Showing posts with label classroom jokes. Show all posts
Showing posts with label classroom jokes. Show all posts

Monday, 24 April 2023

வகுப்பறை நகைச்சுவைகள்

வகுப்பறை நகைச்சுவைகள்

வகுப்பறையில் நிகழும் நகைச்சுவைகளுக்கு அளவில்லை. இந்த நகைச்சுவைகள் வகுப்பறை நினைவுகளை அழியாத நினைவுகளாக்கி விடுகின்றன. காலந்தோறும் சொல்லி சொல்லி மகிழத்தக்கனவாய் இருக்கின்றன. வாசித்தவற்றுள் அப்படிச் சில வகுப்பறை நகைச்சுவை நிகழ்வுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

வகுப்பறையில் முதல் நாள் நுழைந்ததும் ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக எழுந்து பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

ஒரு மாணவர் வீர ராகவ சொக்கலிங்க நரசிம்மன் என்று தன்னுடைய பெயரைச் சொல்லியிருக்கிறார்.

இவ்வளவு பெரிய பெயரை எப்படிச் சுருக்கமாகக் கூப்பிடுவது என்று யோசித்த ஆசிரியர் அம்மாணவரிடமே உன்னுடைய பெயரை வீட்டில் எப்படிக் கூப்பிடுவார்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த மாணவர் தூரத்தில் இருந்தால் சத்தமாகக் கூப்பிடுவார்கள், பக்கத்தில் இருந்தால் மெதுவாகக் கூப்பிடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியருக்குச் சிரிப்பு வராத குறைதான். தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு பாடத்தை ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டாம் உலகப்போர் குறித்த பாடத்தை நடத்துவதற்கான தயாரிப்போடு வந்திருந்த அவர் பாடத்தைத் துவக்கும் விதமாக மாணவர்களைப் பார்த்து, இரண்டாம் உலகப்போர் ஏன் நடந்தது தெரியுமா என்ற வினாவை எழுப்பியிருக்கிறார்.

அந்த வினாவைக் கேட்டதும் வீரராகவசொக்கலிங்கநரசிம்மன் என்ற அந்த மாணவரே எழுந்திருந்திருக்கிறார். ஆசிரியர் சொல் பார்ப்போம் என்றிருந்திருக்கிறார்.

முதல் உலகப் போர் சரியாக நடந்திருக்காது, அதைச் சரியாக நடத்துவதற்காகத்தான் இரண்டாம் உலகப் போர் நடந்திருக்கிறது என்றிருந்திருக்கிறார்.

அன்றைய வகுப்பு இவ்வளவு நகைக்சுவையோடு அமையும் என்பதை எதிர்பாராத ஆசிரியர் அதை அனுபவித்துக் கொண்டே அன்றைய பாடத்தை நடத்தியிருக்கிறார். இந்த அனுபவங்களை அவர் என்றும் மறக்காமல் பலரிடம் சொல்லிச் சொல்லியும் மகிழ்ந்திருக்கிறார்.

உங்களுக்கு இந்த நகைச்சுவைச் சம்பவங்கள் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறோம். மற்றவர்களும் மகிழ இதைப் பகிருங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

*****