Showing posts with label Story Time. Show all posts
Showing posts with label Story Time. Show all posts

Saturday, 11 January 2025

ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை? – ஒரு சிறிய கதை!

ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை? – ஒரு சிறிய கதை!

ஏன் இந்த உலகில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் ஏமாற்றுபவர்கள்தான் இந்த உலகில் எத்தனை எத்தனை?

ஏன் இப்படி ஒரு நிலைமை?

அதிலும் அரசியல்வாதிகள் இருக்கிறார்களே! அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.

ஏன் அப்படி என்கிறீர்களா? அதைப் புரிந்து கொள்ள நீங்கள் இந்தக் கதையைக் கேளுங்கள்.

ஓர் அரசியல்வாதி, தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார். மக்கள் தங்கத் தட்டில் சாப்பிடுவார்கள் என்றார். உழைக்காமலேயே சம்பாதிக்கலாம் என்றார். மாதந்தோறும் தேவையான பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்றார்.

மக்களும் அவரது வாக்குறுதிகளை நம்பி அவரைத் தலைவராக்கினர்.

அவர் தலைவரானார்.

ஆனால், நாட்டில் தேனாறு ஓடவில்லை. பாலாறும் ஓடவில்லை. ஏற்கனவே நன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆறுகள் ஓடாமல் வறண்டு போனதுதான் மிச்சம்.

மக்களும் தங்கத் தட்டில் சாப்பிடவில்லை. வழக்கமாக சாப்பிடும் நெளிந்து போன அலுமினிய தட்டில்தான் கால் வயிற்றுக்கும் அரை வயிற்றுக்கும் சாப்பிட்டார்கள்.

மக்கள் என்னதான் உழைத்தாலும் வாழ்க்கையை ஓட்டுவதற்கேற்ப சம்பாதிக்கவும் முடியவில்லை. கையில் பத்து பைசாவைப் பார்ப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாமல் அலைந்தனர். விலைவாசி அவ்வளவு அதிகமாக இருந்தது.

இப்போது அந்தத் தலைவரைப் பார்த்து அவரது அந்தரங்க செயலாளர் கேட்டார், ஐயா நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்னவோ நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்தீர்களே. அவற்றில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லையே என்று.

தலைவர் சிரித்தார். தனது அந்தரங்க செயலாளரைத்  தூண்டிலோடு மீன் பிடித்து வருவோம் வா என்று அழைத்துக் கொண்டு போனார்.

அவர்கள் இருவரும் தூண்டிலில் புழுக்களை மாட்டி ஏராளமான மீன்களைப் பிடித்தார்கள்.

இப்போது தலைவர் அந்தரங்க செயலாளரைப் பார்த்து, இப்போதுதான் மீன்களைப் பிடித்து விட்டோமே, இப்போது இந்தப் புழுக்களை மீன்களுக்கு உணவாகக் கொடுப்போமா எனக் கேட்டார்.

அதற்கு அந்தச் செயலாளர், இனி அந்த மீன்களுக்கு எதற்குப் புழுக்கள் என்றார்.

உடனே தலைவர், வாக்குறுதிகளும் அப்படித்தான். ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான். ஆட்சியைப் பிடித்து விட்டால் அவற்றை ஏன் நிறைவேற்ற வேண்டும்? அப்படி நிறைவேற்றுவது என்பது தூண்டிலில் புழுக்களை மாட்டிப் பிடித்த மீன்களுக்கு புழுக்களை எடுத்து உணவாகக் கொடுப்பதைப் போன்றது என்றார்.

அந்தச் செயலாளர் புரிந்து கொண்டார்.

நீங்களும் புரிந்து கொண்டீர்கள்தானே?

இப்போது தெரிகிறதா? யாரும் கொடுத்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்ற மாட்டேன்கிறார்கள் என்று, அதுவும் அரசியல்வாதிகள் அறவே ஏன் நிறைவேற்ற மாட்டேன்கிறார்கள் என்று.

இக்கதை உங்களது புரிதலுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

Friday, 10 January 2025

உலகத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? – உங்களுக்காகவே ஒரு கதை!

உலகத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? –

உங்களுக்காகவே ஒரு கதை!

ஓர் ஊரில் முனிவர் ஒருவர் இருந்தார்.

அவரைப் பார்க்க நான்கு பேர் வந்தார்கள்.

