Showing posts with label Smartphone strategy. Show all posts
Showing posts with label Smartphone strategy. Show all posts

Friday, 18 July 2025

ஆப் பண்ணி ஆன் பண்ணினால் ஸ்மார்ட்போன் நன்றாக வேலை செய்யுமா?

ஆப் பண்ணி ஆன் பண்ணினால் ஸ்மார்ட்போன்

நன்றாக வேலை செய்யுமா?

திறன்பேசியாகி விட்ட அலைபேசியை (Smart phone) அணைத்துப் போடும் போது (ஸ்விட்ச் ஆப் பண்ணி ஸ்விட்ச் ஆன் செய்யும் போது) நன்றாக வேலை செய்வதற்கான காரணம் என்ன தெரியுமா?

நாம் அலைபேசியில் தற்காலத்தில் நிறைய செயலிகளைப் (ஆப்களை) பயன்படுத்துகிறோம். அத்துடன் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் அலைபேசியில் செய்கிறோம்.

அதாவது புலனத்தைப் (வாட்ஸ் அப்) பார்த்துக் கொண்டே, இன்ஸ்டாகிராமில் படத்தைப் பதிவேற்றிக் கொண்டே, விளையாட்டை (கேம்) விளையாடிக் கொண்டே, முகநூலில் யாராவது நம் பதிவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பார்த்துக் கொண்டே… என்று ஏகப்பட்ட வேலையைச் செய்து கொண்டிருப்போம்.

இதனால் நமது அலைபேசியின் தற்காலிக நினைவகப் பகுதியான (ரேம் RAM) அதிகப்படியான நினைவுகளைச் சுமக்க முடியாமல் தடுமாறும்.

இதைத் தவிர்க்க இயக்கத்தில் உள்ள பல செயலிகளின் இயக்கத்தைக் குறைக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல வேலைகளை அலைபேசியில் செய்யாமல் அதையும் குறைக்க வேண்டும். இல்லையென்றால் அலைபேசி செயல்பட முடியாமல் தடுமாறும்.

அது போன்ற நேரங்களில் நாம் அலைபேசியை அணைத்து மீண்டும் போடும் போது (ஸ்விட்ச் ஆப் செய்து ஸ்விட்ச் ஆன் செய்யும் போது) தற்காலிக நினைவுப் பகுதிகளில் அடைத்துக் கொண்டிருந்த அத்தனை சேமிப்புகளும் அகற்றப்பட்டு அலைபேசியின் அப்பகுதியானது தன்னை எவ்வித சேமிப்புகளும் இல்லாமல் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும். இப்போது அலைபேசி தடங்கல் இல்லாமல் வேகமாகச் செயல்படும். இதுவே அலைபேசியை அணைத்துப் போடும் போது (ஸ்விட்ச் ஆப் செய்து ஸ்விட்ச் ஆன் செய்யும் போது) அலைபேசி திறம்பட வேலை செய்வதற்குக் காரணம்.

தினம் ஒரு முறை அலைபேசியை இவ்வாறு அணைத்துப் போடுவது நல்லதே. அதுவும் இல்லாமல் உறங்கும் நேரத்தில் அலைபேசியை அணைத்து விட்டு, விழிக்கும் போது அதற்கும் விழிப்பு கொடுத்தால் அது அலைபேசிக்கு மட்டுமல்லாமல் நம் உடல் மற்றும் மனநலத்திற்குக் கூட நல்லதுதானே!

அத்துடன், உங்களது திறன்பேசியின் (Smartphone) தற்காலிக சேமிப்புப் பகுதி (RAM) மற்றும் நினைவகப் பகுதிக்கேற்ப (Storage) செயலிகளை அளவோடு பயன்படுத்துவதும், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை (Multi tasking) மட்டுப்படுத்திக் கொள்வதும் உங்களது திறன்பேசி திறம்பட இயங்க உதவும்.

*****