Showing posts with label காக்கைக்காகா கூகை. Show all posts
Showing posts with label காக்கைக்காகா கூகை. Show all posts

Friday, 14 January 2022

நாபிறழ் பயிற்சிக்கான ககர வர்க்கப் பாடல்

நாபிறழ் பயிற்சிக்கான ககர வர்க்கப் பாடல்

            ‘பயிற்சியினாலும் முயற்சியினாலும் எதுவும் சாத்தியமாகும்’ என்பது நம் ஆன்றோர்கள் நமக்கு அருளிச் சென்ற வாக்கு. தமிழ் உச்சரிப்பில் நா பிறழ்தல் உச்சரிப்பைச் செம்மைப்படுத்தும். நாபிறழ்வுக்கான சொற்றொடர்களையும் செய்யுளையும் தொடர்ந்து பயிற்சி செய்து வரும் போது தமிழ் ஒலிப்புகள் திருத்தமாகவும் செம்மையாகவும் அமைவதை உணர இயலும்.

நா பிறழ் பயிற்சிக்கான செய்யுள்களுள் ஒன்றாக கவி காளமேகம் அவர்கள் இயற்றிய ‘ககர வர்க்க மடக்கு’ அமைந்த கீழ்காணும் பாடலைக் குறிப்பிடலாம்.

“காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.”

            தொடக்கத்தில் இப்பாடலை வாசிப்பதில் சிரமம் இருக்கக் கூடும். அச்சிரமத்தைப் போக்கிக் கொள்ள இப்பாடலைக் கீழ்கண்டவாறு பிரித்து வாசித்துப் பழகலாம்.

“காக்கைக்கு ஆகா கூகை கூகைக்கு ஆகா காக்கை

கோக்கு கூ காக்கைக்கு கொக்கு ஒக்க கைக்குக்கு

காக்கைக்குக் கைக்கைக்கு ஆகா.”

            இத்துடன் இப்பாடலின் பொருளையும் புரிந்து கொண்டால் எளிமையாகப் படிப்பதற்கு அது உதவும்.

காக்கைக்கு ஆகா கூகை      - காக்கைக்கு ஆகாதது கூகைக்கு ஆகும். அதாவது காக்கைக்கு இரவில் கண் தெரியாது. கூகைக்கு இரவில் கண் தெரியும். இரவு நேரத்தில் காக்கையால் கூகையைப் போர் செய்து வெல்ல இயலாது.

கூகைக்கு ஆகா காக்கைகூகைக்கு ஆகாதது காக்கைக்கு ஆகும். அதாவது கூகைக்குப் பகலில் கண் தெரியாது. காக்கைக்குப் பகலில் கண் தெரியும். பகல் நேரத்தில் கூகையால் காக்கையைச் சண்டையிட்டு வெல்ல இயலாது.

கோக்கு கூ காக்கைக்குகோக்கு என்றால் அரசருக்கு. அதாவது கோ என்றால் அரசர், எனவே கோக்கு என்றால் அரசர்க்கு. கூ என்றால் அரசர் ஆளும் நிலம். காக்கைக்கு என்றால் காப்பதற்கு. ஆக அரசருக்கு தாம் ஆளும் நிலத்தைக் காப்பதற்கு என்பது பொருள்.

கொக்கு ஒக்ககொக்கைப் போல. அதாவது கொக்கு ஓடு மீன் ஓட, உறுமீன் வருமளவு காலம் கருதிக் காத்திருப்பதைப் போல அரசரும் காலம் கருதிக் காத்திருக்கும் தன்மையோடு இருக்க வேண்டும்.

கைக்குக்கு பகையை வெல்ல

காக்கைக்கு காப்பதற்கு

கைக்கைக்கு ஆகாகை ஐக்கு ஆகாது – காலம் வரும் வரை காத்திருக்காது போனால் வலிமை வாய்ந்த அரசரானாலும்  அவர் கையில் எதுவும் இல்லை. அவரால் எதுவும் செய்ய இயலாது. ஐ என்றால் வலிமை வாய்ந்த அரசர்.

            இப்படி இச்செய்யுளின் பொருளுணர்ந்து படிப்பதற்கேற்ப பிரித்து நாள்தோறும் படித்து வந்தால் பாடல் மனனம் ஆவதோடு நாவுக்கும் நல்ல பயிற்சி கிடைத்து தமிழ் உச்சரிப்பில் செழுமையை உங்களால் உணர இயலும்.

            பாடல் நன்கு பழகி உங்கள் உச்சரிப்பு செம்மையான அனுபவத்தை நீங்கள் கருத்துப்பெட்டியில் பகிரலாம். மற்றவர்களுக்கும் இது போன்ற சிறந்த அனுபவத்தைப் பெற அது உதவியாக இருக்கும் அல்லவா!

*****