அவர்களுக்கு ஒரு சந்தேகம்.

அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளவே முனிவரிடம் வந்தார்கள்.

இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லையே. அதை எப்படி புரிந்து கொள்வது என்று தங்கள் சந்தேகத்தை முனிவரிடம் கேட்டார்கள்.

முனிவர் தனக்குத் தெரியவில்லை என்று பொட்டில் அடித்தாற் போல பதில் சொல்லி விட்டார்.

மிகப் பெரிய முனிவரான உங்களுக்கு எப்படி விடை தெரியாமல் இருக்கும் என்று அந்த நான்கு பேரும் கேட்டார்கள்.

அதற்கு அந்த முனிவர் இதற்கு உங்களுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் உங்கள் நான்கு பேரையும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் செல்கிறேன். போகிற வழியில் நீங்கள் சில காட்சிகளைப் பாருங்கள். அதைப் பற்றி உங்களுடைய கருத்தைச் சொல்லுங்கள். உங்கள் கருத்து சரியாக இருந்தால் நீங்கள் புஷ்பக விமானத்தில் இருக்கலாம். தவறாக இருந்தால் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்து விடுவீர்கள் என்றார்.

நான்கு பேரும் அதை ஏற்றுக் கொண்டு முனிவருடன் புஷ்பக விமானத்தில் ஏறினர்.

அவர்கள் போகிற வழியில் தன் குட்டிகளுடன் பசியோடு இருக்கும் புலி ஒன்றைக் கண்டனர். அந்தப் புலி தன் குட்டிகளின் பசியைத் தீர்ப்பதற்காகத் தீவிரமாக இரை தேடிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் தாகத்தால் தவித்த மான் ஒன்று தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள தன் குட்டிகளோடு அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தது. மானைப் பார்த்த புலி அதை அடித்துக் கொன்றது. அந்த மானை இரையாக தன் குட்டிகளுக்குக் கொடுத்தது.

இந்தக் காட்சியைக் காட்டிய முனிவர் அது பற்றிய கருத்தைக் கேட்டார்.

உடனே ஒருவர் இது மிகவும் தவறானது. இப்போது மான் குட்டிகளுக்கு தாய் இல்லாமல் போயிற்றே என்றார்.

உடனே அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது முனிவர் இரண்டாம் ஆளைப் பார்த்து அவரது கருத்தைக் கூறுமாறு கேட்டார்.

முதல் ஆள் கீழே விழுந்ததைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் இது மிகவும் சரியானது. புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் இருக்கின்றன என்றார்.

உடனே அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது மூன்றாவது ஆளைப் பார்த்து முனிவர் அவரது கருத்தைக் கேட்டார்.

இரண்டு ஆட்கள் கீழே விழுந்ததைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட அவர் இது சரியும் இல்லை, தவறும் இல்லை என்றார்.

உடனே அவரும் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழுந்தார்.

இப்போது கடைசி ஆளைப் பார்த்து முனிவர் கருத்து கேட்டார்.

அவர் எனக்குத் தெரியவில்லை என்றார்.

அவர் புஷ்பக விமானத்திலிருந்து கீழே விழவில்லை.

இப்போது முனிவர் இந்த உலகில் பல விசயங்கள் இருக்கின்றன. தெரியாத விசயங்களுக்குத் தெரியாது என்று பதில் சொல்வதுதான் சிறந்தது. சாமர்த்தியமாகப் பதில் சொல்வதாக நினைத்துத் தெரியாத கேள்விகளுக்குப் பதில் சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை என்றார்.

அந்த நான்காமவர் இப்போது புரிந்து கொண்டார்.

உங்களுக்குப் புரிந்ததா?   

இந்த உலகத்தை இப்போது புரிந்து கொள்ள முடிகிறதா?

புரிந்து கொள்ள முடிந்தால் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி! வணக்கம்!

*****

Saturday, 4 January 2025

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்! – விழிப்புணர்வூட்டும் கதை

உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்!

– விழிப்புணர்வூட்டும் கதை

நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொருவரைப் பார்த்து அவரைப் போல இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். மனிதர்கள் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க செராக்ஸ் பிரதிகளா என்ன?

இதை விளக்கும்படியான கதை ஒன்றைத் தெரிந்து கொள்வோமா?

