Showing posts with label Do You Know?. Show all posts
Showing posts with label Do You Know?. Show all posts

Saturday, 26 October 2024

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள்!

மனித ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத் தட்டுகள் இருப்பதைக் கேள்விப் பட்டிருப்போம். நோயுற்ற காலத்தில் ரத்தத்தில் கிருமிகள் இருப்பதையும் கேள்விப்பட்டிருப்போம். ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குள் இருப்பதைக் கேள்விபட்டிருக்க மாட்டோம். நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள் செய்த ஆய்வில் மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வடக்கு பசிபிக் கடலில் வாழும் உயிரினங்களில் 18 வகையான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை எரிக்சன் என்பவர் படம் பிடித்துக் காட்டினார்.

சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் பட்டினப்பாக்கத்தில் விற்கப்பட்ட மீன்களில் ஏழு வகையான மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது, எப்படி மைக்ரோ பிளாஸ்டிக்குகள் ரத்தத்தில் காணப்படுகின்றன என்று கேட்கிறீர்களா?

பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விற்கப்படும் குடிநீர், பழச்சாறுகளின் வழியே செல்லும் பாலிஎத்திலீன் டெரிப்தலேட்டுகள்தான் மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக ரத்தத்தில் கலக்கின்றன.

மீன்களின் உடலில் எப்படி மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என்றால் கடலில் கலக்கும் பாலிதீன் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளின் நுண்ணிய சிதைவுகளை உண்ணும் மீன்களின் உடலிலும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் சென்று விடுகின்றன.

இரத்தத்தில் கலக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் ஆபத்து உண்டா என்றால் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?

மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என்ன செய்கின்றன என்றால், சிவப்பணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதைப் பாதிக்கின்றன. அது மட்டுமல்லாமல் ரத்தத்தின் வழியாக நரம்பு, சிறுநீரகம், எலும்பு, குடல் என உடல் உறுப்புகளில் ஒன்று கலந்து பேராபத்துகளை விளைவிக்கின்றன. அவையென்ன பேராபத்துகள் என்றால் புற்றுநோய், ஹார்மோன் பாதிப்பு, மலட்டுத் தன்மை போன்றவையே அத்தகைய பேராபத்துகள்.

மனிதருக்கு மட்டுமில்லாமல் பல்வேறு உயிரினங்களுக்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடு பெருத்த அழிவை உண்டு பண்ணும் என்று எச்சரிக்கப்பட்டு வருகிறது.

2050 ஆம் ஆண்டுக்குள் 99 சதவீத கடல்வாழ்ப் பறவைகள் பிளாஸ்டிக்கை அறியாமல் உண்டு பாதிப்படையும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆண்டிற்கு 10 லட்சம் கடல்வாழ்ப் பறவைகளும், ஒரு லட்சம் கடல்வாழ் உயிரினங்களும் இறந்து போகின்றன.

ஒவ்வோராண்டும் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவானது 800 கோடி கிலோகிராமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தா விட்டால் 2050 இல் கடலில் உள்ள மீன்களின் எடையை விட பிளாஸ்டிக்கின் எடை அதிகமாக இருக்கும்.

ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் போன்ற பனிப்பகுதிகளிலும் மைக்ரோ பிளாஸ்டிக் படிவுகள் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கி விட்டன.

கடல் வாழ் உயிரினங்களில் கலந்து விட்ட மைக்ரோ பிளாஸ்டிக்குகளானது அவற்றை உண்ணும் மனிதர்களின் உடலிலும் கலக்கத் தொடங்கி விட்டன.

மனிதர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே மனிதர்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

*****

Saturday, 12 October 2024

ஏன் கார்ப்பரேட்டுகள் வங்கிகளை நடத்தக் கூடாது?

ஏன் கார்ப்பரேட்டுகள் வங்கிகளை நடத்தக் கூடாது?

ஏன் கார்ப்பரேட்டுகளுக்கு வங்கிகளை நடத்த வங்கி லைசென்ஸ் வழங்கக் கூடாது என்றால், உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் எல்லாம் கார்ப்பரேட்டுகள் நடத்திய வங்கிகளால் ஏற்பட்டவையே. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால்,

1990 இல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடி

1900 – 2000 இல் ஏற்பட்ட லத்தீன் அமெரிக்க மற்றும் ஜப்பான் நிதி நெருக்கடி

2000 இல் ஏற்பட்ட டாட் காம் குமிழி

2007 – 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி

ஆகிய அனைத்தும் கார்ப்பரேட் நடத்திய வங்கிகளால் ஏற்பட்டதே.

இந்தியாவிலும் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்பாக இதே போன்ற கலாச்சாரமே இருந்தது. அதன் பின்னடைவுகளை உணர்ந்தே வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இந்தியாவின் இரும்பு பெண்மணியான முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி செய்த மிகப்பெரிய ஆகப் பெரிய துணிச்சலான நடவடிக்கை இது.

இந்தப் புள்ளி விவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தனியார்கள் வங்கி நடத்திய போது நாடு எப்படி இருந்தது? வங்கிகள் நாட்டுடைமை ஆன பிறகு நாடு எப்படி இருக்கிறது என்பது புரிய வரும்.

1969க்கு முன்பு வரை தனியார் வங்கிகள் நடத்திய போது 64.3 சதவீதம் பெரு நிறுவனங்களுக்கே கடன்கள் வழங்கப்பட்டன. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்பு அது 2020 இல் 31.5 சதவீதமாக உள்ளது. விவசாயக் கடன், தனிநபர் கடன் போன்றவை அதிகரித்துள்ளன.

மேலும் கார்ப்பரேட்டுகள் கைக்கு வங்கிகள் போகும் போது என்ன நடக்கும் தெரியுமா?

கார்ப்பரேட்டுகள் வங்கிகளை நடத்தும் போது சிலர் கைகளில் அரசியல் வலிமையும் பொருளாதார வலிமையும் ஒருங்கே குவியும். இது சர்வாதிகாரத்தை நோக்கிச் செலுத்தும்.

மக்களின் பணத்தைக் கேள்வி கேட்பாரின்றி பயன்படுத்தும் சூழ்நிலை நிலவும்.

இந்தக் கார்ப்பரேட் வங்கிகள் திவாலானால் அவற்றைக் காப்பாற்ற மீண்டும் பொது மக்களின் பணமே பயன்படுத்தப்படும்.

அது மட்டுமா என்ன?

கார்ப்பரேட்டுகள் நடத்தும் வங்கிகளின் உள் செயல்பாடுகளை மதிப்பிடுவது கடினமானது. ஏராளமான துணை நிறுவனங்கோளடு இணைந்திருக்கும் என்பதால் வங்கி விதிமுறைகள் மீறுவதை ரிசர்வ் வங்கியால் கண்காணிப்பது கடினம்.

