கற்றபடி நிற்காத கிளிகள்
குறளும் கதையும் - 1
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”
என்ற திருக்குறளை அறிந்திருப்பீர்கள்.
கற்பதை விட முக்கியமானது கற்றபடி நிற்பது என்பதை விளக்கும் திருக்குறள் அது. இக்குறளின்
சாராம்சத்தை விளக்கும் வகையிலான ஒரு கதையை இப்போது பார்ப்போமா?
வேடன் ஒருவன் கிளிகளுக்கு
வலை விரித்தான். கிளிகள் சிக்கிக் கொண்டு விட்டன. அவற்றைப் பிடித்துக் கொண்டு போய்
கறியாக்கித் தின்பது அவனது திட்டம். மாட்டிக் கொண்ட கிளிகள் கத்த ஆரம்பித்த விட்டன.
அவற்றின் கத்தல்கள் உயிரைப் பிழிவதாக இருந்தன. இதைப் பார்த்த ஒரு கருணை மிகுந்த பெரியவர்
ஒருவர் அந்த வேடனிடம் கிளிகளை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார்.
கிளிகளை விட்டு விட்டால்
தன்னுடைய வயிற்றுப் பசிக்குத் தான் என்ன செய்வது என்று கேட்டான் அவன். அவன் கேட்பதும்
நியாயந்தானே என்று பட்டது பெரியவருக்கு. அவர் தன் பையில் இருந்த ரூபாய்களை எடுத்து
நீட்டியதும் வேடன் கிளிகளை விட்டு விடுவதற்கு ஒத்துக் கொண்டான்.
விடுபட்டுச் செல்வதற்கு முன்
கிளிகள் அத்தனையும் பெரியவருக்குத் தங்கள் நன்றியைச் சொல்லின. அதற்குப் பெரியவர் அந்தக்
கிளிகளுக்கு ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்தார். இனிமேல் நெல்மணிகளைப் பார்த்து வலையில்
சிக்க மாட்டோம் என்பதுதான்ப் பாடம். அந்தப் பாடத்தை அந்தக் கிளிகள் திரும்ப திரும்ப
சொல்லின.
சில மாதங்கள் கடந்த பின்
வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்தோடு அதே பகுதிக்கு வந்தான். அவனைப் பார்த்ததும்
கிளிகள் நெல்மணிகளைப் பார்த்து வலையில் சிக்க மாட்டோம் என்று கூட்டமாகக் கத்தின. இந்தக்
கிளிகளிடம் நம் பாச்சா பலிக்காது என்று வேடன் போய் விட்டான்.
மீண்டும் சில மாதங்கள் கழித்து
இந்த வேடன் வந்த போதும் இவனைக் கண்ட கிளிகள் நெல்மணிகளைப் பார்த்து வலையில் சிக்க மாட்டோம்
என்று கத்தின. இந்தக் கிளிகளை இனிமேல் பிடிக்க முடியாது என்று மறுபடியும் வேடன் விரிக்க
வந்த வலையை விரிக்காமலே திரும்பப் போய் விட்டான்.
இப்படியே வேடன் வருவதும்,
கிளிகள் நெல்மணிகளைப் பார்த்து வலையில் சிக்க மாட்டோம் என்று சொல்வதும், வேடன் திரும்பப்
போவதும் பல முறை நடந்து கொண்டிருந்தன.
முடிவாக ஒரு நாள் வேடன் இந்தக்
கிளிகள் சிக்கா விட்டால் என்ன? வேறு பறவைகள் சிக்கட்டும் என்று நினைத்து நெல்மணிகளை
இறைத்து விட்டு வலையை விரித்து வைத்தான்.
எந்த நெல்மணிகளைத் தின்று
வலையில் சிக்க மாட்டோம் என்று கிளிகள் சொல்லினவோ அதே கிளிகள் அப்படியே சொல்லிக் கொண்டு
நெல்மணிகளைத் தின்ன வந்து வலையில் சிக்கிக் கொண்டன.
அப்போதுதான் வேடன் புரிந்து
கொண்டான், இந்தக் கிளிகள் இந்த வாக்கியத்தைத் திரும்ப திரும்ப சொல்ல கற்றுக் கொண்டிருக்கின்றனவே
அன்றி அவற்றுக்கு அதன் பொருள் புரியவில்லை என்பதை
இப்படித்தான் நம்மைச் சுற்றியுள்ள
படித்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைத் திரும்ப திரும்பச் சொல்வதில் வல்லவர்களாக
இருக்கிறார்களே தவிர, அவற்றின் உண்மையான பொருள் தெரிந்தவர்களாக இல்லை. அதனால் அவர்கள்
கற்ற வித்தை அவர்களுக்குப் பயன்படாமல் போய் விடுகிறது.
இதைத்தான் நம் முன்னோர்கள்
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்கிறார்கள்.
நாம் அந்தக் கிளிப்பிள்ளைகளைப்
போல இருந்து விடக் கூடாது. கற்பதன் பொருள் உணர்ந்தவர்களாகக் கற்றவற்றைப் பின்பற்றுபவர்களாக
இருக்க வேண்டும்.
திருவள்ளுவர் அதைத்தானே
“கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”
என்கிறார்.
அவர் சொல்வதில்தான் எத்தனை
அர்த்தங்கள்! அந்த அர்த்தத்தை இந்தக் கதை எவ்வளவு அழகாக விளக்குகிறது. கிளிகளைப் போலக்
கற்றுக் கொள்வதால் என்ன பயன்? கற்றபடி நிற்பதில்தான் கல்வியின் பயன் அடங்கியிருக்கிறது.
சொல்வதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்ற வாசகம்தான் நமக்கு இப்போது எவ்வளவு பொருளை
உணர்த்துகிறது.
இக்கதை உங்களுக்குப் பிடித்திருக்கும்
என்று நினைக்கிறேன். மீண்டும் இது போன்ற ஒரு கதையுடன் நம் வலைப்பூவில் சந்திப்போம்!
நன்றி!
வணக்கம்!
*****
No comments:
Post a Comment