Showing posts with label my school. Show all posts
Showing posts with label my school. Show all posts

Monday, 22 March 2021

எம் பள்ளி மாணவர்களின் சுவர் சித்திரங்கள்

எம் பள்ளி மாணவர்களின் சுவர் சித்திரங்கள்

            கல்வி – சுகாதாரம் – பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கான சுவர் சித்திரப் போட்டிகள் நடத்த சொன்ன போது முதலில் ஆசிரியர்களாகிய எங்களுக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களால் தூரிகை பிடித்து, எண்ணெய் வண்ணக் கலவையைக் (ஆயில் பெயிண்ட்) கொண்டு ஓவியம் தீட்டி விட முடியுமா என்ற ஐயப்பாடே அந்தத் தயக்கத்துக்குக் காரணம். ஆனால் தூரிகை பிடித்த மாணவர்கள் ஆசிரியர்களின் தயக்கத்தைப் போக்கி விட்டார்கள் என்பதோடு ஆசிரியர்களும் வியக்கும் வண்ணம் ஓவியங்களைத் தீட்டி விட்டார்கள். முதன் முதலாக கையில் தூரிகை பிடித்து எண்ணெய் வண்ணக் கலவையைக் கொண்டு இவ்வோவியங்களை மாணவர்கள் வரைந்து முடித்ததும் இவ்வோவியங்களை எங்கள் மாணவர்களா வரைந்தார்கள் என்பது ஆசிரியர்களாகிய எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இதைக் காணும் உங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.  ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமை அளவிட முடியாது என்பதை இந்த அனுபவத்திலிருந்து ஆசிரியர்களாகிய நாங்கள் அறிந்து கொண்டோம். நீங்களும் உங்களது மேலான கருத்துகளைப் பகிருங்களேன், நாங்கள் இதிலிருந்து மேலும் அறிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் விதமாக. மாணவர்கள் வரைந்த சுவர் சித்திரங்கள் கீழே இதோ உங்கள் பார்வைக்கு …








Friday, 19 March 2021

கற்றல் கற்பித்தலில் இணையவழி செறிவேற்றல்

கற்றல் கற்பித்தலில் இணையவழி செறிவேற்றல்

            “Technology is just a tool. In terms of getting the kids working together and motivating them the teacher is the most important.” என்பார் பில்கேட்ஸ். ஆசிரியரின் இடத்தை எந்தத் தொழில்நுட்பமும் பிடிக்க முடியாது என்றாலும் தொழில்நுட்பம் தெரியாத ஓர் ஆசிரியரைத் தொழில்நுட்பம் தெரிந்த ஓர் ஆசிரியர் பின்னுக்குத் தள்ளி விட முடியும். தொழில்நுட்பம் இன்றைய வாழ்க்கையோடு மிகப் பின்னிப் பிணைந்த பிணைப்பைக் கொண்டுள்ளது. கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. குறிப்பாக இன்றைய கொரோனா காலகட்டத்தில் கல்வியில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகம் என்று கூறலாம். பள்ளி மற்றும் கல்லூரித் திறப்பு சாத்தியமாகாத சூழலில் இணையவழியிலான கற்றல் கற்பித்தல் பெற்றிருந்த செல்வாக்கைச் சொற்களில் சொல்ல இயலாது. படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரித் திறப்பு சாத்தியமாகியுள்ள தற்போதைய சூழலிலும் இணைய வழியிலான கற்றல் கற்பித்தல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதை மறுக்க இயலாது.

            இணையவழியில் எவ்வாறெல்லாம் கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளலாம் என்பதை இன்றைய ஆசிரியர்கள் பலரும் அறிந்துள்ளனர். ‘புலனம்’ எனப்படும் வாட்ஸ்ஆப்பையும், டெலிகிராமையும் மிகச் சிறந்த கற்றல் கற்பித்தல் ஊடகமாக மாற்றி பல ஆசிரியர்கள் செயல்பட்டுள்ளனர். தாங்கள் சொல்ல விரும்பும் பாடக்கருத்துகளைப் படமாகவும், காணொளியாகவும், ஒலிப்பதிவாகவும் செய்து வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் குழுக்கள் மூலமாக அனுப்பிப் பல ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்பித்தல் செய்தனர். பதிலுக்கு மாணவர்களும் தாங்கள் கற்றதை அதே வடிவில் ஆசிரியருக்கு அனுப்பி தங்களின் கற்றல் அடைவை உறுதிப்படுத்தினர்.

            காணொளிகளைச் சிறப்பாக உருவாக்கத் தெரிந்த ஆசிரியர்கள் யூடியூப் மூலமாகவும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து அதன் இணைப்பை (link) மாணவர்களுக்கு அனுப்பி வைத்தனர். இன்று யூடியூப்பில் இருக்கும் காணொளிகளில் பாடம் கற்பது தொடர்பான ஆசிரியர்கள் உருவாக்கிய காணொளிகள் கணிசம் எனலாம்.

            இன்றைய சூழலில் கற்றல் கற்பித்தலில் (கூகுள்) Google இன் இருப்பு ஒரு புரட்சியை உருவாக்கியிருக்கிறது எனக் கூறலாம். Gmail கணக்கு வைத்திருக்கும் எவரும் கூகுளின் ப்ளாக்ஸ்பாட், கூகுள் பார்ம்ஸ், கூகுள் டாக்குமெண்ட்ஸ், கூகுள் மீட் என்று என்று பலவற்றையும் பயன்படுத்தி இன்றைய சூழலில் மிக எளிதாகக் கற்றல் கற்பித்தலை செய்து உடனுக்குடன் மதிப்பிட்டு விட முடியும் என்பது இதன் பின்னணியில் உள்ள வரப்பிரசாதம் ஆகும்.

            வலைப்பூ எனப்படும் ப்ளாக்ஸ்பாட்டில் ஓர் ஆசிரியர் தான் கற்பிக்க விரும்பும் அனைத்தையும் E-Content ஆக எழுதி விட முடியும். தேவையான இடங்களில் வலைதள முகவரி, யூடியூப் இணைப்புகள், படங்கள் ஆகியவற்றை இணைத்து விட முடியும். பயிற்சித்தாள்கள் எனும் Work Sheet களை உருவாக்கி இணைப்பைக் கொடுத்து விட முடியும். எனது www.teachervijayaraman.blogspot.com இல் அப்படியான சில E-Content நிரம்பிய பாடத்திட்டங்களை நான் செய்து பார்த்துள்ளேன். கூகுள் பார்ம்ஸ் மூலமாக சில மதிப்பீட்டு படிவங்களை உருவாக்கி அதற்கான இணைப்பை ப்ளாக்ஸ்பாட்டில் கொடுத்துப் பார்த்துள்ளேன். கற்றல் கற்பித்தலை இணைய வழியில் வழங்குவதில் கூகுளின் சேவைகள் பெருமளவில் பயன்படும் எனது கருத்து. பல ஆசிரியர்கள் இவ்வகையில் முயன்று பார்த்துள்ளார்கள். இது வரை முயலாதவர்களாக இருந்தால் நீங்களும் முயன்று பார்க்கலாம். நிச்சயம் இம்முயற்சி ஆச்சரியகரமான விளைவுகளைத் தரும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வண்ணம் எழுதுவதை நீங்கள் படித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே கூகுளின் இந்த ப்ளாக்ஸ்பாட்டில்தான் அல்லவா!

            இது பற்றி மேலும் தொடர்ந்து எழுத விருப்பம்தான் என்றாலும், உங்கள் கருத்துகள்தான் தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு வழிகாட்ட முடியும் என்று நினைக்கிறேன். வாசித்த அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்.