Friday 25 October 2024

பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகள்!

பெஸ்டலாசி பற்றித் தெரிந்து கொள்வோமா?

பெஸ்டலாசி சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர். இவரது முழுப்பெயர் ஜோஹன் ஹென்ரிச் பெஸ்டலாசி என்பதாகும். கல்வியில் உளவியலின் தாக்கத்தை அதிகம் வலியுறுத்தியவர் பெஸ்டலாசி.

பெஸ்டலாசி கல்வியை ஜனநாயகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர். ஏழைகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவருக்கும் பாகுபாடற்ற ஒருங்கிணைந்த கல்வி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தனிமனிதரின் தேவைக்கும் சமூகத்தின் தேவைக்கும் தொடர்புடையதாகக் கல்வியை மாற்றினார் பெஸ்டலாசி. 

பெஸ்டலாசியின் கல்விச் சிந்தனைகள் கல்வியியலில் பல மாற்றங்களை விளைவித்தன. எனவே இவர் ‘நவீன கல்வியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

ஆசிரியர் பயிற்சியில் கல்வி உளவியல் எனும் பாடம் இடம் பெறுவதற்கு முக்கிய காரணம் பெஸ்டலாசியே ஆவார்.

இவரது நூல்களில் முக்கியமானது கெர்ட்ரூட் தனது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கிறார்? என்பதாகும். இந்நூல் கல்வியியலில் முக்கியமான நூலாகவும் கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை முன்னெடுத்த நூலாகவும் கருதப்படுகிறது.

இனி பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகள் குறித்து அறிந்து கொள்வோமா?

பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகள்

பள்ளி என்பது வீடு போல இருக்க வேண்டும். அங்கு ஆசிரியர்கள் மாணவர்களை உணர்வு ரீதியாகக் கற்பதற்குத் தூண்ட வேண்டும்.

மாணவர்கள் தங்கள் படிப்புகளுக்குப் பயன்படும் தொழில்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உணர்வுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இடத்தில் மட்டுமே மாணவர்கள் வெற்றிகரமாகக் கற்க முடியும்.

கல்வியில் பார்த்து, உணர்ந்து கற்பது முக்கியமானது.

பொருள்கள் வாயிலாக ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். ஆசிரியர் ஒரு பொருளைக் காட்டினால் அதன் எடை, நீளம், அளவு, வடிவம் போன்றவற்றை வைத்து மாணவர்களே அதற்குப் பெயர் சூட்ட வேண்டும். அதன் மூலம் கற்றல் நடைபெற வேண்டும்.

தாவரங்கள், கனிமங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்கள் எனத் தங்களைச் சுற்றியுள்ள பொருட்களை மாணவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் இயற்கை அறிவியல், புவியியல் சார்ந்து பெரிதும் ஈர்க்கப்பட வேண்டும்.

மாணவர்களைப் பல்வேறு களங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பொருளாதாரம், நிலப்பரப்பு, சூழலியல் எனப் பல்துறை அறிவை மாணவர்கள் பெறுவார்கள்.

பெஸ்டலாசியின் கல்விக் கோட்பாடுகளை அறிவது கல்விப் புலத்தோல் உள்ளோருக்கும், கற்பித்தல் பணியில் உள்ளோருக்கும் பெரிதும் நலம் பயக்கும்.

*****

No comments:

Post a Comment