ஆகவேதான் வங்கிகளை நடத்துவதற்குக் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு போதும் அனுமதி தரக் கூடாது. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளே நல்ல முறை. அதனால்தான் உலகெங்கிலும் வங்கிகளால் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ந்த போதும் இந்தியப் பொருளாதாரம் எவ்வித சரிவையும் சந்திக்கவில்லை. நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் என்பது இந்தியாவிடமிருந்து உலக நாடுகள் கற்றுக் கொண்ட பாடம்.

உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு இந்தியாவே வங்கிகளைக் கார்ப்பரேட்டுகள் கையில் தூக்கிக் கொடுத்து விட முடியுமா என்ன?

*****

Friday, 6 September 2024

பெண்ணும் தாவரமும்!

பெண்ணும் தாவரமும்!

பெண்ணை நிலமாக, ஆறாக பார்க்கும் மரபு நம்முடையது. தாய்நாடு, தாய்மண் என்று செய்யும் சிறப்புகள் பெண்வழிப்பட்டன. ஆறுகளின் பெயர்கள் பலவும் பெண்பாலிலிருந்து எடுத்தாளப்படுகின்றன. காவிரியும் கங்கையும் இப்படித்தான் தாய்மை அடைகின்றன. இயற்கை முழுவதையும் பெண்ணாகக் காணும் வழக்கும் நம்மிடம் உண்டு. இம்மரபும் வழக்கும் பெண்ணுக்கும் தாவரத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை விளக்குகின்றன. பெண்ணோடு தாவரத்தை பல இடங்களில் ஒப்பிடுகிறது தமிழ் இலக்கியம்.

பெண்ணின் கண்ணுக்குக் குவளை,

பெண்ணின் காதுக்கு வள்ளைக்கொடி,

பெண்ணின் மூக்குக்கு எள்ளுப்பூ,

பெண்ணின் வாய்க்கு ஆம்பல்,

பெண்ணின் செவ்விதழுக்கு இலவம்பூ,

பெண்ணின் பல்லுக்கு முல்லை,

பெண்ணின் தோளுக்கு மூங்கில்,

பெண்ணின் மார்புக்கு கோங்கு மொட்டு,

பெண்ணின் இடைக்கு தாவரக்கொடி,

பெண்ணின் விரலுக்குச் செங்காந்தள்,

பெண்ணின் அடிக்கு இலவம்பூ இதழ்

ஆகியவற்றை உவமையாகக் கூறுகிறது தமிழ் இலக்கியம். தாவரங்கள் மற்றும் பெண்களின் உற்பத்தி சக்தி எப்போதும் வியப்பிற்குரியது. தாவரங்களும் பெண்களும் சேர்ந்துதானே இந்த உலகையும் வாழ்வையும் தங்கள் சக்தியால் அழகாக்குகின்றனர், உயிர்ப்புடன் இயங்கச் செய்கின்றனர். ஆகவே பெண்களே தாவரங்களாக, தாவரங்களே பெண்களாக இருப்பதில் வியப்பென்ன!

*****

Friday, 30 August 2024

பணக்கார சூட்சமங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!

ஒருவர் பணக்காரராகச் சம்பாத்தியம் மட்டும் முக்கியமில்லை. அவர் சம்பாத்தியத்தில் எவ்வளவு சேமிக்கிறார் என்பதும் முக்கியம். இதுவே பணக்காரர் ஆவதில் உள்ள முக்கிய சூட்சமம்.

பணக்காரராகச் சேமிக்க வேண்டும். சேமித்ததை லாபகரமாக முதலீடு செய்ய வேண்டும்.

அத்துடன் பணக்காரர்களின் மேலும் சில சூட்சமங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் முதலீட்டில் துணிந்து செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். அதிக வருமானத்திற்கு முதலீட்டில் கணிப்பின் அடிப்படையில் துணிகர முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்கள்.

பணக்காரர்களின் குணாதிசயம் என்று ஒன்று இருக்கிறது. அதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது என்னவென்றால், நேரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். எப்போது ஒரு பொருள் மலிவாகக் கிடைக்கிறதோ அப்போது அந்தப் பொருளை வாங்குகிறார்கள். அப்படி வாங்கிப் போட்டு விட்டு, சரியான விலை கிடைக்கும் வரை நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் பங்குச்சந்தையைப் பொருத்த வரையில் நேரம் பார்த்து முதலீடு செய்வதை விட, முதலீடு செய்து விட்டு நீண்ட காலம் காத்திருக்கிறார்கள்.

பணக்காரர்களின் மேலும் சில குணாதிசயங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இலக்குகளை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். மனதில் நினைப்பதை விட எழுதி வைத்துக் கொண்டு, திரும்ப திரும்ப பார்க்கும் போது அவர்களுடைய இலக்கும் பயணமும் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

பணக்காரர்களின் செயல் அணுகுமுறைகள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றுள் முக்கியமான ஒன்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பணக்காரர்கள் வழக்கறிஞர், தணிக்கையாளர், நிதி ஆலோசகர் ஆகிய மூவரைத் தங்களுடைய நண்பர்களாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொத்து எதையாவது வாங்க வேண்டும் என்றால் இந்த மூவரிடம் ஆலோசனை கேட்காமல் எதையும் செய்ய மாட்டார்கள். ஆலோசனைகள் பெற்று, சொத்து வாங்குவதால் பல தலைமுறைகளுக்குச் சிக்கல் இல்லாத சொத்துகளை அவர்கள் உருவாக்குவார்கள்.

இந்த விசயம் உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் பணக்காரர்கள் இந்தச் சின்னஞ்சிறு விசயத்திலும் அவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள். அது என்னவென்று கேட்கிறீர்களா?

பணக்காரர்கள் வெளியில் அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது, பணச் சேமிப்பும் கிடைக்கிறது.

அப்படியானால் பணக்காரர்களும் ஏழைகளும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்கிறீர்களா? சந்தேகமே இல்லாமல் நாம் முதலில் பார்த்த அதே இடம்தான். அதாவது சேமிப்புதான்.

பணக்காரர்கள் மிச்சமாகும் பணத்தைச் சேமிக்கிறார்கள். ஏழைகள் சம்பாதிக்கும் காலத்தில் தேவையில்லாத செலவுகளைச் செய்துவிட்டு பணி ஓய்வுக்குப் பின் கஷ்டப்படுகிறார்கள். பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆகவே நீங்கள் நினைத்தால் பணக்காரர் ஆகலாம். நீங்கள் நினைத்தால் பணக்கார நிலையிலிருந்து ஏழையாகவும் ஆகலாம். அது உங்கள் கையில்தான் இருக்கிறது.