காகம் ஒன்றுக்குத் தான் கருப்பாக இருப்பது குறித்த வருத்தம் இருந்தது.

அந்த வருத்தத்துத்துடன் அது கொக்கைப் பார்த்தது.

அது வெள்ளையாக அழகாக இருந்தது.

தன் வருத்தத்தைக் கொக்கிடம் பகிர்ந்து கொண்டது காகம்.

அதற்கு அந்த கொக்கு சொன்னது, தான் வெள்ளையாக இருப்பதால் கறை படிந்தால் கஷ்டமாக இருக்கிறது, வெள்ளையாக இருப்பதால் வேட்டைக்காரர்கள் குறி வைப்பதற்கும் வசதியாக இருக்கிறது என்று.

அடுத்ததாகக் காகம் வண்ணத்தோகை கொண்ட மயிலைப் பார்த்தது. பளபள தோகையோடு அந்த மயில் மிக அழகாக இருந்தது. அதனிடமும் தான் கருப்பாக இருப்பதன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டது காகம்.

அதற்கு அந்த மயில், தோகைக்காக மனிதர்கள் தன்னை வேட்டையாடுவதை வருத்தத்துடன் காகத்திடம் பகிர்ந்து கொண்டது.

அடுத்ததாகக் காகம் ஐந்து வண்ணங்களைக் கொண்ட பஞ்ச வர்ணக் கிளியைப் பார்த்தது. ஆகா இத்தனை வண்ணங்களோடு எத்தனை அழகு என்று அதனைப் பார்த்து வியந்தது காகம். அதனிடமும் தன்னுடைய வருத்தத்தைச் சொன்னது காகம்.

அதற்கு அந்த பஞ்சவர்ணக் கிளி, பல வண்ண அழகுக்காகத் தன்னைப் பிடித்துக் கூண்டில் அடைத்து மனிதர்கள் சிறைப்படுத்துவதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டது.

அப்போதுதான் காகம் தன்னுடைய தனித்துவத்தைப் புரிந்து கொண்டது. தான் கருப்பாக இருப்பதால் சுதந்திரமாக இருப்பதையும், வேட்டைக்காரர்களின் தொந்தரவு இல்லாமல் இருப்பதையும், மக்கள் கூண்டில் அடைக்காமல் இருப்பதையும் நினைத்தது. ஆகவே தன்னுடைய தனித்துவத்தைக் குறையாக நினைத்தக் கொள்ள வேண்டியதில்லை என்பதைப் புரிந்து கொண்டது. இன்னொருவருடைய தனித்துவத்தை நினைத்தோ, ஒப்பிட்டோ கவலையோ, தாழ்வுணர்வோ கொள்ள வேண்டியதில்லை என்பதை அந்தக் காகம் இப்போது புரிந்து கொண்டது.

ஆகவே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தத் தனித்துவத்தைப் புரிந்து கொண்டால் அமைதியாகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கலாம். தனித்துவத்தைப் புரிந்து கொள்ளாத மனிதர்கள் கருப்பாக இருப்பதாகக் கவலைப்படும் காகத்தைப் போலக் கவலைப்பட்டு நிம்மதி இழக்கிறார்கள்.

ஆகவே, நீங்கள் அவரைப் போல இருக்க வேண்டும், இவரைப் போல இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் குமைந்து போகாதீர்கள். நீங்கள் அவரைப் போல இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அவராகவே படைக்கப்பட்டிருக்கலாமே, நீங்கள் ஏன் நீங்களாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும்?

ஆகவே நீங்கள் எப்படி படைக்கப்பட்டு உள்ளீர்களோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து ஒரு தனித்துவம் வெளிப்படுவதை ரசித்து வெளிப்படுத்துங்கள். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் உன்னதமானவர்களே. யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களும் இல்லை, உயர்ந்தவர்களும் இல்லை.

இந்தக் கதை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி! வணக்கம்!

*****

Friday, 3 January 2025

விழுந்தால் மீள முடியாத கிணறு எது தெரியுமா?

விழுந்தால் மீள முடியாத கிணறு எது தெரியுமா?

