Saturday, 4 July 2026

ஏதென்ஸ் நகரின் மிட்நைட் ஸ்பெஷல்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 11

ஏதென்ஸ் நகரின் மிட்நைட் ஸ்பெஷல்!

ஏதென்ஸ் நகரில் ஒரு பங்களா.

டார்க் வெப்பில் வரும் திகில் கதைகள் தோற்றுப்போகும் அளவுக்கு ஒரு மரணக் காம்பினேஷன்.

நடுராத்திரி.

கிறீச்... லொடலொட... என்று சங்கிலி இழுக்கும் சத்தம் கேட்கும்.

லோக்கல் ஏதென்ஸ்வாசிகள் பயந்து நடுங்கி, அந்தப் பக்கமே போவதை நிறுத்திவிட்டார்கள். ரியல் எஸ்டேட் மதிப்பு அதலபாதாளத்துக்குப் போய்விட்டது.

ஆனால், நம்ம தத்துவஞானி அதெனோடோரஸ் கொஞ்சம் வித்தியாசமான ஆள். "பேயாவது, பிசாசாவது... லாஜிக் இடிக்குதே!" என்று கையில் ஒரு விளக்கு, கொஞ்சம் எழுதுவதற்கான மெட்டிரியலுடன் அந்தப் பாழடைந்த வீட்டுக்குள் ஒற்றை ஆளாகக் குடியேறினார்.

மணி 12.00.

சுற்றுப்புறம் நிசப்தமாக இருந்தது. அதெனோடோரஸ் தனது தத்துவக் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென்று சத்தம்.

ஜல்... ஜல்... கரகர...

சத்தம் மெல்ல மெல்ல நெருங்கி, அவர் இருந்த அறைக்குள்ளேயே நுழைந்தது. நிமிர்ந்து பார்த்தார்.

அங்கே ஒரு கெஸ்ட்.

சாதாரண கெஸ்ட் இல்லை; சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு அக்மார்க் எலும்புக்கூடு!

நம்ம ஊர் ஆட்களாக இருந்தால் இந்நேரம் அலறி அடித்துக்கொண்டு ஓடியிருப்பார்கள். ஆனால் அதெனோடோரஸ் கூலாக, "ஒன் மினிட் பாஸ், இந்த சாப்டரை முடிச்சிட்டு வர்றேன்" என்பது போலச் சைகை காட்டிவிட்டுத் தொடர்ந்து எழுதினார்.

என்ன ஒரு நெஞ்சுரம்!

அந்த எலும்புக்கூடு கடுப்பாகி, தன் விரல்களால் சங்கிலியை ஆட்டி சத்தம் போட்டது. மெல்ல எழுந்து நின்ற தத்துவஞானி, விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு, "சரி, என்னதான் விஷயம்? லீட் பண்ணுங்க" என்றார்.

எலும்புக்கூடு முன்னால் நடக்க, அதெனோடோரஸ் பின்னால் போனார்.

வீட்டின் புழக்கடைத் தோட்டத்திற்குச் சென்ற அந்த உருவம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்டு திடீரென கற்பூரமாய் மறைந்தது.

பேய்கள் எங்கே மறைகிறதோ, அங்கே தான் க்ளைமாக்ஸுக்கான க்ளூ இருக்கும்!

அடுத்த நாள் காலை. அதெனோடோரஸ் சும்மா இருக்கவில்லை. லோக்கல் நகராட்சி ஆட்களைக் கூப்பிட்டு, அந்த இடத்தை தோண்டச் சொன்னார்.

அங்கே சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு மனித எலும்புக்கூடு இருந்தது!

யாரோ ஒரு துரதிர்ஷ்டசாலி, முறைப்படி அடக்கம் செய்யப்படாமல், சங்கிலியோடு புதைக்கப்பட்டிருக்கிறான்.

அவனது ஆன்மாதான் நோ அப்ஜெக்‌ஷன் சர்டிபிகேட் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தது.

அதெனோடோரஸ் உடனடியாக அந்த எலும்புகளுக்கு முறைப்படி செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்ய ஏற்பாடு செய்தார்.

மகாத்மாக்கள் முன்னிலையில் ஈமச்சடங்குகள் சுபமாக முடிந்தது.

அவ்வளவுதான்! அன்றோடு அந்த சங்கிலி சத்தமும் நின்றது,

எலும்புக்கூட்டின் விசிட்டிங்கும் நின்றது.

ஆன்மாவுக்கு மோட்சம் கிடைத்து, பேய் நிரந்தரமாக ஏதென்ஸை விட்டு எஸ்கேப்!

ஆசை, கோபம், அல்லது அநீதி என ஏதோ ஓர் அன்பினிஷ்ட் பிசினஸ்தான் மனிதனைப் பேயாக அலைக்கழிக்கிறது. அதைச் சரிசெய்துவிட்டால், பேயும் டாட்டா காட்டிவிட்டு கிளம்பிவிடும் போலிருக்கிறது.

*****

No comments:

Post a Comment