ஒருவர் தன் வருமானத்தில் பத்து சதவீத தொகையைச் சேமித்தாலே ராஜா போல வாழலாம். பிறகென்ன சேமிக்கத் தொடங்குங்கள். சேமித்த தொகையை லாபகரமாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள். பணக்காரர் ஆகுங்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

Saturday, 24 August 2024

பணியில் வெற்றி பெறுவதற்கான ஜப்பானியர்களின் 5 முறைகள்!

ஜப்பானியர்கள் நேர்த்தியானவர்கள். ஜப்பானியப் பொருட்கள் தரமானவை. சுறுசுறுப்புக்கும் செய்நேர்த்திக்கும் ஜப்பான் எப்போதும் உதாரணம். இது எப்படி நிகழ்ந்தது? எப்படி சாத்தியமானது?

இதற்குக் காரணம் ஜப்பானியர்கள் பணியின் போது பின்பற்றும் 5 முறைகள்தான். அந்த முறைகளைத் தெரிந்து கொண்டால் நாமும் அப்படி பணியில் முன்னேறலாம், வெற்றி பெறலாம்தானே.

அவர்கள் பின்பற்றும் அந்த ஐந்து முறைகளைத் தற்போது காண்போமா?

1. நாம் பணிபுரியும் இடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குவது.

2. தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்திப் பயன்படுத்துவதற்கு எளிமையான முறையில் வைத்துக் கொள்ளுதல்.

3. பணி புரியும் இடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்.

4. நமது தேவைகள் மற்றும் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளுதல்.

5. நமது திட்டங்கள் மற்றும் செயல்முறைகளைப் பழக்க வழக்கமாக்கிக் கொள்ளுதல்.

இந்த ஐந்து முறைகளில் முதல் மூன்றைப் பாருங்களேன். பணியிடத்தை வைத்துக் கொள்வது தொடர்பாக உள்ளது அல்லவா!

நாம் பணிபுரியும் இடத்தை எப்படி வைத்துக் கொள்கிறோமோ, அப்படித்தான் பணியில் நம்முடைய வெற்றியும் அடங்கி இருக்கிறது.

எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்காமல், அந்தப் பொருளைத் தேடுவதில் நாள் முழுவதும் செலவழித்தால் என்னவாகும் சொல்லுங்கள்? நம் நாள் முழுவதும் அதிலேயே கழிந்து போகும் அல்லவா! ஆகவேதான் பணியிட ஒழுங்கை முதன்மையாகக் கருதுகிறார்கள் ஜப்பானியர்கள்.

அடுத்த இரண்டும் ஒழுங்கு மற்றும் பழக்க வழக்கம் சார்ந்தது. பணியில் ஒழுங்கையும், செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்வதைப் பழக்கமாகவும் ஆக்கிக் கொண்டால், பணியாற்றுவதில் சுலபமும் வேகமும் அத்துடன் மனதுள் உத்வேகமும் உண்டாகி விடும். பிறகென்ன?  ஜப்பானியர்களைப் போலே நாமும் பணியில் வெற்றி பெற முடியும்தானே?

Friday, 23 August 2024

சாதனை ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்!

சாதிப்பதற்கு எது அவசியம் தெரியுமா?

சாதிக்கும் வரை பொறுமையும் அதுவரை காத்திருக்கும் மனப்பான்மையும்தான் அவசியமானது மற்றும் முக்கியமானது.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் அதை அடைவதற்கு எது மிக மிக தேவை என்றால் பொறுமையாகக் காத்திருக்கும் மனப்பான்மைதான்.

இதை ஓர் உளவியல் ஆய்வு கூட நிரூபிக்கிறது.

ஸ்டான்போர்ட்டு யூனிவர்சிட்டி உளவியல் பேராசிரியர் வால்டர் மிஷல் இது குறித்து செய்த ஆய்வு முக்கியமானது.

1960 இல் இந்த ஆய்வைச் செய்தார் வால்டர் மிஷல்.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஐந்து வயதுக்குட்பட்ட நூறு குழந்தைகளுக்கு மார்ஷ்மெல்லோ சாக்லேட் வழங்கப்பட்டது. அதனால் இந்த ஆய்வுக்கு மார்ஷ்மெல்லோ ஆய்வு என்ற பெயரும் உண்டு.

குழந்தைகள் அந்த சாக்லேட்டை 15 நிமிடம் சாப்பிடாமல் இருந்தால் இன்னும் ஒரு சாக்லேட் வழங்கப்படும் என்பதுதான் அவர்கள் செய்த ஆய்வின் சாராம்சம்.

என்ன நடந்தது தெரியுமா?

பல குழந்தைகள் பதினைந்து நிமிடம் காத்திருக்க முடியாமல் ஆசையால் மார்ஷ்மெல்லோ சாக்லேட்டைச் சாப்பிட்டு விட்டனர்.

சில குழந்தைகள்தான் 15 நிமிடம் வரை காத்திருந்து மற்றொரு சாக்லேட்டைப் பெற்றனர்.

விசயம் அத்தோடு முடிந்துவிடவில்லை என்பதுதான் இந்த ஆய்வின் மற்றொரு சுவாரசியம்.

அந்த ஆய்வில் பங்கேற்ற குழந்தைகளை 40 வருடங்கள் வரை பின்தொடர்ந்து ஆய்ந்தனர் உளவியல் அறிஞர்கள்.

அவர்களுள் காத்திருந்து மற்றொரு சாக்லேட்டை வாங்கிய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சாதனையாளர்களாக இருந்தனர்.

சாதனை என்பது சட்டென நிகழ்ந்து விடுவதில்லை.

சில பல சோதனைகளுக்குப் பிறகே நிகழ்கிறது.

சோதனைகளைப் பொறுமையாக எதிர்கொண்டு சாதிக்கும் வரை அதை விடாது, அதை அடையும் மனப்பான்மையோடு காத்திருக்கும் தன்மை தேவையாக இருக்கிறது. அப்படி ஒன்றை அடைவதற்காகப் பொறுமையாகக் காத்திருக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்பவர்களே சாதிக்கிறார்கள்.

இதுவே சாதிக்க நினைப்பவர்களுக்கு மார்ஷ்மெல்லோ ஆய்வு சொல்லும் சூட்சமம்.

நீங்களும் சாதிக்க விரும்புகிறீர்களா?

அப்படியானால் உங்களுக்கான சாதனை ரகசியம் இப்போது கிடைத்திருக்குமே.

Saturday, 17 August 2024

நிம்மதியான ஓய்வு காலத்துக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பணி ஓய்வுக்குப் பின் வருமானம் இல்லாத வாழ்வை எதிர்கொள்ள நேரிடலாம். வருமானமின்மையால் நிம்மதியான வாழ்க்கை அமையாமலும் போகலாம். இதை எப்படி எதிர்கொள்வது?

