Showing posts with label education. Show all posts
Showing posts with label education. Show all posts

Thursday, 28 November 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 29.11.2024 (வெள்ளி)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் சின்னம் மிக மெதுவாக நகர்கிறது.

2) பெங்கல் புயல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3) நாளை பலத்த காற்றுடன் கனமழை பொழிய வாய்ப்புள்ளது.

4) புயல் சின்னம் காரணமாக வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

5) ஒடிசாவில் அகில இந்திய டிஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

6) உதகமண்டலத்தில் குடியரசுத் தலைவர் முப்படைகளின் பயிற்சி அதிகாரிகளுடன் உரையாடினார்.

7) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

8) தமிழகத் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

9) மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகள் சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

10) அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சென்னையில் 500 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

11) மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் போது பயணக் கட்டணம் 30 சதவீதம் குறையும்.

12) தேவேந்திரநாத் பட்நாவிஸ் மகாராஷ்டிர முதல்வராகிறார்.

13) ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

English News

1) The Fengal cyclone symbol that has formed in the Bay of Bengal is moving very slowly.

2) The Fengal cyclone is expected to cross the coast between Mamallapuram and Karaikal tomorrow.

3) There is a possibility of heavy rain with strong winds tomorrow.

4) The Bay of Bengal is seen in a state of turbulent due to the cyclone symbol.

5) The All India DGPs Conference is being held in Odisha for three days starting today.

6) The President interacted with the training officers of the military services in Udhagamandalam.

7) The normal life of the people has been severely affected by the continuous heavy rains in Thanjavur, Tiruvarur and Nagapattinam districts.

8) The third cyclone warning cage has been hoisted at the ports of Tamil Nadu.

9) Trains running at a speed of 280 kmph are being manufactured at Chennai ICF.

10) 500 electric buses are to be operated in Chennai from May next year.

11) When electric buses are introduced, fares will be reduced by 30 percent.

12) Devendranath Fadnavis becomes the Chief Minister of Maharashtra.

13) Hemant Soren takes oath as the Chief Minister of Jharkhand.

Friday, 25 October 2024

பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகள்!

பெஸ்டலாசி பற்றித் தெரிந்து கொள்வோமா?

பெஸ்டலாசி சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர். இவரது முழுப்பெயர் ஜோஹன் ஹென்ரிச் பெஸ்டலாசி என்பதாகும். கல்வியில் உளவியலின் தாக்கத்தை அதிகம் வலியுறுத்தியவர் பெஸ்டலாசி.

பெஸ்டலாசி கல்வியை ஜனநாயகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர். ஏழைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் பாகுபாடற்ற ஒருங்கிணைந்த கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தனிமனிதரின் தேவைக்கும் சமூகத்தின் தேவைக்கும் தொடர்புடையதாகக் கல்வியை மாற்றினார் பெஸ்டலாசி. 

பெஸ்டலாசியின் கல்விச் சிந்தனைகள் கல்வியியலில் பல மாற்றங்களை விளைவித்தன. எனவே இவர் ‘நவீன கல்வியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

ஆசிரியர் பயிற்சியில் கல்வி உளவியல் எனும் பாடம் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் பெஸ்டலாசியே ஆவார்.

இவரது நூல்களில் முக்கியமானது கெர்ட்ரூட் தனது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கிறார்? என்பதாகும். இந்நூல் கல்வியியலில் முக்கியமான நூலாகவும் கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்த நூலாகவும் கருதப்படுகிறது.

இனி பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகள் குறித்து அறிந்து கொள்வோமா?

பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகள்

பள்ளி என்பது வீடு போல இருக்க வேண்டும். அங்கு ஆசிரியர்கள் மாணவர்களை உணர்வு ரீதியாகக் கற்பதற்குத் தூண்ட வேண்டும்.

மாணவர்கள் தங்கள் படிப்புகளுக்குப் பயன்படும் தொழில்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உணர்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இடத்தில் மட்டுமே மாணவர்கள் வெற்றிகரமாகக் கற்க முடியும்.

