Sunday, 12 July 2026

வைல்ட் ஹன்ட் – அந்தக் காலத்து நெட்பிளிக்ஸ் கதை!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 19

வைல்ட் ஹன்ட் – அந்தக் காலத்து நெட்பிளிக்ஸ் கதை!

இடைக்கால ஐரோப்பியர்களின் ஒன் ஆப் தி மோஸ்ட் பேவரிட் பயம் வைல்ட் ஹன்ட். திடீரென்று வானத்தில் ஒரு பேய்க்கூட்டம் வேட்டைக்குக் கிளம்பும். இதற்குப் பின்னால் ஒரு செம மார்க்கெட்டிங் மற்றும் அரசியல் கலந்த பேண்டஸி இருக்கிறது.

இதன் ஒரிஜினல் வெர்ஷன் நார்ஸ் மிதாலஜி. தலைவன் வோடன். இவர்தான் இந்த வேட்டைக்கு கேப்டன். பழைய காலத்து பவர்புல் கடவுள். கையில் ஈட்டி, பறக்கும் குதிரை என்று செம கெத்தாக வலம் வந்தவர்.

காலம் மாறியது. ஐரோப்பாவில் கிறிஸ்தவம் உள்ளே நுழைந்தது. பழைய கடவுள்களை அப்படியே விட்டால் பிசினஸ் ஆகாது என்று நினைத்தார்களோ என்னவோ, இந்த வோடன் கடவுளை ஒரே ராத்திரியில் வில்லனாக, அதாவது பயங்கரமான பேயாக மாற்றிவிட்டார்கள்.

அப்படித்தான் வோடன் வைல்ட் ஹன்டின் தலைவரானார்.

வோடன் தலைமையில் இந்த பேய்க்கூட்டம் சும்மா ஜாலியாக வாக்கிங் போகாது. அதற்கு என்று ஒரு டார்கெட் இருந்தது.

அந்த டார்கெட்தான் பாவம் செய்தவர்களின் ஆன்மாக்கள். "நீ போன வாரம் பக்கத்து வீட்டுக்காரன் கோழியைத் திருடினேதானே?" என்று கணக்குப்பார்த்து தூக்குவார்கள்.

பாவம், பிறந்து சில வாரங்களே ஆன குழந்தைகளுக்குக் கூட இந்த பேய் லிஸ்ட்டில் இடம் உண்டு. கொஞ்சம் ஓவர்தான் என்கிறீர்களா?

அப்புறம் முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், இந்த வேட்டை நடக்கும்போது தப்பித்தவறி யாரும் குறுக்கே போய்விடக் கூடாது. போனால், உங்களையும் ஒரு பேயாக்கி, குதிரையின் பின்னால் கட்டி இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இன்றைய தேதியில் இதைப் படித்தால் உங்களுக்கு சிரிப்பு வரலாம். விஞ்ஞானம் வளராத காலத்தில், ராத்திரியில் அடித்த பலத்த காற்றையும் புயல் சத்தத்தையும் பார்த்து பயந்து, இப்படி ஒரு கதையை பில்டப் செய்திருக்கிறார்கள் என்று ஈஸியாகச் சொல்லிவிடலாம்.

ஆனாலும் யோசித்துப் பாருங்கள். தியேட்டரே இல்லாத அந்தப் பழைய காலத்தில், நடுங்கும் குளிரில், நெருப்புக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, பெரியவர்கள் இந்தக் கதையைச் சொல்லும்போது, கேட்கும் குழந்தைகளுக்கு எப்படி இருந்திருக்கும்? நெட்பிளிக்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸை விட செம த்ரில்லிங்காக இருந்திருக்கும் இல்லையா?

ஏன் இப்படி கதையைக் கிளப்பி விடுகிறார்கள் என்பதுதான் இதில் உள்ள சுவாரசியம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. இரவு நேரத்தில் நெருப்பை மூட்டி, சுற்றியமர்ந்து கதை பேசுவது அவனது மரபணுவிலேயே இருக்கிறது.

அப்படிப் பேசும்போது சும்மா தத்துவம் பேசினால் தூக்கம் வரும். அதனால் கொஞ்சம் பேய், கொஞ்சம் ரத்தம், கொஞ்சம் த்ரில்லர் கலந்து வைல்ட் ஹன்ட் போன்ற கதைகளை உருவாக்கினார்கள். தலைமுறை தலைமுறையாக இந்தத் தகவல்கள் கடத்தப்படும்போது, அதுவே ஒரு கட்டத்தில் உண்மை போன்ற நம்பிக்கையாக மாறி விடுகிறது.

மனித மூளை ஒரு விசித்திரமான மெஷின். அதற்கு காரணம் தெரியாமல் இருக்கவே பிடிக்காது. அறிவியல் வளராத காலத்தில், சுற்றியிருந்த இயற்கை நிகழ்வுகளுக்கு விளக்கம் தேட மனிதன் உருவாக்கிய ஷார்ட் கட்கள்தான் இந்த நம்பிக்கைகள் மற்றும் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட இது போன்ற அமானுஷ்ய கதைகள்.

-  அட்ரஸைத் தேடுவோம்!

*****

No comments:

Post a Comment