நிம்மதியான ஓய்வு காலத்திற்கு என்ன செய்வது?

பணியில் இருக்கும் காலத்தில் உங்கள் சம்பாத்தியத்தில் பத்து சதவீத தொகையைச் சேமிக்கப் பழகுங்கள். அந்தச் சேமிப்பைக் கலவையாக நிலம், தங்கம், பங்குகள் என்று கலவையாக முதலீடு செய்யுங்கள்.

இதைத்தான் ‘பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன்’ என்ற நூலில் ஜார்ஜ் கிளாட்சன் கூறுகிறார். அதாவது, ஒருவர் வருமானத்தில் பத்து சதவீதத் தொகையைத் தனக்காகச் சேமிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அப்படி வேலையில் சேரும் ஒருவர் ரூ. 20,000/- மாதச் சம்பளம் பெறுவதாக வைத்துக் கொண்டால், அவர் மாதந்தோறும் சேமிக்க வேண்டிய தொகை ரூ. 2,000/- ஆகும். இப்படி ஒருவர் தன் வேலைக்காலம் முழுவதும் சேமித்து, அத்தொகையை நிலம், தங்கம், பங்குகள் என முதலீடு செய்திருந்தால் ஓய்வு பெறும் நாளில் அவரது சேமிப்பின் முதலீட்டுத் தொகையானது நிச்சயம் ஒரு கோடியை எட்டியிருக்கும். அத்தொகையைக் கொண்டு அவர் நிம்மதியாகத் தனது ஓய்வுக் காலத்தை அமைத்துக் கொள்ள முடியும். இதுவே நிம்மதியான ஓய்வு காலத்திற்கு ஒருவர் செய்ய வேண்டியதாகும். 

Friday, 16 August 2024

வேலையில் வெற்றி காண்பதற்கான வெற்றிகரமான சூத்திரங்கள்!

வேலையில் வெற்றி காண வெற்றிகரமான பல சூத்திரங்கள் உள்ளன.

வேலையில் வெற்றி காண நீங்கள் எப்போதும் வேலை செய்பவராக மட்டும் இருக்கக் கூடாது. உங்கள் வேலை சம்பந்தமாக நிறைய படிக்க வேண்டும், உங்களைப் போன்ற வேலை செய்யும் வல்லுநர்களைச் சந்திக்க அவர்களுடன் உரையாட வேண்டும்.

வேலையில் வெற்றி பெற்ற பலரும் நிறைய நேரத்தைப் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் புதிதாக எதையாவது உருவாக்குவதற்கும் உபயோகிக்கின்றனர். இதன் மூலம் அவர்களது சிந்தனையும் செயலும் சீராக இருக்கிறது.

எந்நேரமும் பரபரப்பாக வேலை செய்வதால் மட்டும் வேலையில் வெற்றி காண முடியாது. ஏனென்றால், மேம்பாடு என்பது தொலைநோக்குப் பார்வை, செயலாக்கம் ஆகிய இரண்டையும் கொண்டது. எந்நேரமும் பரபரப்பாக இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.

ஒரு வேலை என்றால் அதில் பிரச்சனைகளும் வரும். அப்படிப் பிரச்சனைகள் வரும் போது அதைத் தீர்க்கும் முறை முக்கியமானது. ஒரு பிரச்சனை குறித்து சரியாகச் சிந்திப்பதே அந்தப் பிரச்சனையைத் தீர்க்க பெரிய உதவியாக இருக்கும். இதற்குத் திறன் மேம்பாடு உங்களுக்குப் பெரிதும் உதவும்.

உங்கள் திறன் மேம்பாடு என்பது மூன்று விசயங்களைச் சார்ந்திருக்கிறது.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக முடிவு செய்து கொள்வது.

2. அதைச் செய்வதற்கான சரியான நேரம் மற்றும் இடத்தை முடிவு செய்து கொள்வது.

3. குறிப்பிட்ட கால கட்டத்தில் அதை செவ்வனே செய்து முடிப்பது.

வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது. அது என்னவென்றால், எண்ணமும் செயலும் ஒன்றாக இருக்கும் போது மட்டுமே ஒரு வேலையைச் செய்வதற்கான சக்தி கிடைக்கும். எண்ணமும் செயலும் வேறு வேறாக இருப்பதே ஒரு வேலையைச் செய்ய முடியாமைக்குக் காரணம்.

ஒரு வேலையைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்றால் நீங்கள் பின்வரும் ஐந்து வினாக்களுக்கு விடை காண வேண்டும்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

2. எப்போது செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

3. எங்கே செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது.

4. எப்படி செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது.

5. செய்ய வேண்டிய விசயங்களை செய்யும் போது எப்படி மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் செய்வது என்பதைத் திட்டமிடுவது.

வேலை குறித்த மற்றொரு முக்கியமான சூத்திரத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவென்றால், வேலைகளை எந்த அளவுக்கு எளிமையாக்கிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமக்கு வெற்றி கிடைக்கிறது. ஒரு வேலையைக் கடினமாக்கித் தோற்பதை விட, எந்த ஒரு கடினமான வேலையையும் எளிதாக்கி வெற்றி காண்பதே புத்திசாலித்தனம்.

அத்துடன் வேலை குறித்த இந்தச் சூத்திரம் முக்கியமானது. அது என்னவென்றால், ஒரு வேலையில் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தால்தான் நீங்கள் அந்த வேலையைக் கற்றுக் கொள்ள முடியும். இது வேலை குறித்த கடினமான சூத்திரமாகத் தோன்றினாலும் இந்தச் சூத்திரத்தில் தேறியவர்கள்தான் வேலையில் கில்லாடிகளாக ஆகிறார்கள்.  

Saturday, 10 August 2024

புத்திசாலித்தனத்தையும் தாண்டித் தேவையானது எது தெரியுமா?

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மட்டும் போதுமா?

“புத்தியுள்ள மனிதரெல்லாம்

வெற்றி காண்பதில்லை!

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்

புத்திசாலி இல்லை!”

என்று கண்ணதாசன் எழுதிய பாடலைச் சந்திரபாபு பாடுவார். அதற்கு அவரே ஓர் உதாரணமாகவும் ஆகி விட்டார்.

என்ன காரணம்?

வெற்றி பெறுவதற்குப் புத்திசாலித்தனம் மட்டும் போதாதா?

ஆம் போதாதுதான். புத்திசாலித்தனத்தை IQ என்கிறார்கள். அதாவது நுண்ணறிவு ஈவு என்கிறார்கள். இந்த IQவை விட இன்னொரு முக்கியமான ஒன்று இருக்கிறது. அதுதான் EQ. அதாவது உணர்வுச் சமநிலைத் திறனுக்கான ஈவு.