ஓர் அரசனுக்கு ஒரு நாள் பயங்கரமான கனவு வந்தது. ஓர் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து அதிலிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு உள்ளே போய்க் கொண்டிருப்பதான கனவு அது. அப்படி ஒரு கிணறு நிஜத்திலும் இருக்கிறதா என்று கேட்டார் அரசர் அமைச்சரிடம். அமைச்சர் யோசித்தார். அவரது யோசனைக்கு எதுவும் பிடிபடவில்லை.

இந்தக் கேள்விக்கு நாளைக்குள் பதில் கண்டறிந்து வந்து கூறா விட்டால் நீங்கள் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்று அரசர் கூறி விட்டார்.

அமைச்சர் விடை தேட ஆரம்பித்தார். எங்கெங்கோ சுற்றித் திரிந்து கண்டவர்களிடம் எல்லாம் அரசரின் கேள்விக்கான விடை கிடைக்கிறதா எனக் கேட்டுப் பார்த்தார். அமைச்சரின் நிலையைப் பார்த்த முதியவர் ஒருவர் அமைச்சரைப் பார்த்து, அமைச்சர் பதவி போனால் என்ன? என்னிடம் இருக்கும் மந்திரக்கல்லைப் பயன்படுத்தி அரசரை விட நீங்கள் பணக்காரர் ஆகலாம் என்றார். அமைச்சருக்கு ஆசை கண்களை மறைத்தது. அப்படியானால் மந்திரக்கல்லைத் தனக்குத் தருமாறு கேட்டார் அமைச்சர்.

மந்திரக் கல் வேண்டும் என்றால் தான் கூறுவதையெல்லாம் செய்ய வேண்டும் என்றார் முதியவர். அமைச்சர் எதையும் செய்வதற்குத் தயாராக இருந்தார். முதலில் அந்த முதியவர் சமைக்காத மீனைச் சாப்பிடச் சொன்னார். சைவ உணவை உண்ணும் அமைச்சர் கஷ்டப்பட்டு அதை உண்டார். அடுத்ததாகச் சட்டையைக் கிழித்துக் கொண்டு பைத்தியம் போல தெருவில் நடக்க வேண்டும் என்றார் முதியவர். அதையும் செய்தார் அமைச்சர். அதற்கு அடுத்ததாக எதிரில் வந்த ஒருவரைப் பார்த்து அவரைக் கொலைசெய்யுங்கள் என்றார் முதியவர். அதற்கும் அந்த அமைச்சர் தயாரான போது, அவரைத் தடுத்து நிறுத்தி, “இப்போது அந்தக் கேள்விக்கு விடை தெரிகிறதா? ஆசைதான் மனிதர்களால் மீள முடியாத கிணறு. அதன் உள்ளே போனால் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.” என்றார் முதியவர்.

அமைச்சருக்கு உண்மை புரிந்தது. முதியவருக்கு நன்றி கூறி விட்டு அரசரைப் பார்க்க சென்றார் அமைச்சர். என்ன மக்களே இந்தக் கதை சொல்லும் கேள்விக்கான பதில் சரிதானே. ஆசைதானே மீள முடியாத கிணறு. அந்த மீள முடியாத கிணற்றுக்குள் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். இதைத்தான் புத்தரும் சொல்கிறார் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று.

இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி. வணக்கம்.

*****

Saturday, 23 November 2024

உழைப்புக்கு ஓய்வு கொடுக்க முடியுமா? - ஊக்கமூட்டும் உன்னத கதை!

உழைப்புக்கு ஓய்வு கொடுக்க முடியுமா?

-         ஊக்கமூட்டும் உன்னத கதை!

நீங்களே சொல்லுங்கள்? உழைப்புக்கு ஓய்வு கொடுக்க முடியுமா? அப்படி ஓய்வு கொடுத்தால் என்னவாகும்? உழைப்பாளிகள் உழைப்புக்கு ஓய்வு கொடுக்காமல் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருப்பதால்தான் உலகில் அனைவரும் அனைத்து வசதிகளையும் பெற்று வளமாக வாழ்கிறோம்.

முதுமையிலும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உழைத்துச் சாதனை படைத்தவர்கள் பலர். அவர்களுள் அமெரிக்க தொழிலதிபரான ராக்பெல்லரும் ஒருவர். ஒரு முறை அவர் விமானத்தில் பயணித்துக்  கொண்டிருந்த போது முதுமையிலும் அவர் கடுமையாக உழைப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் ஓர் இளைஞர்.

நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய இந்த வயதிலும் இவ்வளவு கடுமையாக உழைக்க வேண்டுமா என்று அந்த இளைஞர் ராக்பெல்லரைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு ராக்பெல்லர் சிரித்துக் கொண்டே ஒரு கேள்வி கேட்டார். இந்த விமானம் இப்போது வானத்தில் பறக்கிறது. அதற்காக இந்த விமானத்தின் எந்திரங்களை நிறுத்தி விடலாமா? அப்படி நிறுத்தினால் என்னவாகும்? என்று கேட்டார்.

அந்த இளைஞர் யோசித்தார். பெரும் விபத்து நேரும் என்றார் அந்த இளைஞர்.

இப்போது உங்களுக்குப் புரிகிறதா என்று கேட்ட ராக்பெல்லர் மேலும் கூறினார். வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டி இருக்கிறது. உயரத்தைத் தொட்டு விட்டோம் என்று நினைத்து உழைப்பதை நிறுத்தி விட்டால் தொய்வு ஏற்பட்டு விடும். அதுவரை பெற்றுள்ள உயரத்திலிருந்து தடுமாறி விழ நேரிடும். உழைப்பு என்பது வருமானத்துக்கு மட்டுமல்ல. உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காகவும்தான் என்றுவிளக்கம் கூறினார்.

உண்மைதானே. வாழ்நாள் முழுவதும் உழைக்க தயாராக இருப்பவர்கள் ஒரு போதும் முதுமையடைவதில்லை. அவர்கள் எப்போதும் இளமையாக உற்சாகமாக இருக்கிறார்கள். ஆகவே உழைப்பை ஒரு போதும் நிறுத்தாதீர்கள்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

Friday, 15 November 2024

ஒன்றே செய்! நன்றே செய்! – உண்மை உணர்த்தும் உன்னத கதை.

ஒன்றே செய்! நன்றே செய்!

– உண்மை உணர்த்தும் உன்னத கதை.

எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதே சிறப்பானது. ஒரு நேரத்தில்பல வேலைகளைச் செய்ய முற்படுவதால் எந்த வேலையும் ஆகாமல் போகலாம். இதை உணர்த்தும்படியான கதை ஒன்று.

ஓர் ஆசிரியர் இருந்தார்.

அவர் தன்னுடைய மாணவர்களுக்கு ‘ஒன்றே செய். நன்றே செய். அதையும் இன்றே செய்’ என்பதை அடிக்கடி அறிவுறுத்தினார்.

ஒரு மாணவருக்கு மட்டும் ஆசிரியரின் அறிவுரை பிடிக்கவில்லை. அந்த மாணவர் ஒரேநேரத்தில் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆசிரியரிடம் தன் மாறுபட்ட கருத்தை அந்த மாணவர் சொல்லவும் செய்தார்.

அந்த மாணவருக்குத் தன்னுடைய அறிவுரையை எப்படி புரிய வைப்பது என்று யோசித்த ஆசிரியர் ஒரு காரியத்தைச் செய்தார்.

கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த பத்து கோழிகளைப் பார்த்து பத்தையும் பிடித்து வருமாறு மாணவரிடம் கூறினார்.

மாணவர் அந்தப் பத்துக் கோழிகளையும் பாய்ந்து பிடிக்க முயன்றார். மாறி மாறி பிடிக்க முயன்று கொண்டிருந்தாரே தவிர அவரால் எந்தக் கோழியையும் பிடிக்க முடியவில்லை. நீண்ட  நேரம் பிடிக்க முயன்று களைத்துப் போனார் அந்த மாணவர்.

இப்போது அந்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து அந்த வெள்ளைக் கோழியை மட்டும் பிடித்து வா என்றார்.

மாணவர் இப்போது அந்த வெள்ளைக் கோழியை மட்டும் குறி வைத்துப் பாய்ந்து சில முயற்சிகளில் பிடித்து வந்தார்.

இப்போது ஆசிரியர் அந்த மாணவரைப் பார்த்தார். மாணவர் தான் புரிந்து கொண்டதை ஆசிரியருக்கு உணர்த்தினார்.

ஆகவே ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்வதே சிறந்தது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முயலும் போது எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம். அதற்குப் பதில் ஒரு நேரத்தில் ஒன்றைச் செய்தாலும் நன்றாகச் செய்வது சிறப்பானதுதானே.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****