Friday 1 November 2024

இரண்டாம் மூளை எதுவென்று தெரியுமா?

இரண்டாம் மூளை எதுவென்று தெரியுமா?

குடலுக்கும் மூளைக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது.

என்ன குடலுக்கும் மூளைக்கும் தொடர்பா என்கிறீர்களா?

மூளை இருப்பது தலையில்.

குடல் இருப்பது வயிற்றில்.

இரண்டுக்கும் இரண்டு அடி தூரம் இருக்கிறது. இருந்தாலும் இவ்விரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இத்தொடர்பை குடல் – மூளை அச்சு என்கிறார்கள்.

குடலில் குடலுக்குத் தேவையான நுண்ணுயிரிகள் இல்லாத போது மூளை வளர்ச்சியும் மூளையின் செயல்பாடும் குறையும் என்பதை ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

குடலின் ஆரோக்கியத்தைப் பொருத்தே மூளையின் ஆரோக்கியம் அமைகிறது என்கிறார்கள்.

குடல் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஒருவருக்கு மூளையும் சுறுசுறுப்பாகச் செயல்படும். குடலில் ஏற்படும் சுணக்கம் மூளையும் சுணங்கச் செய்து விடும்.

நீங்கள் எப்படிப்பட்ட உணவை உண்கிறீர்களோ அதற்கேற்ப மூளையின் செயல்பாடும் மாறுபடும். ரசாயன உணவுகள் குடலைத்தான் பதம் பார்க்கின்றன. இது படிப்படியாக மூளையின் செயல்பாட்டையும் பதம் பார்க்கும்.

இதனால் குடலுக்கு இரண்டாம் மூளை என்ற பெயரும் உண்டு. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால் உங்கள் வயிற்றில் இருக்கும் மூளை என்றும் குடலைச் சொல்லலாம்.

அது மட்டுமா?

மூளையின் செயல்பாட்டுக்குச் செரட்டோனின் எனும் நரம்புக் கடத்தி ரசாயனம் தேவை. நம் உடல் தேவைக்கான 95 சதவீத செரட்டோனின் குடலில்தான் சுரக்கிறது. எஞ்சிய 5 சதவீதம்தான் மூளையில் சுரக்கிறது. இப்படி நம் மனநிலையை ஒழுங்குப்படுத்துவதில் குடலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

உங்களைக் குடலை நல்லபடியாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கேற்றபடியான ஆரோக்கியமான இயற்கையான உணவுகளையே உண்ணுங்கள். அது உங்கள் மூளையையும் நல்லபடியாக வைத்திருக்கும். உங்கள் மனநிலையையும் நல்லபடியாக வைத்திருக்கும்.

*****

No comments:

Post a Comment