இதைப் பற்றி முதலில் சொல்லி இதற்கென ஒரு புத்தகத்தைப் போட்டவர் டேனியல் கோல்மென்.

அவர் EQவுக்குத் தேவையான ஐந்து முக்கிய கூறுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அவையாவன,

1. தன்னை அறிதல்.

2. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல்.

3. ஊக்கத்துடன் இருத்தல்.

4. பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.

5. சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளுதல்.

ஒருவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை உணர்வு சமநிலையை வளர்த்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும். இல்லையென்றால் என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும் உலக வாழ்வில் வெற்றி பெறுவது என்பது இயலாமல் போய் விடும். சந்திரபாபு போலவே பாடித் திரிய வேண்டியதாகியும் விடும்.

Friday, 9 August 2024

வெற்றியின் வாயில்கள் எவை தெரியுமா?

வெற்றிக்கு ஏதும் வாயில்கள் இருக்கிறதா?

இருக்கிறது. வாய்ப்புகள்தான் அதன் வாயில்கள்.

நீங்கள் பணக்காரராக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் உங்களுக்கான வாய்ப்புகள் இந்த உலகில் உருவாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது தங்கப் பொக்கிசத்தைக் கண்டறிவதைப் போன்றது. அதே நேரத்தில் வாய்ப்புகள் போன்று தோற்றம் தரும் வாய்ப்புகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும் முக்கியம். ஏனென்றால் இவை உங்களுடைய சக்தி, நேரம், பணம் எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விடும்.

வாய்ப்புகளைச் சரியாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டவர்கள் பெரிய நிறுவனங்களை, புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள். மைக்ரோசாப்ட்டை உருவாக்கிய பில்கேட்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்களே.

கிடைத்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வளர்த்துக் கொண்டே போவதும் முக்கியம். இல்லையென்றால் பெற்ற உயரத்தைத் தக்க வைப்பது கடினம்.

ஒரு கணக்கெடுப்பின் படி வாய்ப்புகளைச் சரியாகத் தொடர்ந்து பயன்படுத்தியபடி 1.7 சதவீதத்துக்குக் குறைவான நிறுவனங்களே நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நிற்கின்றன. ஆரம்பத்தில் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினாலும் காலப்போக்கில் வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வதில் பின்தங்கி வீழ்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன. போலராய்டு, கோடாக், பிளாக்பெர்ரி, நோக்கிய போன்ற நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே வீழ்ந்த நிறுவனங்கள்.

தொடர்ந்து இந்த உலகில் உண்டாகும் வாய்ப்புகளைக் கண்டறிந்து அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக நீங்களும் இந்த உலகில் வெற்றியாளராக உங்கள் முத்திரையைப் பதிக்கலாம்.

Saturday, 3 August 2024

உடல்தகுதியற்ற இந்தியர்கள் ஐம்பது சதவீதமா?

இந்தியர்களில் பாதி பேர் உடல் தகுதி இல்லாமல் இருப்பதாகச் சொல்கிறது லான்செட் என்ற மருத்துவ ஆய்விதழ்.

அது இருக்கட்டும்.

நீங்கள் தினந்தோறும் நடைபயிற்சி செய்கிறீர்களா?

அல்லது,

காலையில் யோகா செய்கிறீர்களா?

அல்லது

ஏதேனும் ஒரு விளையாட்டை த் தினந்தோறும் வியர்க்க விறுவிறுக்க அரை மணி நேரம் விளையாடுகிறீர்களா?

அல்லது

மிதிவண்டியில் செல்கிறீர்களா?

இவற்றில் ஒன்றைக் கூட நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்களும் உடல்தகுதி இல்லாத இந்தியர்களில் ஒருவராக விரைவில் மாறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

ஆம்! இந்திய ஆண்களில் 42 சதவீதம் பேரும், பெண்களில் 57 சதவீதம் பேரும் உடல் அளவில் செயலற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கு என்ன காரணம்?

போதிய உடல் உழைப்போ, உடல் செயல்பாடுகளோ இல்லாமல் போனதுதான் காரணம்.

உடல் தகுதி இல்லாமல் இருந்தால் என்ன?

சர்க்கரை நோய், உடல் பருமன், பக்கவாதம், ரத்த அழுத்த நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்பட உடல்தகுதி இல்லாமல் போவது காரணமாகின்றன.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே உடல் செயல்திறன் எவ்வளவு முக்கியம் என்று.

இப்போது என்ன செய்யலாம் என்கிறீர்களா?

நடந்து செல்ல வாய்ப்புள்ள இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

இரு சக்கர வாகனத்திற்கு அவ்வபோது ஓய்வு கொடுத்து விட்டு மிதிவண்டியில் செல்லுங்கள்.

காலையோ அல்லது மாலையோ அரை மணி நேரம் நடைபயிற்சி செய்வதற்கோ அல்லது விளையாடுவதற்கோ நேரம் ஒதுக்குங்கள்.

மின்தூக்கியைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டு மாடி படியேறி மேலே செல்லுங்கள்.

அமர்ந்தே பார்க்கும் வேலைகளுக்கு அரை மணி நேரம் விடை கொடுத்து விட்டு தோட்ட வேலைகளில் ஈடுபடுங்கள்.

இப்படி சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் உடல் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உடல்தகுதி மிகுந்த இந்தியர்களாக மாறுங்கள். அதனால் தொற்றா நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.  

Friday, 2 August 2024

ஏன் நாம் அன்பாக இருக்க பயப்படுகிறோம்?

அவசரம், திகில், போட்டிகள் நிறைந்த பரபரப்பான நிலை போன்ற சூழல்களில் வாழ்கிறோம். அமைதியாகவும் அன்பாகவும் நாம் மாறி விட்டால் நம்மால் நம்முடைய இலக்குகளை அடைய முடியாது என்ற தவறான எண்ணத்தில் நாம் சின்ன சின்ன பிரச்சனைகளைப் பெரிதாகக் கருதுகிறோம்.

ஒரு பிரச்சனையை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்தே அந்தப் பிரச்சனையை விரைவாகவும் சுலபமாகவும் தீர்க்க இயலும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படிப்பட்ட மனநிலையைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டும்?

சின்ன சின்ன பிரச்சனைகளைச் சின்ன சின்ன பிரச்சனைகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றைப் பெரிய பிரச்சனைகளாகப் பார்க்கக் கூடாது.

உங்களை வாகனத்தில் முந்திக் கொண்டு செல்லும் நபர் ஏதோ அவசரத்தில் இருக்கலாம். அல்லது வேகமாகச் செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கலாம். அவர் உங்களை முந்திச் சென்று உங்களைக் கடந்து சென்று அங்குச் சந்தோசமாக இருப்பார். ஆனால் நீங்களோ உங்களை முந்திச் சென்று விட்டாரே என்ற நினைப்பில் இருந்தால் கவலையில் இருப்பீர்கள். இது ஒருவருடைய மனநிலையின் பிரச்சனையே. அன்பை விடுத்து வெறுப்பைத் தேர்ந்து கொள்ளும் மனநிலை இது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் மனதளவில் அனைவரும் மகிழ்வாக இருக்கலாம்.

