலையை 180 டிகிரி திருப்புறதுக்கு பெரிய பேய் ஒன்னும்
தேவையில்லை. நைட்டினோல்ன்னு ஒரு மெட்டல் இருக்கு. அதை ஷேப் மெமரி அலாய்ன்னு சொல்வாங்க.
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையோ, மின்சாரமோ பாயும்போது அது தன் பழைய வடிவத்துக்குத் திரும்பும்.
இந்த பொம்மையோட கழுத்துக்குள்ள அந்த நைட்டினோல் கம்பிதான் இருக்கு."
"சரி அப்போ அந்த மெசேஜ்? அந்த ஆள் கார் ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்னு
வந்துச்சே?" கோவிந்தின் குரலில் இன்னும் சந்தேகம் தீரவில்லை.
தமிழரசன் தன் போனை எடுத்து, அந்த மெசேஜின் ஹெட்டர் டேட்டாவை
ஸ்கேன் செய்யும் ஆப்சனைத் திறந்தான்.
"இது ஷேட்யூல்ட் எஸ்.எம்.எஸ். 5ஜி ரிமோட் சிப் வச்ச அதே
ஆள், தன் போன்ல இருந்து ஒரு வாரத்துக்கு முன்னாடியே இந்த மெசேஜை இன்னைக்கு இரவு
1:16க்கு வர்ற மாதிரி ஆட்டோ செட் பண்ணி வச்சிருக்கான்!"
"அப்போ அந்த ஆள் இறந்தது உண்மையா?"
"உண்மைதான். ஆனா அவன் இறந்ததும், இந்த மெசேஜ் வந்ததும்
வெறும் தற்செயல் நிகழ்வு! அவன் உயிரோட இருந்திருந்தா, அடுத்த வாரம் உன்கிட்ட இருந்து
லட்சக்கணக்குல பணத்தைப் பறிக்க திட்டமிட்டிருப்பான். அவன் செத்துப் போனதால, அவன் செட்
பண்ணின ஷெட்யூல்டு மெசேஜ் மட்டும் கரெக்டா ஒர்க் ஆகிருக்கு. அவ்வளவுதான்!"
கோவிந்த் நீண்ட பெருமூச்சு விட்டான். "அப்போ பொம்மைக்குள்ள
பேய் இல்லையா?"
"பேய் இருக்கு கோவிந்த்! ஆனா அது பொம்மைக்குள்ள இல்ல,
உன்னோட மனசுல இருக்கிற பயத்துக்குள்ளதான் இருக்கு!"
தமிழரசன் பொம்மையின் பேட்டரியைக் கழற்றி எறிந்துவிட்டு, கோவிந்தைப்
பார்த்துச் சிரிக்கத் தொடங்கினான்.
"என்னங்கடா இது? எப்ப பார்த்தாலும் ஆவி ஆராய்ச்சி பண்றேன்னு
ராத்திரியில மனுஷர தூங்க விடாம இதே வேலையாப் போச்சு!" என்று ஜெயந்தி தூக்கம் கலைந்த
எரிச்சலில், அறைக் கதவைத் திறந்து கொண்டு, கையில் விளக்குமாற்றுடன் வெளியே வர, தமிழரசனும்
கோவிந்தும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஹால் கதவைத் திறந்து கொண்டு அந்த நடுராத்திரியில்
வெளியே ஓட தயாராயினர்.
- அட்ரஸைத் தேடுவோம்!
*****

No comments:
Post a Comment