Friday, 29 November 2024

மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள…

மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள…

காவல் துறை, புலனாய்வு துறை, அமலாக்க துறை, தொலைதொடர்புத் துறை என்று எந்தத் துறையும் அலைபேசியில் தொடர்பு கொண்டெல்லாம் விவரங்களைக் கேட்பதோ, விசாரிப்பதோ இல்லை. ஆனால் அலைபேசியில் வரும் மோசடி அழைப்புகள் அனைத்தும் அதைத்தான் செய்கின்றன. அதைக் கொண்டே நீங்கள் எவை உண்மையான அழைப்புகள், எவை மோசடியான அழைப்புகள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தொலைதொடர்புத் துறையிலிருந்து தொடர்பு கொள்வதாகச் சொல்லி உடனடியாக விவரங்களைத் தரவில்லை என்றால் உங்கள் அலைபேசி எண்ணைத் துண்டிக்கப் போகிறோம் என்று சொல்லலாம். அதற்காக இந்த எண்ணை அழுத்துங்கள், ஆதார் எண்ணைத் தாருங்கள் என்று கேட்கலாம். ஆனால் இப்படியெல்லாம் ஒருபோதும் தொலைதொடர்பு துறையிலிருந்து அழைப்புகள் வருவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இது போன்ற அழைப்புகளை நம்பி எந்தத் தகவல்களையும் வழங்காதீர்கள். மேலும் அவர்கள் குறிப்பிடும் எந்த எண்ணையும் அலைபேசியில் அழுத்தி விடாதீர்கள்.

நீங்கள் அலைபேசியில் ஆபாசச் செய்தி அனுப்பியதாகப் புகார் வந்திருப்பதாக வரும் மோசடி அழைப்புகள் குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற புகார்களை எல்லாம் அலைபேசியில் விசாரிப்பதே இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்களை நம்ப வைக்க உங்களது ஆதார் எண், PAN எண்ணை அவர்கள் மிகச் சரியாகச் சொல்லுவார்கள். அதற்காக நீங்கள் பயந்து போய் அவர்கள் கேட்கும் விவரங்களை ஒரு போதும் தர வேண்டாம். அப்படி தரும் பட்சத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நீங்கள் இழப்பது நிச்சயம்.

உங்களுக்கு குறிப்பிட்ட கூரியர் நிறுவனத்திலிருந்து பார்சல் வந்திருப்பதாகக் கூறப்படும் மோசடி அழைப்புகள் மிக மோசமானவை. அந்தப் பார்சல் தற்போது மும்பை கஸ்டம்ஸில் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை அதிகாரியிடம் பேச எண் பூஜ்ஜியத்தை அழுத்துங்கள் அல்லது ஒன்பதை அழுத்துங்கள் என்று அந்த அழைப்புகள் சொல்லலாம். இது போன்ற அழைப்புகளுக்கும் செவி சாய்க்காதீர்கள். அவர்கள் கூறுவதைச் செய்ய செய்ய நீங்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்திப்பீர்கள். உங்களை நம்ப வைத்து, உங்கள் கழுத்தை அறுக்கும் வேலையைத்தான் இத்தகைய மோசடி அழைப்புகள் செய்கின்றன.

மோசடி அழைப்புகள் வாட்ஸ் ஆப், டெலிகிராம் மூலமாகவும் வரலாம். எத்தகைய விசாரணை என்றாலும், அதனால் எவ்வளவு பாதிப்புகள் வரும் என்ற சொல்லி மிரட்டினாலும் அலைபேசி வாயிலாக எந்தத் தகவல்களையும் தராதீர்கள். ஏனென்றால் மோசடிக்காரர்கள் வேகமாகச் செயல்படும்படி அழுத்தம் கொடுப்பார்கள். அவர்கள் கூறுவதைச் செய்யாமல் நிதானமாக யோசித்துத் துணிவாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது.

பல நேரங்களில் சமூக ஊடகங்களில் நீங்கள் பகிரும் புகைப்படங்கள், தகவல்களே உங்கள் எதிரியாகிப் போகின்றன. அதனால் தனிப்பட்ட புகைப்படங்கள், விவரங்கள், தகவல்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிருங்கள்.

பேடிஎம், ஜீபே போன்றவற்றில் பணம் கேட்கிறார்கள் என்றால் சந்தேகமே இல்லாமல் அவ்வித அழைப்புகள் மோசடி அழைப்புகள்தான். அதில் யோசிக்க எதுவுமே இல்லை. அவற்றிற்குச் செவி சாய்த்துப் பணத்தை அனுப்பாதீர்கள்.

ஆன்லைன் விசாரணைகள், ஆன்லைன் கைதுகள் என்பதெல்லாம் இதுவரை எந்த நாட்டிலும் இல்லை. உண்மையான விசாரணை அதிகாரிகள் உங்களை விசாரித்தால் நேரில்தான் விசாரிப்பார்கள்.   விசாரணை முடிவில் அதை எழுத்து வடிவமாக்கி உங்களிடம் கையொப்பத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் விசாரணைக்கு நேரில்தான் அழைப்பார்கள். ஆன்லைனிலோ அல்லது அலைபேசி அழைப்புகளிலோ விசாரணையைச் செய்யவும் மாட்டார்கள், விவரங்களைக் கேட்கவும் மாட்டார்கள்.

இது போன்ற மோசடிகள் குறித்து வீட்டில் இருப்பவர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பரிச்சயம் இல்லாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நிராகரிக்கச் சொல்லுங்கள். அதுதான் நல்லது. ஏனென்றால் நீங்கள் விழிப்புணர்வோடு இருப்பது மட்டும் போதாது, உங்களைச் சுற்றியுள்ள அனைவரும் விழிப்புணர்வோடு இருக்கும் போதுதான் மோசடிகளை முழுமையாகத் தடுக்க முடியும். உங்கள் குடும்பத்தை நீங்கள் இழப்பிலிருந்தும் மன உளைச்சலிலிருந்தும் காப்பாற்ற முடியும்.

மேலும் சந்தேகத்துக்கு இடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் குறித்து புகார் செய்ய https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தையும் நீங்கள் நாடலாம்.

இத்தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****

No comments:

Post a Comment