Saturday 19 October 2024

என்.பி.எஸ். வாத்சல்யா – குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!

இந்தத் தீபாவளிக்குப் பட்டாசுக்குப் பதிலாக இதைச் செய்து கொடுங்களேன்!

பிறகு ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசுக்குப் பதிலாக இதையே செய்து கொடுங்கள்!

என்.பி.எஸ். வாத்சல்யா – குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டம்!

குழந்தைகளுக்காக மத்திய அரசு தொடங்கியுள்ள ஓய்வூதியத் திட்டம்தான் என்.பி.எஸ். வாத்சல்யா என்கிற திட்டமாகும்.

என்னது குழந்தைகளுக்கு ஓய்வூதியத் திட்டமா? என்று நீங்கள் ஆச்சரியப்பட்டாலும் அல்லது அதிர்ச்சி அடைந்தாலும் இப்படி ஒரு திட்டம் குழந்தைகளுக்காக 2024, செப்டம்பர் 18 இல் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இத்திட்டத்தில் 0 முதல் 18 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளும் சேரலாம்.

இந்தக் கணக்கை எங்கு தொடங்கலாம் என்றால் வங்கிகள், தபால் அலுவலகங்களில் தொடங்கலாம்.

இக்கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச தொகை ஆயிரம் ரூபாயாகும். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியது கணக்கைத் தொடர்ந்து பராமரிக்க அவசியமாகும். அதிகபட்சமாக ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் உங்கள் குழந்தைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.

இக்கணக்கைத் தொடங்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால்,

1) குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ்,

2) குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார் மற்றும் பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள்.

குழந்தையின் பதினெட்டு வயது வரை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களால் நிர்வகிக்கப்படும் இக்கணக்கானது குழந்தைக்குப் பதினெட்டு வயது நிரம்பிய பிறகு குழந்தையின் பொறுப்புக்கு மாறி விடும். அப்போது அக்குழந்தையின் ஆதார், பான் உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

இத்திட்டத்தில் ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என்ற இரு வகைகள் உள்ளன. பெற்றோர்கள் இந்த இரு வகையில் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆட்டோ சாய்ஸ் வகையில் கணக்கில் உள்ள தொகையானது 50 சதவீதம் பங்குச் சந்தையிலும், 30 சதவீதம் கார்ப்பரேட் பத்திரங்களிலும், 20 சதவீதம் அரசுப் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படுகிறது.

ஆக்டிவ் சாய்ஸ் வகையில் 75 சதவீதம் பங்குச் சந்தையிலும் 10 சதவீதம் கார்ப்பரேட் பத்திரங்களிலும் 10 சதவீதம் அரசுப் பத்திரங்களிலும் 5 சதவீதம் பிற சொத்துகளிலும் முதலீடு செய்யப்படும் வகையிலும் அத்துடன் மேலும் பல விதமான வாய்ப்புகளும் உள்ளன.

ஆட்டோ சாய்ஸில் கூட்டு வட்டி அடிப்படையில் 10 சதவீத வளர்ச்சியில் தொகுப்பு நிதியை எதிர்பார்க்கலாம், ஆக்டிவ் சாய்ஸ் வகையில் 12 சதவீத வளர்ச்சியில் தொகுப்பு நிதியை எதிர்பார்க்கலாம் என்று இத்திட்டத்தில் கூறப்படுகிறது. ஆம் கூறப்படுகிறது மற்றும் எதிர்பார்க்கலாம் என்பதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். உத்தரவாதமாக அப்படிக் கிடைக்கும் என்று கூற முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

உத்தரவாதமான தொகுப்பு நிதி வளர்ச்சியை எதிர்பார்ப்பவர்களுக்கு செல்வமகள், செல்வமகன், பி.பி.எப். திட்டங்களே ஏற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து கணக்குத் தொடங்கி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து கொண்டே வந்தால் 10 சதவீத வளர்ச்சி என்றால் 18 வயது நிறைவடையும் போது அக்குழந்தைக்கு ஆறே முக்கால் லட்சமும், அறுபது வயது நிறைவில் நான்கரை கோடி ரூபாயும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுவே 12 சதவீத வளர்ச்சி என்றால் 18 வயது நிறைவடையும் போது எட்டரை லட்ச ரூபாயும், அறுபது வயது நிறைவில் பதினொன்றே கால் கோடியும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இத்தொகுப்பு நிதி வளர்ச்சியை உத்தரவாத வருமானமாகச் சொல்ல முடியாது என்பதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இது பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களின் வளர்ச்சியைப் பொருத்தது.

இத்திட்டத்தில் செலுத்தும் நிதியை முதல் மூன்று ஆண்டுகளுக்கு எக்காரணம் கொண்டும் திரும்பப் பெற இயலாது. அதாவது மூன்றாண்டுகள் லாக் இன் பீரியட் ஆகும். குழந்தையின் வயது 18 வயது நிறைவடைந்த நிலையில் செலுத்திய தொகையைத் தேவையென்றால் 25 சதவீதம் பெற்றுக் கொள்ளலாம். அறுபது வயது நிரம்பிய பிறகு 60 சதவீதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு என்.பி.எஸ். வாத்சல்யா திட்டத்தில் கணக்குத் துவங்கி மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் உங்கள் வசதிக்கேற்ப பணத்தைச் செலுத்திப் பயன் பெறலாம்.

இது தீபாவளி நேரமாகையால், இந்தத் தீபாவளிக்குப் பட்டாசுச் செலவுக்குப் பதிலாக உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் இதைச் செய்து கொடுங்களேன். அத்துடன் ஒவ்வொரு தீபாவளிக்கும் பட்டாசு செலவுக்குப் பதிலாக இதையே செய்து கொடுங்களேன். இதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்குச் சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, பட்டாசு இல்லாத சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தீபாவளியைக் கொண்டாட கற்றுக் கொடுத்ததாகவும் ஆகும் அல்லவா!

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

No comments:

Post a Comment