Showing posts with label How to win exams. Show all posts
Showing posts with label How to win exams. Show all posts

Wednesday, 17 September 2025

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற…

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற…

தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்), மத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு (யுபிஎஸ்சி), வங்கிப் பணிகளுக்கான தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்ற பெறுவதற்கான செயல்முறையை 3R எனலாம்.

அதாவது Reading – Revising – Repeating என்பதே அந்த 3R ஆகும். இதைத் தமிழில் சொல்வதென்றால் படித்தல் – மீளாய்வு செய்தல் – மீண்டும் மீண்டும் செய்தல் எனலாம். மேலும் இதை படிக்க வேண்டும், திரும்ப படிக்க வேண்டும், திரும்ப திரும்ப படிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதும் பொருத்தமாகும்.

முதல் முறை படிக்கும் போது நீங்கள் படிப்பதில் 30 சதவீத அளவே உங்கள் மனதில் தங்கும்.

இரண்டாம் முறை படிக்கும் போது நீங்கள் படிப்பதில் 50 சதவீதம் வரை மனிதல் தங்கும்.

மூன்றாம் முறை படிக்கும் போது 70 சதவீதம் வரை தங்கும்.

நான்காம் முறை படிக்கும் போது இந்த அளவு 80 சதவீதமாகும்.

ஐந்தாம் முறை படிக்கும் போது 90 சதவீதத்தை எட்டுவீர்கள்.

குறைந்தபட்சம் போட்டித் தேர்வுக்காகப் படிக்க வேண்டிய புத்தகங்களை நீங்கள் ஐந்து முறையாவது திரும்ப திரும்ப படிக்க வேண்டும்.

அதற்குப் பின்புதான் நீங்கள் குறிப்பெடுக்க துவங்க வேண்டும். நீங்கள் எடுக்கும் குறிப்புகள் நீங்கள் படித்த பக்கங்களில் பத்தில் ஒரு பங்காக இருப்பது நல்லது. அதாவது பத்து பக்கங்களுக்கு ஒரு பக்கம் என்கிற அளவில் எடுக்கப்படுவதுதான் சரியான குறிப்புகளாகும். அதற்கு நீங்கள் ஐந்து முறை திரும்ப திரும்ப படித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை படிக்கும் போதும், நீங்கள் படித்து முடித்த ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்களுக்கு நீங்கள் படித்தவற்றைக் கண்களை மூடிக் கொண்டு யோசித்துப் பாருங்கள். பிறகு அவற்றை நினைவிலிருந்து சிறு சிறு குறிப்புகளாக எழுதிப் பாருங்கள். இது படித்தவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்வதற்கான பயிற்சி முறையாகும். இப்படிச் செய்யும் போது அடுத்தடுத்த முறைகளில் அதற்கேற்ப உங்கள் மனமானது நினைவில் வைத்துக் கொள்வதற்கேற்ப படிக்கத் துவங்கும்.

படிக்கும் போது எப்படிப் படிக்க வேண்டும் என்றால் ஆழ்ந்து படிக்க வேண்டும். அது எப்படியென்றால் நீங்கள் வாட்ஸஆப் அல்லது பேஸ்புக் பார்க்கும் போது எப்படி பார்க்கிறீர்கள்? அப்போது உங்களை யாராவது கூப்பிட்டாலோ, உங்களிடம் எதாவது செய்திகளைச் சொன்னாலோ, அப்போது எவ்வளவு சத்தமான சூழ்நிலைகள் நிலவினாலோ அது எதுவும் உங்கள் கவனத்திற்கே வராமல் உங்கள் கவனம் முழுவதும் வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக்கில் மட்டும் எப்படி உள்ளதோ அப்படி இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாகப் படிப்பதில் ஒழுக்கம் முக்கியமானது. தினந்தோறும் காலையில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணி வரை படிப்பது என்று முடிவு செய்து விட்டால், அந்த நேரத்தில் படிப்பைத் தவிர வேறு எந்த வேலையையும் செய்யாமல் அந்த வேலையை மட்டும் செய்ய வேண்டும்.

ஒரு நாளில் வேறு வேலையில்லாமல் வெட்டியாக அமர்ந்திருக்கும் பொழுதுகள் நமக்குப் பல கிடைக்கும். அது போன்ற பொழுதுகளில் படித்தவற்றைப் பற்றி நாம் எடுத்து வைத்திருந்த குறிப்புகளை எடுத்துப் பாருங்கள். அதற்கேற்ப குறிப்புகளை உங்கள் வசதிக்கேற்ற வகையில் கையடக்கமாகவோ அல்லது பையடக்கமாகவோ அமையும் வகையில் குறிப்பேடுகளை அமைத்துக் கொண்டு குறிப்பெடுத்து எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த முறைகளைக் கையாண்டால் எந்தப் போட்டித் தேர்விலும் உங்களால் வெற்றி வாகை சூட முடியும்.

*****