Showing posts with label வகுப்பறை சியர்ஸ். Show all posts
Showing posts with label வகுப்பறை சியர்ஸ். Show all posts

Thursday, 13 August 2026

வகுப்பறை சியர்ஸ்!

வகுப்பறை சியர்ஸ்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளி. சாதாரண பள்ளிக்கூடம் அல்ல; நீட், கியூட், ஜே.இ.இ போன்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும் பெரிய போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும் அறிவு ஆலயம்!

அங்கே வழக்கம் போல சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மாணவர்கள் அனைவரும் மூளையைக் கசக்கிப் படித்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுள்ளனர்.

ஆனால், ஒரு சில மாணவிகளுக்கு மட்டும், "படிப்பை முடித்தவுடன் உடனே வீட்டிற்குச் சென்றால் என்ன சுவாரசியம்?" என்று தோன்றியிருக்கிறது போல!

வகுப்பறை காலியானதும், "சரி, வாருங்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்வோம்" என்று திட்டம் தீட்டியுள்ளனர்.

வெளியிலிருந்து சூடான அசைவ உணவுப் பார்சல்.

கூடவே, டாஸ்மாக் கடையில் இருந்து ஒரு நண்பர் அன்பாக வாங்கிவந்து கொடுத்த சிறப்பு பானம்!

வகுப்பறையே உணவகமாகவும், மேஜைகளே பார் ஆகவும் மாறியுள்ளன.

"நாம் செய்வதை யார் பார்க்கப்போகிறார்கள்?" என்று நினைக்கும் காலமெல்லாம் மலையேறிவிட்டது.

அங்கு இருந்த ஒரு சக மாணவி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைத் தனது கைபேசியில் காணொளி எடுத்துவிட்டார்.

அந்தக் காணொளியில்,

மது பாட்டில்களை நண்பர் டாஸ்மாக் கடையிலிருந்து வாங்கித் தந்தது பற்றிய சுவாரசிய உரையாடல்கள்,

உணவைச் சுவைத்துக்கொண்டே கெத்தாகப் பருகும் காட்சிகள்

அவ்வளவுதான்!

அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி, காட்டுத்தீயை விட வேகமாகப் பரவத் தொடங்கிவிட்டது.

ஊர் மக்கள் அனைவரும், "அடடா, போட்டித் தேர்வுக்குப் படிக்கும் வயதில் என்ன மாதிரியான பயிற்சி நடக்கிறது பாருங்கள்!" என்று கொதிப்படைந்துவிட்டனர்.

காட்டுத்தீ அத்தோடு நிற்கவில்லை.

மாவட்ட ஆட்சியர் வரை போய் விட்டது.

விசாரணை தீவிரமடைந்தது. 

அடுத்த கணமே, பள்ளியின் தலைமை ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியருக்குத் தண்டனை! பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோருக்குக் கவலை! ஆனால், எல்லாவற்றிற்கும் நடுவில், டாஸ்மாக் பணப்பெட்டி மட்டும் எப்போதும் போல கலகலவென்றுதான் இருக்கிறது!

வாழ்க்கையில் எந்தக் கதவை நோக்கி ஓட வேண்டும் என்று பயிற்சி கொடுக்கும் இடத்தில், டாஸ்மாக் கதவை நோக்கி ஓடும் புத்தி வந்தது உண்மையிலேயே வேதனைக்குரியதுதான்.

ஜே.இ.இ தேர்வில் வெற்றிபெற பிசிக்ஸில் திரவ இயக்கவியல், கெமிஸ்ட்ரியில் கரைசல்கள் பற்றிப் படிக்க வேண்டும் என்பார்கள்.

அந்த மாணவிகள் அதைத் தியரியாகப் படிக்காமல், ப்ராக்டிகலாக செய்து பார்த்திருக்கிறார்கள். பாவம் தலைமையாசிரியர் அதனால் காரண காரியத் தொடர்பு  தெரியாமல் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார்.

மாணவிகளுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ளலாம்: நுழைவுத் தேர்வில் பாஸ் செய்வதை விட, வாழ்க்கை எனும் தேர்வில் லிவர் கெடாமல் பாஸ் செய்வது முக்கியம்.

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவிகள், வாழ்க்கைப் போட்டியில் தோற்றுவிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் ஒரே ஆதங்கம்!

*****