வாழ்க்கையில் நாமும் நூறு சதவீதம் சரியானவர்கள் இல்லை. மற்றவர்களும் நூறு சதவீதம் சரியானவர்கள் இல்லை. நிலைமை இப்படி இருக்க யாரும் சரியாக இல்லை என்பதற்காக நரம்புகள் புடைக்க கோபப்படுவது எத்தகைய நகைமுரண்? வாழ்க்கையில் எல்லாரும் கொஞ்சம் முன்னே பின்னேதான் இருப்பார்கள் என்பதை ஏற்றுக் கொண்டால் யார் மீதும் நமக்கு வெறுப்பு வராது. எல்லார் மீதும் ஒரு நேசம் உண்டாகி விடும்.

ஆகவே, உள்ளதைக் கொண்டு நல்லதாக்குவோம் என்ற மனநிலைதான் நல்லது. எதிலும் குறை காணும் மனநிலை ஆபத்தானது. உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு, இந்த உலகை நாம் சரிசெய்ய வரவில்லை என்பதைப் புரிந்து கொண்டால் நிஜமாகவே வாழ்க்கை நூறு சதவீதம் மட்டுமல்ல, இருநூறு சதவீதம் சரியாகி விடும். எல்லாரிடமும் அவர்களுடைய குறைகளை மறந்து அன்பு செலுத்தவும் ஆரம்பித்து விடுவோம்.

இந்த உண்மை புரிந்து விட்டால் அன்பாக இருப்பதற்குப் பயப்பட மாட்டோம். அன்பாக இருந்தால் பறிகொடுத்து விடுவோமோ என்று சந்தேகப்பட மாட்டோம். அன்பாக இருப்பதன் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வாழ்வை அன்பு மயமாக ஆக்கி விடுவோம்.

Saturday, 27 July 2024

ஏன் நீங்கள் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறீர்கள்?

சிறந்த வேலை நாள் என்பது அதிகமாக வேலைபார்ப்பது இல்லை. சரியான அளவில் வேலை பார்ப்பதே.

ஏன் நாம் அதிகமாக வேலை பார்க்க நினைக்கிறோம்?

இயல்பாகவே மனிதர்களுக்கு அதிக வேலை பார்ப்பதில் ஈடுபாடு இருக்கும். நிறுவனங்களுக்கோ அதிக வேலை வாங்குவதில் ஈடுபாடு இருக்கும்.

எந்த அளவுக்கு அதிக வேலை பார்க்கிறோமோ அந்த அளவுக்குப் பின்னாட்களில் கொந்தளிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன.

அதிகமாக வேலை பார்ப்பதால் நம்மை அறியாமல் பரபரப்பு, பதற்றம் போன்வற்றிற்கு ஆளாகும் வாய்ப்புகள் உள்ளன.

இது ஏன்? இது எப்படி நிகழ்கிறது?

பெரும்பாலான மனிதர்கள் இந்த உலகில் அவர்கள் என்ன செய்ய விரும்புகின்றனர் என்பது தெரியாமலேயே இருக்கின்றனர். இதனால் அவர்கள் காரணமின்றிப் பரபரப்பாக இருக்கின்றனர்.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். அப்படித் தெளிவாக இருக்கும் போது, எந்தச் சூழ்நிலையிலும் உங்களுக்குத் தேவையான விசயம் உங்கள் கண்களுக்குத் தெளிவாகத் தென்படும். அப்படித் தென்படும் போது அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்திச் சரியாகச் செயல்படுவீர்கள்.

தெளிவாக இருக்கும் போது உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அதிக தெளிவும், அன்றாட பகட்டுகள் மற்றும் பரபரப்புகளுக்கு முன்னுரிமை தராமல் இருப்பதற்கும் பழகிக் கொள்வீர்கள்.

இதனால் எதில் கவனம் செலுத்தி எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புலப்படும். நீங்கள் சரியான அளவில் வேலை செய்வீர்கள். நீங்கள் செய்யும் வேலையும் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கும்.

Friday, 26 July 2024

சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச் சிதறலைக் குறைத்துக் கொள்வது எப்படி?

கவனச் சிதறல் என்பது ஹேக்ஸ்பியரிலிருந்து செனகா வரை எல்லாருக்கும் இருந்தது. அந்தக் காலத்தில் கவனத்துக்கு இடையே கவனச் சிதறல் இருந்தது. இன்றோ கவனச் சிதறல்களுக்கு இடையே எப்போதாவது கவனம் செலுத்த முடிகிறது.

தற்காலத்தில் கவனச் சிதறல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது மின்னணு சாதனங்கள். அதிலும் முக்கியமாக இருப்பது அலைபேசி. அதில் முக்கியமாக இருப்பது சமூக ஊடகங்கள். அடிக்கடி சமூக ஊடகங்களைத் திறந்து பார்ப்பதும், அதில் எதையாவது செய்து கொண்டிருப்பதும், செய்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதும், செய்திகள் ஏதேனும் வந்திருக்கிறதா எனத் தவிப்போடு இருப்பதும் நம்முடைய கவனச் சிதறலை வெகுவாக அதிகரித்து விட்டன.

ஒரு காலத்தில் அப்போது மின்னஞ்சலைத் திறந்து பார்ப்பதே ஆர்வமான ஒரு செயல். பிற்பாடு சமூக ஊடகங்கள் வந்த போது அந்த இடத்தை முகநூலும், கீச்சும் (பேஸ்புக்கும் டிவிட்டரும் (தற்போது எக்ஸ்)) பிடித்துக் கொண்டன. புலனம் எனும் வாட்ஸ்ஆப் வந்த பிறகு அந்த இடத்தை வாட்ஸ்ஆப் பிடித்துக் கொண்டது. இப்போது மின்னஞ்சலை அடிக்கடி திறந்து பார்ப்பவர்கள் குறைவு. வாட்ஸ்ஆப்பை அடிக்கடி திறந்து பார்ப்பவர்கள்தான் அதிகம். இப்படி கவனச்சிதறலை உண்டாக்கும் ஏதேனும் ஒன்று காலத்திற்கேற்ப வந்து கொண்டுதான் இருக்கின்றன, இருக்கும். அதைத் தவிர்க்கவே முடியாது.

முகநூலோ, புலனமோ அடிக்கடி என்னைத் திறந்து பாருங்கள் என்று உங்களைக் கட்டுப்படுத்துவதில்லை. ஆனால் அப்படி ஒரு கட்டுபாட்டுக்கு நீங்கள் செல்கிறீர்கள்.

