Saturday 5 August 2023

அவர் மட்டும் எப்படி அப்படி ஆனார்? (பப்பெட் எப்படி பப்பெட் ஆனார்?)

அவர் மட்டும் எப்படி அப்படி ஆனார்?

(பப்பெட் எப்படி பப்பெட் ஆனார்?)

பணம் சம்பாதிப்பதில் பலரும் விழி உயர்த்தி உயர்ந்து பார்க்கும் உருவம் வாரன் பப்பெட். அவரைப் போன்று பணத்தை வைத்து பணத்தைச் சம்பாதித்தவரை, பணம் சம்பாதிப்பதில் ஓர் ஒழுக்கவாதியைப் பார்க்க முடியாது.

எப்படி அவரால் மட்டும் அவ்வளவு சம்பாதிக்க முடிந்தது?

அந்தச் சம்பாத்தியத்தின் பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன?

முதலீட்டு மாமன்னன் என்று போற்றப்படும் பப்பெட் கடைபிடித்த நுட்பங்கள் என்னென்ன?

அதைப் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

பப்பெட் படிக்கும் காலத்தில் சிறு சிறு வேலைகள் பார்த்து மாதா மாதம் 175 டாலர் பணம் ஈட்டினார். இது அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் மாதா மாதம் சம்பாதித்த பணத்தை விட அதிகம். அதுதான் பப்பெட். பணத்தை எப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவருக்கு விளையும் பயிராக இருந்த காலத்திலேயே தெரிந்திருக்கிறது.

11 வயதிலேயே பங்குகளில் முதலீட்டைத் தொடங்கியவர் பப்பெட். நம்மவர்கள் 11 வயதிலேயே செலவழிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுதான் பப்பெட்டுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். பணத்தைச் சம்பாதித்தால் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யவே பப்பெட் ஆசைப்படுவார். செலவழிக்க ஆசைப்பட மாட்டார். செலவழிப்பது அவருக்குப் பிடிக்கவும் பிடிக்காது.

ஹார்வார்ட்டு பிசினஸ் ஸ்கூலில் படிக்க வேண்டும் என்பது பப்பெட்டின் ஆசை. கிடைத்ததென்னவோ கொலம்பியா பிசினஸ் ஸ்கூல்தான். அதனாலென்ன பப்பெட்டை இன்று பல பிசினஸ் ஸ்கூல்கள் பாடமாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.

கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில்தான் பப்பெட் தன்னுடைய பங்கு முதலீட்டுக்கு ஆசானாக அமைந்த பெஞ்சமின் கிரஹாமைச் சந்தித்தார். பங்கு முதலீடுகளை எப்படிப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டும் என்பதை பப்பெட் கிரஹாம் மூலம் கிரகித்துக் கொண்டார். அந்தக் கிரகிப்பு அவரைப் பங்குச் சந்தையின் சக்கரவர்த்தியாக மாற்றியது.

பணம் சம்பாதித்து புதிய புதிய வீடுகளை வாங்குபவர்கள் நாம். பப்பெட் இன்னும் தான் முதலில் வாங்கிய பழைய வீட்டில்தான் வசித்து வருகிறார். வீட்டில் முதலீடு செய்வது சொத்து வளர்ச்சியைச் சவமாக்கி விடும் என்பது அவரது நம்பிக்கை. அவர் வீட்டை Dead Investment என்கிறார். மனைகளையோ வீடுகளையோ வாங்காமல் தரமான தொழில்களையும் பங்குகளையுமே அவர் வாங்கிக் கொண்டிருந்தார். அவை அபாரமாக வளர்ந்து அவருடைய செல்வ வளத்தைப் பெருக்கத் துவங்கின.

பல தலைமுறைகளுக்குத் தேவையான சொத்துகளைச் சம்பாதித்து விட்டார் பப்பெட். ஆனால் இப்போதும் திறம்பட பங்கு முதலீடுகளைத் தன்னுடைய தொண்ணூறு வயதுக்கு மேலும் செய்கிறார். அப்படி இந்த மனிதர் மாய்ந்து மாய்ந்து சம்பாதித்து என்ன பண்ணப் போகிறார் என்றுதானே கேட்கிறீர்கள்?

எவ்வளவு சம்பாதித்தாலும் பப்பெட் தன்னுடைய சொத்துகளை தன்னுடைய வாரிசுகளுக்கு எழுதி வைக்கவில்லை என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விசயம். தன்னுடைய 99 சதவீத சொத்துகளை மக்கள் நலத் திட்டங்களுக்கு நன்கொடையாக எழுதி வைத்திருக்கிறார். நாமென்றால் நம்முடைய ஏழேழு தலைமுறைக்கும் எழுதி வைத்திருப்போம். இதிலும் பப்பெட்டை அடித்துக் கொள்ள ஆளில்லை.

அதாகப்பட்டது என்னவென்றால்,

பப்பெட்டைப் போலச் சம்பாதிக்கவும் ஆளில்லை. அவரைப் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கே நன்கொடையாக எழுதி வைக்கவும் ஆளில்லை. பப்பெட் தர்மவான்.

இப்போது சொல்லுங்கள்! பப்பெட் பப்பெட்தானே!

ஏன் அவர் மட்டும் அப்படி ஆனார் என்பதற்கான காரணங்கள் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே! பணம் சம்பாதிப்பதில் மட்டுமல்லாது அதைத் தர்மமாக எழுதி வைப்பதிலும் வேகம் காட்டியவர் அவர்.

உண்மைதான். பப்பெட் மட்டும்தான் இந்த உலகல் பப்பெட்டாக இருக்க முடியும்! பணத்தை முதலீடு செய்வதில் அவருக்கு இருக்கும் நுட்பத்தையும் ஒழுக்கத்தையும் உலகம் அன்றும் இன்றும் என்றும் வியந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கும்!

*****

No comments:

Post a Comment