Wednesday, 2 October 2024

எது உண்மையோ அதைத் தேடுங்கள்!

எது உண்மையோ அதைத் தேடுங்கள்!

பச்சை நிற கார்களை விட, வெள்ளை நிற கார்கள் அதிக விபத்துக்குள்ளாகின்றன என்றால் என்ன அர்த்தம்?

வெள்ளை நிறக் கார்கள் ராசியில்லை என்பதா?

பச்சை நிறக் கார்களை விட வெள்ளை நிறக் கார்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன என்பதுதான் புள்ளியியல் சொல்லும் உண்மை.

கண்ணாடி அணிந்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளா? புத்திசாலிகள் அதிகம் வாசிப்பதால் கண்ணாடி அணிகிறார்கள் என்பதுதான் இதன் மறுபக்கம் உள்ள உண்மை.

வேலை போய் விட்டதால் மன அழுத்தத்துக்கு உள்ளாகி கோபப்படுகிறார் என்பது உண்மையா என்றால், மன அழுத்தத்தினால் கோபப்பட்டு அதன் காரணமாக வேலை பறி போயிருக்கும் என்பதும் அதன் பின்னுள்ள உளவியல் உண்மை.

ஒரு பயிற்சி மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்களை மட்டும் நாம் பார்க்கிறோம். அங்கு படித்துத் தோல்வியடைந்தவர்களை நாம் பார்ப்பதில்லை.

குறுக்கு வழியில் வெற்றி பெற நினைக்கும் பலரும் வெற்றி பெற்ற சிலரைத்தான் பார்க்கிறார்கள். அதே துறையில் தோல்வியடைந்த பலரைப் பார்ப்பதில்லை.

அதிர்ஷ்டத்தால் பெரும் பெற்றி பெற்றவர்கள் மிக குறுகிய காலத்தில் அதை இழந்து விடுகிறார்கள். ஆகவே அதிர்ஷ்டத்தால், மூட நம்பிக்கைகளால் வெற்றி பெறுவதை விடுத்து விட்டு, உழைப்பினாலும் முயற்சியினாலும் அறிவுப் பூர்வமான மனப்பாங்காலும் வெற்றி பெற பாருங்கள். அந்த வெற்றியே நிலைக்கும்.

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு திறந்த மனதுடன் இருங்கள். கவனமாகவும் இருங்கள். வாய்ப்புகளைத் தேடுங்கள். வரும் விசயங்களில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆம்! திருவள்ளுவர் சொன்னபடி மெய்ப்பொருளைத் தேடுங்கள்.

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.”         (குறள், 423)

*****

No comments:

Post a Comment