இதை எப்படித் தவிர்ப்பது?

முகநூல், புலனம் போன்றவற்றை ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் போட்டுத் திறந்து உள்ளே செல்லும் வகையில் அமைத்துக் கொள்வது ஒரு நல்ல வழி. அந்தக் கடவுச்சொல்லையும் எளிதில் நினைவில் கொள்ள முடியாதபடி கடினமான கடவுச்சொல்லாக அல்லது தட்டச்சுச் செய்வதற்குக் கடினமான கடவுச் சொல்லாக அமைத்துக் கொள்வது நல்லது. இதனால் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் போட்டு உள்ளே செல்லும் கடினத்திற்காகவே அதை அடிக்கடி திறந்து பார்க்க மாட்டீர்கள்.

அலைபேசியை இணைய இணைப்பிலேயே வைக்காமல் அதை அணைத்து விடுவது மூலமாக அவற்றில் செய்தி வந்ததற்கான சமிக்ஞைகள் அதாவது நோட்டிபிகேஷன் கிடைக்காமல் அடிக்கடி நீங்கள் அதை திறந்து பார்ப்பது குறையும். இதுவும் ஒரு வழிமுறைதான் அல்லவா?

முக்கியமான வேலை பார்க்கும் போது அலைபேசிக்கும் உங்களுக்கும் சில மீட்டர் இடைவெளி இருப்பது நல்லதுதானே? அல்லது அலைபேசியை அணைத்து வைத்து விடுவது மிகவும் நல்லதுதானே? இதனால் அடிக்கடி உங்களுக்கு சமூக ஊடகங்களால் ஏற்படும் கவனச்சிதறலைக் குறைத்துக் கொள்ளவும் தடுத்துக் கொள்ளவும் முடியும் அல்லவா!

Saturday, 20 July 2024

காணி நிலம் என்றால் எவ்வளவு தெரியுமா?

“காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்று பாடுகிறார் பாரதியார்.

காணி நிலம் என்றால் எவ்வளவு தெரியுமா?

காணி நிலம் என்பது 24 கிரவுண்ட்.

ஒரு கிரவுண்ட் என்பது 5.5 சென்ட்.

அதாவது ஒரு காணி என்பது 1.32 ஏக்கர் அல்லது 132 சென்ட்.

சதுர அடி கணக்கில் சொன்னால் 57,499 சதுர அடி.

நகர்ப்புறங்களில் ஒரு கிரவுண்ட் நிலமே கோடியைத் தாண்டி விட்ட இந்தக் கால கட்டத்தில் காணி நிலம் வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு பணம் வேண்டும் என்பதை நீங்களே கணக்கிட்டுப் பாருங்களேன்.

பாரதியார் போல் காணி நிலம் வேண்டும் என்று பராசக்தி என்று விரும்பினால் அதற்குப் பல கோடி ரூபாய் பணம் வேண்டும் பராசக்தி என்று பாட வேண்டியிருக்கும்தானே?!

Friday, 19 July 2024

துணிக் குப்பைகளைக் குறைக்கலாமா?

முன்பு நாம் ஆடைகளைக் குறைவாக வாங்கினோம். பொருளாதார வசதியும் குறைவாகத்தான் இருந்தது. இருந்தாலும் எந்த ஆடையை எப்போது வாங்கினோம், எதற்காக வாங்கினோம், ஏன் வாங்கினோம், எங்கே வாங்கினோம், யார் வாங்கித் தந்தார்கள் என்பதெல்லாம் நன்றாக நினைவிருந்தது. ஒவ்வோர் ஆடையைப் பார்க்கும் போது அதற்கு ஒரு கதையைச் சொல்லி மகிழ்வோம். இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது?

இப்போது ஏகப்பட்ட ஆடைகளை வாங்கிக் குவித்திருக்கும் நாம் எந்த ஆடையை எதற்காக, ஏன் வாங்கினோம் என்பதெல்லாம் நினைவில்லாமல், ஒவ்வொரு வீட்டிலும் ஆடைகளைக் குப்பைகளைப் போலக் குவித்து வைத்திருக்கிறோம்.

அதென்ன திடீரென்று உடுத்திக்   கொள்ளும் ஆடைகளைக் குப்பைகளைப் போல என்று சொல்லி வீட்டிர்களே என்கிறீர்களா?

உண்மைதான். ஒவ்வொரு நாளும் உலக அளவில் வெளியாகும் துணிக் கழிவுகளை, துணிக் குப்பைகளை வரிசையாக அடுக்கினால் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் போல இரண்டு மடங்கு இருக்கிறதாம். அப்படியானால் பார்த்துக் கொள்ளுங்கள். நாம் எவ்வளவு துணிகளை வாங்கி அவற்றை தினந்தோறும் ஒவ்வொருவரும் குப்பைகளாக அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்று.

பருத்தியிலான ஒரு T ஆடையை (காட்டன் டி சர்ட்) உருவாக்க 2700 லிட்டர் தண்ணீர் வேண்டுமாம். இது ஒரு மனிதருக்குத் தேவையான இரண்டரை வருட தண்ணீராம்.

பாலியஸ்டர் ஆடைகள் மக்க 200 ஆண்டுகள் ஆகுமாம். நாம் எத்தனை பாலியஸ்டர் துணிகளையும் ஆடைகளையும் பயன்படுத்துகிறோம். அவையெல்லாம் குப்பையாகப் போகும் போது அவை பூமியில் மக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். தினம் தினம் சேரும் இப்படிப் போகும் பாலியஸ்டர் துணிகள் பூமியின் மக்க வைக்கும் திறனை இருநூறு ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிப் போகச் செய்து கொண்டுதானே இருக்கும்.

இனியாவது அளவாகத் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் ஆடைகளை எடுத்துக் கொள்வோம். பொருளாதார வசதி அதிகரித்து விட்டது என்பதற்காக ஆடைகளை அதிகரிக்காமல் சிக்கனமாக இருப்பதால் நமக்கும் பணம் மிச்சமாவதுடன், பூமியில் உருவாகும் துணிக் குப்பைகளும் கழிவுகளும் குறைவாகும் அல்லவா!

Wednesday, 17 July 2024

நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றது எப்படி தெரியுமா?

நடந்து முடிந்த 2024 ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெறவில்லை. இத்தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அக்கட்சி மாநில அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

ஒரு கட்சியானது மாநில அந்தஸ்தைப் பெற சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவீத வாக்குகளுடன் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.  அல்லது மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் எட்டு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனையின் படி நாம் தமிழர் கட்சி மாநிலக் கட்சிக்கான அந்தஸ்தைப் பெறுகிறது.