கல்வியில் பார்த்து, உணர்ந்து கற்பது முக்கியமானது.

பொருள்கள் வாயிலாக ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். ஆசிரியர் ஒரு பொருளைக் காட்டினால் அதன் எடை, நீளம், அளவு, வடிவம் போன்றவற்றை வைத்து மாணவர்களே அதற்குப் பெயர் சூட்ட வேண்டும். அதன் மூலம் கற்றல் நடைபெற வேண்டும்.

தாவரங்கள், கனிமங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள் எனத் தங்களைச் சுற்றியுள்ள பொருட்களை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் இயற்கை அறிவியல், புவியியல் சார்ந்து பெரிதும் ஈர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களைப் பல்வேறு களங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பொருளாதாரம், நிலப்பரப்பு, சூழலியல் எனப் பல்துறை அறிவை மாணவர்கள் பெறுவார்கள்.

பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகளை அறிவது கல்விப் புலத்தோல் உள்ளோருக்கும், கற்பித்தல் பணியில் உள்ளோருக்கும் பெரிதும் நலம் பயக்கும்.

*****

Friday, 18 October 2024

காந்தியடிகளின் கல்விக் கோட்பாடுகள்!

காந்தியடிகளின் கல்விக் கோட்பாடுகள்!

ஒரு மனிதனின் உடல், மனம், ஆன்மாவில் இருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர கல்வியால் மட்டுமே முடியும் என்பது காந்தியடிகளின் கல்விக் கோட்பாடாகும்.

எழுத்தறிவு என்பது கல்வியின் தொடக்கமும் அல்ல, முடிவும் அல்ல. அதன் வாயிலாக நாம் கல்வி கற்கிறோம் என்கிறார் காந்தியடிகள்.

தாய்மொழி வாயிலாகவே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் காந்தியடிகள்.

7 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தரமான இலவசக் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்பது காந்தியடிகளின் எதிர்பார்ப்பாகும்.

வெறும் எழுத்தறிவைக் கல்வியோடு ஒப்பிட முடியாது. குழந்தைகளுக்குக் கைவினைக் கலைகளைக் கற்பிக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் தற்சார்பு சிந்தனையை வளர்க்க வேண்டும் என்றும் காந்தியடிகள் கூறுகிறார்.

கல்வி குழந்தைகளிடம் மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்பது காந்தியடிகளின் கல்வி குறித்த மாபெரும் விருப்பம் ஆகும்.

கல்வி பொறுப்புள்ள, ஆற்றல்மிக்க குடிமக்களை உருவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் கல்வி குறித்து எதிர்பார்க்கிறார்.

வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருளாதாரச் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் கல்வி வழங்க வேண்டும் என்றும் கல்வி குறித்துக் காந்தியடிகள் பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்.

கல்விப்புலத்தில் உள்ளோருக்கும், கற்பித்தல் பணியில் உள்ளோருக்கும் காந்தியடிகளின் இக்கல்விக் கோட்பாடுகளை அறிந்து கொள்வது பெரிதும் உதவும்.

*****

Friday, 4 October 2024

ஒரு மனிதனுக்கு நான்கு கண்கள்!

ஒரு மனிதனுக்கு நான்கு கண்கள்!

எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்கு நான்கு கண்கள் என்கிறார்கள்.

உண்மைதான்.

வலது கண்ணும் இடது கண்ணும் இரண்டு கண்கள்.

படித்தல் என்பது மூன்றாவது கண்.

எழுதுதல் என்பது நான்காவது கண்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணெண்ப வாழும் உயிர்க்கு.”             (குறள், 392)

என்கிறார் திருவள்ளுவர்.

அவருக்கும் கல்வி கண் போன்றதாகவே இருக்கிறது.

அவருக்கு எழுத்து என்பது ஒரு கண் என்றால் எண் என்பது மற்றொரு கண்.

கொஞ்சம் முன்னே பின்னே வேறுபட்டாலும்

கற்றவர்கள் நான்கு கண்ணுடையவர்கள் என்பதில்

எந்த மாற்றுக் கருத்துமில்லை.

