Showing posts with label The period of Tolkappiyam!. Show all posts
Showing posts with label The period of Tolkappiyam!. Show all posts

Monday, 2 June 2025

தொல்காப்பியத்தின் காலம்!

தொல்காப்பியத்தின் காலம்!

கிடைத்துள்ள தமிழ் இலக்கண நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். நூலின் பெயரால் நூலாசிரியரின் பெயர் வழங்கப்படுவதும் இந்நூலுக்கு உரிய சிறப்பாகும்.

தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் நிலம்தரு திருவின் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார். அவ்வவையின் அவைத்தலைவராக இருந்தவர் அதங்கோட்டாசான் ஆவார்.

தொல்காப்பியம் இயற்றப்பட்டு அரங்கேற்றப்பட்ட காலம் குறித்த தமிழறிஞர்களின் கருத்துகளை இங்கு ஆராய்வோம்.

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இன்றே

எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே”

என்கிற பன்னிருப்படலப் பாயிரத்தின்படி இலக்கிய நூல்கள் பல தோன்றிய பிறகே இலக்கண நூல்கள் தோன்ற இயலும் என்பதால், தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.

தொல்காப்பியத்திற்கு முன்னர் அகத்தியம் எனும் தமிழ் இலக்கண நூல் இருந்துள்ளது.

“ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்

அருந்தவ முனிவன் ஆக்கிய முதல் நூல்”

எனும் பன்னிருப்படலப் பாயிரத்தின் வரிகள் தொல்காப்பியத்திற்கு முன்பு அகத்தியம் எனும் இலக்கண நூல் இருந்ததைக் காட்டுகின்றன. அத்துடன் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்கிற கருத்தும் உண்டு.

இராமாயணத்தில் கம்பர் குறிப்பிடும் “தென்தமிழ் நாட்டகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்” எனும் செய்தியும், அகத்திய முனிவரின் தமிழ்ச் சங்கம் குறித்து வால்மீகி ராமாயணத்தில் இடம் பெறும் செய்தியும் அகத்தியம் இருந்ததற்கான உண்மைக்கு மேலும் சான்றுகள் பகர்வதாக உள்ளன.

சிவபெருமான் தமிழை அகத்தியருக்கும், வடமொழியைப் பாணினிக்கும் அருளியதாக வழங்கப்படும் தொன்ம வழக்கும் உண்டு.

சங்கக் காலத்தில் எழுந்த நூலே தொல்காப்பியம். அது எச்சங்கக் காலம் என்பதே இங்கு விடை காணப்பட வேண்டிய கேள்வியாகும்.

மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக இறையனார் களவியல் உரை குறிப்பிடுகிறது. முதல் சங்கம் தென்மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச்சங்கம் மதுரையிலும் விளங்கின. இவற்றுள் முதலிரண்டு சங்கங்கள் கடற்கோளினால் அழிந்து போயின.

முதல் சங்கக் காலத்தில் அகத்தியம் தோன்றியது என்றும் இடைச்சங்கக் காலத்தில் தொல்காப்பியம் தோன்றியதென்றும் தமிழறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் குறிப்பிடுவதற்குச் சான்றாகக் கடைச்சங்க நூல்களான சங்க இலக்கியங்கள் அமைகின்றன.

தொல்காப்பிய காலத்தில் சகரம் மற்றும் யகரம் மொழி முதல் வராது என வழக்குகள் இருந்தன.

கடைச் சங்க காலத்து நூல்களாகக் குறிப்பிடப்படும் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டில் சடை, சமம், சகடம் ஆகிய சொற்களில் சகரம் மொழி முதல் அமைவதைக் காணலாம். யவனர் என்ற சொல்லில் யகரம் மொழி முதல் அமைகிறது.

இவ்விதம் தொல்காப்பிய வழக்குகள் கடைச்சங்க நூல்களான சங்க இலக்கியங்களில் மீறப்பட்டிருப்பதைக் கொண்டு கடைச்சங்கத்துக்கு முந்தைய இடைச்சங்கக் காலத்தில் தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தமிழறிஞர்கள் வருகின்றனர்.

அது மட்டுமல்லாது தொல்காப்பியத்தில் நூறாயிரம் வரையிலான எண்களே உள்ளன. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் கோடி, நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், தாமரை, வெள்ளம் என நூறாயிரத்தைக் கடந்த எண்கள் குறிப்பிடப்படுகின்றன. இதைக் கொண்டும் கடைச்சங்கக் காலத்துக்கு முந்திய இடைச்சங்கக் காலத்து நூலே தொல்காப்பியம் என்ற முடிவைத் தமிழாய்வாளர்கள் எட்டுகின்றனர். அதன்படி இடைச்சங்கக் காலத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டு காலத்தே தொல்காப்பியம் யாக்கப்பட்டுள்ளது என்பது தமிழறிஞர்களின் துணிபாகும்.

*****