Showing posts with label Change. Show all posts
Showing posts with label Change. Show all posts

Friday, 28 February 2025

யாரை மாற்ற வேண்டும் முதலில்? – உங்களுக்காகவே ஒரு கதை!

யாரை மாற்ற வேண்டும் முதலில்? – உங்களுக்காகவே ஒரு கதை!

உலகை மாற்றுவதா?

உங்களை மாற்றுவதா?

சில நேரங்களில் உலகை மாற்றுவதை விட உங்களை மாற்றுவதே போதுமானதாக இருக்கிறது. இதை விளக்கும் வகையிலான கதை ஒன்றை அறிவோமா?

அந்தக் காலத்து மன்னன் ஒருவன்.

நாடு முழுவதையும் நடைபயணம் மூலமாகச் சுற்றிப் பார்க்க நினைத்தான்.

காடும் மலையும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதைகளைக் கடந்து நாடு முழுவதும் சுற்றி வந்தான்.

அவன் கால்கள் காயம் பட்டிருந்தன. வலியும் வேதனையும் உண்டாகியிருந்தன.

அதனால் இனி தான் செல்லும் பாதை எங்கும் தோலாலான கம்பளத்தை விரிக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.

எவ்வளவு தூரத்துக்கு அப்படி கம்பளத்தை விரிப்பது? அதற்காக எத்தனை விலங்குகளை வேட்டையாடுவது? நாடு முழுவதும் உள்ள விலங்குகள் அதனால் அழிந்து விட்டால் என்னாவது?

ஆணையிட்டது மன்னனாயிற்றே.

யார் இதை மன்னனுக்குப் புரியும்படி எடுத்துச்   சொல்வது?

ஓர் அமைச்சர் மட்டும் துணிந்தார்.

இப்படி செல்லும் பாதையெங்கும் கம்பளம் விரிப்பதை விட, மன்னரான தாங்கள் தோலால் ஆன ஒரு காலணி அணிந்து கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று.

மன்னன் யோசித்தான். அமைச்சர் சொன்னது சரிதான் என்பதைப் புரிந்து கொண்டான். செல்லும் பாதையெங்கும் கம்பளம் விரிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தேவையில்லாத செலவு? அது எவ்வளவு மெனக்கெட்ட வேலை? அமைச்சர் சொன்னதன் நியாயம் அரசனுக்குப் புரிந்தது.

நல்லவேளை அந்த அரசன் புரிந்து கொள்ளக் கூடியவனாக இருந்தான். ஒருவேளை அரசன் அகங்காரத்தோடு புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால், உலகைத்தான் மாற்ற நினைத்திருப்பான். தேவையில்லாத தொல்லைகளை உலகுக்குக் கொடுத்திருப்பான். ஆனால் இந்த விசயத்தில் உலகை மாற்றுவதை விட தன்னை மாற்றிக் கொள்வதுதானே சிறந்தது.

சில நேரங்களில் இப்படித்தான் உலகை மாற்றுவதை விட உங்களை மாற்றிக் கொள்வதே போதுமானதாக இருக்கிறது.

இந்தக் கதை உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். இது போன்ற பயனுள்ள கதைகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள். நன்றி. வணக்கம்.

*****