*****

Thursday, 6 July 2023

தமிழகத்தில் தலைமையாசிரியர் இல்லாத அரசுப் பள்ளிகள்

தமிழகத்தில் தலைமையாசிரியர் இல்லாத அரசுப் பள்ளிகள்

இக்கல்வியாண்டில் தமிழகத்தில் எத்தனை அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர் இல்லாமல் இயங்குகின்றன தெரியுமா?

2023 – 2024 ஆம் கல்வியாண்டு கணக்கின்படி 3,343 அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர் இல்லாமல் இயங்குகின்றன. இவற்றுள் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் எத்தனை எனத் தெரியுமா?

தொடக்கப் பள்ளிகள்

1,235

நடுநிலைப் பள்ளிகள்

1,003

உயர்நிலைப் பள்ளிகள்

435

மேல்நிலைப் பள்ளிகள்

670

ஆக மொத்தம்

3,343

இவ்வளவு எண்ணிக்கையில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் கூறப்படுகின்றன.

Ø பணி ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெறுவோர் மொத்தமாக ஓய்வு பெற்றதால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன.

Ø தலைமையாசிரியர் பதவி உயர்வைப் பணி மூப்பின் அடிப்படையில் வழங்குவதா அல்லது ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்றுள்ள தேர்ச்சியின் அடிப்படையில் வழங்குவதா என்று நீதிமன்றத்தில் நடைபெற்று வழக்குகள் காரணமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால் தலைமையாசிரியர் நியமனங்களைச் செய்ய முடியாத நிலை கல்வித்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்துக் கல்வி ஆர்வலர்களும் பெற்றோர்களும் நினைப்பதும் எதிர்பார்ப்பதும் என்ன?

ஒரு பள்ளியானது சீராக இயங்க தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடமாக இருக்கக் கூடாது என்பதே கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும். தற்போதைய சூழலில் கல்வியானது பாட அறிவோடு, நுண்ணறிவு, தொழில்நுட்ப அறிவு, ஒருங்கிணைந்த உடல் மற்றும் மன வளர்ச்சி, சமூக மற்றும் ஆளுமைத் திறன்களின் மேம்பாடு எனப் பல்நோக்கில் விரிவடைந்து வருவதால் அவற்றிற்கேற்ப திட்டமிட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நிர்வகிக்கவும் ஒருங்கிணைக்கவும் ஒரு பள்ளிக்குத் தலைமையாசிரியர் பணியிடம் என்பது அவசியமாகும். அப்படிப்பட்ட அவசியமான தலைமையாசிரியர் பணியிடங்கள் அரசுப் பள்ளிகளில் காலியாக இல்லாமல் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் எனக் கல்வி ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைவரும் எதிர்பார்க்கின்றனர். விரைவில் அனைவரது எதிர்பார்ப்பும் நிறைவேறும் என எதிர்பார்ப்போம்!

*****

Tuesday, 11 May 2021

தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கான இணையதளம்

 

தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கான இணையதளம்

இந்தக் கொரோனா காலத்தில் குழந்தைகள் பொழுதுபோக்காகக் கற்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குக் கீழே உள்ள இணையதள இணைப்பு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. 

Fun corner,

Writing,

Stories,

Grammar,

Vocabulary,

Quick Math,

Clock,

Science,

Social,

Drag & Drop,

Sudoku,

Word Search,

Crossword,

Games ஆகியவற்றோடு

தமிழ் உள்ளிட்ட மொழிகள் என பல்வேறு குழந்தைகள் விரும்பும் தலைப்புகளில் தங்கள் நேரத்தைப் பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ளும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகள் மகிழ்வுடன் தான் கற்பது அறியாமல் விளையாட்டாகவும் பொழுதுபோக்காவும் கற்கும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் இக்கொரோனா காலகட்டத்தில் இவ்விணையதளத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதள இணைப்பைப் பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

 https://pschool.in/