Friday, 15 November 2024

ஒன்றே செய்! நன்றே செய்! – உண்மை உணர்த்தும் உன்னத கதை.

ஒன்றே செய்! நன்றே செய்!

– உண்மை உணர்த்தும் உன்னத கதை.

எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு வேலையைச் செய்வதே சிறப்பானது. ஒரு நேரத்தில்பல வேலைகளைச் செய்ய முற்படுவதால் எந்த வேலையும் ஆகாமல் போகலாம். இதை உணர்த்தும்படியான கதை ஒன்று.

ஓர் ஆசிரியர் இருந்தார்.

அவர் தன்னுடைய மாணவர்களுக்கு ‘ஒன்றே செய். நன்றே செய். அதையும் இன்றே செய்’ என்பதை அடிக்கடி அறிவுறுத்தினார்.

ஒரு மாணவருக்கு மட்டும் ஆசிரியரின் அறிவுரை பிடிக்கவில்லை. அந்த மாணவர் ஒரேநேரத்தில் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆசிரியரிடம் தன் மாறுபட்ட கருத்தை அந்த மாணவர் சொல்லவும் செய்தார்.

அந்த மாணவருக்குத் தன்னுடைய அறிவுரையை எப்படி புரிய வைப்பது என்று யோசித்த ஆசிரியர் ஒரு காரியத்தைச் செய்தார்.

கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த பத்து கோழிகளைப் பார்த்து பத்தையும் பிடித்து வருமாறு மாணவரிடம் கூறினார்.

மாணவர் அந்தப் பத்துக் கோழிகளையும் பாய்ந்து பிடிக்க முயன்றார். மாறி மாறி பிடிக்க முயன்று கொண்டிருந்தாரே தவிர அவரால் எந்தக் கோழியையும் பிடிக்க முடியவில்லை. நீண்ட  நேரம் பிடிக்க முயன்று களைத்துப் போனார் அந்த மாணவர்.

இப்போது அந்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து அந்த வெள்ளைக் கோழியை மட்டும் பிடித்து வா என்றார்.

மாணவர் இப்போது அந்த வெள்ளைக் கோழியை மட்டும் குறி வைத்துப் பாய்ந்து சில முயற்சிகளில் பிடித்து வந்தார்.

இப்போது ஆசிரியர் அந்த மாணவரைப் பார்த்தார். மாணவர் தான் புரிந்து கொண்டதை ஆசிரியருக்கு உணர்த்தினார்.

ஆகவே ஒரு நேரத்தில் ஒரு வேலை செய்வதே சிறந்தது. ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முயலும் போது எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகலாம். அதற்குப் பதில் ஒரு நேரத்தில் ஒன்றைச் செய்தாலும் நன்றாகச் செய்வது சிறப்பானதுதானே.

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்.

நன்றி!

வணக்கம்!

*****

No comments:

Post a Comment