Showing posts with label எச்சரிக்கை. Show all posts
Showing posts with label எச்சரிக்கை. Show all posts

Thursday, 3 October 2024

கொஞ்சம் தகவல்! கொஞ்சம் விழிப்புணர்வு!

கொஞ்சம் தகவல்! கொஞ்சம் விழிப்புணர்வு!

இந்தத் தகவல்கள் உங்களுக்கு நிச்சயம் பல விதங்களில் உதவும். இவை வெறும் தகவல்களாக மட்டுமில்லாமல் அவற்றில் அடங்கியிருக்கும் விழிப்புணர்வு தற்காலத்தில் உங்களுக்கு அவசியம் பயனுள்ளதாக இருக்கும். படித்துப் பாருங்கள். பயன் பெறுங்கள்.

வரியைத் தவிர்ப்பதற்காக உண்மையான ரசீது இல்லாமல் பொருட்களை வாங்காதீர்கள். இதனால் பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்படும் போது அதற்கான பழுதுச் செலவைக் குறிப்பிட்ட காலம் வரையில் செய்து தரும் இலவசச் சேவையை இதனால் இழக்க நேரிடும்.

வாட்ஸ் ஆப்பில் எந்த வங்கியும் இணைப்புகளை அதாவது லிங்குகளை அனுப்புவதில்லை. அதனால் வாட்ஸ் ஆப் மூலமாகக் கேட்கும் எந்த விவரங்களையும் இணைப்புகள் அதாவது லிங்குகள் மூலம் கொடுக்காதீர்கள்.

முன்பெல்லாம் மருத்துவர்கள் தனியாக மருத்துவம் பார்த்து வந்தனர். மருந்து கடைகள் அருகில் தனியாக இருந்தன. தற்போது மருத்துவர்களே மருந்துக் கடைகளோடு மருத்துவம் பார்க்கின்றனர். அவர்கள் எழுதித் தரும் மருந்துகளை அவர்களின் கடைகளில்தான் வாங்க வேண்டும் என்கிறார்கள். அதே மருந்தை வேறு கடைகளில் பத்து சதவீத, இருபது சதவீத தள்ளுபடிகளில் வாங்கலாம். அப்படியொரு வாய்ப்பு இருந்தால் அப்படி வாங்குவதில் தவறென்ன இருக்கிறது?

கடைகளில் விலைப்பட்டியல் எழுதியிருக்கிறார்கள். விலை குறைவாக இருக்கிறதே என வாங்கினால் ரசீதில் விலை கூடுதலாகப் போடுகிறார்கள். என்ன என்று  கேட்டால் அது நேற்றைய விலை மாற்றாமல் இருக்கிறது என்கிறார்கள். கணினியில் ரசீதுக்காக விலையை மாற்ற நேரம் இருப்பவர்களுக்கு விலைப்பட்டியல் பலகையில் இருப்பதை மாற்ற நேரம் இல்லையாம்.

இது போன்ற பயனுள்ள தகவல்களோடு விழிப்புணர்வு தரும் பதிவுகளைப் படித்தும் மற்றவர்களுக்குப் பகிர்ந்தும் விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்குவோம். நுணுக்கமாக ஏமாற்றுபவர்களிடமிருந்து நுட்பமாகத் தப்பிப்போம்.

*****