நடந்து முடிந்த 2024 ஆம் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியானது தமிழகத்தில் 8.19 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியானது மாநில கட்சியாக அங்கீககரிக்கப்படுகிறது.

Tuesday, 16 July 2024

குவைத்தும் இந்தியர்களும்!

சவூதி, ஈரான், ஈராக் போன்ற வளைகுடா நாடுகளில் குவைத்தும் ஒன்று.

குவைத்தில் இருப்பவர்களில் 10 லட்சம் பேர் இந்தியர்கள். அதனாலென்ன என்கிறீர்களா? குவைத்தின் மொத்த மக்கள் தொகையே 48.5 லட்சம்தான். அதாவது குவைத்தில் இருப்போரில் ஐந்தில் ஒருவர் இந்தியர்.

குவைத்தில் வேலை பார்ப்போரில் 30 சதவீதம் பேர் இந்தியர்கள்தான். அதாவது குவைத் தொழிலாளர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர்.

இப்போது எதற்கு இந்தத் தகவல்கள் என்கிறீர்களா?

வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பதில் சிறந்த நாடு எது என்ற கருத்துக் கணிப்பு 52 நாடுகளில் நடத்தப்பட்டது. அதில் கடைசி இடம் அதாவது 52வது இடம் பெற்ற நாடு குவைத்தான். ஆனாலும் வேலை தேடி பலரும் செல்லும் நாடாக குவைத் இருக்கிறது.

குவைத்தில் வேலை பார்ப்பதில் மற்றொரு கஷ்டமும் இருக்கிறது. அங்கு கோடைக்கால வெப்பநிலை என்பது 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இங்கு நமக்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியலைத்  தாண்டினாலே நாக்குத் தள்ளுகிறது அல்லவா. அப்படியானால் குவைத்தின் கோடை வெப்பநிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

அவ்வளவு கடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு கடின உழைப்பை இந்தியர்கள் நல்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அங்குக் கிடைப்பதெல்லாம் மன உளைச்சல், கூடுதல் வேலை, சுகாதாரமற்ற வசிப்பிடம், மாசு நிறைந்த சுற்றுச்சுழல் மற்றும் குறைவான ஊதியம்தான்.

கடனை வாங்கி, சொத்தை விற்று மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்தான் இந்தியர்கள் பலரும் குவைத் போன்ற வெளிநாடு சென்று மிகவும் சிரமப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு உயிரிழப்பு நேரிட்டால் அதை விட கொடுமையான விசயம் வேறு ஏதுமில்லை. அவர்களின் உடலை மீட்டு தாய்நாட்டுக்குக் கொண்டு வருவது வரையில் இழப்பீடு பெறுவது வரையில் எல்லாம் பிரம்ம பிரயத்தனமான காரியங்கள்.

பொதுவாக வெளிநாடு வேலைக்குச் செல்பவர்களுக்காக இந்திய அரசாங்கம் Pravasi Bharatiya Bima Yojana என்ற காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. இந்தக் காப்பீடு திட்டத்தில் இணைந்து கொள்வது நல்லது.

அத்துடன் வெளி நாட்டுக்கு வேலைக்குச் செல்பவர்கள் தாங்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனம் குறித்தும், அங்கு தாங்கள் செய்யப் போகும் வேலை குறித்தும் போதுமான தெளிவைப் பெற்று அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்ட பின் செல்வது எப்போதும் உகந்தது.

Saturday, 13 July 2024

ஏன் போர் வேண்டாம்?

ஒரு போர் நடைபெறும் போது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக 17.5 கோடி டன் கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் கலந்திருக்கிறது.

பொதுவாக உலகெங்கும் உள்ள நாடுகளின் ராணுவம் பயன்படுத்தும் எரிபொருள் காரணமாக 5.5 சதவீத அளவுக்கு கார்ப்ன டை ஆக்சைடு போன்ற பசுமைக் குடில் வாயுக்கள் சாதாரணமாக உருவாகின்றன.

போர்களின் போது விளைநிலங்களும் காடுகளும் எரிக்கப்படுகின்றன. அத்துடன் எண்ணெய் கிணறுகள் கொளுத்தப்படுகின்றன. இவற்றால் ஏகப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது.

போர்க்கருவிகள் செய்வதற்காக இரும்பு, எஃகு போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. போர் கட்டுமானங்களுக்காகச் சிமெண்டும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இரும்பு, எஃகு மற்றும் சிமெண்ட் தயாரிப்பின் போது ஏகப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது.

போர்களின் போது பயன்படுத்தப்படும் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் வெடி பொருட்கள் ஏகப்பட்ட நச்சு வாயுக்களைக் காற்று மண்டலத்தில் கலக்கின்றன.

போர் நடைபெறும் நாடுகளில் இடையே விமானப் போக்குவரத்து நடக்காது என்பதால் விமானங்கள் சுற்றுப் பாதை வழியாகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவற்றால் அதிகம் செலவாகும் எரிபொருளாலும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகும்.

இப்படி வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுவால் பூமி வெப்பமடைவது அதிகரிக்கிறது. பூமி வெப்பமடைவதால் பருவநிலைகள் மாற்றமடைகின்றன. ஒரு பகுதி கடும் வறட்சியையும் மற்றொரு பகுதி கடும் வெள்ளத்தையும் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. புயல்கள், சூறாவளிகள் போன்றவை அடிக்கடி திடீர் திடீர் என்று ஏற்படுகின்றன.

பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் போது காற்றின் ஈரப்பதம் ஏழு சதவீத அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. இது உருவாக்கும் வெப்ப சமனின்மையை எதிர்கொள்ள திடீர் வறட்சி, திடீர் வெள்ளம், திடீர் புயல்கள் ஆகியன பூமியில் உருவாகின்றன.

போர் இல்லாமலே அன்றாடப் பயன்பாடுகள், தொழில்துறை செயல்பாடுகள், வாகனப் பயன்பாடுள், மின்சார தயாரிப்புகள் போன்றவற்றால் ஏகப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயு நாள் தோறும் வளிமண்டலத்தில் கலக்கிறது. இவற்றுடன் போரும் சேர்ந்து கொண்டால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே இனி வரும் உலகில் போரும் நடைபெறக் கூடாது என்பதோடு கார்பன் டை ஆக்சைடை வெளியாக்கும் அன்றாட செயல்பாடுகளையும் இயன்ற வரை குறைக்க வேண்டும். அப்படி குறைக்காது போனால் திடீர் வறட்சியும், திடீர் வெள்ளங்களும், திடீர் புயல்களும் அன்றாடச் செய்திகளாகும்.

ஆகவே,

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்.”

என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ப போரில்லாத உலகத்தைச் செய்வோம். அத்துடன் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத புதிய உலகத்தையும் படைப்போம்.