Sunday, 6 August 2023

மதுரை - கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்!

மதுரை - கலைஞர் நூற்றாண்டு நூலகம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்!

சென்னைக்குப் பெருமை அண்ணா நூற்றாண்டு நூலகம் என்றால் மதுரைக்குப் பெருமை கலைஞர் நூற்றாண்டு நூலகம்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னை – கோட்டூர்புரத்தில் இருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை – புதுநத்தம் பகுதியில் இருக்கிறது. பயண வழி என்றால் தல்லாகுளத்திலிருந்து நத்தம் செல்லும் வழியில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது.

சென்னையில் கன்னிமாரா நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், ரோஜா முத்தையா நூலகம் எனப் பாரம்பரிய பெருமைமிக்க நூலகங்கள் இருந்தாலும் அச்சென்னை நூலகங்களின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் உள்ளது.

அதைப் போலவே மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்க நூலகம், காந்தி அருங்காட்சியக நூலகம், அமெரிக்கன் கல்லூரி நூலகம் போன்ற பாரம்பரிய பெருமை மிகுந்த நூலகங்கள் இருந்தாலும் மதுரை நூலகங்களின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகமும் உள்ளது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் 2.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆறு தளங்களைக் கொண்டுள்ளது. சுமார் 215 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

தரைத்தளத்தோடு ஆறு தளங்களில் அமைந்துள்ள நூலகத்தின் அமைப்பைத் தற்போது தெரிந்து கொள்வோமா?

தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மதுரை வரலாற்று அரங்கம், மாநாட்டு அரங்கம் ஆகியவை உள்ளன.

முதல் தளத்தில் இதழ்கள் பகுதி, குழந்தைகள் நூலகம், அறிவியல் அரங்கம், திரையரங்கம் ஆகியவை உள்ளன.

இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் உள்ளன.

மூன்றாம் தளத்தில் ஆங்கில நூல்கள் உள்ளன.

நான்காம் தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன.

ஐந்தாம் தளத்தில் அரிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள் மற்றும் இதழ்கள், போட்டித் தேர்வு நூல்கள் உள்ளன. அத்துடன் மின் நூலகமும் அமைந்துள்ளது.

ஆறாம் தளத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. அத்துடன் கூட்ட அரங்கு, டிஜிட்டல் பிரிவுகளும் அடங்கியுள்ளன.

அது மட்டும்தானா என்றால் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் தனித்துக் காட்டும் அம்சங்களும் உள்ளன. அவையாவன என்று கேட்டால்…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியுடன் உரையாடும் வசதியும் இந்த நூலகத்தில் உள்ளது.

போட்டித் தேர்வுக்குப் பயன்படும் அனைத்து நூல்களும் இந்த நூலகத்தில் உள்ளன. போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்கள் அந்நூல்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் இந்த நூலகத்தில் செய்யப்பட்டுள்ளன.

ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் பல தொன்மையான நூல்களும் இந்த நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வீரமா முனிவரின் சதுரகராதியின் முதல் பதிப்பு இந்த நூலகத்தில் உள்ளது.

இப்படி இந்த நூலகத்திற்கென்றே சில சிறப்பான அம்சங்களும் உள்ளன.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை.

மதுரை செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகக் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் குறித்துக் கொள்ளலாம். மதுரை கோயிலை ஆன்மிகத்தளம் என்று சொன்னால் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அறிவுத் தளம் என்று சொல்லலாம். மதுரை செல்லும் போது அவசியம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைக் கண்டு வர தவறாதீர்கள்!

*****

No comments:

Post a Comment