Showing posts with label malli. Show all posts
Showing posts with label malli. Show all posts

Sunday, 12 February 2023

பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘மல்லி’

பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படம் ‘மல்லி’

பள்ளிச் சிறார்களுக்கான திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் கல்வித் துறையால் பரிந்துரைக்கப்பட்டு அப்படங்கள் பள்ளிகளில் திரையிடப்படுகின்றன. அத்திரைப்படங்கள் பெரும்பாலும் பிறமொழிப் படங்களாக இருந்த நிலையில் இந்தப் பிப்ரவரி – 2023 மாதத்திற்கான சிறார் திரைப்படமாக முதன் முதலாகத் தமிழ் மொழியில் அமைந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு ‘மல்லி’

‘மல்லி’ என்ற இச்சிறார் திரைப்படம் சந்தோஷ் சிவன் என்பவரால் இயக்கப்பட்ட திரைப்படமாகும். ஸ்வேதா, வனிதா போன்ற குழந்தை நட்சத்திரங்களோடு ஜனகராஜ் போன்ற ஜனரஞ்சக நட்சத்திரங்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

காட்டுச்சூழலில் வளரும் ‘மல்லி’ எனும் பழங்குடியினச் சிறுமியைச் சுற்றி இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்திரைக்கதை நிகழும் காலம் பள்ளி விடுமுறை காலமாகத் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குக் காட்டுப் பகுதிக்கு வருகை தரும் வன அலுவலரின் மகள் குக்கூவுக்கும் காட்டிலேயே வளர்ந்து வரும் மல்லிக்கும் நட்பு உண்டாகிறது.

மல்லி கனவுகளில் வாழும் சுட்டிப் பெண். குக்கூ காது கேளாத வாய் பேச முடியாத சிறப்புக் குழந்தை. குக்கூவுக்குக் காடு முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் ஆசை. காட்டில் இருக்கும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு அவள் காட்டைச் சுற்றிப் பார்ப்பதைத் தந்தையும் பாதுகாவலரும் தடுக்கும் நிலையில் மல்லியின் நட்பு குக்கூவிற்குப் பிடித்துப் போகிறது. மல்லிக்கும் குக்கூவைப் பிடித்துப் போகிறது.

மல்லிக்கு வயதான தோழர்களாகக் கதைசொல்லிப் பாட்டியும், லெட்டர் மாமா எனும் தபால்கார மாமாவும் இருக்கிறார்கள். கதைசொல்லிப் பாட்டி மூலமாக மயில் கடவுளின் சக்தி பற்றி அறிந்து கொள்கிறாள் மல்லி. மயில் கடவுள் சக்தியினால் நீலநிற மணி கிடைத்தால் வாய் பேசாத உயிர்களும் பேசும் என்பதை அறிந்ததிலிருந்து அம்மணியை எப்படியாவது அடைந்து அதன் மூலமாக அவளது தோழியான குக்கூவுக்குப் பேசும் திறனைக் கொண்டு வந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறாள் மல்லி. அத்துடன் அழகான பட்டுப்பாவாடை சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்கிற கனவும் மல்லிக்கு இருக்கிறது. இவ்விரு கனவுகளும் எவ்வாறு நிறைவேறுகின்றன என்பதை அடுத்தடுத்து நிகழும் திரைக்காட்சிகள் காட்டுகின்றன.

அஞ்சலகத்தில் வேலை பார்க்கும் மல்லியின் லெட்டர் மாமா மாறுதலில் சென்று விடுகிறார். அவர் மல்லியின் பட்டுச்சட்டைக் கனவை அன்புப் பரிசாக அனுப்பி வைத்து நிறைவேற்றுகிறார். இப்படியாக மல்லியின் ஒரு கனவு நிறைவேறுகிறது.

அப்பட்டுச் சட்டையை அணிந்து மகிழ்ச்சியாகப் போகும் போது காட்டில் வேட்டைக்காரர்களால் காயம்படும் மானைக் காப்பாற்றுகிறாள் மல்லி. காயம்பட்ட மானுக்காக தன்னுடைய கனவான பட்டுப்பாவாடையைக் கிழித்துக் கட்டுப் போடுகிறாள். மானை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சேர்த்துக் காப்பாற்றியும் விடுகிறாள். அவளது நல்ல மனதுக்கு மயில் கடவுள் மனமிரங்கி நீல மணியைக் காட்டுவது போலக் குளத்து நீரில் ஓர் இலை மேல் நீலமணியைக் கண்டடைகிறாள் மல்லி.

நீல மணியை தான் வைத்திருக்கும் மணிச் சரங்களோடு கோர்த்து விடுமுறை முடிந்து ஜீப்பில் கிளம்பிச் சென்று கொண்டிருக்கும் தோழி குக்கூவிற்கு ஓடிச் சென்று வழிமறித்து மாட்டி விடுகிறாள். ஜீப் கிளம்பிச் செல்கிறது. மல்லி தன்னடைய தோழியான குக்கூ மணியை அணிந்த பிறகு பேசுவதாகக் கனவு காணத் தொடங்குகிறாள். அத்துடன் இத்திரைப்படம் நிறைவு பெறுகிறது.

சக உயிர்கள் பால் அன்பு செலுத்துவதையும் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் மீது நேசம் கொள்வதையும் வலியுறுத்தும் இத்திரைப்படம் பள்ளிச் சிறார்களைக் கவரும் அற்புதமான திரைப்படமாகும்.

பிப்ரவரி 13, 2023 லிருந்து பிப்ரவரி 17, 2023 வரையிலான நாட்களில் இத்திரைப்படத்தை ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டலாம்.

இத்திரைப்படத்தைக் காணவும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://drive.google.com/file/d/19hV3KHBlkbi7SUKs75MkXpW9Uu-aYGnn/view

*****